Saturday 30 January 2021

 


செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்…!

ஆசி கந்தராஜா

-1-

செல்லப்பாக்கியம் மாமி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய்! இது பால் வெள்ளை நிறத்தில் உருண்டுதிரண்டு முட்டிவடிவில் மினுமினுப்பாக இருக்கும்.

செல்லப்பாக்கியம் மாமி மட்டுவில் என்னும் கிராமத்தில் பிறந்து, அங்கேயே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியருக்கு வாழ்க்கைப் பட்டவர்.

அவர் பிறந்ததும் வாழ்க்கைப் பட்டதும் மேட்டுக் குடி. இதனால், சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பும் அந்த ‘மிடுக்கு’ சற்றும் குறையாமல் மகள் குடும்பத்துடன் வாழ்ந்தார். சுற்றி வளைத்து எப்படியோ என்னுடைய மனைவியின் பாட்டன், சிங்கப்பூர் பென்சனியர், தனக்குச் சொந்தமெனச் சொல்லிக்கொண்டு எமது வீட்டுக்கும் அடிக்கடி வந்துபோவார். சரிகைக்கரை வைத்த நூல்சேலை கட்டி, தங்கச்சங்கிலி கோத்த மூக்குக் கண்ணாடியுடன் மிடுக்காக வலம் வரும் அவரை, எல்லோரும் மாமி என்றே அழைத்தார்கள். அதனால் எனக்கும் அவர் மாமியானார். அடிமட்டத்திலிருந்து நான் மேலே வந்தவன் என்பதும், அவரது பருப்பு என்னில் வேகாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இதனால் மாமியின் வடிகால் பெரும்பாலும் என்னுடைய மனைவியே!

ஆஸ்திரேலியாவிலும் பல ‘சைசில்’ முட்டிக்கத்தரிக் காய்கள் உண்டு. ஆனால் அவை ஊதா நிறமானவை. அம்மா எங்களுடன் வாழ்ந்த காலங்களில், ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஊதாநிற முட்டிக் கத்தரிக்காயில் பால்கறி வைக்கமாட்டார். அது வேகும்போது ஊதா ‘நிறமணிகள்’ வெளியேறி, பால்க்கறி ஊதா நிறமாகிவிடும் என்பது அம்மாவின் வாகடம். சுவையிலும் மட்டுவில் கத்தரிக்காய்க் கறிக்கு கிட்டவும் நிக்காது என்றும் வாதிடுவார்.

யாழ்ப்பாணத்தில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பிரசித்தமானது. இது தென்மராட்சி பெருநிலப் பரப்பின் சாவகச்சேரி-புத்தூர் வீதியில், மட்டுவில் கிராமத்தின் வடக்குப் பகுதியில், வயலும் வயல் சார்ந்த இடத்தில், மருதமரமும் புளியமரமும் ஓங்கி வளர்ந்த சூழலில் அமைந்துள்ளது. அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் ஆலய மூலஸ்தானத்தின் பின்புறமாக, பித்தளையில் பொறிக்கப் பட்டிருப்பதாக மாமி சொன்னார். பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் நூறு அடி நீள அகலத்தில் தீர்த்தக் கேணியும் உண்டு.

பன்றித்தலைச்சி’ என்ற காரணப் பெயர் வந்தமைக்கும் மாமி ஒரு கதை சொன்னார். ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் செய்து வந்தானாம். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறி பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான். நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச் சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தானாம். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில், முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை ‘நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன்’ என்று கூறு என்று அருள்புரிந்தாள். அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டதாம். அதைக் கண்ட பக்தன் ஆடிப்பாடி கைகூப்பி, கண்ணீர்மல்க, வாய் குழறியபடி ‘பன்றித் தலைச்சி’ என்று பக்தியோடு பல முறை பணிந்தாகச் சொன்ன மாமி, வேறு ஒரு கொசுறுத் தகவலையும் சொன்னார். கனவிலே தனது பக்தனுக்கு கிழக் கோலத்தில் காட்சி கொடுத்த காரணத்தால், தாயை இன்றும் ‘கிழவி’ என்றே மட்டுவில் கிராமத்தில் அழைக்கும் வழக்கமுண்டாம். இப்பொழுதும் மடடுவில் அம்மன் கோவில் பூசை திருவிழாவுக்கு தவில் நாதஸ்வரம் வாசிக்கப்படுவதில்லை. பறையே அடிக்கப்படும். இந்த நடைமுறை செல்லச் சந்நிதியிலும் உண்டென என்னுடைய அம்மா சொன்னார்.

