Tuesday, 2 February 2021

 

புனைவுக்கட்டுரைகளின் முகவுரைகள்.


1. கறுத்தக் கொழும்பான்

  • ஜெயமோகன்

2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.

  • வாசந்தி
  • வ. மகேஸ்வரன்
  • தி. ஞனசேகரன்


1. கறுத்தக் கொழும்பான். ஜெயமோகன்.


பயணியின் புன்னகை: 

ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

பயணியின் புன்னகை: ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

எங்களூரில் அந்தக் காலத்தில் பட்டாளத்துக் காரர்கள் தான் உலகச் சாளரங்கள். வடசேரி கனகமூலம் சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம் மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி சொல்லுகது? குளித்துறைக்கு அப்புறம் ராச்சியமில்லை. தேங்காப்பட்டினம் கடலாக்கும் ’ என நம்புகிறவர்கள்

அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் பட்டாளத்துக்காரர்கள் அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்.

Saturday, 30 January 2021

 


செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்…!

ஆசி கந்தராஜா

-1-

செல்லப்பாக்கியம் மாமி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய்! இது பால் வெள்ளை நிறத்தில் உருண்டுதிரண்டு முட்டிவடிவில் மினுமினுப்பாக இருக்கும்.

செல்லப்பாக்கியம் மாமி மட்டுவில் என்னும் கிராமத்தில் பிறந்து, அங்கேயே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியருக்கு வாழ்க்கைப் பட்டவர்.

அவர் பிறந்ததும் வாழ்க்கைப் பட்டதும் மேட்டுக் குடி. இதனால், சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பும் அந்த ‘மிடுக்கு’ சற்றும் குறையாமல் மகள் குடும்பத்துடன் வாழ்ந்தார். சுற்றி வளைத்து எப்படியோ என்னுடைய மனைவியின் பாட்டன், சிங்கப்பூர் பென்சனியர், தனக்குச் சொந்தமெனச் சொல்லிக்கொண்டு எமது வீட்டுக்கும் அடிக்கடி வந்துபோவார். சரிகைக்கரை வைத்த நூல்சேலை கட்டி, தங்கச்சங்கிலி கோத்த மூக்குக் கண்ணாடியுடன் மிடுக்காக வலம் வரும் அவரை, எல்லோரும் மாமி என்றே அழைத்தார்கள். அதனால் எனக்கும் அவர் மாமியானார். அடிமட்டத்திலிருந்து நான் மேலே வந்தவன் என்பதும், அவரது பருப்பு என்னில் வேகாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இதனால் மாமியின் வடிகால் பெரும்பாலும் என்னுடைய மனைவியே!

 கறுத்தக் கொழும்பான்

ஆசி கந்தராஜா

 -1-

உடையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று ‘அச்சொட்டாக’ விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை.

மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். ‘அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது’ என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன். இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள ‘அடுகாணி-படுகாணிகளை’ தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடு கட்டியிருக்கும் ‘நாவலடி வளவு’ எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.

 சாத்தானின் விரல்கள்

ஆசி கந்தராஜா

-1-

கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில் வசிக்கும் (2005) என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு!

அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை.

பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான்.

‘நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு ‘கொமன்ற்’ அடிப்பான் பேரன்.

யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.

வரகு மான்மியம்

ஆசி கந்தராஜா

-1-

கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!

‘வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயர்? எனவும் ஐயர் கேட்டவர். கோயில் விஷயமப்பா, சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ…’

மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு.

விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்…? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, ஆஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!

 கிழக்கும் மேற்கும்

ஆசி கந்தராஜா

 

1: சோமநாதர் தாத்தாவும் பொதுவுடமை வாதமும்

நண்பன் ஒருவன் தன்னை ‘கம்யூனிஸ்ற்’ எனச் சொல்லித் திரிந்தான். அது அவன் வாலிப முறுக்கோடு திரிந்த காலம். பின்பு குடும்பம், பிள்ளைகள், பணம் என்று வசதிகள் வந்தபின், ஒப்புக்கு வெளியே பொதுவுடைமை வாதம் பேசித்திரிந்தாலும், வீட்டில் அவன் சைவப்பழம்.

கம்யூனிச கொள்கைகளின் கேள்வி ஞானத்தில், பொதுவுடைமை சித்தாந்தம் பற்றி முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதைக் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவிதத்தன’த்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

 மரங்களும் நண்பர்களே…!

 ஆசி கந்தராஜா

-1-

‘என்னை ஒரு டாக்குத்தர் ஆக்கிப் போடவேணும்’ என்பதில் அம்மா வலு குறியாக இருந்தார். அம்மா மட்டுமல்ல ஊரிலுள்ள மற்ற அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளுள் ஒருவரையாவது என்ஜினியர் அல்லது டாக்குத்தராக்க வேணுமென, ‘குத்திமுறி’வார்கள். என்ஜினியர் ஆவதற்கு கணக்கில் கெட்டிக்காரனாய் இருக்க வேணும். எனக்கு அது மட்டுமட்டு. இருந்தாலும் நல்ல ஞாபக சக்தி. எனவே டாக்குத்தர் படிப்புத்தான் எனக்கு சரிவரும் என்பது அம்மாவின் முடிவு. அம்மாவின் முடிவுக்கு அப்பீல் கிடையாது. இதனால் அம்மாவின் கட்டளைப்படி, நான் உயிரியல் பிரிவில் சேர்ந்து படித்தேன்.

