Saturday, 30 January 2021

 மரங்களும் நண்பர்களே…!

 ஆசி கந்தராஜா

-1-

ன்னை ஒரு டாக்குத்தர் ஆக்கிப் போடவேணும்’ என்பதில் அம்மா வலு குறியாக இருந்தார். அம்மா மட்டுமல்ல ஊரிலுள்ள மற்ற அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளுள் ஒருவரையாவது என்ஜினியர் அல்லது டாக்குத்தராக்க வேணுமென, ‘குத்திமுறி’வார்கள். என்ஜினியர் ஆவதற்கு கணக்கில் கெட்டிக்காரனாய் இருக்க வேணும். எனக்கு அது மட்டுமட்டு. இருந்தாலும் நல்ல ஞாபக சக்தி. எனவே டாக்குத்தர் படிப்புத்தான் எனக்கு சரிவரும் என்பது அம்மாவின் முடிவு. அம்மாவின் முடிவுக்கு அப்பீல் கிடையாது. இதனால் அம்மாவின் கட்டளைப்படி, நான் உயிரியல் பிரிவில் சேர்ந்து படித்தேன்.

எங்கள் ஊருக்கு அப்போது மின்சாரம் வரவில்லை. துலாக் கிணறு, அரிக்கன் லாம்பு, விறகடுப்புடன்தான் வாழ்க்கை. நாங்கள் குடியிருந்த காணி, அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் சொந்தமான சீதன வளவு, சொரியல் காணி. அடி வளவிலுள்ள துலாக் கிணறும் சொரியல் கிணறுதான். இது அயல் வீட்டாருக்கும் சொந்தமானதால், குளிக்கிற தண்ணி எந்த வாய்க்காலில் பாய்வதென்பதில் சண்டைவரும். எங்களுடன் வாழ்ந்த ஆச்சி, வலு கெட்டித்தனமாக இதைச் சமாளிப்பார். அவர் ஒரு கைம்பெண். எத்தனையோ விஷயங்களைத் தனித்து நின்று சமாளித்ததால் வைரம் பாய்ந்த மனுஷி. வெற்றி தோல்விகளை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை ஆச்சியிடம்தான் கற்றுக்கொள்ள வேணும். இப்படிப்பட்ட ஆச்சியின் வழி காட்டலில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக குடியிருந்தோம்.

எங்கள் ஊர், ஒரு கலட்டிப் பாங்கான பூமி. இருந்தாலும் பலர் கமத்தை நம்பியே வாழ்ந்தார்கள். பாட்டன், பூட்டன் காலத்தில், கல்லுக் கிளப்பி, மண்கொட்டி, இருவாட்டி மண்ணாக்கப்பட்ட தோட்டங்களில், காசுப் பயிர்களான தறிகாம்பு புகையிலையும், மிளகாயும், பட்டை இறைப்பிலும், மாட்டெருவிலும் அமோகமாக வளர்ந்தன. மேலதிகமாக, கலட்டி நிலங்களை உழுது, விவசாயிகள் வரகு விதைத்தார்கள். புகையிலை வெட்டிய கையோடு தோட்டத்தில் சாமையும் குரக்கனும் பயிரிட்டார்கள்.

சுந்தரமுர்த்தி அண்ணையின் தாயும் ஒர் கைம்பெண். தாயும் மகனுமாக தங்களுக்குச் சொந்தமான பனங் கூடலுக்குள், வீடுகட்டி வாழ்ந்தார்கள். உரமாக வளர்ந்த பனை மரங்களை நம்பியே அவர்களின் வாழ்க்கை. பனை மரங்களின் கீழே, கால் நடைகளின் பட்டி. ஊடு பயிர்களாக மரவெள்ளி. வீட்டைச் சுற்றி உலாந்தா முருங்கை மரங்கள். மகன் பிறந்த அடுத்த வருஷமே கணவன் இறந்துவிட, கிராமிய சாதுர்யத்தாலும், சிக்கன புத்தியாலும் சுந்தரமுர்த்தி அண்ணையின் தாய், வாழ்கையை தேர்போல நகர்த்தினார். ஊரிலுள்ள பல இளவல்களுக்கு சுந்தரமுர்த்தி அண்ணைதான் ‘றோல் மொடல்’. ஆண்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஆறு அடுக்கு உடம்பு. விழையாட்டுப் போட்டிகளில் மாகாண ரீதியாக அவர்தான் சம்பியன். இருந்தாலும் ‘மகன் கொம்மினிஸ்ற் பொன்னரோடை சேர்ந்து திரியிறான், அழியப்போறான்’ என்ற மனப் பயம் தாய்க்கு.

சின்ன வயதில் நான் சுகமாய் இருந்த கனாக்காலம் அது.

