Monday 10 July 2023

 

சீன நாட்டு நண்பரும் எருமை மாட்டுப் புல்லும்!

அன்று சனிக்கிழமை!

சிட்னியிலுள்ள பிளெமிங்டன் என்ற இடத்தில், மிகப் பெரிய சந்தை கூடும் நாள்.

அன்று பல்லின மக்களுக்குத் தேவையான மரக்கறிகள் தொடக்கம் மீன், இறைச்சி வகைகள் வரை அங்கு பிறெஸ்ஸாகவும் மலிவாகவும் சில்லறையாகவும் வாங்கலாம். முதல்முறை பிளெமிங்டன் சந்தைக்குப் போகின்றவர்களுக்கு நிச்சயம் அது ஒரு புதுவகையான அனுபவம். அங்கு வரும் ஆங்கிலோ ஆஸ்திரேலியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சந்தைக்கு வருபவர்களுள் பெரும்பான்மையோர் புலம் பெயர்ந்த பல்லின மக்களே.

இங்கு எமக்கு இன்னொரு வசதியுமுண்டு. உடன் பிறப்புக்களான ‘எங்கட பெடியங்கள்’ இங்குள்ள மீன் கடைகளில் வேலை செய்கிறார்கள். இதனால் பாரை, ஒட்டி, சீலா, விளை, திரளி என மீன்களின் தமிழ்ப் பெயரைச் சொல்லி வாங்கவும், பேரம் பேசவும், குழம்புக்கு ஏற்றமாதிரி ‘யாழ்ப்பாண வெட்டு’ என்று மீனை வெட்டி வாங்கவும் முடியும். அலுவல் முடிந்து திரும்பியதும் ‘உவங்கள் இப்ப படகிலை வந்த பெடியள், கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும்’ என கொமன்ற் அடிப்பதையும் மீன் கடைகளுக்கு அருகில் சர்வ சாதாரணமாக கேட்க முடியும்.

சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் பிளமிங்டன் விவசாயிகளின் சந்தை, பகல் இரண்டு மணிக்கு முடிவடையும். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறிய அளவில் சந்தை கூடுவதுண்டு. தமிழ் மகா ஜனங்கள் பெரும்பாலும் சந்தை கலையும் நேரத்தில்தான் சாமான் வாங்கப் போவார்கள். இதற்கான காரணத்தை நான் இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை...

 

வெடுக்குப் பத்தன்

த்தன் என்கிற பத்மநாதனை சமீபத்தில் சந்தித்தேன். அவன், ஆயிரத்து தொழாயிரத்து அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவன். எங்கள் வகுப்பில் அப்பொழுது இரண்டு பத்மநாதன் இருந்தார்கள். ஒருவன் நெடுவல். அதனால் அவன் நெடுவல் பத்தன். மற்றவன் வெடுக்குப் பத்தன். அவனில் வேர்வை நாத்தம் அடிப்பதால் இந்தப் பெயர் அவனுடன் ஒட்டிக் கொண்டது. நாங்கள் இருவரும் கல்லூரி விடுதியில் ஒன்றாக இருந்து படித்தோம். அதுவும் ஒரே Dormitory, பக்கத்து, பக்கத்துக் கட்டில்!

வெடுக்குப் பத்தன் ஊத்தையன் அல்ல. அவனுடைய உடம்பிலிருந்து ஒருவகை நாத்தம் வீசுவது அவனுக்கும் தெரியும். சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், ஹோமியோபதி, அலோபதி (ஆங்கில வைத்தியம்) என அவன் செய்யாத வைத்தியங்கள் இல்லை. எல்லா வைத்தியர்களும் முடிவாகச் சொன்னது இதுதான்! அவனது உடம்பில் அதிக ரோமங்கள் இருப்பதாகவும் அதனால் சருமத் துளைகள் வழியாக அதிக வியர்வை வெளியேறுவதாகவும், அடிக்கடி குளித்துச் சுத்தமாக இருப்பதே இதற்கான பரிகாரம் என்றார்கள். இதனால் விடுதியில் அவன் மூன்று நேரமும் குளித்தான். வாரம் முழுவதும் நாங்கள் ஒரு ஷேட் போடுவோம். சில வேளைகளில் நண்பர்களிடம் கடன் வாங்கியும் அணிந்து கொள்வோம். ஆனால் பத்தன் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஷேட், தோய்த்து அயன்பண்ணிப் போடுவான். இருந்தாலும் அந்த மணம் அவனைவிட்டுப் போகவே இல்லை.

கால ஓட்டத்தில் பல்கலைக்கழக புகுமுக வகுப்புச் சோதனை முடிந்ததும் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திக்காக சிதறிப் போனோம்.

 

பூக்களே, காதல் செய்யுங்கள்...!

 

செல்லத்துரை அண்ணைக்கு 'ஹெளஸிங் கொமிஷன்' வீடு கிடைத்து விட்டது...! அதுதான் அன்றைய மூத்தோர் ஒன்றுகூடலில், முக்கிய 'பேசு'பொருள்.

செல்லத்துரை அண்ணை சிட்னிக்கு புலம் பெயர்ந்து வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் எப்படி ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடு கிடைத்தது? என மூத்தவர்கள் மூக்கில் விரலை வைத்தார்கள். சிலருக்கு இது ஆச்சரியம், பலருக்கோ பெரும் ஆதங்கம். மொத்தத்தில் எல்லோருடைய வயிறும் இதனால் புகைந்தது.

