Tuesday 2 February 2021

 

புனைவுக்கட்டுரைகளின் முகவுரைகள்.


1. கறுத்தக் கொழும்பான்

  • ஜெயமோகன்

2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.

  • வாசந்தி
  • வ. மகேஸ்வரன்
  • தி. ஞனசேகரன்


1. கறுத்தக் கொழும்பான்ஜெயமோகன்.


பயணியின் புன்னகை: 

ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

பயணியின் புன்னகை: ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

ங்களூரில் அந்தக் காலத்தில் பட்டாளத்துக் காரர்கள் தான் உலகச் சாளரங்கள். வடசேரி கனகமூலம் சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம் மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி சொல்லுகது? குளித்துறைக்கு அப்புறம் ராச்சியமில்லை. தேங்காப்பட்டினம் கடலாக்கும் ’ என நம்புகிறவர்கள்

அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் பட்டாளத்துக்காரர்கள் அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்.

நான் அவதானித்தது, பட்டாளத்தான்களிடம் வரும் மாறுதலை. ஒருமுறை முருகேசனாசாரியின் மனைவியை அச்சுதனுடன் சேர்த்து யட்சிகோயில் முடுக்கில் பிடித்தார்கள்.

ஊரே ரகளைப்பட்டது. ஊரே கூட்டங்களாகக் கூடி நின்று வம்புபேசியது. எங்கும் கொந்தளிப்பு. ஊர் அழியுமா இருக்குமா என்ற ஐயம் பரவலாக நிலவியது. பட்டாளத்தான் சோமன் அண்ணா சிரித்தபடி ‘விடுடே முருகேசா, அவள இத்திரி வெள்ளம் கோரி நல்லா குளிக்கச்சொல்லு….மண்ணுதின்னுத உடம்பு’ என்றார் ‘வேணுமானா நீ அவன் பெஞ்சாதிகிட்ட கேட்டுப்பாரு…இப்பம் என்ன?’

இவர் ஏன் இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கிறார் என்று அன்று திகைப்பாக இருந்தது. ஆனால் அத்தனை பட்டாளத்தான்களிடமும் அந்தச் சிரிப்பு இருந்தது. உலகம் இவ்வளவுதான் என அறிந்தவனின் புன்னகை அது. மனித உறவுகளை, வாழ்வை, மரணத்தை அறிந்து தெளிந்தவனின் அங்கதம் அவர்களின் ஒவ்வொரு சொல்லிலும் இருந்தது.

அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் தமிழில் வெளிவர ஆரம்பித்தபோதுதான் நான் வாசித்தவரை அந்த பட்டாளத்தானின் சிரிப்பு தமிழிலக்கியத்தில் பதிவாகியது. உலகநாடுகள் தோறும் அலைந்து, விதவிதமான இனங்களை மொழிகளை பண்பாடுகளைச் சந்தித்து, பேதங்களையும் ஒருமைகளையும் உணர்ந்து நிதானமடைந்தவரின் புன்னகை அவரது எல்லா வரிகளிலும் இருந்தது. தோளோடுதோள் இடித்துக்கொண்டு வாழும் தமிழ்ச்சூழலின் இருட்டில் அந்த புன்னகையின் வெளிச்சம் மிகப்பெரியதாகத் தெரிந்தது

சின்னச்சின்ன விஷயங்கள் வழியாக பெரியபெரிய மனநாடகடங்களை நடித்து, கொந்தளித்து கொப்பளித்து வாழும் தமிழர்களில் கணிசமானவர்களுக்கு அந்த புன்னகை எரிச்சலூட்டியதென்பதையும் கண்டிருக்கிறேன். சமகாலம் எரிந்துகொண்டிருப்பதாக அவர்கள் பாவனை செய்தார்கள். கடந்தகாலம் உடைந்து சரிவதாக எண்ணிக்கொண்டார்கள். அதன் ரட்சகர்களாக தங்களை கற்பிதம்செய்துகொண்டார்கள். அவர்களுக்கு எல்லாம் வாழ்க்கையல்லவா என்ற முத்துலிங்கத்தின் புன்னகையை புரிந்துகொள்ளவேமுடியவில்லை. ஆனால் மெல்லமெல்ல நவீனத்தமிழின் முதன்மையான படைப்பாளியாக அவர் தன் பீடத்தை அடைந்தார்

அ.முத்துலிங்கத்தின் உலகைச்சேர்ந்த இன்னொரு எழுத்தாளர் ஆசி கந்தராசா. முத்துலிங்கத்தின் மொழிநடையை ஆசி கந்தராசா நினைவுபடுத்துவது சொற்றொடரமைப்பினால் அல்ல, உள்ளார்ந்த புன்னகையின் வெளிச்சத்தால்தான். உள்ளே விளக்கேற்றி வைக்கப்பட்ட படிககட்டிபோல மொத்த எழுத்தையும் அந்தப்புன்னகை மிளிரச்செய்துவிடுகிறது.

 

[ 2 ]

ஆசி கந்தராசாவின் எழுத்தை மிகவும் தற்செயலாகத்தான் நான் அறிமுகம் செய்துகொண்டேன். பத்துவருடங்களுக்கு முன்பு சாதாரணமகா வாசிக்க ஆரம்பித்த கதை என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நான் நாய்ப்பிரியன் என்பதனால்தான் நாய் பற்றிய அக்கதையை வாசித்தேன். நாயின் உடல்மொழி, மனப்போக்கு பற்றிய நுண்ணியவிவரணைகள் இவர் ஓர் எழுத்தாளர் என்ற எண்ணத்தை உருவாக்கின. தாய்லாந்தில் நாயின் நாக்கை சாப்பிட்டுவிட்டு ஆஸ்திரேலியாவரும் உரிமையாளரைக் கண்டு அவரது செல்லநாய் பதுங்கிக்கொள்ளும் கதைமுடிவில் சட்டென்று இன்னொரு உலகம் திறந்துகொண்டது.

இன்றுவரை என் நினைவில் நிற்கக்கூடிய, நான் பல மேடைகளில் உரையாடல்களில் குறிப்பிட்டுவரும் கதை அது. மண்மீதுள்ள உயிர்வலையில் கொல்வதும் தின்பதும் மிகமிக இயல்பானது என்ற எண்ணம் எல்லா அசைவ உணவுக்காரர்களைப்போலவே எனக்கும் உண்டு. ஆனால் அது ஒரு புறவய யதார்த்தமே என்றும் அதற்கப்பால் நாமறியாத அகவயமான ஓர் உண்மை உள்ளது என்றும் உயிர்க்குலங்கள் பிரியத்தின் பரிமாற்றமென்னும் வலையாலும் கட்டப்பட்டுள்ளன என்றும் கொலை எந்நிலையிலானாலும் அந்தவலையை அறுக்கிறது என்றும் உணர்ந்தேன் என்று தோராயமாகச் சொல்லிவிடலாம் .நாய்க்கும் எனக்குமான உறவு ஆடுக்கும் எனக்குமான உறவைவிட அந்தரங்கமானதாக இருப்பது நான் ஒருபோதும் அதை தின்னப்போவதில்லை என்பதனால்தானா என நினைத்து நுண்ணிய அதிர்ச்சி ஒன்றை அடைந்தேன். இன்றுவரை திறந்துகொண்டே இருக்கும் புனைகதை அது

அக்கதையை வாசித்தபின் ஆசி கந்தராசா அவர்களை நானே தொடர்புகொண்டேன். அக்கதை பற்றி எழுதவும் செய்தேன். அப்போது அவர் யாரென்றே தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார், உயிரியல் நிபுணர் என்று பிற்பாடுதான் அறிந்தேன். மேலும் ஐந்தாறு ஆண்டுகள் கழித்து என் ஆஸ்திரேலியப் பயணத்தில் நான் அவரை நேரில் கண்டேன். அவருடன் சிலநாட்கள் தங்கவும் பயணம்செய்யவும் வாய்த்தது

அப்போது அவர் சொன்ன ஒரு வரி மீண்டும் என் பிரக்ஞையை அதிரச்செய்தது. ‘உயிரியல் விதிகளின்படி எல்லா உயிர்க்கரிமப்பொருட்களும் உணவே’ அதை உணவல்லாமலாக்கும் அம்சம் என்ன , உணவாக ஆக்கும் அம்சம் என்ன என்பதே வினா. ஆப்ரிக்காவில் பச்சை மாட்டிறைச்சி உண்பதைப்பற்றி அவர் எழுதியிருந்த வரிகளை விவாதித்தபோது அதைச் சொன்னார்.