பன்றித்தலைச்சி’ என்ற சொற்றொடரோடு பங்குனித் திங்களும் சேர்ந்து வரும். யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் கோவில் கேணியில் தலைமுழுகி, பொங்கலிட்டு வணங்குவார்கள். பொங்கலுடன் மோதகமும் பொரிக்கப்படும். இவை அவித்த மோதகத்திலும் சுவையானவை. பொரித்த மோதகத்துக்காக நான் சிறுவயதில் காத்திருந்த தருணங்கள் இனிமையானவை. மாட்டுக்கு நேர்த்திவைக்கும் பெரியம்மா, மாட்டுவண்டிலில் தில்லையம்பலப் பிள்ளையார் கோவிலுக்குப் போவதும் மோதகம் பொரித்துப் படைப்பதும், இன்றும் என் நினைவுக்கு வருகின்றது.

அயல் கிராமங்களிலிருந்து மட்டுவில் அம்மன் கோவில் பொங்கலுக்கு, பலவகையான மாட்டு வண்டில்களில் வருவார்கள். அறுபதாம் ஆண்டுகள்வரை இது ஒரு கண்கொள்ளாக் காட்சி. பொங்கலுக்கு உவப்பான கறி மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயில் ஆக்கிய வெள்ளைக் கறியே. வெள்ளைக் கறி என்றவுடன் தேங்காய்பால் சேர்க்க வேண்டுமென்று எண்ணக்கூடாது. பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்துடன் கல்லுப்பு மட்டும் சேர்க்கப்படும். சிவத்தப் பச்சைஅரிசிப் பொங்கலுடன், மட்டுவில் தண்ணியில் அவிந்த முட்டிக் கத்தரிக்காய்க் கறியின் சுவை அலாதியானது.

செல்லப்பாக்கியம் மாமியின் குடும்பமும் கோவிலுடன் தொடர்புடைய ஆசாரமான குடும்பமே. மட்டுவில் கிராமத்தில் அவரது குடும்பத்துக்கு பெருமளவு காணிபூமிகளுண்டு. குத்தகைக்கு விடப்பட்ட அவரது வயல் காணிகளில் முட்டிக் கத்தரிக்காய்கள் அபரிதமாக விளைந்தன. மாமி பெருமைப்படும் விடயங்களில் இதுவுமொன்று. கோடை காலத்தில் பங்குனி மாதம் தொடக்கம் முட்டிக்கத்தரிக்காய் அறுவடை செய்யப்படும். வேறு இன கத்தரிகள் மட்டுவில் கிராமத்தில் குறைந்த அளவிலேயே (பிறம்பாகப்) பயிரிடப்படும் என்றும், இதற்கான அறிவியல் காரணத்தை மட்டுவில் விவசாயிகள் அநுபவரீதியாக தெரிந்து வைத்திருப்பதாகவும் தென்மராட்சி கிராமங்களுக்குப் பொறுப்பான விவசாய ஓவசியர் சொன்னார்.

கத்தரிச் செடியின் உயிரியற் பெயர் ‘சொலனும் மெலோங்கேனா’ (Solanum melongena) என்பதாகும். இவை சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை செடி. இக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே கத்தரிச் செடியின் தாயகம் எனவும், ஆங்கிலேயர்களும் ஐரோப்பியர்களும் இதனை பதினோராம் நூற்றாண்டிலேயே அறிந்து, தமது நாடுகளில் பயிரிட்டதாகவும் உசாத்துணை நூல்கள் சொல்கின்றன.

சிட்னியிலும், மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயின் ஏக பிரதிநிதியாக செல்லப்பாக்கியம் மாமி இருக்க விரும்பிய விஷயம், அது கை நழுவிப்போன பின்பே எனக்குத் தெரியவந்தது. அவுஸ்திரேலியாவில் குவாறன்ரின் கெடுபிடிகள் அதிகம். வெளி நாடுகளிலிருந்து தாவரங்களின் விதைகள், கிழங்குகள், பதியன்களை உள்ளே கொண்டுவர அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தாவரங்களுக்கு தீங்கு செய்யும் நுண்ணுயிர்களைத் தடுக்கும் நடைமுறையே இது. சட்டத்தை மீறுபவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள். இருப்பினும் மட்டுவில் கத்தரிக்காய் மீது, சடைத்து வளர்ந்த மாமியின் காதலுக்கு முன்னால், அவுஸ்திரேலிய குவாறன்ரின் கெடுபிடிகள் தோற்றுப் போயின. கத்தரி விதைகளை சரையாக மடித்து, மாமி தனது ரவிக்கைக்குள் செருகி, சிட்னிக்கு கொண்டுவந்த செய்தியை, என்னுடைய மனைவி ஒரு நாள் கதையோடு கதையாகச் சொன்னாள். அடுத்த வருடமே மாமியின் பின் வளவில், மட்டுவில் கிராமத்தின் பெருமையைப் பறைசாற்றிய முட்டிக் கத்தரிக் காய்கள் காய்த்துக் குலுங்கின. அவை இந்திய மளிகைச் சாமான்கள் விற்பனையாகும் சிட்னிக் கடைகளில் பெருமளவில் விற்பனையானது. மாமியின் புழுகத்தைக் கேட்க வேண்டாம். சிட்னிக்குப் புலம்பெயர்ந்தாலும் தானே மட்டுவில் கத்தரிக்காயின் ஏக பிரதிநிதி, என்ற இறுமாப்பில் செல்லப்பாக்கியம் மாமி காற்றில் மிதந்தார்.