மனிதர்கள் மட்டுமல்ல, மரம் செடி கொடி பூண்டு யாவும் எனது நண்பர்கள். வீட்டைச்சுற்றி நிறைய பூமரங்களை நட்டிருந்தேன். அவற்றுக்கு நானே அடிவளவுக் கிணற்றிலிருந்து தண்ணி அள்ளி, ஊற்றுவேன். அவற்றின் வளர்ச்சி என்னைப் பூரிக்க வைத்தது. பாட்டன் காலத்தில் நட்ட தென்னை மரங்கள் நிறையக் காய்த்தன. இடையிடையே கமுக மரங்கள். கிணத்தைச் சுற்றி கதலி, கப்பல், மொந்தன், என வாழை மரங்களை பெரியம்மா நட்டிருந்தார். இவைகளுக்கு குளிக்கிற தண்ணீர் ஒழுங்காகப் பாய்தது. அடி வளவில் இரண்டு பலா மரங்கள் நின்றன. அதில் ஒன்று, கிணத்தையொட்டி சடைத்து நின்ற செண்பகவரியன் இனம். சோக்கான பழம், தேன் ஒழுகும். மற்றது கூழன் பலா. இதன் சுளைகள் சிதம்பிய நிலையில் இருக்கும். தொண்டையால் இறங்காது. இதனால் பழுக்க முதலே அதை பிஞ்சிலே ஆய்ந்து, அரிந்து ஆச்சி ஆட்டுக்கு வைத்துவிடுவார். ஆட்டுக் கொட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு கறுத்தக் கொழும்பான் மாமரம், அரைப் பரப்புக் காணியை ஆக்கிரமித்திருந்தது. வீட்டுக் குசினியை அண்டி, சட்டி பானை கழுவும் இடத்தில் அம்மா இதரை வாழைகளை நட்டிருந்தார். இது யாழ்ப்பாணத்து இனம். பழம் சிறிது, ஆனால் சுவை அதிகம். இந்த இனத்தை ‘குருக்கன்’ எனப்படும் வைரஸ் நோய் தாக்காது. இருந்தாலும் இந்த இனம் இப்பொழுது பராமரிப்பின்றி அழிந்துவிட்டதால், கொழும்பு இதரையே குடாநாட்டிலும் பயிரிடப்படுகிறது. இவற்றின் பழம் பெரிதென்றாலும், சுவையில் யாழ்ப்பாண இதரைக்கு கிட்டவும் நிக்காது.

ஊரிலுள்ள மரங்களெல்லாம், பெரும்பாலும் ‘காடுவசாரி’யாய், கட்டுப்பாடின்றி வளர்ந்தனவே. மரங்களை முறைப்படி கவ்வாத்துப் பண்ணி வளர்த்தால், ஒரு மரம் நின்ற இடத்தில் பல மரங்களை நட்டு நிறைய பலன் பெறலாம் என, இந்தியாவிலிருந்து வெளிவரும் கமத் தொழில் விளக்க சஞ்சிகையில் வாசித்தேன். மாமரங்களை வரிசையாக நடவேண்டுமாம். கறுத்தக் கொழும்பான் மாமரங்களை நடும்போது, வரிசைகளுக்கு இடைப்பட்ட தூரம் ஏழு மீற்ரரும், வரிசையிலுள்ள மரங்களுக்கிடையில் ஆறு மீற்ரரும் இருக்க வேண்டும் என்கிறது கட்டுரை. இது கறுத்தக் கொழும்பான் ஒட்டுக் கண்டுகளுக்கே பொருந்தும். இலங்கையில் தற்போது அறிமுகமாகியுள்ள Tom JC (TJC) மாமரத்தின் கிளைக்கூடல் சிறிதாகையால், மேலே சொன்ன அளவில் ஒவ்வொரு மீற்ரர் குறைத்தும் நடலாம் என்கிறது உசாத்துணை நூல்.

படிப்பறிவு இல்லாவிட்டாலும், ஆச்சி பட்டறிவுள்ளவர். ஒருமுறை சொல்லிக் கொடுத்தால் ‘பக்’கென பிடித்துக் கொள்ளும் கற்பூர புத்தி. விவசாய ஆராச்சி நிலையத்துக்கு அடிக்கடி போய், புதுப் புது விஷயங்களை அறிந்து கொள்வார். அங்கு மரங்களைக் கவ்வாத்துப் பண்ணும் முறைகள் பற்றி குறும் படம் பார்த்தவர், அதை அப்படியே செயல் முறை விளக்கங்களுடன் வீட்டில் ஒப்புவித்தார். ‘மா மரத்தின் நுனிக் குருத்தே (Apical bud) பூக்காம்பாக மாறும்’ எனத் துவங்கி, அபிநயங்களுடன் சொல்லத் துவங்கினார் ஆச்சி.

