சீன நாட்டு நண்பரும்
எருமை மாட்டுப் புல்லும்!
அன்று சனிக்கிழமை!
சிட்னியிலுள்ள பிளெமிங்டன் என்ற இடத்தில், மிகப் பெரிய சந்தை கூடும்
நாள்.
அன்று பல்லின மக்களுக்குத் தேவையான மரக்கறிகள்
தொடக்கம் மீன், இறைச்சி வகைகள் வரை அங்கு
பிறெஸ்ஸாகவும் மலிவாகவும் சில்லறையாகவும் வாங்கலாம். முதல்முறை பிளெமிங்டன்
சந்தைக்குப் போகின்றவர்களுக்கு நிச்சயம் அது ஒரு புதுவகையான அனுபவம். அங்கு வரும்
ஆங்கிலோ ஆஸ்திரேலியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சந்தைக்கு வருபவர்களுள் பெரும்பான்மையோர்
புலம் பெயர்ந்த பல்லின மக்களே.
இங்கு எமக்கு இன்னொரு வசதியுமுண்டு. உடன்
பிறப்புக்களான ‘எங்கட பெடியங்கள்’ இங்குள்ள மீன் கடைகளில் வேலை செய்கிறார்கள்.
இதனால் பாரை, ஒட்டி, சீலா, விளை, திரளி என மீன்களின்
தமிழ்ப் பெயரைச் சொல்லி வாங்கவும், பேரம் பேசவும், குழம்புக்கு ஏற்றமாதிரி
‘யாழ்ப்பாண வெட்டு’ என்று மீனை வெட்டி வாங்கவும் முடியும். அலுவல் முடிந்து
திரும்பியதும் ‘உவங்கள் இப்ப படகிலை வந்த பெடியள், கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும்’ என கொமன்ற் அடிப்பதையும்
மீன் கடைகளுக்கு அருகில் சர்வ சாதாரணமாக கேட்க முடியும்.
சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் பிளமிங்டன் விவசாயிகளின் சந்தை, பகல் இரண்டு மணிக்கு முடிவடையும். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறிய அளவில் சந்தை கூடுவதுண்டு. தமிழ் மகா ஜனங்கள் பெரும்பாலும் சந்தை கலையும் நேரத்தில்தான் சாமான் வாங்கப் போவார்கள். இதற்கான காரணத்தை நான் இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை...
திங்கள் முதல் வெள்ளிவரை பிளமிங்டன் சந்தை, மொத்த வியாபார சந்தையாக
மாறிவிடும். இதுவே ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கொள்வனவுச் சந்தை எனவும்
சொல்லப்படுகிறது. வாழைப் பழங்களை பழுக்க வைக்கும் பாரிய, பல எதிலீன்-வாயு
சேம்பர்கள் இங்குண்டு. பிற மாநிலங்களிலிருந்து, மரக்கறிகளும் பழங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு இங்குள்ள பாரிய கிட்டங்கிகளில்
சேமிக்கப்படும். பின்னர் இவை நியூ சவுத்வேல்ஸ் மாநில விளை பொருள்களுடன் சகல
வியாபார நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும். இதனால்தான் குவீன்ஸ்லாந்து
மாநிலத்தில் விளையும் மரக்கறிகளும் மாம்பழங்களும், குவீன்ஸ்லாந்தின் தலைநகர் பிறிஸ்பேனிலும் பார்க்க
பிளமிங்டன் சந்தையில் மலிவாக வாங்கமுடிகிறது.
இங்குள்ள மொத்த வியாபாரிகளுள் பெரும்பாலானோர்
இத்தாலிய கிறீஸ்லாந்து ஸ்பானிய நாட்டைச் சேர்ந்தவர்களே. இவர்களின் இன்றைய
சந்ததியினர், வைற் ஹொலர் வேலைகளை
நாடுவதால் சந்தையின் மொத்த வியாபாரம் மெல்லமெல்ல இப்பொழுது சீனநாட்டவர்களின்
கைகளுக்குச் செல்கிறது.