தமிழ் வாத்தியாரின் அடிசிற்கினியாளாக, மட்டுவில் கிராமத்தில் பெருவாழ்வு வாழ்ந்த மாமிக்கு, மரபணு மாற்றங்களின் உட்சூக்குமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. சொலானனேசியே (Solanaceae) குடும்பத் தாவரங்கள் ‘பன்மியத்தன்மை' (Diversity) கொண்டவை. இதன் மரபணுக்கள் வெகு இலகுவில் கலப்படையக் கூடியன. குறிப்பாக கத்தரி இனங்கள் கலப்படையும் போது அதன் தாக்கம் அடுத்த சந்ததி பூத்துக் காய்க்கும்போது, துல்லியமாகத் தெரிந்துவிடும்.

செல்லப்பாக்கியம் மாமி விட்ட பிழை இதுதான்!

மாமிக்கு ஊர் அரிசிப் புட்டுக்கு, நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியல் வேணும். பொரியலுக்கு மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் தோதுப்படாது என்பது மாமியின் அபிப்பிராயம். இதற்காக ஊதா நிறத்தில், நீட்டாக காய்க்கும் ‘லெபனீஸ்’ கத்தரிச் செடிகளை மட்டுவில் கத்தரிக்கு இடையே நாட்டி வளர்த்தார். அடுத்த போக விளைச்சலில், மாமிக்கு சிக்கல் துவங்கியது. முதல் வருடத்து விதைகளில் முளைத்து வளர்ந்த மட்டுவில் கத்தரியில், இளம்பச்சை நிறத்திலும் நீள்வட்ட வடிவிலும் கத்தரிக்காய்கள் பல்லிளித்தன. மூன்றாவது வருடம் மட்டுவில் கத்தரிக்காய் மூளில், பாரிய முட்கள் தோன்றி மாமியைப் பயமுறுத்தவே மாமி என்னிடம் வந்தார்.

மட்டுவில் கிராமத்து வயல் வெளியில் முட்டிக் கத்தரிகளை ‘தனித்து’ நடும் மரபு இதற்காகத்தான் என்பதையும், கத்தரி இனங்கள்; இலகுவில் கலப்படையும் விபரத்தையும் மாமிக்கு முடிந்தவரை விளக்கினேன். மாமியின் பதகளிப்பு அடங்கவில்லை. ‘இதுக்கு என்னடா தம்பி செய்யலாம்…? உன்ரை ஆய்வு கூடத்திலை பழையபடி மாத்தேலாதோ?’ எனக்கேட்டு பரிதாமாக என்னைப் பார்த்தார்.

மரபணுக்கள், கண்களால் பார்க்கமுடியாத ‘கலங்களின்’ நடுவேயுள்ள ‘அணுக்கருவில்’ அமர்ந்திருக்கும். ஆய்வு கூடங்களில், செயற்கை முறையில் மரபணு மாற்றமென்பது, கார் கராஜில் ‘ஒரு நட்டைக் களட்டி அதற்குப் பதிலாக இன்னொரு நட்டைப் பூட்டும் சமாச்சாரமல்ல. ஆய்வுகூட மரபணு மாற்றம் எல்லாத் தாவரங்களிலும் வெற்றி பெறுவதுமில்லை. இதற்கும் மேலாக, இதற்குப் பல சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். பல சௌக்கிய சோதனைகளின் பின்னர், தாவரத்தை சந்தைக்கு விட அரச அநுமதியும் பெறவேண்டும். இவையெல்லாம் செல்லப்பாக்கியம் மாமிக்கு இலகுவில் புரியவைக்கிற விஷயங்களல்ல. நிலமையைச் சுமுகமாக்க, ‘ஊரிலை இருந்து கொண்டுவந்த கொட்டைகளிலை மிச்சம் ஏதும் இல்லையோ மாமி?’ எனக்கேட்டாள் என்னுடைய மனைவி.