மாங்காய் பிடுங்கியவுடன் மரத்திலுள்ள அரைவாசிக் கிளைகளை, குத்து மதிப்பாக நான்கு சென்றி மீற்ரர் கீழே வெட்டிவிடவேண்டும். இந்த ‘வெட்டு’ கிளையிலுள்ள கணுவுக்கு மேலே இருக்கவேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் மாரி மழைக்கு, கணுவில் இருந்து பக்க அரும்புகள் தோன்றி வளர்ந்து, அதன் நுனிக் குருத்து அடுத்த வருடம் பூக்காம்பாகும். இதேபோல அடுத்த வருடமும் மிகுதிக் கிளைகளை வெட்டிவிட வேண்டும்…’

மாமரங்கள் ஓ.கே. மற்ற மரங்கள்?’

கொய்யா, அவக்காடோ, மாதுளை போன்ற மரங்களில் பக்க கணுவிலிருந்தே பூக்கள் தோன்றுவதால், இவற்றை ஆழமாகவும் கவ்வாத்து பண்ணலாம். வருடாவரும் கொஞ்சம் கொஞ்சமாக கிளைகளைக் கவ்வாத்துப் பண்ணினால், பழங்களின் எண்ணிக்கை சீராக இருக்கும். கவ்வாத்து என்பது அந்த தாவரத்தின் உடற் தொழிற் பாட்டுக்கும் கால நிலைக்கும் இயைந்ததாக இருக்கவேண்டும். கண்டபடி கிளைகளை வெட்டி எறியக்கூடாது’ என விஞ்ஞான விளக்கங்களை அவிட்டுவிட்ட ஆச்சியின் வாய் நமநமக்க, நாறல் பாக்கை நறுக்கத் துவங்கினார். அவரின் வெத்திலைத் தட்டத்தில் பாக்கு வெட்டி, கொட்டைப் பாக்கு, நாறல் பாக்கு, சுண்ணாம்புக் கறண்டம் எல்லாம் இருக்கும். ஆனால் வெத்திலை இருக்காது. ஆச்சிக்கு எப்பொழுதும் பிஃரஸ்ஸான வெத்திலை தேவை. இதனால் குசினியடி இதரை வாழையின், வெளி மடலுக்குள்ளே வெத்திலையை வைத்து ஒவ்வொன்றாக எடுப்பார். இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற சமையல் சாமான்களைக் காயாமல் பாதுகாப்பதும் இந்த வாழை மடலுக்குள்தான். ஊண்மையைச் சொன்னால், மின்சாரம் இல்லாத ஊரில், அதுவே எங்களுக்கான குளிர் சாதனப் பெட்டி.

 

-2-

 

வேதவல்லி அக்காவின் வீடு, வாழைத் தோட்டத்தின் நடுவில் இருந்தது. அது நாலாயிரம் கண்டு தோட்டம். ஆயிரம் கண்டு தோட்டம் என்பது யாழ்பாணத்தில் மூன்றரைப் பரப்பு. வடமராட்சியில், செம்மரி ஆடுகள் அடைக்கும் பட்டிக் கணக்கில் தோட்டப் பரப்பை சொல்வார்கள். அங்கு முப்பது பட்டி, ஆயிரம் கண்டு, மூன்றரைப் பரப்பு. வேதவல்லி அக்காவின் தகப்பன் கந்தையா திறம் விவசாயி என ஊரில் பெயரெடுத்தவர். அவரின் தோட்டத்தில் கதலி வாழைகள் வலு மூச்சாக வளர்ந்து ஆள் உயரத்துக்கு குலை தள்ளும். இடையிடையே கப்பல், இதரை, மொந்தன் வாழைகளும் வஞ்சகமில்லாமல் குலைபோட்டன. வருஷா வருஷம் சித்திரை வருஷத்திலன்று நடக்கும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில், கந்தையா அம்மான்தான் சம்பியன். அவரின் சவாரி மாடுகள், முந்தி ஓடும் காட்சி, இன்றும் என் நினைவில் சித்திரமாக பதிந்திருக்கிறது.