ஒருவேளை அறிவியலில் சாதாரணமாக கூறப்படும் ஒரு விதியாக அது இருக்கலாம். ஆனால் எனக்கு அது விரிந்தபடியே சென்றது. இந்த உலகத்தின் மாபெரும் உயிர்ப்பெருவெளி மொத்தமாகவே உணவுதான். அந்தக்குவியலில் கிடந்து பட்டினியால் சாகிறான் மனிதன். உணவல்ல பிரச்சினை, உணவை அடையும் அறிவை அடையவில்லை என்பதுதான்.

[ 3 ]

ஆசி கந்தராஜா அவரது கல்விப்பணிகள் நடுவே மிகமிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார் அவரது நூல்கள் ஒரு வாசகனாக எனக்கு வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு அறிவுப்புலங்களில் உலவி வரும் அனுபவத்தை அளிக்கின்றன. ஆகவே என்றும் என்பிரியத்துக்குரிய எழுத்தாளர் அவர்.சமீபத்தில் ஆப்ரிக்கா சென்றிறங்கியபோது அவரும் அ.முத்துலிங்கமும் எழுதிய ஆப்ரிக்கப் பயண அனுபவக்குறிப்புகளைத்தான் நினைவுகூர்ந்தபடி இருந்தேன். குறிப்பாக விண்டூக்கின் சந்தையில் வாட்டிய மாட்டிறைச்சி உண்ணும்போது.

அறிவியலாளரின் எழுத்து என்பதனால் ஆசி கந்தராசா எழுத்து தொடர்ச்சியாக தகவல்களை அளித்துக்கொண்டே செல்லும் தன்மை கொண்டிருக்கிறது. இந்நூலின் முதல் கட்டுரையான கறுத்தகொழும்பான் ஓர் உதாரணம். கறுத்தகொழும்பான் என்ற ஈழத்து மாம்பழ வகையை ஆஸ்திரேலியாவில் கொண்டுவந்து பரப்ப முயலும் உடையார் மாமாவின் முயற்சியின் பதிவாக மட்டுமே இந்தக் கட்டுரை தன்னை முன்வைக்கிறது. அந்த மாமரத்தின் இயல்புகள், மாம்பழ விவசாயம் பற்றிய தகவல்கள், டர்பனில் நிகழும் சர்வதேச மாம்பழ மாநாடு, அன்னியத்தாவரங்களுக்கு ஆஸ்திரேலியா வைத்துள்ள கட்டுப்பாடுகள், ஆஸ்திரேலியாவின் வணிகச்சூழல் கனிகளை மதிப்பிடும் முறை என இது ஒரு தகவல்தொகுதி

ஆனால் கட்டுரை முடியும்போது இந்தக்கட்டுரை மாம்பழத்தைப்பற்றியதே அல்ல என்ற விரிவு உருவாகிறது. பாராச்சூட் விரிந்துகொள்ளும் தருணம்போல. இது ருசியின் கதை. யாழ்ப்பாணத்து ருசி. யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தின் இனிமை. அந்தக்கோணத்தில் நம் பார்வை திரும்பியதுமே ஒவ்வொரு புள்ளியாக பெரிதாகத் தொடங்குகிறது. பார்க்க அழகில்லாத கனி அது. பளபளப்பற்றது, உருண்டுதிரளாதது, ஆகவே உடனடிச் சந்தைமதிப்பற்றது.

அதை ஆஸ்திரேலிய மண்ணுக்குக் கொண்டுவரத்தான் எவ்வளவு தடைகள். கறுத்த கொழும்பான் என்ற அதன் பெயரே தடை. அது நிற ஒதுக்குதலுக்கு உள்ளாகிறது. ஆனால் தன் சுவையால் எப்படியோ அது வந்து சேர்ந்துவிடும், வேரூன்றிவிடும். அந்தப்புள்ளியில் அந்தப் பெயர் மீது என் கவனம் நிலைத்தது- கறுத்த கொழும்பான்! இவர் எதைப்பற்றிப்பேசுகிறார் என மனம் வியந்தது!

மிகத்தேர்ந்த புனைகதையாளனின் திறனுடன் இந்த இரண்டாவது தளத்தை ஆசி கந்தராசா இக்கட்டுரைக்குள் இணைத்திருக்கிறார். கட்டுரை மாம்பழத்தைப்பற்றி மட்டும்தான். மாம்பழமாநாட்டுக்காகவே டர்பனுக்குச் செல்கிறார்கள் உடையார் மாமாவும் கதைசொல்லியும். அங்கே மாம்பழ மாநாட்டினூடாக ஆப்ரிக்காவின் குடியேறிகளின் வாழ்க்கையின் கோட்டுச்சித்திரம் வருகிறது. தங்கள் பண்பாட்டை அவர்கள் இழந்துள்ள விதம் கச்சிதமாகச் சொல்லப்பட்டபின்பு கட்டுரை மீண்டும் கறுத்தகொழும்பானுக்கு மீள்கிறது.

இந்ததொகுதியில் உள்ள எல்லா கட்டுரைகளிலும் இந்த இரண்டாவது தளம் அடிச்சரடாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் ’தலவிருட்ச’மான பனையைப்பற்றிப் பேசும் கட்டுரை ஈச்சமரம் தென்னைமரம் என்று நினைவுகளின் ஓட்டம்போல பல புள்ளிகளைத் தொட்டுச்செல்கிறது. யாழ்ப்பாணம் முதல் அரேபியாவரை நீள்கிறது. இந்த மரங்களின் ஆண்பெண் பேதம்பற்றிய விவரணை அதிகபக்கங்களை எடுத்துக்கொள்வது ஏன் என்பதை அரேபியப்பாலையில் அடிமைகளொப்ப பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களைப்பற்றிய குறிப்பு விளக்குகிறது. இந்த இணைப்பை உருவாக்கிக்கொள்ளும் வாசகர்களுக்கு மிகச்சிறந்த புனை கதையளவுக்கே மன எழுச்சியை, வாழ்க்கை நோக்கை அளிக்கக் கூடியவை இக்கட்டுரைகள்

எனக்கு இவற்றின் கட்டமைப்பில் உள்ள புதுமைதான் முதன்மையாக மனம் கவர்கிறது. உலகமயமாதல் பற்றிய கட்டுரை சாதாரணமாக ‘கொட்டை உள்ள புளியாகப்பார்த்து வாங்கி வா என்றாள் அம்மா’ என ஆரம்பிக்கிறது. பின் மிக இயல்பாக ‘புளியங்கொட்டையைப்பார்க்கும்போது பீட்டர் நினைவுக்கு வருகிறான் என்று தாவுகிறது. பீட்டரின் ஊர் உகாண்டா. இந்த அழகிய கதைகூறல்குறை ‘உலகக்கிராம’த்தில் இவை நிகழ்கின்றன என்ற பரவசத்தை அளிக்கின்றது.

சமீபகாலமாகவே ஆப்ரிக்க நிலம் எனக்கு பெரிய ஈர்ப்பை உருவாக்கியபடியே உள்ளது. ஆசி கந்தராசாவின் எதியோப்பியா பற்றிய கட்டுரையை நான் முன்னதாகவே தட்டச்சுப்பிரதியாக வாசித்திருந்தேன். வீடு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமே, ஆகவே வீட்டுக்குள் நுழைந்தபின் எந்த கவலையையும் வைத்திருப்பதில்லை என்ற அபேராவின் வரி அன்றும் மனதை அதிரச்செய்தது. இப்போது வாசிக்கையிலும் உள்ளத்தை மலரச்செய்கிறது

[ 4 ]

தன்னைப்பற்றி உண்மையை எழுதுபவன் உலகைப்பற்றிய உண்மையை எழுதுகிறான். உலகை சரியாக எழுதுபவன் தன்னைப்பற்றி எழுதிவிடுகிறான் என ஒரு கூற்று உண்டு. ஆப்ரிக்கா அரேபியா ஆஸ்திரேலியா என உலவும் இந்த பெரும்பயணியின் கட்டுரைகள் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் என்றே ஒலிக்கும் விந்தையை இப்படித்தான்புரிந்துகொள்கிறேன்

ஜெயமோகன்

 2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.