ஐஞ்சாறு கொட்டையள் இருந்ததடி பிள்ளை. போட்டுப்பாத்தன், முளைக்கேல்லை…’ என்றார் மாமி பரிதாபமாக. விதைகளின் முளைக்கும் திறன் ஆகக் கூடியது மூன்று வருடங்கள் மட்டுமே! மூன்று வருடங்களுக்கு முன்னர், சிட்னிக்கு கடத்திவந்த கத்தரி விதைகள் முளைக்காததில் வியப்பொன்றுமில்லை. செல்லப் பாக்கியம் மாமியை அன்று ஆசுவாசப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவது எமக்குப் பெரும்பாடாயிற்று. மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் விடையத்தில் மாமியின் மண்பற்றை நான் நன்கு அறிவேன். அதற்கும் மேலால், மரபணு சார்ந்த விடையங்களில் இயல்பாகவே எனக்குள்ள ஆர்வம் காரணமாகவும், இது பற்றிய தேடலில் தொடர்ந்து இறங்கினேன்.

 

-2-

நான் பிறந்து மண்ணழைந்த கைதடிக் கிராமத்தின் வடக்குப் பகுதியிலிருந்து, ‘நவபுரம்-காரைதூ’ கடலூடாக நடந்து சென்றால், மட்டுவில் சிவன்கோவில் மேற்கு வீதியில் ஏறலாம். கோடை காலங்களில் கடல் வற்றி தரவையாகும் போது, கைதடி மக்கள் இதனூடாக நடந்து சென்றே புரட்டாதிச் சனிக்கு, மட்டுவில் சிவன் கோவிலில் எள் எண்ணை எரிப்பார்கள். சிவன் கோவிலைச் சுற்றிவர ஏராளமான நாவல் மரங்கள் சடைத்து நின்றன. கோடை காலத்தில் கொழுத்த நாவல் பழங்கள் குலை குலையாகத் தொங்கும். அவற்றை பறித்து சாப்பிட்டது இன்றும் இனிமையான நினவுகள்.

இலங்கையில் போர் ஓய்ந்து போக்குவரத்து சீரான காலத்தில் (2012) மனைவியும் நானும் யாழ்ப்பாணம் புறப்பட்டோம். ‘நானும் ஊருக்கு வாறனடி பிள்ளை’ என்று என்னுடைய மனைவிக்கு குளையடித்து செல்லப்பாக்கியம் மாமியும் எங்களுடன் இணைந்து கொண்டார். போர்க்காலத்தில் அவரது மட்டுவில் வீடு இடிந்து சீரழிந்ததும், அதனால் கைதடியில் எங்களுடன் நிற்பது வசதியென்பதும் இதற்கான மேலதிக காரணங்கள்.

நாங்கள் மூவரும் ஒரு நாள் ‘நவபுரம்-காரைதூ’ தரவையூடாக மட்டுவில் கிராமத்துக்கு நடந்தே சென்றோம். சிவன் கோவிலைச் சுற்றியுள்ள நாவல் மரங்கள் போர்க்காலத்தின் சுவடுகளாக மொட்டையாக நின்று எங்களை வரவேற்றன. கத்தரிச் செய்கைகள் போர் காரணமாக கைவிடப்படதாகவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக வளர்ந்த மட்டுவில் கத்தரிகள் பராமரிப்பில்லாமல் கலப்படைந்து விட்டாதாகவும் சிவன் கோவில் குருக்கள் சொன்னார். மட்டுவில் கிராமம் எங்கும் சுற்றி அலைந்தபோது குருக்கள் சொன்னது உண்மையெனத் தெரிந்தது. அங்கு விளைந்த கத்தரிகள் நீள்வட்ட வடிவமாகவும் பால்வெள்ளை நிறம் மறைந்து, பச்சை கலந்தும் தோன்றின.

மட்டுவில் கிராமத்துக்கு காலாதிகாலமாக ‘கியாதி’யை ஏற்படுத்திய முட்டிக்கத்தரியின் தூய மரபணுக்களை இனி எங்கே போய்த் தேடுவது என்ற அங்கலாய்ப்பில் மனம் அலைக்கழிந்தபோது, ‘மரபணு என்றால் என்ன…? என்று, ஒரு கேள்வியைக் கேட்டு நிலமையைச் சுமுகமாக்கினான் குருக்களின் மகன் சர்வேஸ்வரன். அவன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு சோதனை எடுக்கிறான். அவனிடம் விஞ்ஞான ஆர்வம் நிறையவே இருப்பதை அவனுடன் பேசிய சிறிது நேரத்தில் தெரிந்து கொண்டேன். இதனால் என்னால் முடிந்தவரை, இலகுவாக அவனுக்கு இதுபற்றிய விஞ்ஞான தகவல்களை சொல்லத் துவங்கினேன்.