வேதவல்லி அக்கா, கந்தையா அம்மானின் ஓரே மகள். தோட்டம், துரவு, வயல், என அளவில்லா சொத்துக்களுக்கு சொந்தக்காரி. நல்ல நிறமும் வடிவும். படிப்பில் வலு கெட்டிக்காரியும் கூட. அவர் டாக்குத்தர் படிப்புக்கு எடுபடுவார் என பள்ளிக் கூடமும், ஊரும் நம்பியது. ஆனால் தரப்படுத்தல் காரணமாக அவருக்கு விவசாயப் படிப்புக்கே பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்தது. அக்காவுக்கு டாக்குத்தர் படிப்புக்கு இடம் கிடைக்காத சங்கதி ‘என்னை டாக்குத்தராக்கிப் போடவேணும்’ என்ற அம்மாவின் நினைப்பில் விழுந்த சம்மட்டி அடி. இரண்டு மூன்று நாள்கள் ஒழுங்கான சாப்பாடு தண்ணி இல்லாமல், கோவிலுக்குப் போய்வந்த பின், அம்மாவின் ஆய்க்கினை இரட்டிப்பானது. வேதவல்லி அக்காவோ டாக்குத்தர் படிப்புக்கு எடுபடாததைப் பற்றி எப்பனும் அலட்டிக் கொள்ளாமல், ஜாலியாகத் திரிந்தார். இதற்கான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும்.

அக்கா பல்கலைக் கழகத்தில் விவசாயம் இறுதி ஆண்டு படித்தபோது நான் பிரபல பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்தேன். அங்கு வாத்திமாரின் கெடுபிடி அதிகம். இதனால் தெரியாததை கேட்டுப் படிக்க வேதவல்லி அக்காவிடம் போவேன். வீட்டைச் சுற்றி, மூச்சாக வளர்ந்து நின்ற கதலி மரங்களுக்கு கீழே, கந்தையா அம்மான், மரக் குத்திகளால் இருக்கைகள் அமைத்திருந்தார். அக்காவுக்கு பேச்சுத் துணைக்கு யாரும் இல்லாததால், படிப்பு முடிந்தாலும் நீண்ட நேரம் என்னை மறித்து வைத்து பேசிக் கொண்டிருப்பார். அது அறுவையாக இருந்தாலும் அவர் தரும் பனங்காய் பணியாரத்துக்கும், பாணிப் பினாட்டுக்குமாக பொறுத்துக் கொண்டிருந்தேன்.

எங்களின் மரக்குத்தி இருக்கையின் மேலே கதலி வாழை, குலை தள்ளி, பொத்தி கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தது. அப்பொழுது நான் உயிரியல் பாடத்தில் மகரந்தச் சேர்க்கை பற்றி படித்துக் கொண்டிருந்தேன். ‘மகரந்த மணிகள் சூலகத்தின் குறிக்கு கடத்தப்படுவதே மகரந்தச் சேர்க்கை என்றும், இதன் மூலம் கருக்கட்டி காய் தோன்றுகிறது’ என்றும் முத்தையா வாத்தியார் உதாரணங்களுடன் படிப்பித்தார். மற்றய பூக்களுக்கு வாத்தியார் சொல்வது சரி, ஆனால் வாழைப் பொத்தி(பூ) விரியும்போதே காய் வருகிறதே? என என் மனதில் தோன்றிய நியாயமான கேள்வியை, ‘சுடுதண்ணி’ வாத்தியிடம் கேக்கப் பயம். கேள்விக்கு மறுமொழி தெரியாவிட்டால் ‘மடக்கிப் போட்டான்’ என பழிவாங்கும் பயங்கரப் பேர்வழி முத்தையா வாத்தி. இதனால் வேதவல்லி அக்காவிடம் கேட்டேன்.

பொத்தி விரிந்து இரண்டு சீப்பு காய்வந்த நிலையில், காத்துக்கு முறிந்து சரிந்து கிடந்த, வாழைப் பொத்தியை முறித்து, செயல்முறை விளக்கம் தந்தார் வேதவல்லி அக்கா. எதையும் எப்போதும் வள்ளிசாகச் செய்வதுதான் அக்காவின் இயல்பு.

வாழை பொத்தி ஒரு மாறுபட்ட பூங்கொத்து. இதில் ஆண்பூக்களும் பெண்பூக்களும் இருக்கும். பொத்தியின் மடல் விரியும்போது முதலில் சீப்புச்சீப்பாக வருவது பெண்பூக்ள். பெண்பூவில் சூல்ப்பையும், சூல்முட்டையும் இருந்தாலும், அதில் கருத்தரிப்பது இல்லை. வாழையில் மகரந்த சேர்க்கை இல்லாமலேயே வாழைக் காய்கள் உற்பத்தியாகின்றன’.

ஒஹோ, இதாலை தான் பொத்தியின் மடல் விரிய, காயும் வெளியிலை வாறார்…’

உண்மைதான். வாழையில் மகரந்தச் சேர்க்கையும் கருக்கட்டலும் நடைபெறாததால், வாழைக் காயில் விதைகள் இல்லை. இதை ‘பார்த்தினோகார்பி’ (Parthenocarpy) என்று அழைக்கப்படுகிறது. பெண் பூக்கள் வந்து முடிந்தபின் வருவன ஆண் பூக்கள். இவைக்கு அங்கு வேலை இல்லததால் உதிர்ந்துவிடும்’ என்ற அக்கா, பொத்தியின் மடல்களை அடுக்கடுக்காக விரித்து, ஆண் பூக்களைக் காட்டி விளங்கப்படுத்தினார்.