அன்று நான் எதிர்பாராத விதமாக ‘லியொங்’கை
சந்தையில் சந்தித்தேன். ஹொங்ஹொங்கிலிருந்து புலம்பெயர்ந்த அவர் ஆஸ்திரேலியாவில்
பெரியதொரு கணக்காய்வு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். எனது வருமான வரிக் கணக்குகளைச்
சரிபார்ப்பதும் அவரே. உடம்பு முழுவதும் அவருக்கு கணக்கு மூளை. எந்தவொரு சிக்கலான
கணக்கையும் ஒரு நொடியில் போட்டுவிடுவார். அதற்கு அப்பால் அவருக்கு அனைத்தும் பூச்சியமே.
இதனால் வீட்டு வேலை, தோட்ட வேலை, சமூக வேலை என அனைத்தையும்
அவரது மனைவியே செய்வார். இருந்தாலும் இடையிடையே அத்தி பூத்தாற்போல் வீட்டில் சில
விஷயங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வது அவரது சுபாவம்.
ஹொங்ஹொங்கிலிருந்து லியொங் புலம்பெயர்ந்த போதே பெருந்தொகையான
பணத்துடன் வந்திருந்ததால் சிட்னியில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் மாளிகை போன்ற
வீடொன்றை வாங்கி குடியிருந்தார். அவர்களது வீட்டுக்கு முன்னும் பின்னும் சீன
கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அழகான தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த
விஷயத்தில் அவ்வப்போது அவர்களுக்கு நான் ஆலோசனை வழங்குவதுண்டு.
சந்தையில் மரக்கறி வாங்கிக்கொண்டு நின்ற என்னை
வெகு தூரத்திலிருந்து கண்ட லியொங் சனத்தை இடித்துத் தள்ளாத குறையாக விரைந்து வந்து
என்னை ஒரு மூலைக்கு தள்ளிச் சென்றார்.
‘என்ன விஷயம் லியொங், எனது வருமான வரிக் கணக்கில்
ஏதாவது பிரச்சனையா’ – எனக்கேட்டேன்.
‘இல்லை இல்லை, எனக்குத்தான் மனைவியுடன்
பிரச்சனை’ – என்றார் பரிதாபமாக.
வீட்டில் அவர் இடக்குமுடக்காக ஏதோ
செய்திருக்கிறார் என்பது புரிந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்
என்ன நடந்தது எனக் கேட்டேன்.
‘எங்கள் வீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள புற்தரைகள் திட்டுத் திட்டாக
காய்ந்து போய்விட்டது. ஒருமுறை வந்து பார்க்கமுடியுமா’ – எனக் கேட்டார்.
எனது வருமானவரிப் படிவத்தில் நான் கையெழுத்து
இட்டு அனுப்ப வேண்டிய நாளும் நெருங்கியதால் அன்று பிற்பகல் அவருடைய வீட்டுக்குப்
போனேன். புற்தரையைப் பார்த்தவுடனேயே எனக்கு விஷயம் விளங்கிவிட்டது.
வீட்டின் முன்னும் பின்னும் உயர் சாதி புல்லான
எருமை மாட்டுப் புல்லு Buffalo
grass பதித்திருந்தார்கள். இதன் இலைகள் சற்று அகலமாக, அடர்த்தியாக கடும் பச்சை நிறமாக இருப்பதால் இதை கிரமமாக
வெட்டி வளர்த்தால் புற்தரை மிக அழகாக இருக்கும்.
Buffalo புல்லு வகையைத் தவிர, கூச் (Couch), கைக்யூ (Kaiuya) போன்ற புல்லு வகைகளும்
முற்றத்திலும் மைதானங்களிலும் பதிக்கப்படுவதுண்டு. இவற்றுள் கைக்யூ புல்லு மலிவானதும் வறட்சியைத் தாங்கக் கூடியதும். ஆனால் அழகான தோற்றத்தைக்
கொடுக்கமாட்டாது.
லியொங் வீட்டுப் புற்தரையில் கோலம் போட்டமாதிரி
புல்லு செத்துக் காய்திருந்தன. வேலி ஓரமாக லியொங்கின் மனைவி பாசமுடன் நட்டிருந்த
சீன நாட்டு மண்டறின் மரங்களும் இலைகளைக் கொட்டி நிர்வாணமாக நின்றன.