வாந்தி

புனைவில் அறிவியல்

திரு. ஆசி கந்தராஜா ஒரு தாவர வியல் வல்லுனர் மட்டுமல்ல, அதன் அறிவியல் நுட்பத்தைக் கதைபோலச் சொல்லுவதிலும் வல்லவர் என்பது அநேகருக்குத் தெரிந்திராது. ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ என்ற அவரது தொகுப்பில் இருக்கும் கட்டுரைகள் ஒரு இன்ப வாசிப்பு அனுபவத்தை எனக்குத் தந்தன. புனைவுக் கட்டுரை என்ற வடிவில் அவர் தமது படைப்பிலக்கிய திறமையைத் தாவர உலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக சுவாரஸ்யமாகச் சொல்வதில் வெற்றிகண்டிருக்கிறார். பல அரிய விவரங்களை, வாழ்வியலோடு சம்பந்தப்படுத்தி வெகு யதார்த்த நடையில் வெளிப்படுத்தும் இந்தக்கட்டுரைத் தொகுப்பு அ-புனைவு எழுத்தில் ஒரு புதிய முயற்சி மட்டுமல்ல, பாராட்டப்பட வேண்டிய யுக்தியும்கூட. அவரது இனிமையான யாழ்பாணத் தமிழ் படிக்கும்போது கீதம் இசைக்கிறது. துள்ளும் நடையில், பேச்சு மொழியில் கதை பின்னும் பாணியில், நமக்குத் தெரியாத விஷயங்கள், கிண்டலும் ஹாஸ்யமும் கொண்ட கதையாடலில் ஊடுபாவாக புகுத்தியிருப்பது மிகுந்த சுவாரஸ்யம். படிப்பவரைத் தூண்டில் போட்டு இழுப்பது ஆசிரியருக்குக் கைவந்த சாகசம். அடர்ந்த எழுத்துக்குப் பழகிப்போன அறிவியல் வல்லுனர்கள், பாமரருக்கும் புரியும்படி எழுதுவது என்பது எளிதல்ல. அதைத்தான் செய்திருக்கிறார் ஆசி கந்தராஜா.

கந்தராஜா ஆஸ்திரேலியாவில் வாழ்பவர் என்பதால் ஆஸ்திரேலிய ஆதிபிரஜைகளான ‘அபோர்ஜினி’ களைப்பற்றி நேரிடையான பார்வையை மனத்தாங்கலுடன் சொல்வதில் வியப்பில்லை. அதையும் இலங்கையில் இனக் கலவரம் நடந்தபோது யாழ்பாணத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து சேர்ந்திருந்த பரமலிங்கம் என்பவரின் வாயிலாகக் கதையாகப் பின்னுகிறார். ஆதிவாசிகளுக்கு சட்டப்படி அரச நிறுவனங்கள் கல்விச்சாலைகள் போன்றவற்றில் சலுகை உண்டு என்றாலும் அவை பலருக்குச் செல்வதில்லை என்று அவருக்குத் தெரியவரும்போது அந்த அநீதியைக் கண்டு அவருக்குப் பொறுக்கவில்லை. சொந்தமண்ணைத் துறந்து, சூழ்நிலை காரணமாக நாடோடிகளாகப் பல நாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமது இனத்தினர் படும் துன்பத்தை அவர் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்தவர். ஆனால் இந்த அபோரிஜினிகளோ பூமி புத்திரர்களாக இருந்தும் நாடோடிகளாக வாழ்வது அக்கிரமமாகப் பரமலிங்கத்திற்குப் படுகிறது. யார் ,ந்த அபோரிஜினிகள்? அவர்களுக்கு ஏன் இந்த கதி ஏற்பட்டது? அவர்களுக்கு அநீதி இழைத்தவர் யார்? அபோரிஜினிகளின் வரலாறு, கலாசாரம் என்ன? – இப்படிப் பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள், கந்தராஜா அநாயாசமாக விரித்துக் கொண்டு போகும் கதையில் வருகிறது. இயற்கையுடன் இணைந்து வாழும் அபோரிஜினிகளுக்குத் தாவர இயல் பற்றின அறிவு இயல்பாக இருக்கும் ஒன்று. பூமரங் பற்றின விவரம், அவர்களது சடங்குகள் ஆகியவற்றில் தமிழர் பண்பாட்டு ஒற்றுமையின் சாயல்கள், வெள்ளையர் ஆதிவாசி கலப்பின குழந்தைகளுக்கு நேர்ந்த வாழ்வு போன்ற கனமான தகவல்களை சம்பாஷணை மிகுந்த கதையாடலில் ஆசி கந்தராஜா மிக அழகாகச் சொல்கிறார்.

வீரசிங்கம் பயணம் போகிறார் என்ற புனைவுக் கட்டுரை அட்டகாசம். வீரசிங்கத்தின் சாப்பாட்டு ருசியும் அவரது மனைவி அலுத்துக் கொள்வதும், சட்டதிட்டமாக, காரசாரமாக, வகையாக உண்ணும் பழக்கமுள்ள வீரசிங்கம் பெய்ரூத்துக்கு வேலை நிமித்தம் செல்வதிலிருந்து லெபனனின் சரித்திரமும் அங்கு கிடைக்கும் உணவும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ விவரமும் வெகு எளிதாகப் படிப்பவர் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு உண்மையில் மரபணு மாற்ற விவரங்கள் முன்பு இத்தனை தெளிவாக விளங்கியிருக்கவில்லை. மலட்டு விதைகள், செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதும், அவற்றிற்குக் காப்புரிமை வாங்கியிருப்பது, விதைகளை வாங்க ஆரம்பித்தவர்கள் தொடர்ந்து வாங்கும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவதும் எளிய வார்த்தைகளில் ஒரு கதையில் வரும் சம்பாஷணையாக அவர் சொல்வது வியப்பை அளிக்கிறது.

மரங்களும் நண்பர்களே என்ற கட்டுரையை அவரது சொந்தக் குரலில் சொல்கிறார். அதில் யாழ்பாணத் தமிழ் தேனாய் ஒழுகும். ‘எங்கள் ஊர்| என்றுதான் வருகிறது. பெயர் தெரியாமல் போனாலும் அதன் வீதிகளில் அவருடன் கைகோர்த்து நாமும் செல்வோம். துலாக்கிணறு, அரிக்கன் லாம்பு, விறகடுப்பு ஆகிய உபகரணங்கள் கொண்ட வாழ்வு. ‘அது ஒரு கனாக்காலம்’. நமக்கும் கனவில் நடப்பதுபோலத்தான் இருக்கிறது. அங்கு இருந்த ஆச்சியின் தயவால் நமக்கு மாமரங்கள் பற்றின விவரங்கள் கிடைக்கும். அதைப்பற்றின அறிவியல் பாடமாக இருக்காது. ஆச்சி படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவு உள்ளவள். அவளுக்கே அறிவியல் விளங்கும்போது நமக்கு விளங்காதா? என்ற தைரியத்தில் அவள் கூடப்பயணிப்போம். வேதவல்லி அக்கா என்று ஒரு படித்த அக்காவும் உண்டு. வாழைகள் பற்றின விவரத்தை நமக்கு வியப்பூட்டும் வகையில் சொல்வார். வாழையில் மகரந்தச் சேர்க்கை இல்லை என்னும் விவரத்தை அவளிடமிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற செண்பகவரியன் பலாப்பழத்தைப் பற்றின விவரங்களை ஆச்சி வழி மாமா ஒருவர் சொல்கிறார். வேதவல்லி அக்கா பெரியவர்கள் பார்த்து வைத்த வரன்களையெல்லாம் ஏன் நிராகரித்தார்? என்ற ரகசியம் ஆசி கந்தராஜாவுக்குத் தெரிந்திருந்தது. அக்காவின் தாவரத்தைப் பற்றின அறிவு, அவரை ஆசிரியரின் ஆதர்ஷமாக்கியிருந்தது. வாழைத் தோட்டத்துக்கும் வேதவல்லி அக்காவுக்குமான உறவு தனித்துவமானது. ‘குலையை ஈன்றபின் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் வாழை’ என்ற அக்காவின் வார்த்தையில் அறிவியல் மட்டுமல்ல், கவித்துவமும் இருந்தது.