ஒரு முறை பொத்தி தள்ளி குலை போட்டதும் வாழைமரம் மடிந்துவிடுகிறதே, மற்ற மரங்களைப் போல அடுத்தடுத்து குலைபோட்டால் என்ன?’ என எனது ஆதங்கத்தை அடக்க முடியாமல் கேட்டேன்.

முதலில் நீ சொன்ன ‘மரம்’ என்ற பதம் வாழையைப் பொறுத்த வரையில் தப்பு. வாழை மரம் என்பது போலி’ என்றவர், சரிந்து கிடந்த வாழைக் குத்தியின் மடல்களை, துச்சாதனன் துகில் உரிவதுபோல கழட்டத் துவங்கினார். இறுதியில் எதுவுமே அங்கு எஞ்சவில்லை.

பார்த்தாயா, வாழை மரம் என்பது வாழை மடல்கள் ஒன்று சேர்வதால் உருவான போலித் தண்டு (Pseudo stem). பெரும்பாலான செடியினங்களில் தண்டுப்பகுதி மண்ணுக்கு வெளியே, சூரிய வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டும் வளர்கிறது. வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி, இலைக் காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும். வளர்ந்த செடியில் இவற்றின் ஊடே, நடுவில் சற்றே உறுதியான நாராலானது போல் தோன்றும் தண்டுப் பகுதி மலர்க் காம்பாகி, காலக் கிரமத்தில் குலையாக வெளியே வரும். பொதுவாக ஒருமுறை குலை போட்டதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். புதிய கன்றுகள் கிழங்கிலிருந்து தோன்றி வளர்ந்து குலை தள்ளும். வாழையின் பண்பு என்ன தெரியுமா? மற்றவர்களுக்கு பயன் கொடுத்து தன்னை அழிப்பது’ என நீண்டதொரு விளக்கம் தந்தார் வேதவல்லி அக்கா.

அக்கா சொன்ன பல விஷயங்கள் எனது ஒன்பதாம் வகுப்பு அறிவுக்கு அப்பாற்பட்ட தென்றாலும், அதை செயல் முறையில் விளக்கியதால் இலகுவில் புரிந்து கொண்டேன்.

கந்தையா அம்மானின் சவாரி மாடுகள் கட்டப்படும் கொட்டகை நவீனமயமானது. மாட்டுக் கொட்டகையை அடுத்து சவாரி வண்டில் விட விசாலமான அறை கட்டியிருந்தார்கள். வண்டில் சவாரிக்குத் தேவையான முக்கிய சாமான்களை, அறைக்குள் இருந்த மரப் பெட்டகத்துள் பத்திரப்படுத்துவார்கள். கொட்டகையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிப்பது வேதவல்லி அக்காவின் வேலை. அவரின் அந்தரங்க வைப்புச் சொப்பும் அதற்குள்தான். வாழைக் குத்தி வெட்டிய கத்தியை துடைத்து, கொட்டகையின் இறப்புக்குள் செருகிய அக்கா, பெட்டகத்தை திறந்து கடிதம் ஒன்றை எடுத்து வந்தார். கைத் தொலை பேசிகள் இல்லாத அந்தக் காலத்தில், தகவல் பரிமாற்றம் கடிதமூலம்தான். வேதவல்லி அக்கா தந்த கடிதத்தை சுந்தரமூர்த்தி அண்ணையிடம் பத்திரமாகச் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. சுந்தரமூர்த்தி அண்ணையிடம் மயங்காத அக்காமார் அப்போது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் சுந்தரமூர்த்தி அண்ணையின் ‘சொயிஸ்’ வேதவல்லி அக்காதான். அதையிட்டு நானும் பெருமைப்பட்டேன். விழையாட்டு, அரசியல், ஊர் வேலை என சுந்தரமூர்த்தி அண்ணைக்கு சோலிகள் அதிகம். இதனால் தரப்படுத்தல் இல்லாத காலத்திலும் அவரால் டாக்குத்தராக முடியவில்லை. இருந்தாலும், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் சிறப்புப் பட்டம் பெற்று எங்கள் பாடசாலையில் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்தார். ஆனால் இவர் கொம்மியுனிஸ்ற் பொன்னருடன் சுற்றித் திரிந்தது, கலியாணச் சந்தையில்; ஒரு கரும் புள்ளியாகவே பார்க்கப்பட்டது. அக்கா டாக்குத்தரானால், தகுதி காரணமாக காதல் நிறைவேறாது என்ற நினைப்பிலேதான், டாக்குத்தர் படிப்புக்கு எடுபடாததையிட்டு அக்கா கவலைப்படவில்லை, என்ற உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்.