மரபணுவை, பரம்பரை அலகு என்றும் இலங்கையில் சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் அதை Gene என்பார்கள். இது ஒரு கலத்தின் (Cell) கருவினுள், கண்ணுக்குத் தெரியாத நூல்போன்ற குரமசோமில் (chromosome ) ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும். ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை, சந்ததி சந்ததியாக கடத்தக்கூடிய ஒரு அலகே (unit), மரபணு எனப்படும். உயிரினங்களின் இனப் பெருக்கத்தின் பொழுது பெற்றோரர்களிடமிருந்து அவர்களின் சந்ததிகளுக்கு இந்த மரபணுக்கள் கடத்தப்படுகின்றன’

இதனால்தான் பாட்டன் பாட்டி, தாய் தகப்பனின் இயல்புகள் பிள்ளைகளுக்கும் வருகுதெண்டு கொஞ்சம் இலகுவாய் சொல்லுங்கோவன். பட்டப் படிப்புக்கு விரிவுரை எடுத்தமாதிரி சொன்னால் தம்பிக்கு என்னெண்டு விளங்கும்’ என்று, என்னை மடக்கினாள் என்னுடைய மனைவி.

உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான ‘இரசாயன செயல் முறை’களுக்கும், ‘உயிரியல் இயல்பு’களுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களில் பதியப்பட்டுள்ளது’ எனத்துவங்கிய என்னை மீண்டும் மறித்து, ‘ஒரு கணினியிலுள்ள சிறிய மென் தகட்டில் (Computer-Chip) எப்படி பல்லாயிரக்கான தகவல்கள் சேமிக்கப் படுகின்றனவோ, அதேபோல மரபணுக்களிலும் உயிரியல் தரவுகள் பதியப்பட்டிருக்கும்’ எனச் சொல்லி விஷயத்தை இலகுவாக்கினாள் மனைவி. எங்கள் வீட்டில்கூட பல சிக்கலான விஷயங்களை பிள்ளைகளுக்கு இலகுவாகச் சொல்லிப் புரியவைப்பவள் அவளே!

நான் தொடர்ந்தேன். ‘உயிரியல் தரவுகள் என்னும் போது அது பார்த்தறியக்கூடிய இயல்புகளாகவோ (நிறம், வடிவம்), முகர்ந்து அல்லது ருசித்து அறியக் கூடியதாகவோ அன்றி பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (பரம்பரை நோய்கள்) இருக்கலாம்…..’

எனது அறிவியல் விளக்கங்கள் சர்வேஸ்வரனின் பத்தாம் வகுப்பு அறிவுக்கு கடினமாக இருந்திருக்க வேண்டும். தன்னுடைய தலையைச் சொறிந்தபடி ‘மட்டுவில்கத்தரிகள் கலப்படைந்து விட்டாதாக அப்பா சொன்னாரே, அதைக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லுங்கோ…’ எனக்கேட்டு கதையின் போக்கை மாற்றினான்.

தாவரங்கள் இயற்கையாகக் கலப்படைவது அயல் மகரந்தச் சேர்க்கையூடாகவே! வெள்ளை நிற மட்டுவில் முட்டிக் கத்தரிச் செடியின் அருகே ஊதாநிற கத்தரிச் செடிகளை நட்டுவளர்த்தால் அயல் மகரந்தச் சேர்க்கை இயல்பாகவே நடைபெறும். ஊதாநிறக் கத்தரியின் மகரந்த மணிகளிலுள்ள ‘விந்தணு’க்கள், வெள்ளை நிற மட்டுவில் கத்தரியின் ‘சூல்முட்டை’யுடன் இணைந்து கருக்கட்டி, கருமுளை (Embryo) உருவாகும்…’

உரையாடலின் நடுவே, குருக்களம்மா சிவன்கோவிலில் அன்று அபிஷேகம் நடந்ததாகச் சொல்லி பொரித்த மோதகங்களை என்முன்னே வைத்தார். கோவில் மடப்பள்ளியில் பொரித்த, மோதகங்களின் சுவையை சொல்லிப் புரியவைக்க முடியாது. அதைச் சுவைத்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். ஒரு வாய்க்குள் அடங்கக்கூடிய இனிப்பான சின்னச்சின்ன மோதகங்கள் அவை. பொரித்த மோதகங்கள் ஒவ்வொன்றாக என் வாய்க்குள் சங்கமாகிக் கொண்டிருந்தன.