மைனாக்கள் என்று ஒரு கட்டுரை. அதைப்புனைவு என்று ஆசிரியர் சொல்லவில்லை. ஃபீஜி நாட்டின் தலைநகர் சூவாவில் நடந்த விவசாய மாநாட்டில் தாம் கலந்து கொண்டதைப்பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். நான் எண்பதுகளில் பிஜி நாட்டிற்கு 15 நாட்கள் அந்த அரசின் விருந்தினராகச் சென்றிருக்கிறேன். மிக அழகான தீவுகள், கண் கவரும் மனத்தை அள்ளும் தாவரம், இயற்கை எழில். ஆசிரியர் விவரிக்கும் காவா பானத்தை நானும் சிறிதளவு சுவைத்திருக்கிறேன். ஃபிஜி பூமி புத்திரர்களின் கிராமங்களுக்குச் சென்று அளவளாவி அங்கிருக்கும் இந்திய சந்ததியினரைப்பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பேட்டிகள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால் கந்தராஜா சொல்வதெல்லாம் ஒரு அறிவியல் களஞ்சியத்திற்கு ஒப்பானவை. காவா அருந்தும் பழக்கம் அங்கு எப்படி வந்தது? என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அது அங்கு கரும்புத் தோட்டங்களை வாங்கி அரசியல் அதிகாரத்துக்கே வந்திருந்த பிரித்தானிய அரசின் ஒரு திட்டமிட்ட சோக வரலாறு என்று இப்போது புரிகிறது. அதற்கு அவர்கள் அடிமையாகி இருக்காவிட்டால், இந்தியர்கள் அங்கு செல்வதற்கு அவசியமே ஏற்பட்டிராது. மைனாக்களின் இனப்பெருக்கம் போல இந்தியர்களின் இனப் பெருக்கத்தால் அவர்களின் எண்ணிக்கை பிஜிதீவு வாசிகளைவிட அதிகமாகி, அரசியல் சண்டையையும் இன வெறுப்பையும் ஏற்படுத்திற்று. ஆளும் வர்க்கத்தின் மனித வக்கிரம் எப்படியெல்லாம் இயற்கையையும் மனித இயல்பையும் கொடூரமாகத் தனது சௌகர்யத்துக்காக மாற்றுகிறது என்பது விசனத்தை ஏற்படுத்துகிறது. சிந்திக்க வைக்கும் கட்டுரை.

ஒட்டுக்கன்றுகள்’ என்ற கட்டுரையில் கந்தராஜா மீண்டும் சொந்த ஊர் நினைவில் ஆழ்கிறார். நாவிதர்களை பரியாரி என்று ஏன் அழைத்தார்கள் என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார். நாகமுத்து என்ற ‘புருடா|விடும் பரியாரி, அவரைக் கண்டுகொள்ளாத அந்தஸ்து மிகுந்த அன்னம்மா. அவர்களுக்கு இடையே ஒரு ‘ஒட்டுக்கன்று’ எலுமிச்சை மரம் இருக்கும். அன்னம்மா வீட்டில் உயர் ஜாதி நாயும் உண்டு. இது பரியாரியைப் பாடாய் படுத்திற்று. பரியாரி ஒரு நாள் நாய்க்கு விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார். அதற்கு அன்னம்மா பரியாரியைப் பழிவாங்குவார், தனக்குத் தெரிந்த விதத்தில். அது அல்ல கதை. எலுமிச்சை மரத்தின் அடியில் நாய் புதைக்கப்படும். மழைக் காலத்துக்குப்பின் எலுமிச்சைமரம் அட்டகாசமாக வளர்ந்தது. எலுமிச்சை பழங்களின் உருவம் மாறி பெரிது பெரிதாக நாரத்தங்காய் தோன்றின. ஊர் முழுவதும் அதைப்பற்றின பேச்சாக இருந்தது. அந்த மாற்றத்தின் காரணத்தை விளக்க பத்மன் என்று ஒரு ஆள் வருவார். கதைபோல விளக்கம் வரும். தண்டு ஒட்டல், அரும்பு ஒட்டல் என்று பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். நாம் நினைப்பது போல மரங்கள் என்பது மரங்கள் மட்டுமே அல்ல!

செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் என்ற படைப்பு அருமையான ஒன்று. யாழ்பாணத்தில் மட்டுவில் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்லப்பாக்கியம் மாமிக்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்தபின்னும் கிராமத்து முட்டிக் கத்திரிக்காயின் சபலம் போகவில்லை. முட்டிக்கத்தரிக்காயின் அழகே அலாதி. பால்வெள்ளை நிறத்தில் உருண்டு திரண்டு முட்டி வடிவில் மினுமினுப்பாக இருக்கும். ஊரைப் பற்றி மாமி சொல்லும் கதைகள் ஏராளம். பன்றித்தலைச்சி அம்மனிலிருந்து, கோவிலும் அதைச் சுற்றின வயல் காணிகளும் அதில் விளையும் முட்டிக் கத்தரிக்காய்களும் என்று கடைசியில் கத்தரிக்காயில் முடியும், மாமியின் ஏக்கம் வெளிப்படும். சிட்னியிலும் மட்டுவில் முட்டிக் கத்திரியை ஆஸ்திரேலிய குவாறன்ரினின் கெடுபிடிகளையும் மீறி விதை கொண்டு வந்து வளர்த்தது அசகாய சூரத்தனம். மாமி யாழ்பாணக் கத்தரிக்காயின் ஏகப்பிரதினிதியானாள். ஆனால் மாமி ஒரு தவறு செய்தாள். மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் செடிகளுக்கு இடையே ஊதா நிறத்தில் நீண்டு வளரும் லெபனீஸ் கத்தரி செடிகளை நட்டாள். அடுத்த போக விளைச்சலில் மட்டுவில் கத்தரிக்காய் நிறம் மாறி இளம்பச்சை நிறமானது. உருண்டை உருவம் நீண்டுபோனது. மூன்றாவது வருடம் அதன் பாத்திரத்தன்மையே மாறி முட்கள் அதன்மேல் தோன்றின. அதற்கான அறிவியல் விளக்கம் எளிமையாகச் சொல்லப்படுகிறது. கத்தரி இனங்கள் இலகுவில் கலப்படையும் விவரத்தை மாமிக்கு விளக்குவது சுவாரஸ்யம்.

லெபனீஸும் யாழ்பாணமும் சேர்ந்தால், பாத்திரத்தன்மை மாறாதோ? தாவரங்கள் இயற்கையாகக் கலப்படைவது அயல் மகரந்த சேர்க்கையூடாக. ஆனால் செயற்கை மரபணு மாற்றம் எப்படி இயற்கை தாவர இயல்பை மாற்றும், ஆபத்து விளைவிக்கும் என்பதை மிக அழுத்தமாகவே ஆசிரியர் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்கிறார். நமது முன்னோர்கள் இயற்கை விஞ்ஞான அறிவைப் பெற்றிருந்தார்கள். முட்டிக் கத்திரிக்காயை தனியாக, மற்றதுடன் ஒட்டாமல் பயிர் செய்தார்கள். பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க விதைக் கலசங்களை உபயோகித்தார்கள். ஊரில் கோவில் குருக்களின் தோட்டத்தில் பாரம்பரிய மரியாதையுடன் வளர்க்கப்பட்ட மட்டுவில் கத்திரிக்காய் இப்பவும் வளர்வதை செல்லப்பாக்கியம் மாமி அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தார். பயிர்களின் பரம்பரை அலகுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆசிரியர் வெகு அழகாக கதை சொல்லும் பாணியில் வலியுறுத்துவதில் வெற்றி பெறுகிறார். எல்லா தமிழ் பள்ளிகளிலும் இந்தப் புத்தகத்தைப் பாடமாக வைக்கவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. படிப்பவருக்கு இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் ஆர்வம் கொள்ளவைக்கும் தொகுப்பு இது. ஆசி கந்தராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்!


வாஸந்தி


 2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.

 வ. மகேஸ்வரன்

ஆசி. கந்தராஜா என்ற அறிவியல் அறிஞனின் ஆக்கங்கள் நமக்கு அவசியம் வேண்டுபவை.