 

-3-

 

செண்பகவரியன் பலாப்பழம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. இதில் இளம் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறைய சுளைகள் இருக்கும். மிகவும் இனிப்பான, நார்த்தன்மை அற்ற இச் சுளைகளைக் கடித்தால் தொதல் போல இரண்டு துண்டாகும். எங்கள் வளவிலும் ஆச்சி செண்பகவரியன் பலாக்’கட்டை’யை, சாவகச்சேரி சந்தையில் வாங்கி நட்டிருந்தார். அது கிசுகிசுவென வளர்ந்து வஞ்சகம் செய்யாமல் காய்த்தது.

பலாக்’கட்டை’ என்ற பதம் சற்று விசித்திரமானது. இதுபற்றி விவசாய போதனாசிரியராக இருந்து, ஓய்வு பெற்ற, ஆச்சி வழி மாமா ஒருவரைக் கேட்டேன்.

பலா மரத்தின் நீண்ட கிளையை வெட்டிப் பதிவைத்த வெட்டுத் துண்டை, பலாக்கட்டை என்பார்கள். பதிவைத்த நிலத்தை வைக்கோலால் அல்லது வாழைத் தடலால் மூடித் தண்ணீர் ஊற்றும்போது, காற்றின் வெப்ப நிலையிலும் மண்ணின் வெப்பம் கூடுவதால், மேலே குருத்துவர முன்பு கீழே சல்லி வேர்கள் அரும்பும். வேர் வந்த கட்டையை மண்ணுடன் கிளப்பி ஒரு சாக்குத் துண்டால், வேரையும் மண்ணையும் சேர்த்து, பொட்டளி போலக் கட்டி, சந்தையில் விற்பார்கள்’ என விளக்கினார் மாமா

ஏன் மாமா இந்த வில்லங்கம்? செண்பகவரியன் பலாக் கொட்டையை முளைக்க வைக்கலாமே? அதற்கு நல்ல ஆணிவேர் இருக்குமல்லவா?’

ஆணிவேர் இருக்குமென்பது உண்மைதான். ஆனால், விதையில் முளைக்கும் தாவரத்தில், தாய் மரத்தின் இயல்புகள் இருக்குமென்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் பதியன்களில், தாய்மரத்தின் இயல்புகள் சகலதுமிருக்கும். அத்துடன் அது விரைவில் காய்க்கும் திறனும் கொண்டது. உங்கள் வீட்டு கூழன் பலா, விதையில் முளைத்ததுதான். அது கூழன் பழம் காய்க்குமென முன்னரே தெரிந்திருந்தால் ஆச்சி அதை நட்டிருப்பாரா?’ என, நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டார் மாமா.

அன்று வைகாசி விசாகம். எங்கள் குடும்ப வைரவருக்கு ஆச்சி முக்கனிகள் சகிதம் படையல் வைப்பார். கந்தையா அம்மானின் தோட்டத்தில் வெட்டிப் புகைப்போட்டு, பழுக்க வைத்த, ஆமான கதலிக் குலை, கறுத்தக் கொழும்பான் மாம்பழம், அடி மரத்தில் காய்த்துப் பழுத்த செண்பகவரியன் பலாப்பழம் என, பல வகைப்பட்ட பழங்கள், வைரவரின் மடைக்கு வரிசை கட்டி நின்றன.

பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடங்களுடன் நான் தமிழ் மொழியும், இலக்கியமும் படித்தேன். இலக்கியத்தில் பாரதி பாடலுடன் பாரதிதாஸன் பாடல்களையும் சிற்றம்பலம் மாஸ்டர் படிப்பித்தார்.

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே, இங்கு வேரிற் பழுத்த பலா…’ எனத் துவங்கும் பாரதிதாஸன் பாடலை, அன்றைய இலக்கிய வகுப்பில் வாசித்து, சிற்றம்பலம் மாஸ்டர் பொழிப்புரை சொன்னார். எனக்கு எப்பொழுதும் குறுக்குப் புத்தி. வேரில் கிழங்குதானே விழும், எப்படி காய் காய்க்கும்? என மூளை, குறுக்குச் சால் ஓடியது.

இதுபற்றி உயர்தர வகுப்புகளுக்கு மட்டும் தாவரவியல் படிப்பிக்க, சமீபத்தில் நியமனம் பெற்ற சுந்தரமூர்த்தி அண்ணையிடம் கேட்டேன். அவர் மறுக்காமல் விளக்கம் சொல்வார் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், அன்றைய காலத்தில் வேதவல்லி அக்காவுக்கும் அவருக்குமான தொடர்பு சாதனம் நான்தான்.