இனிக்காணும். ‘சுகர்’ ஏறப்போகுது. தம்பி கேட்டதுக்கு மறுமொழியைச் சொல்லி முடியுங்கோ. ‘கருமுளையிலை’ (Embryo) நிப்பாட்டி, மோதகம் சாப்பிடத் துவங்கின்னீங்கள்…’ எனச்சொல்லி விட்ட இடத்தை நினைவுபடுத்தினாள் என்னுடைய மனைவி.

விந்தணு’க்களும், ‘சூல்முட்டை’யும் இணைந்து உருவான ‘கருமுளை’யில், ஒவ்வொரு இயல்புக்கும் (நிறம், வடிவம், காய்கனிகளின் சுவை…) தாயினதும் தந்தையினதுமாக இரு மரபணுக்கள் பொறுப்பாக இருக்கும். இவற்றில் எது ஆட்சியுடையதாகவும் வீரியமுள்ளதாகவும் இருக்கிறதோ, அந்த இயல்பே அடுத்த சந்ததியில் வரும்…’

அப்போ, ஊதாநிற காய் காய்க்கும் கத்தரிச் செடியின் மகரந்த அணுக்கள், மட்டுவில் கத்தரியில் கருக்கட்டினால் என்ன நடக்கும்?’ எனக் கேட்டு நான் விளக்கம் சொல்லுவதை இலகுவாகினான் சர்வேஸ்வரன்.

மட்டுவில் முட்டிக் கத்தரிச் செடியிலுள்ள பல இயல்புகள் (வெள்ளை நிறம், வடிவம். சுவை ஆகியன), ஊதாநிறக் கத்தரிச் செடிகளின் இயல்புகளுடன் ஒப்பிடும்பொழுது பின்னடைவானதாகவும் வீரியம் குறைந்ததாகவும் நம்பப்படுகிறது. இதனால்தான் கலப்படைந்த வெள்ளை நிற மட்டுவில் முட்டிக் கத்தரி, அடுத்த சந்ததியிலேயே தனக்கே உரித்தான இயல்புகளை இழக்கின்றன…’

அதுவரை குருக்கள் வீட்டு சைவச்சாப்பாடு தந்த மயக்கத்தில், தூணில் சாய்ந்து அரைத்தூக்கம் போட்ட செல்லப்பாக்கியம் மாமி மெல்ல எழுந்து எங்களருகில் வந்தார். தூக்க மயக்கத்திலும் எங்கள் சம்பாசனை அனைத்தையும் அவர் கேட்டிருக்கவேண்டும்.

எட தம்பி, அப்ப எங்கடை யாழ்ப்பாணத்துக்கு பெருமை சேர்த்த கறுத்தக் கொழும்பான் மாம்பழமும், கொடிகாமத்து பிலாப்பழமும், நீர்வேலி மண்ணில் விளைந்த இதரை வாழைப்பழமும் தங்களின் தூய பரம்பரைச் சுவைகளுடன் இப்போ இல்லை எண்டு சொல்லுறியோ…?’

அப்பிடி நான் சொல்லேல்லை மாமி. உண்மையான இயல்புகளெல்லாம் கொண்ட இந்த மரங்கள், யாரோ ஒருவருடைய பின்வளவில் இன்றும் இருக்கக்கூடும். அவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, கலப்படையாமல் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றுதான் சொல்லுறன்’.

பரம்பரை அலகுகள் கலப்படையாது, எங்களின் பாரம்பரியமான தாவரங்களை எப்பிடி பாதுகாக்கிறது எண்டு சொல்லுங்கோ…’ என ஆக்கபூர்வமானதொரு கேள்வியுடன் குறுக்கிட்டான் சர்வேஸ்வரன்.

பரம்பரை அலகுகளை (மரபணுக்கள்) விதைகளாகவும் பதியன்களாகவும் எமது முன்னோர்கள் பாதுகாத்து வந்தார்கள். விதைகளை அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறாத தாவரங்களிலிருந்து சேகரித்தே அவர்கள் பாதுகாத்தார்கள். பதியன்களை அல்லது வெட்டுத் துண்டங்களை பதிவைத்தோ அல்லது ஒட்டியோ (தண்டு, அரும்பு ஒட்டல்grafting, budding) இயல்புகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டன. நவீன முறையில் பரம்பரை அலகுகள் இளையவளர்ப்பின் மூலமும் (Tissue Culture) திரவ நைதரசனில் உறைகுளிரில் (Cryopreservation) பாதுகாத்தலின் மூலமும் பாதுகாக்கப்படுகின்றன’.