பேராசிரியர் வ.மகேஸ்வரன்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,
இலங்கை.

நானும் என் மனைவியும் எங்கள் பூர்வீக வீட்டிற்குச் சென்றிருந்தோம். வீட்டு முற்றத்தில் நீண்ட காலமாக நின்று, சுவையான பழங்களைத் தந்த பலா மரம் பற்றி, தங்கையிடம் விசாரித்தேன்.

அண்ணை, முந்தி இந்த மரத்தின் பழம் சுவையாக இருந்தது. ஆனால் இப்ப அதன் சுவையே போய் விட்டது’ என்றாள். உடனே என் மனைவி ‘ஒட்டுப் பலாவில் இப்போது ஒட்டுக்கட்டையின் வீரியம் கூடிவிட்டது போல’ என்றாள். நான் மனைவியை அதிசயத்துடன் திரும்பி பார்த்தேன். அவள், ஞானத்தில் வெளிவந்த ‘ஆசி. கந்தராஜாவின் ஒட்டுக்கன்றுகள் என்ற கட்டுரையில் இதை வாசித்தேன். அதில் அவர் இவ்வாறுதான்; சொல்கிறார்’ என்றாள்.

இது ஆசி. கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைக்கு கிடைத்த வெற்றி.

விஞ்ஞானம் சார்ந்த விளக்கங்களை பாடாந்தரமாக உருப்போட்டுக் காட்டாமல் மிக இலகுவான முறையில் அவர் அதை எழுதியிருந்தமையினால் அது இவ்வாறு கடைசி வாசகர் வரையும் சென்று சேர்ந்திருக்கின்றது. அறிவியல் சார்ந்த விடயங்களை தமிழில் தருதல் என்பது மிகுந்த சிரமமான விடயம். ஏனென்றால் வாய்க்குள் நுழைய முடியாத ஆங்கிலப் பதங்களும் அது தொடர்பான விபரணங்களும் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவற்றை நெட்டுருப் பண்ணலாம். ஆனால், விளங்கிக் கொள்ள முடியாது. இந்த அவலத்தை சிலர் தீர்த்துவைத்தனர். கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்த தமிழாக்க முயற்சியில் கூடிய அக்கறை காட்டியது. தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த கலைக்கதிர் என்ற சஞ்சிகை அறிவியல் தொடர்பான பல தகவல்களை எமக்குத் தந்தது. நமது நாட்டில் கூட ஏ. ஜே. கனகரத்தினா பல அறிவியல் கட்டுரைகளை எமக்குத் தந்திருக்கிறார். சிவானந்தன் கண்டறியாதது என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும், அறிவியல் சார்ந்த விடயங்களை கட்டுரைகளாக தரும் விதத்தில் தமிழ் இன்னமும் குழந்தை நிலையிலேயே இருக்கிறது எனலாம். தமிழ் எழுத்தாளர்கள் பலர் அறிவியல் விடயங்களை புனைகதை வடிவில் தர முனைந்துள்ளனர். நீல பத்மநாபன், சுஜாதா முதலியோர்; சில புனைவுக் கதைகளை எழுதியுள்ளனர். இத்தொடர் வளர்ச்சியின் ஒரு படி நிலையாகவே நண்பர் ஆசி கந்தராஜாவின் எழுத்துக்களையும் அடையாளம் காணமுடிகின்றது. பேராசிரியர் ஆசி கந்தராஜா ஜேர்மனிப் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்கல்வி கற்றவர். மேற்கு பேர்லின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர். பின்னர், டாக்டர் பின்பயிற்சியை யப்பான் பல்கலைக் கழகமொன்றில் உயிரியல் தொழில் நுட்பத்தில் பெற்றவர். அத்துறையிலேயே ஆய்வும், ஆசிரியமும் செய்த பழுத்த அனுபவமும் மிக்கவர். மேலைத்தேய பல்கலைக்கழகங்களிலும் அதே துறையில் பணியாற்றியவர். மத்திய கிழக்கிலும் தாவரவியல் தொடர்பாக பல நிறுவனங்களில் நிபுணத்துவ ஆலோசகராகவும் விளங்கியவர். இப்போது தன் அனுபவங்களை தமிழில் தர முயற்சிக்கின்றார். அந்த முயற்சியில் இரண்டு வகையான பரிசோதனைகளை மேற்கொள்கின்றார். முதலாவது, உள்ளதை உள்ளபடி எழுதுவது. மற்றையது உள்ளதை புனைவு சேர்த்து எழுதுவது. இதில் இரண்டாவது வகை அவருக்கான லாவகமான வாகனமாக அமைந்து விடுகின்றது. அவரது ‘கறுத்தக் கொழும்பான்’ புனைவு இலக்கியம் இதற்கு நல்ல உதாரணம் ஆகும். இப்போது மீண்டும் ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்…!’ என்ற மகுடத்தில் தன் புலமைத்துவத்தையும் புனைவையும் ஒன்றாகக் குழைத்து நமக்குப் படையல் செய்திருக்கின்றார். மைனாக்கள், ஒட்டுக்கன்றுகள், வீரசிங்கம் பயணம் போகிறார், விலாங்கு மீன்கள், மரங்களும் நண்பர்களே, செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்திரிக்காய், என்.பி.கே, தம்பித்துரை அண்ணையின் ஐமிச்சங்கள் ஆகிய எட்டு கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. ஆசி கந்தராஜாவின் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் மூலமாக அமைபவை அறிவியல் உண்மைகளும், அனுபவங்களுமே. அந்தவகையில் செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய், ஒட்டுக்கன்று, மரங்களும் நண்பர்களே, என்.பி.கே, தம்பித்துரை அண்ணையின் ஐமிச்சங்கள் என்ற ஐந்து கட்டுரைகளும் தாவர அறிவியல் சார்ந்த புனைவுகளாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் மிக்க கறுத்தக் கொழும்பான் மாமரங்களும், பலாமரங்களும், எலுமிச்சைகளும் ஒட்டுவழியாகத்தான் வந்தவை.

மேலும், ‘நாகமுத்துப்பரியாரிக்கு அடுத்த வீட்டில் வசித்த அன்னம்மாவின் வீட்டு எலுமிச்சை, இயல்புமாறி நாரத்தங்காய் காய்த்தது, கந்தையா அம்மானின் ஒரே மகள் வேதவல்லியக்காவின் வாழைத் தோட்டத்தில் வாழைப் பூக்களின் மகரந்தச் சேர்க்கை, செல்லப்பாக்கியம் மாமியின் வீட்டுத் தோட்டத்து முட்டிக் கத்தரிக்காய் நிறமும் வடிவமும் மாறியது, உடையார் பேரன் ஐயாத்துரையின் தோட்டத்தில் நெல் விளைய வேண்டிய காலத்தில் விளையாமல் நெல் மதாளித்து நின்றது’ முதலிய பிரச்சினைகளுக்கான பண்டைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து பல அறிவியல் விளக்கங்களைச் சுவாரஸ்யமாக முன்மொழிகிறார் எழுத்தாளர்.

பலா மரத்தினுடைய மகரந்தச் சேர்க்கை, இலைகள் சேகரித்து வைக்கும் சத்து மரத்தின் வேரைச் சென்றடையாமல் முன்னோர்கள் செய்த தடுப்பு நடவடிக்கை, வாழைத் தண்டு குலையாதல், வாழைக் கிழங்கு இனவிருத்தி செய்தல், தக்காளியும் உருளைக் கிழங்கும் ஒரு குடும்பப் பயிர்கள், அயல் மகரந்தச் சேர்க்கையால் இனக் கலப்புக்கள் ஏற்படுதல், மலட்டு விதைகளை உற்பத்தி செய்கின்ற பல்தேசியக் கம்பனிகள் ஆகிய எல்லாச் செய்திகளையும் நாசுக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல திறந்த உரையாடல்களாகவும், சம்பவங்களாகவும், அனுபவங்களாகவும் எமக்குத் தருகின்றார்.