லியொங்கின் மனைவி, முகத்தில் எள்ளும்
கொள்ளும் வெடிக்க, லியொங் புல்லுக்குத் தெளித்த
களைநாசினிப் போத்தலைக் காட்டினார்.
லியாங் நிலமையை உணர்ந்தவராக எதுவும் பேசாமல்
பவ்வியமாக ஒரு மூலையில் உட்காந்திருந்தார்.
அங்கு நடந்தது இதுதான்…!
களை கொல்லியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று
அகன்ற இலைத் (இரு வித்திலை) தாவரங்களை மாத்திரம் கொல்வன. ஆங்கிலத்தில் இதை Selective herbicide என்பார்கள். மற்றது
ஒடுங்கிய இலைத் (ஒரு வித்திலை) தாவரங்களான புல்லு வகைகளையும், அகன்ற இலை தாவரங்களான
பூண்டு வகைகளையும் ஒருமித்து அழிப்பன. ஆங்கிலத்தில் இதை Complete herbicide அல்லது Round up என்பார்கள்.
எனது விளக்கம் லியொங் தம்பதிக்கு புரியவில்லை
என்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது. எனவே விஷயத்தை இலகுவாக்கச் சொல்ல முயன்றேன்.
வீடுகள் பூங்காக்கள் மைதானங்கள் போன்ற
இடங்களிலுள்ள புற்தரைகளில் களைகளாக குளோவர், பிண்டி, ஒக்ஸ்ஸாலிஸ் போன்ற அகன்ற
இலைத் தாவரங்கள் புல்லுடன் சேர்ந்து களைகளாக வளரும். இங்கு களைகளைக் கொல்லவே, மருந்தடிக்கவேண்டும்.
புல்லை அல்ல. சற்று விளக்கமாகச் சொன்னால் அகன்ற இலைத் தாவரங்களை மாத்திரம்
கொல்லுகின்ற களைகொல்லிகளான Selective herbicide களைநாசினியை மாத்திரம் தெளிக்க வேண்டும்.
‘அப்போ நான் தெளித்ததென்ன’ – என மூலையிலிருந்தபடியே அனுங்கினார் லியொங்.
‘நீங்கள் தெளித்தது எல்லாத் தாவரங்களையும் கொல்லும் Complete herbicide.
இது அகன்ற இலை, ஒடுங்கிய இலைகளென
எல்லாவற்றையும் கொல்லும். தாவரத்தின் பச்சை நிறமுள்ள எந்தப் பகுதியில் இது
பட்டாலும் தாவரம் சாகும்.
‘பச்சை நிறம் தாவரத்தின் இலைகளில் மாத்திரம் உண்டு. இருந்தாலும் பலர் புல்லை
வெட்டிய பின்பு களைநாசினி தெளிக்கிறார்களே? அது தவறு என்கிறீர்களா?’ – எனக்கேட்டர்
லியொங்கின் மனைவி.
‘ஆம், அது தவறு. எப்பொழுதும்
புற்தரைக்கு களைநாசினி தெளித்து ஒரு கிழமையின் பின்னரே புல்லை வெட்டவேண்டும்’
எமது சம்பாசனைகளுக்கு இடையே சீன நாட்டு பச்சைத்
தேநீர் தயாரித்து வந்த லியொங்கின் மனைவி ‘எங்கள் மண்டரின் மரத்துக்கு என்ன நடந்தது? சென்ற வாரம்தான் யூரியா
பசளை தாராளமாகப் போட்டு கிண்டிவிட்டேன்’ – என்றார்.
அங்கேதான் தவறு நடந்திருக்கிறது. அமோனியா, யூரியா என்பவை இரசாயன
உரங்கள். அவை பசளைகள் அல்ல. உரம் என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச் சத்துகளைப்
பெருக்குவதற்கு இடப்படும் இரசாயனப் பொருளாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான
சத்துப் பொருட்களை ஈடு செய்ய செயற்கையான இரசாயன சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவதை
உரம் போடுவது என்போம்.