எனது விஞ்ஞான விளக்கங்களைக் கேட்டுக்கேட்டு, செல்லப்பாக்கியம் மாமிக்கு ‘புளிப்பத்தி’ இருக்கவேண்டும்.

கண்டறியாத விஞ்ஞான விண்ணாணங்களை விட்டிட்டு விஷயத்துக்கு வாதம்பி. கத்தரிக்கண்டு ஓராண்டுப் பயிர். வருசம் வருசம் கொட்டை போட்டுத்தான் பயிர் செய்யிறனாங்கள். கத்தரிக் கொட்டைகளை எப்பிடி பாதுகாக்கிறதெண்டு முதலிலை சொல்லு’ எனச் சீறிவிழுந்தார், செல்லப்பாக்கியம் மாமி. இதுவரையில் இப்படி அவர் என்முன்னால் கதைத்தது கிடையாது. மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் மீதுள்ள அடங்காத பாசம் அவரை இவ்வாறு பேசவைத்துள்ளது என்பதை நானறிவேன். இந்நிலையில் கத்தரிக் கண்டுகளை ‘ஒட்டி’ (Graft) ஒராண்டல்ல, பல வருடங்கள் தொடர்ந்து பயிர் செய்யமுடியுமென்ற விஞ்ஞான உண்மையைச் சொல்லி அவரை மேலும் வெறுப்பேற்ற விரும்பவில்லை. அத்துடன் மட்டுவில் விவசாயிகளுக்கு அதை இலகுவில் சொல்லிப் புரியவைக்கிற சமாச்சாரமுமல்ல. எனவே விதைகளை எப்படி நமது முன்னோர்கள் பராமரித்தார்கள் என்பதை சொல்லத் துவங்கினேன்.

காலாதிகாலமாக, மண் பானைகளில் விதைகளைப் பாதுகாக்கும் முறையே தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. பாரம்பரிய விதைகளை பாதுகாக்க முன்னோர்கள் ‘விதைக்கலசங்களை’ப் பாவித்தார்கள். மண்ணாலான கலசங்கள் விதைகளை குறைந்த வெப்ப நிலையில், குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். பாரம்பரிய குயவர்களின் உதவியுடன் உறுதியான, பல தடுப்புக்கள் கொண்ட மண் கலசங்கள் உருவாக்கப்படும். வேம்பு, நொச்சி மற்றும் தங்கள் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணமுள்ள மூலிகைகளை, சிறிய துண்டுகளாக வெட்டி மஞ்சள் கலந்து மண்கலசங்களில் தூவுவார்கள். பின்னர் கலசங்களிலுள்ள தடுப்புகளில் விவசாயிகள் விதைகளை வைத்து நீண்ட காலத்துக்கு பாதுகாப்பார்கள். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாகுதல் இந்த விதைகள் புதுப்பிக்கப்படல் வேண்டும்…’

அதுவரை எமது உரையாடல்களை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கோவில் குருக்கள், ‘என்னோடை ஒருக்கா வாருங்கோ…’ என எங்களை கோவில் பூங்கொல்லைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அபிஷேகத் தீர்த்தம் வழிந்தோடும் வாய்க்கல் அருகே, வில்வ மரத்தையொட்டிய ஒரு மூலையில், நான்கைந்து காய்களுடன் மட்டுவில் முட்டிக்கத்தரிச்செடி ஒன்று எங்களை வரவேற்றது. பல வருடங்களாக அந்தச்செடி அங்கேயே நிற்பதாகவும், சில கத்தரிக்காய்கள் முத்தி அழுகிவிழ, அதன் கொட்டை மீண்டும் முளைத்து சந்ததி சந்ததியாக அதே இடத்திலேயே கத்தரிச்செடி நிற்பதாகச் சொல்லி செல்லப்பாக்கியம் மாமியின் வயிற்றில் பால் வார்த்தார், கோவில் குருக்கள்.

சந்தேகமேயில்லை, ‘சாட்சாத்’ அது ஒறிஜினல் மட்டுவில் முட்டிக்கத்தரிச் செடியேதான்!

இந்த சம்வத்தின் பின்னர், மாமி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. தெளிந்த முகத்துடன் அடிக்கடி தரைவையூடாக மட்டுவில் கிராமத்துக்குச் சென்றுவந்தார். கார் பிடித்து சாவகச்சேரிக்கும் போனார். ஆறேழு நாட்களின் பின்னர் ‘மட்டுவிலில் ஒரு கூட்டம் இருக்குத் தம்பி, நீ வரவேணும்’ என்று மொட்டையாகத் தகவல் சொல்லி, என்னையும் மனைவியையும் வலுக்கட்டாயமாக ‘திறீவீலர்’ பிடித்து கூட்டிச் சென்றார்.