இத்தொகுதியில் உள்ள விலாங்கு மீன்கள், மைனாக்கள், வீரசிங்கம் பயணம் போகிறார் ஆகிய மூன்றும் அவருடைய அனுபவத்தளத்தை விபரிப்பவை. அவர் தனது இரண்டாவது தாயகமாக வரித்துக் கொண்ட அவுஸ்திரேலியாவில் வாழுகின்ற ஆதிவாசி மக்கள் தொடர்பாக பல பண்பாடு சார்ந்த எச்சங்களை விபரணம் செய்கின்றார். அவற்றைத் தமிழ்ப் பண்பாட்டுடனும் ஒத்துப் பார்க்கின்றார். ஆனால் இந்த ஆதிவாசிகள் ஏமாற்றப்படுவதை மிக நுணுக்கமாகப் பதிவு செய்கின்றார். ஆங்கிலேயர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தபோது அவர்களது காம இச்சைக்குப் பலியான ஆதிவாசிப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் வாழ்வு முறையில் வெள்ளைக்காரர்களாகவும், சலுகைபெறும் வகையில் ஆதிவாசிகளாகவும் வாழுகின்ற இருமை நிலையினையும் இதனால் உண்மையான ஆதிவாசிகள் புறக்கணிக்கப் படுவதனையும் மிகவும் அனுதாபத்துடன் பொருத்தமான தலைப்பில் பதிவு செய்கின்றார். ‘வீரசிங்கம் பயணம் போகிறார்’ என்ற கட்டுரை லெபனானுக்குப் பேராசிரியராகச் செல்கின்ற வீரசிங்கம் என்பவருடைய அனுபவம் பற்றியது. லெபனானில் தயாரிக்கப்படும் ‘ஷவர்மா’ என்கின்ற உணவுப் பதார்த்தத்துடன் தொடங்கும் இந்தப்புனைவு மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் விவகாரத்தில் தொடங்கி, லெபனானில் அவருடையதும் அங்கே வேலை செய்ய வந்த கீழைத்தேயத்தவர்களது வாழ்வு மற்றும் லெபனானின் அரசியல் வரலாறு எனப் பல தகவல்களை தந்து மரபணு விவசாயம் ஏற்படுத்திய பாதிப்பில் முடிவடைகின்றது. மைனாக்கள் என்ற புனைவு, பீஜித் தீவிலே கூலியாட்களாகப்போன இந்தியர்கள் பற்றியது. குறிப்பாகத் தமிழர்கள் பற்றியது. பீஜித் தீவில் சகல நிகழ்வுகளிலும் பரிமாறப்படுகின்ற போதை தரவல்ல ‘காவா’ என்கிற பானம் பற்றிய விபரிப்புடன் அந்தக் கட்டுரை ஆரம்பமாகிறது. அந்த பானத்தின் வரலாறு சுவைபட விபரிக்கப்படுகின்றது. காவாவை அருந்தி சோம்பேறிகளாகக் கிடந்த பீஜித் தீவு மக்களை விட சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய தென்னிந்திய தமிழர்கள் கரும்புத்தோட்டத்திற்கு கூலிகளாக வரவழைக்கப்பட்ட கதை இங்கே தொடர்புபடுத்தப்படுகின்றது. பீஜித் தீவி;ல் இந்தியர்கள் மைனாக்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அவை இந்தியர்களைப் போலவே சுறுசுறுப்பானவை, இனப்பெருக்கம் செய்பவை. இதனால் பீஜித் தீவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகாரத்தை கைப்பற்றும் வரை உயர்ந்தது. ஆனால் இராணுவச் சதி அதைத் தடைசெய்தது. இந்த வரலாற்றை அங்குள்ள நான்காம் தலைமுறையிலுள்ள இளைஞரால் அவர் அறிகின்றார். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால், பீஜி-ஹிந்தி பேசுகிறார்கள். தாத்தாவுக்குத் தமிழ் தெரிகிறது. மகனுக்கு தமிழ் ஓரளவு புரிகிறது. பேரனுக்கு தமிழ் சுத்தமாக வரவில்லை. இது இன்றைய தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குச் சமர்ப்பணம். பேச்சுமொழி என்பது தொடர்ந்து வினையாற்றிக் கொண்டு இருகின்ற காரணத்தினால் அது விரைவில் மாறிவிடும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்.

பேராசிரியர் ஆசி கந்தராஜா தன் வாழ்வில் பெரும்பகுதியை ஜேர்மனியிலும், அவுஸ்திரேலியாவிலும் கழித்திருக்கின்றார். அதனால் சமகாலத்து வடபுலத்து பேச்சு மொழியில் ஏற்பட்ட மாற்றங்களை அவருடைய எழுத்தில் காணமுடிவதில்லை. மாறாக தான் புலம்பெயர்ந்த காலத்தில் வடபுலத்தில் நிகழ்ந்த பேச்சு மொழிக் கூறுகள் அவரிடம் நிறையவே பதியம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவை புதிய சொல்லாடல்களாக இருக்கலாம்.

பத்தியம் தீரும், குழைச்சு அடிகின்ற, பொரியல் கரியல், சட்டப்புழைவாய், அம்மாவின் வாகடம், பதகளிப்பு, கியாதி, புளிப்பத்துதல், சொரியல் காணி, மட்டுமட்டு, காடுவாசாரி, வள்ளிசாக, வைப்புச் சொப்பு – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பழைய காலத்தில் நிலவிய சொற்கள் அங்கங்கே தலைகாட்டுகின்றன. இது ஒரு முக்கியமான பதிவாகும். பேராசிரியர் சி கணபதிப்பிள்ளை தன்னுடைய நாடகங்களில் வடமராட்சிப் பிரதேசப் பேச்சுவழக்கினையும் வழக்குச் சொற்களையும் பதிவு செய்ததை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இவ்வாறான பதிவுகள் நமது மொழி வரலாற்றுக்கு அவசியமானவை. இது போலவே ஆசி கந்தராஜாவின் பேச்சு மொழி பிரயோகத்தில் இலகுத்தன்மையையும் பண்பாட்டுக் கோலங்களும் விரவிக் கிடப்பதை அறிய முடிகின்றது. இவ்வாறான பதிவுகள் நமக்கு அவசியம் வேண்டப்படுபவை.

இந்தப் புனைவுக் கட்டுரைகளின் இன்னுமோர் முக்கியமான அம்சம் அவற்றின் நகைச்சுவைக் கலப்பு ஆகும். எல்லாக் கதைகளிலும் நகைச்சுவை இழையோடி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஒட்டுக்கன்றுகள் என்ற புனைவில் அவர் குறிப்பிடுகின்ற நாட்டுப்பரிகாரிகள் பற்றிய அவரது விபரிப்பு, செல்லப்பாக்கியம் மாமியினுடைய நடவடிக்கைகளை அவர் விபரிக்கும் விதம், ‘வீரசிங்கம் பயணம் போகிறார்’ என்ற புனைவில் வீரசிங்கத்தாருக்கும் அவருடைய மனைவியாருக்குமிடையிலான நகைச் சுவை கலந்த உறவுச்சித்தரிப்பு ஆகியவை எல்லாம் இப்புனைவுகளைச் சுவாரஸ்யத்துடன் படிக்கத் தூண்டுகிறது. மேற்குறித்தவை பதச்சோறான உதாரணங்கள் மட்டுமே. புனைவு முழுமையும் அவருடைய நகைச்சுவை உணர்வு சுவாரஸ்யத்துடன் இழையோடி உள்ளது. விஞ்ஞான விளக்கத்தை சம்பவச் சித்தரிப்புக்களின் ஊடாக தருவது மட்டுமல்ல. வாசகனிடம் அவற்றை தொற்றச் செய்வதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதும் ஆசிரியரது நோக்கமாக அமைந்ததால் புனைவுகள் அனைத்திலும் அவர் அந்த நோக்கத்தை நிறைவேற்ற முனைந்திருக்கின்றார். மரங்கள் நண்பர்களே என்ற கதையின் முடிவில் அவரின் கதாபாத்திரமான வேதவல்லி அக்கா சவாரி மாடு முட்டி குழந்தைப் பேற்றுடன் இறந்து போவதை ‘குலையை ஈன்ற பின், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வாழை என வேதவல்லி அக்கா சொல்லும் கைக்கூ கவிதை அசரீரியாக இன்றும் ஒலிக்கின்றது’ என்ற கூற்றும், ‘இந்த வயதிலை நான் அங்கை போய் என்னத்தைச் பார்ப்பேன் தம்பி. என்னுடைய பேரன் அங்கு போய் வருவதற்கு நீ பணம் கொடுத்தியே, அதுவே பெரிய காரியம் என்றார் தாத்தா என் கைகளைப் பிடித்தபடி. அப்பொழுது தாத்தாவின் கண்களிலே சுரந்து நின்ற கண்ணீரை நான் அவதானிக்கத் தவறவில்லை’ என்ற, பீஜித்தீவுக்கு புலம்பெயர்ந்த தாத்தாவினுடைய கூற்றும் எமது கண்களில் நீரை வரவைப்பவை. விலாங்கு மீன்கள் என்ற புனைவில் ‘நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என கூப்பாடு போடுபவர்கள் அனைவரும் அதை வைத்து ஆதாயம் அடைந்தவர்களே என்பார், முதுபெரும் எழுத்தாளர் எஸ்.பொ. இது தமிழருக்கு மட்டுமல்ல கலப்பின ஆதிவாசிகளுக்கும் எப்படி பொருந்துகின்றது என வீரசிங்கம் நினைத்துப் பார்த்தார் என்ற கூற்றும், ஒட்டுக்கன்றுகள் என்ற புனைவில் ‘உண்மைதான்! பிரிவினைகளும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் ஊர்வாழ்க்கை சற்று விசித்திரமானது. மழைக்காலத்தில் யார் யாரோ நட்டு வளர்த்த ஒட்டு மரங்கள் இன்றும் இயல்புமாறி காய்க்கக்கூடும். நாங்கள் நினைப்பதுபோல மரங்கள் என்பது மரங்கள் மட்டுமே அல்ல!’ என்ற கூற்றும் நம்மை சிந்திக்கத் தூண்டுபவை. செல்லப்பாக்கியம் மாமியாரின் முட்டிக் கத்தரிக்காய் என்ற புனைவில் செல்லப்பாக்கியம் மாமியின் நடவடிக்கைகள் நகைச்சுவையுடன் வளர்த்தெடுக்கப்பட்டு ‘சிவன் கோயில் வாசலிலே செல்லப்பாக்கியம் மாமி விஸ்வரூபமாக எல்லோரின் முன்னும் உயர்ந்துநின்றார்’ என்று ஒரு இலட்சியப் பெண்ணாக அவரை உயர்த்துகின்ற கூற்றில் இருந்தும் ஆசி. கந்தராஜா என்கின்ற கட்டுரையாளனுள் புதைந்து கிடக்கின்ற எழுத்தாளன் விஸ்வரூபம் கொள்கிறான்.