சுந்தரமூர்த்தி அண்ணை கரும் பலகையில், பலா மரத்தின் படம் கீறி விஷயத்தை விளங்கப்படுத்தினார். ‘தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதிலிருந்து தோன்றிய முகை அரும்பாகி, மண்ணுக்கு வெளியே எட்டிப் பார்த்து, காயாக மாறும்போது அது வேரில் காய்த்தது போலத் தோன்றும். இதைத்தான் வேரில் பழுத்த பலா என்பார்கள். எந்த மரத்திலும் வேரில் இருந்து காய்கள் தோன்றுவதில்லை’ என பலா பற்றிய விபரத்தைச் சொன்னவர் ‘உருளைக் கிழங்கு வேரிலா? அல்லது தண்டிலா? உற்பத்தியாகிறது’ என வியக்க வைக்கும் கேள்வி ஒன்றைக் கேட்டார்.

கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும். இதிலென்ன சந்தேகம்?’

உண்மைதான். அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக் கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை. இவை மண்ணுள் புதைந்திருக்கும் தண்டில் உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியை பிடுங்கிப் பார், கிழங்குகள் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருக்கும்.’

மரவெள்ளியில்…?’

இதில் வேர்போன பக்கமெல்லாம் கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக் கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை’ என்றவர், பன்னிரண்டாம் வகுப்புக்கான செய்முறை வகுப்பெடுக்க, ஆய்வு கூடத்தை நோக்கி நடந்தார்.

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி எதையும், நான் தவற விடுவதில்லை. உள்ளுர் பத்திரிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூவாமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது. நானும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை. ஆச்சியும் அது உண்மைதான் என எண்பித்தார். இது எப்படிச் சாத்தியம்? என அறிய, அப்போது மாகாண விவசாய அதிகரியாகப் பணிபுரிந்த வேதவல்லி அக்காவைக் கேட்டேன்.

பலா பூக்குமடா, எவர் சொன்னவர், பூக்காதென்று? பலாவின் பூக்கள் பல்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறு வேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்’.

பெண் பூக்கள்…?’

பொறுடா, அவசரக் குடுக்கை, பொறுமையாய்க் கேள். பலா மரத்தில் பெண்பூக்கள் பெரும்பாலும் அடி மரத்திலும் கொப்பின் அடிப்பாகத்திலும் தோன்றும். சில சமயங்களில் மேல் கிளைகளிலும் குறைவான எண்ணிக்கையில் தோன்றுவதுண்டு. பலாவில் பெண் பூக்கள் என்பது ஒரு மஞ்சரி. இதையே வேறு விதமாகச் சொன்னால், பல பெண் பூக்கள் சேர்ந்த கூட்டுக் காம்பிலியே, மஞ்சரி. மரத்தின் மேலேயுள்ள ஆண்பூக்களின் மகரந்த மணிகள், காற்றின் மூலம் பெண்பூக்களுக்கு கடத்தப்பட, கருக்கட்டல் நடைபெற்று, காய் தோன்றி, பழமாகும்.

பலாப் பழத்தை ஒரு திரள் பழம் அல்லது கூட்டுப் பழம் எனச் சொல்வார்கள். உள்ளே காணப்படுகின்ற ஒவ்வொரு சுளையும், மஞ்சரியிலுள்ள ஒவ்வொரு பூவிலிருந்து தோன்றியவை. பூக்களின் அல்லியும் புல்லியும் சேர்ந்த பூவுறை, சதைப்பற்றான சுளைகளாக மாற, நடுவே விதை, விருத்தி அடைந்திருக்கும்’

பிலாப் பழத்துக்குள் இருக்கும் ‘பொச்சு’…?’

அவை மஞ்சரியிலுள்ள கருக்கட்டாத பூக்களில் இருந்து வந்தவை’ என விரிவான விளக்கம் தந்தார் வேதவல்லி அக்கா.