அப்போ, மாட்டுச்சாணம் போடுவது?
இவை பசளைகள். பொதுவாக மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோளி எச்சம், இலை, தழை, கடல் சாதாளை போன்ற
இயற்கையான பொருட்களை நிலத்திற்கு இடுவதை பசளை போடுதல் என்பார்கள். அன்றாடம்
கூட்டிப் பெருக்கும் குப்பை கூளங்களை குழியிலிட்டு நீரைப் பாய்ச்சி கம்போஸ்ட் என
அழைக்கப்படும் பசளைகளை தயாரித்தும் மண்ணை வளமாக்கலாம்.
தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற, நைட்ரஜன் கொண்டுள்ள
அமோனியா, யூரியா உரங்கள்
பெருந்துணை புரிகின்றன. கீரை மற்றும் இலை மரக்கறி வகைகளுக்கு இவற்றைக் குறிப்பிட்ட
அளவு எந்த நேரத்திலும் போடலாம். ஆனால் பூத்துக் காய்த்துப் பழங்களைத் தரும்
தாவரங்களுக்கு பயிர் வளரும் ஆரம்ப நிலையில் மட்டும் நைட்ரஜனைக் கொண்டுள்ள அமோனியா
மற்றும் யூரியா உரங்கள் போடவேண்டும்.
அப்போ எங்கள் மண்டரினுக்கு நடந்தது?
நீங்கள் இயற்கையான பசளை போடுவது போல, இரசாயனப் பொருளான
யூரியாவை அளவுக்கு அதிகமாப் போட்டதால் மண் உவர் அடைந்துவிட்டது. இதுவே தாவரம்
வாடிச் சோர்ந்ததற்கான காரணம்.
இதுக்கு இப்ப என்ன பரிகாரம்?
அளவுக்கு அதிகமான யூரியாவாவை மண்ணிலிருந்து
அகற்ற தினமும் தண்ணீர் வழிந்தோடும்வரை, ஊற்றுங்கள். மரம் படிப்படியாக வழமைக்குத் திரும்பும்.
அப்போ, மரங்களுக்கு என்ன உரம்?
எப்போது
போடவேண்டும் என்கிறீர்கள்?
தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி
பெற நைட்ரஜன் பெருந்துணை புரிகிறது. இதனால் தாவர வளர்ச்சியின் ஆரம்பத்தில்
நைட்ரஜன் கொண்டுள்ள அமோனியா, யூரியா உரங்கள் போடவேண்டும்.
சரி…,
பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு
திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பொஸ்பேட்டுகள் (P) அவசியம் தேவை. அதேபோன்று
வேரும் வித்தும் விருத்தி பெற, பொட்டாஸ் அல்லது பொட்டாசியம் (K) என்னும் சாம்பல் சத்து தேவையாகும்.
கடைகளில் இவையெல்லாம் தனித்தனியாக வாங்கலாமா?
உரம் விற்க்கும் பெரிய கடைகளில் இவற்றை தனித்
தனியாக வாங்கலாம். ஆனால் நைட்ரஜன், பொட்டாசியம், பொஸ்பரஸ் ஆகிய மூன்றும், தேவைக்கேற்ற வீதத்தில்
கலந்த, இரசாயன உரக் கலவை
இப்பொழுது எல்லாக் கடைகளிலும்
உண்டு. இதை ‘என்.பி.கே.’ (NPK)
உரக் கலவை
என்பார்கள். இதையே, தாவரங்கள் பூக்கும்
பருவத்தில் போடவேண்டும் என ஒரு விவசாய விரிவுரையை அங்கு நிகழ்த்தி முடித்தேன்.
போடுற உரத்தை அளவாய் போடவேண்டுமென மனைவிக்கு
குத்தல் கதைசொல்லித் திருப்திப்பட்ட லியொங், வலு உசாரக எனது வருமான வரிக் கணக்குகளை விளக்கத் துவங்கினார்.
ஆசி கந்தராஜா (2018)
No comments:
Post a Comment