ஒட்டாத மண்

ஆசி கந்தராஜா

1: வீடே கோயிலாக…

‘ஏன் பிள்ளை இவன் எதியோப்பா போறானாம்? அங்கை தானே பஞ்சம் பட்டினியாலே சனம் சாகுதெண்டு பேப்பரிலே போடுறாங்கள்’ என்று என்னுடைய மனைவியைக் கேட்டார் அம்மா.

‘அதுதான் மாமி நல்லது. அங்கைபோய் எண்டாலும் கொஞ்சம் மெலிஞ்சு வரட்டன்’ எனப் பதிலளித்தாள் மனைவி.

எனது எடை அதிகம் என்பது என் மனைவியின் அடிமனக் கவலை. மாரடைப்பக்கு இது வழி வகுக்கும் எனக் குடும்ப டாக்டரும் சில சந்தர்ப்பங்களிலே பயமுறுத்தி இருந்தார். எனது உடம்பு மெலிவதற்கு என் மனைவி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பார்த்தும் விட்டாள். என் போக்கு அவளுக்கு நன்றாகவே தெரியும். இருபத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கை. மனுசன் றோட்டிலே இறங்கி நடக்காது என விலையுயர்ந்த ‘றெட்மில்’ மெஷினையும் வாங்கி வீட்டில் வைத்திருந்தாள். அதில் நடந்து உடற்பயிற்சி செய்தால் நேரம், தூரம், வேகம் மட்டுமல்லாது எவ்வளவு கலோரி சக்தி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கையும் துல்லியமாகச் சொல்லும் என்று அந்த மெஷின் பற்றிய மான்மியத்தையும் அவள் சொல்லி முடித்தாள். அவளுடைய மனம் கோணாதிருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாள்கள் அதிலே மூச்சிரைக்க நடந்தும் ஓடியும் பார்த்தேன். மனைவி அருகில் நின்று வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் தன்னொலியன்ற ஊக்கப்படுத்தல்களை மேற்கொண்டாள். எனது ஊளைச் சதை ஓடும் வேகத்துக்கு ஏற்ப மேலும் கீழும் குலுங்குவதைப் பார்த்து பிள்ளைகள் சிரித்தார்கள்.

 வீரசிங்கம் பயணம் போகிறார்

ஆசி கந்தராஜா

-1-

‘இனியெண்டாலும், குடிகாரற்றை உறைப்பைக் கொஞ்சம் குறையுங்கோ, வயித்திலை அல்சர் முத்தி, கான்சர் வரப்போகுது’ என இரவுச் சாப்பாட்டின் போது பல்லவியைத் துவங்கினாள் மனைவி. திருவாளர் வீரசிங்கமோ மனைவியின் ஆரோகணத்தை காதில் வாங்குவது கிடையாது. சாப்பாட்டு விஷயத்தில் வீரசிங்கம் சமரசம் செய்வதில்லை. அவருக்கு நல்ல ‘உறைப்புக்கறி’ வேணும். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அவர் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், காரசாரமான கறி சோறு இல்லாவிட்டால், அவருக்கு அன்று நித்திரை வராது. ‘தாய் பழக்கின பழக்கம்’ என்று மனைவி புறுபுறுப்பாள். புருஷனுக்கு உறைப்புக்கறி, தனக்கும் பிள்ளையளுக்கும் காரம் குறைந்த பால் கறி என்று, தினம்தினம் சமையல் அறையில் அவள் படும்பாடு, அவளுக்குத்தான் தெரியும்.

கோளமயமாதல்

ஆசி கந்தராஜா

-1-

‘கொட்டையுள்ள புளியாப் பாத்து வாங்கி வா’ என்றார் அம்மா. கொட்டை நீக்கிய புளியில் கடைக்கார்கள் கலப்படம் செய்கிறார்கள் என்பது அம்மாவின் எண்ணம்.

அவுஸ்திரேலியாவில் கலப்படம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எனது வாதத்தை ‘புளி நம் நாட்டிலிருந்துதானே இறக்குமதியாகிறது’ என்ற அம்மாவின் எதிர்வாதம் சாப்பிட்டு விட்டது.

புளி வாங்கி வரச் சொன்னபோதே, வீட்டில் இன்றைக்கு வெந்தயக் குழம்பு மணக்கும் என்பதை விளங்கிக் கொண்டேன். வெந்தயக் குழம்புக்குத் தனிச்சுவை சேர்ப்பது பழப்புளி என்பது அம்மாவின் வாகடம். சமையலின் சரியான பதத்தைத் தேர்ந்தெடுத்து, கணக்கான அளவிலே புளியைச் சேர்ப்பதில் அம்மா மிகுந்த கவனமெடுப்பார். இது, மூன்று தலைமுறையாக வந்துள்ள பழக்கம் என்று ஒருதடவை பக்கத்து வீட்டு மாமிக்கு அம்மா விளக்கியதும் நினைவுக்கு வருகிறது.