பேராசிரியர் ஆசி. கந்தராஜா அவர்களுடைய எழுத்துக்களின் சுவாரஸ்யத்திற்கு மெருகூட்டுபவையாய் அமைபவை அவருடைய பண்பாடு பற்றிய விபரிப்புக்களும் நகரமயமாதல், அந்நியமயமாதல், உலகமயமாதல் நெருக்கடிளால் நாம் மறந்து போன பல பண்பாடுகளை நமது நினைவுகளில் மட்டும் வாழ்கிற பண்பாடுகளை, அவர் மீள பதியும் முயற்சி. குறிப்பாக பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மோதகமும் பொங்கலும் அவருடைய சொல்லாடலில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன. யாழ்ப்பாண சமூகம் தம்முடைய வாழ்வியலை கடின உழைப்பினூடாகவே கட்டமைக்கிறது என்பதை பல சம்பவங்களினூடாக அவர் வெளிப்படுத்துகின்றார். அவற்றுள் முதலாவது, அவர்களுடைய விவசாய முயற்சியாகும். கலட்டி நிலங்களை உழுதுகொத்தி பண்படுத்தி அதில் பல்வேறு விதமான பணப்பயி;ர்களையும் தானியங்களையும் அவர்கள் விளைவித்ததை ஆங்காங்கே குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் எனக்கு மஹாகவியின்,


மப்பின்றி காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
ஆனாலும் அந்தப் பாறை பிளந்து
பயிர் விளைவிப்பான் என் ஊரான்’


என்ற அடிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. இது போலவே கைம்பெண்கள் இயற்கைச் சூழலை தமக்கு சாதகமான பொருளியல் சார்ந்து பயன்படுத்திக்கொண்டு, தம் பிள்ளைகளை உயர்த்தினார்கள் என்ற செய்தியை பதிவிடுகின்றார். மேலும், யாழ்ப்பாணத்து நாட்டு வைத்தியர்களுடைய கபட நாடகங்கள், பரியாரி என்று அழைக்கப்படும் நாவிதர்களின் முக்கியத்துவம், யாழ்ப்பாணத்து உணவுப் பாரம்பரியம் ஆகிய பண்பாட்டுக் கோலங்கள் ஆங்காங்கே தலைகாட்டுவதை அவதானிக்கலாம். மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயின் ஒரு வகையும் யாழ்ப்பாண பண்பாட்டின் அடையாளந்தான். அது ஒரு வகையில் புனிதமான கறி உணவாக கோயில்களில் சமைக்கப்படுவது. அதேவேளை அது ஆட்டுக்கறியின் காரத்தைச் சமப்படுத்துகின்ற அசைவுச் சேர்க்கைக்கும் உதவுகின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்து வைரவ கோயில்களிலும் ஐயனார் கோயில்களிலும், பேச்சியம்மன் கோயில்களிலும் வேள்வி என்ற பெயரில் நிகழ்ந்த உயிர்ப்பலி விழாக் காலங்களில் இந்த மட்டுவில் கத்தரிக்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. இது ஓர் உணவுப் பண்பாட்டின் அடையாளம். இன்று ஆசி கந்தராஜா சொல்வதுபோல முட்டிக் கத்தரிக்காய் போய், ஊதா கத்தரிக்காய்க்கு நாம் யாவரும் மாறிவிட்டோம். மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயின் சுவை நூலாசிரியருக்கு நேர்ந்ததைப் போலவே நம்முடைய நாவிலும் சுவை மாறாமல் நிலைத்துள்ளது. நமக்கு அதிகமான செல்லப்பாக்கியம் மாமிகள் தேவை.

நிறைவாக ஆசி. கந்தராஜா என்ற அறிவியல் அறிஞனின் ஆக்கங்கள் நமக்கு அவசியம் வேண்டுபவை. அவை அறிவியலை கூற முனைந்த போதும் அதனுள்ளே மொழி, பண்பாடு என்ற விடயங்கள் தேங்கி நிற்கின்றன. அவை இலகு நடையில் நகைச்சுவை கலந்து விளங்கவைப்பவை. அவற்றை வெறும் அறிவியலாகவோ அல்லது புனைவாகவோ கொள்ள முடியவில்லை. இரண்டும் கலந்த கலவை. அறிவியல் உண்மைகளைத் தான் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை மிக நுணுக்கமாகப் பயன்படுத்தி அந்த பண்பாட்டிற்கேயுரிய மொழி வழக்குகளைச் சேகரம் செய்தும் பதிவிட்டும் தருகிற புதிய புனைவு உத்தி, இது புதிய வரவு. தமிழுக்குக் கிடைத்த நன்கொடை.

மாணவ சமூக நலன் கருதியும், பொதுவாசகனுக்கு அறிவூட்டுவது கருதியும் நண்பர் ஆசி. கந்தராஜா தொடர்ந்து எழுதிக் குவிக்க வேண்டும் என்பது எனது அவா.


பேராசிரியர் வ. மகேஸ்வரன் (2017


 2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.


ஆசி கந்தராஜாவின் புனைவுக் கட்டுரைகள்.

(தி. ஞானசேகரன். ‘ஞானம்’ பிரதம ஆசிரியர்)

 

மிழ் இலக்கியத்தில் புனைவுக்கட்டுரை என்பது ஓர் இலக்கிய வகைமை. இது விவரணக்கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை, தகவல்தரும் கட்டுரை என்பனவற்றிலிருந்து வேறானது. புனைவுக்கட்டுரையில் கற்பனையும் அழகியல் அம்சமும் பாத்திரவார்ப்பும் இணைந்திருக்கும். தமிழிலக்கிய உலகில் இன்று புனைவுக் கட்டுரையின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் ஆசி கந்தராஜா.