சிவன்கோவில் வெளிமண்டபத்தில் பழைய விதானைமார், கிராம சேவகர்கள், ஆசிரியர்கள், விவசாய ஓவசியர், தென்மராட்சிப் பகுதிக்கான விவசாய அதிகாரி, பல்கலைக்கழக விவசாயபீடத்தினர், விவசாயிகள் என பலர் அமர்ந்திருந்தார்கள்.

இது எமக்கே உரித்தான பாரம்பரிய பயிர்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், உனது தலைமையில்…’ என்று மாமி சொன்னதும், செல்லப்பாக்கியம் மாமிக்கு இவ்வளவு ஓர்மமா? என வியப்பால் விறைத்துப்போனேன்.

கூட்டத்தை கோவில் குருக்கள் தேவாரம்பாடி துவங்கிவைத்தார். பயிர்களின் பரம்பரை அலகுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை, விவசாயிகளுக்கும் புரியும்படி சொல்லுமாறு தென்மராட்சிப் பகுதிக்கான விவசாய அதிகாரி என்னைக் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் செயற்குழு தெரிவு செய்யப்பட்டு பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

கூட்ட இறுதியில் ஏகமனதாக கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

1.     புதிய இனங்கள், வழக்கத்திலுள்ள இனங்கள், மற்றும் பாரம்பரிய இனங்களை பதிவு செய்தல்.

 

2.     பதிவுசெய்யப்பட்ட இனத்தின் சிறப்பியல்புகளை கண்டறிந்து ஆவணம் செய்தல்.

 

3.     மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் போன்ற விவசாயிகளின் தனித்துவமான இனங்களை குறியீடு செய்தல், பட்டியலிடுதல்.

 

4.     புதிய இனங்களுக்கான தனித்தன்மை, ஒத்த குணாதிசயம், மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்யப் பயன்படும் நெறிமுறைகளை விவசாய இலாகாவுடன் இணைந்து உருவாக்குதல்.

 

5.     மரபணு (பரம்பரை அலகு) சேமிப்பு நிலையமொன்றை (Germplasm centre) பிரதேச ரீதியாக நிறுவி தாவர இனங்களைப் பராமரித்தல்.

 

நிறைவாக செல்லப்பாக்கியம் மாமி எழும்பினார்.

இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்கை போறதெண்டு யோசியாதையுங்கோ. இப்ப சொல்லப்போற முடிவை நான் விவசாய அதிகாரிக்கு சொன்ன பிறகுதான் அவர் கூட்டத்துக்கு வரவே ஒத்துக்கொண்டவர். என்ரை சீமான், வாத்தியார் விட்டிட்டுப்போன காசும், மாதாமாதம் எனக்கு வரும் விதவைப் பெஞ்சன் சாசும் சேர்ந்து, அறுபது லட்சம் ரூபா வங்கிக் கணக்கிலை இருக்கு. அதை நிரந்தர வைப்புக் கணக்கிலை போட்டுவிடுறன். அதிலைவாற வட்டிக்காசை எடுத்து இதுக்குப் பாவியுங்கோ. காலதிகாலமாய் நாங்கள் ஆண்டனுபவிச்ச காணியள், பிறந்து வளர்ந்த வீடு வளவெல்லாம் இப்ப அழிஞ்சுபோச்சு. இந்தக் காசெண்டாலும் நல்ல விஷயத்துக்கு பயன்படட்டும்’ எனச் சொல்லி அமர்ந்தார் மாமி.

நான் உட்பட சபையிலுள்ள அனைவரும், உறை நிலையிலிருந்து மீண்டுவர சிறிது நேரம் பிடித்தது.

செல்லப்பாக்கியம் மாமிக்கு இவ்வளவு பரந்த மனசா…? என மனைவிக்குக் கேட்கும்படி குசுகுசுத்தேன்.

இனிமேலெண்டாலும் மற்றவையைக் குறைச்சு மதிப்பிடுகிறதை இண்டையோடை விட்டிடுங்கோ…’ என என் மண்டைக் ‘கெறு’வில் ஓங்கிக்; குட்டுவைத்தாள் என்னுடைய மனைவி.

உண்மைதான்! மாமி செய்தது சின்ன விஷயமல்ல.

சிவன் கோவில் வாசலிலே, செல்லப்பாக்கியம் மாமி விஸ்வரூபமாக அன்று எல்லோர் முன்னிலையிலும் உயர்ந்து நின்றார்!

 

 

ஆசி கந்தராஜா (2014)

 

No comments:

Post a Comment