பெற்றோர் பிள்ளைகள் இணைப்பு விசாவில் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு 104 கிழமைகளின் பின்னர்,  'சென்றலிங்' பென்ஷன் கிடைக்கும். இது தானாகவே நடக்கும் சங்கதி. ஆனால் பென்ஷனுடன் செல்லத்துரை அண்ணைக்கு ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடும் கிடைத்ததைத்தான், பலராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

செல்லத்துரை அண்ணை, ஊரிலேயே வலு சுழியன். கமத்தொழில் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிவையம் என, அவர் வன்னியில் ஆதிக்கம் செலுத்தாத அமைப்புக்கள் இல்லை. அந்த அநுபவம் ஆஸ்திரேலியாவிலும் கைகொடுத்ததால் பிடிக்கிறவனை பிடித்து சட்டத்திலுள்ள ஓட்டைகளில் புகுந்து விழையாடி, அரசாங்கத்துக்கு சொந்தமான ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீட்டைப் பெற்றுவிட்டார். அதுவும் விசாலமான காணியுடன் ஒரு தனி வீடு!

இரு வாரங்களுக்கு ஒருமுறை, செல்லத்துரை அண்ணைக்கும், மனைவி தங்கம்மா அக்காவுக்கும் 1322 டொலர்கள் பென்சன் கிடைக்கிறது. அதில் மிகச் சொற்ப தொகையையே வீட்டு வாடகை. குறைந்த கட்டணத்தில் நாள் முழுவதும் றெயினிலும், பஸ்ஸிலும் சுற்றித் திரிய மேலதிக வசதி. பிறகென்ன? ராஜ வாழ்க்கைதான்!

 

தம்பித்துரை அண்ணையும் பேரனும் ஆறு ஐமிச்சங்களும்!

 

ரக்கப்பரக்க எனது வீட்டுக்கு பேரனுடன் வந்தார் தம்பித்துரை அண்ணை. அவர் எனது வீட்டிலிருந்து பத்து நிமிஷ நடைதூரத்திலுள்ள மகளின் வீட்டில் வசிக்கிறார். ஊரில் மட்டுமல்ல சிட்னியிலும் அவரை தமிழரசு தம்பித்துரை என்றால்தான் தெரியும். அந்த அளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் தமிழரசுக் கட்சிக்காகவே உயிரைக் கொடுத்து உழைத்தவர். இதனால் இன்றும் அரசியல் மற்றும் உலக நடப்புக்கள் அனைத்தையும் ஆதியோடந்தமாக அறிந்து வைத்திருப்பார். தம்பித்துரை அண்ணை இலங்கையில் அரச விசாயப் பண்ணை ஒன்றை தனி ஆளாக நின்று திறம்பட நிர்வகித்தவர். அவரின் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கள மேலதிகாரியுடன் முரண்பட்டு அரசாங்க வேலையைத் தூக்கி எறிந்தபின், ஊரில் பல விவசாயப் புரட்சிகள் செய்தவர். சுற்றி வளைத்துப் பார்த்தால் அவர் எனக்கு உறவும்கூட. அந்த பந்தமும் பாசமும் சிட்னியிலும் தொடர்வதினால் தனது அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட ஐமிச்சங்களைத் தெளிவுபடுத்துவதற்கு அவர் என்னிடம் வருவார். அந்த வகையில், இன்றும் தம்பித்துரை அண்ணைக்கு பல ஐமிச்சங்கள். உள்ளதைச் சொன்னால் பயம் கலந்த ஐமிச்சம். அதுவும் அவர் அன்றாடம் இரண்டு வேளை சாப்பிடும் சோறு பற்றிய ஐமிச்சம்.

 

ஐமிச்சம் 1:

 

என்.பி.கே…!

ந்த சுற்று வட்டாரத்தில் உடையார் வளவைத் தெரியாதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு வன்னி நிலப்பரப்பில் பிரபல்யமான குடும்பம் அது. மாங்குளத்தில் அவர்களுக்கு ஏராளமான நெல் வயல்கள் சொந்தமாக இருந்தன. இதற்கான நதி மூலத்தை பொன்னையா வாத்தியார் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் முடிக்குரிய காணிகளை முறைப்படி பதிவு செய்ய, உடையார் என்னும் பதவியை உருவாக்கினார்களாம். இவர்கள் ஊரிலுள்ள அரச காணிகளை ஆவணப்படுத்தும் போது, பத்தோடு பதினொன்றாக சில காணிகளை தங்களுடைய பெயர்களிலும் பதிவு செய்தார்களாம். இதனால் இவர்கள் பெருந் தொகையான காணி பூமிகளுக்குச் சொந்தக் காரர்களாகி நிலச் சுவாந்தர்களானார்கள்.

உடையாரின் பேரன் ஐயாத்துரை என்னுடன் யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றில் ஒன்றாகப் படித்தவன். நல்ல நண்பன். உடையார் குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசு. இதனால் குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவென, பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டான். பின்னர் ஊர்ப் பாடசாலை ஒன்றில் மாணவ ஆசிரியராகி கால ஓட்டத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகிவிட்டான். ஐயாத்துரையின் வீட்டில் எந்த நேரமும் உலை கொதிக்கும், அடுப்பில் ஏதோ ஒருவகை இறைச்சி அவியும். வந்தவர்கள் அங்கு கை நனைக்காமல் போவதில்லை. அவ்வப்போது நானும் குடும்பத்துடன் அவனுடைய வீட்டுக்குப் போய் விடுமுறையைக் கழிப்பதுண்டு. அவை மிகவும் மகிழ்ச்சியான நாள்கள்.

ஈழப் போராட்டம் துவங்கி, வன்னியில் போர் உக்கிரமான காலமது!