அவுஸ்திரேலியாவில் வாழும் ஆசி கந்தராஜா ஓர் ஈழத்து எழுத்தாளர். பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியரான இவர், ஜேர்மனி யப்பான் மற்றும் அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் பயின்றவர். 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் பூங்கனியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம்பற்றி விரிவுரைகள் ஆற்றியவர். இத்துறையில் பல கல்விமான்களை உருவாக்கியவர். இத்துறையில் 70க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். ஜேர்மன் நாட்டில் 13 ஆண்டுகள் வாழ்ந்த இவர், தற்போது 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

பல்கலைக்கழகப் பணி நிமித்தம் இவர் சென்ற நாடுகளில், தான் கண்ட வித்தியாசமான நிகழ்வுகள், வாழ்வியல் தரிசனங்கள் ஆகியவற்றைப் படைப்புகளாகத் தருகிறார். அதேவேளை சாமானியர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் விஷயங்களையும் இவர் புனைவுக்கட்டுரைகளாகத் தருகிறார். ஞானம் சஞ்சிகையில் ஆசி கந்தராஜா அவர்கள் சிறுகதைள், குறுநாவல், புனைவுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் புனைவுக்கட்டுரைகளே அதிகமானவை. இவர் ஞானம் சஞ்சிகையில் எழுதிய புனைவுக்கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் முகநூலிலும் மீள்பிரசுரமாகியுள்ளன.

இத் தொகுப்பில் அடங்கியுள்ள புனைவுக்கட்டுரைகளில் ஏழு கட்டுரைகள் ஞானம் சஞ்சிகையில் வெளிவந்து வாசகர்களிடையே பெரும் பாராட்டடைப் பெற்றவை. வீரசிங்கம் பயணம் போகிறார் என்ற கட்டுரை தினக்குரலில் தொடராக வெளிவந்தது. இத்தொகுப்பில் உள்ள செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய், ஒட்டுக்கன்றுகள், மரங்களும் நண்பர்களே, என்.பி.கே. ஆகிய படைப்புகள் யாழ்ப்பாணப் பிரதேசத்தைப் பகைப்புலமாகக் கொண்டவை. தான் பிறந்து வளர்ந்த யாழ்மண்ணின் விவசாயம் தொடர்பான பெருஞ் செல்வங்கள் அழிந்து போகின்றனவே அவற்றை மீள்எழுச்சி பெறச் செய்யவேண்டும், அதற்கான அறிவியலை சாதாரண மக்களும் பெறவேண்டும், அவர்கள் விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்கின்ற ஆதங்கம் ஆசிரியரின் அடிமனதில் கனன்று கொண்டிருக்கின்றதோ என்ற எண்ணம் மேற்குறிப்பிட்ட படைப்புகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. ‘எட தம்பி, அப்ப எங்கடை யாழ்ப்பாணத்துக்குப் பெருமை சேர்த்த கறுத்தக் கொழும்பான் மாம்பழமும் கொடிகாமத்துப் பிலாப்பழமும், நீர்வேலி மண்ணில் விளைந்த இதரை வாழைப்பழமும் தங்களின் தூய பரம்பரைச்சுவைகளுடன் இப்ப இல்லையெண்டு சொல்லுறியோ?’ என்று ஒரு பாத்திரம் பேசுவது இந்த எண்ணத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைகிறது. மேற்குறிப்பிட்ட ஆக்கங்களில் ஆசிரியர், அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த யாழ்ப்பாணச் சூழலை அக்கால மக்களின் வாழ்வியலை வாசகர்முன் கொண்டுவருகிறார். கைதேர்ந்த புனைகதையாளனின் திறனுடன்; மண்ணின் மைந்தர்களுக்கேயுரிய மண்வளச் சொற்றொடர்களை ஆங்காங்கே புகுத்தி வாசகனைப் படைப்புடன் ஒன்றச் செய்கிறார். எடுத்துக்காட்டாக, ‘கத்தரிக்காய்கள் பல்லிளித்தன’, ‘மனைவிக்குக் குழையடித்து’, ‘மாமிக்குப் புளிப்பத்தியிருக்க வேண்டும்’, ‘வெட்டிப் புருடாவிட்டு’, ‘நீண்டநேரம் பீலாவிடுவார்’, ‘பேடு கூவித்தான் பொழுது விடியும்’ ‘காதைக்கடித்தன சில ஊர்ப்பெரிசுகள்’, ‘ஆச்சியின் வாய் நமநமக்க’, ‘பொட்டளி போலக்கட்டி’, ‘கை நனைக்காமல் போவதில்லை’, ‘என்ன விண்ணாணமோ எனப் புறுபுறுத்தபடி’ – போன்ற சொற் பிரயோகங்களைக் கூறலாம். இந்த மொழிசார் நளினங்கள் வாசகனை படைப்புடன் ஒட்டியுறவாடச் செய்வதோடு புனைவின் அழகியல் அம்சங்களுக்கு வலுச்சேர்க்கின்றன. விலாங்கு மீன்கள் என்ற புனைவுக்கட்டுரையில் அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வரலாற்றையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விபரிக்கும் ஆசிரியர், ‘ஈழத்தமிழர் மத்தியில் மதுவும் போதைப்பொருட்களும் திட்டமிட்ட வகையில் அறிமுகம் செய்யப்படுவதை நினைத்து பரமலிங்கம் உணர்ச்சிவசப்பட்டார்’ என யாழ்ப்பாணத்துப் பின்னணியை ஒப்பிட்டு நோக்குவது தற்செயலானதல்ல.

ஆசிரியரின் படைப்புலகம் யாழ்ப்பாணத்தைச் சுற்றியே சுழல்கிறது. வீரசிங்கம் பயணம் போகிறார் என்ற கட்டுரை லெபனானுக்கு பேராசிரியராகப் போகும் வீரசிங்கம் என்ற யாழ்ப்பாணத்து மனிதரின் அனுபவங்களாக விரிகிறது. இதில் அவர் மரபணு மாற்றம் செய்யப்படும் பயிர்கள் பற்றியும் லெபனானில் கீழைத்தேய மக்களின் வாழ்வு பற்றியும் அந்நாட்டின் அரசியல் வரலாறு பற்றியும் இஸ்லாத்தின் மதப்பிரிவுகள் பற்றியும் பதிவு செய்துள்ளார். ‘தென்லெபனாலில் யாழ்ப்பாணச் சுவாத்தியம் உண்டு. அங்கு மா, வாழை, தோடை, எலுமிச்சை, தொடக்கம் எல்லா உலர்வலயப் பயிர்களும் நன்கு வளரும்’ என யாழ்ப்பாணத்துச் சுவாத்தியத்தை தென்லெபனான் சுவாத்தியத்துடன் இணைத்துக் காட்டுகிறார். மைனாக்கள் என்ற கட்டுரை பிஜித்தீவு அரசியல் பற்றியும் மக்கள் வாழ்வியல் பற்றியும் அங்கு கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யச்சென்ற இந்திய வம்சாவழியினரது இன்றைய நிலை பற்றியும் பேசுகிறது. தம்பித்துரை அண்ணனும் பேரனும் ஐந்து ஐமிச்சங்களும் என்ற கட்டுரை சமகாலத்தில் மக்களிடையே நிலவும் சந்தேகங்கள் சிலவற்றிற்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் தருவதாக அமைகிறது.

ஆசி கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகளில் யாழ்ப்பாணத்துக் கதாபாத்திரங்கள் வராத கட்டுரைகளைக் காணமுடிவதில்லை. மொத்தத்தில், விஞ்ஞான பூர்வமானதும் அறிவியல் சார்ந்ததுமான சிக்கலான விடயங்களை இலகு தமிழில் சொல்லிவிடும் சூட்சுமம் ஆசி கந்தராஜாவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் புனைவுக்கட்டுரை என்ற வகைமையை அறிமுகம்செய்த பெருமையை ஞானம் சஞ்சிகைக்கு அளித்ததோடு தமிழின் உலகத்தரமான சில சிறுகதைகளை ஞானம் சஞ்சிகையில் எழுதி சஞ்சிகையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் ஆசி கந்தராஜா. அவரது இந்தப் புனைவுக்கட்டுரைத் தொகுப்பினை ஞானம் பதிப்பகத்தி னூடாக வெளிக்கொணர்வதில் நாம் பெருமை அடைகிறோம்.

தி. ஞானசேகரன். ‘ஞானம்’ பிரதம ஆசிரியர்

 

No comments:

Post a Comment