எங்கள் வீட்டில் எனக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் அடி விழுவதுண்டு. பாவப்பட்ட ஜென்மங்கள் அவை. வளவில் எந்த மரமாவது காய்க்காமல் டிமிக்கி விட்டால், அடிக்காத மாடு படிக்காது என்ற கொள்கைப்படி, அம்மா கோடாலியின் பின் புறத்தால் நாலு சாத்து சாத்துவார். அவரின் தியறி பலாமரத்தில் வேலை செய்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதன் சூக்குமம், நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் வரை விளங்கவில்லை. கோடாலியால் அடிவாங்கிய நோவினால் மரங்கள் காய்க்கவில்லை என்றாலும், அடி வைத்தியத்தில் அம்மாவுக்குத் தெரியாத அறிவியல் விளக்கங்கள் பல புதைந்து கிடப்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு தாவரத்தில் நீரையும் ஊட்டச் சத்தையும் இலைகளுக்கு கடத்துவது, காழ்க் கலங்கள் (Xylem Cells). இதற்கு வெளியேயுள்ள உரியக் கலங்கள் (Phloem Cells) இலையிலே தயாரிக்கப்பட்ட உணவை, வேருக்கும் தாவரத்தின் மற்றைய பகுதிகளுக்கும் கடத்துகிறது. கோடாலியால் மரத்தை அடிக்கும்போது, உணவைக் கடத்தும் உரியக் கலங்கள் சிதைக்கப்பட, தயாரித்த உணவின் பெரும்பகுதி தாவரத்தின் கிளைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் அங்கு உடல் தொழில் மாற்றங்கள் ஏற்பட்டு, தாவரம் பூக்கத் துவங்கும். இதற்கும் மேலாக, பலா மரத்தில் இன்னொரு விஷயமும் நடக்கிறது. பலாவில்; புதிய அரும்பில் இருந்தே பூக்கள் தோன்றும். கோடாலியால் பலாவில் அடித்த காயம் மாறும் போது, அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி பூக்களாகி காயாகும்.

இதே வேளை மரத்தைச் சுற்றி நிறைய அடி போட்டால், உரியக் கலங்கள் முற்றாக அறுபட, மரம் செத்துவிடும். விவசாய பண்ணைகளில், கூரிய கத்தியால் அடிமரத்து மரப் பட்டையை அரை சென்ரி மீட்டர் அகலத்துக்கு ‘இடையிடையே’ வெட்டிவிடுவார்கள்.

மரம் நிறையக் காய்க்கட்டும்’ என்ற பேராசையில், மரத்தைச் சுற்றியுள்ள பட்டையை முழுமையாக வெட்டி வரைந்து விட்டால், அடுத்த வருடம் பலா, விறகுக்குத்தான் பயன்படும். இதை விடுத்து, வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மந்திர உச்சாடனம் செய்தபடி கோடாலியால் மரத்தை அடிக்க வேண்டுமென்பதோ, நடு இரவில் நிர்வாணமாய் சென்று அடிக்கவேண்டும் என்பதோ, வெறும் கட்டுக் கதைகளே!

-4-

வேதவல்லி அக்காவின் வடிவுக்கும் சீதன பாதனத்துக்கும் பெரிய பெரிய இடங்களில் இருந்து பெண்கேட்டு வந்தார்கள். அக்கா அசைந்து கொடுக்கவில்லை. கட்டினால் சுந்தரமூர்த்தியைத்தான் என உறுதியாக நின்றார். முன்னுக்குப் பின்னான பல இழுபறிகளுக்குப் பின்னர் அக்காவின் கலியாணம் தடல்புடலாக நடந்தது. பத்துக் கூட்டம் மேளம் பின்னி எடுக்க, கண்ணன் கோஸ்டி, வாண வேடிக்கை, அன்னச் சப்பறம் பூட்டிய காரில் ஊர்வலம், என கந்தையா அம்மான், மகளின் கலியாணத்துக்கு, காசை காசென்று பாராமல் விசுக்கி எறிந்ததார். கலியாண ஊர்வலத்தில் சோடிப் பொருத்தத்தைப் பார்த்த ஊர்ச்சனம் நெட்டி முறித்தது.

அக்காவின் கலியாண அமளிக்குள் எனது பன்னிரண்டாம் வகுப்பு சோதினை மறுமொழி வந்தது அம்மாவுக்கு தெரியாது. எனக்குக் கிடைத்த வெட்டுப் புள்ளிக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விவசாயம் படிக்கவே இடம் கிடைக்குமென்றார் அதிபர். எனக்கு வலு சந்தோஷம். விவசாயம் நான் விரும்பிய துறை. மனிதர்களிலும் பார்க்க மரங்களில் எனக்கு அன்பும் பாசமும் அதிகம் என்பதை அம்மா ஏன் உணர மறுக்கிறார்? அம்மாவுக்குத் தெரிந்தால் அடுத்த வருடம் மீண்டும் சோதனை எடு என்பார். இதனால் வேதவல்லி அக்காவின் உதவியுடன் விவசாயப் படிப்புக்கு பதிவு செய்த பின்னரே, அம்மாவுக்கு சொன்னேன். என்னுடைய எதிர்காலத்தை வேதவல்லி அக்கா பாழ்படுத்தி விட்டதாக ஊரெல்லாம் திட்டித் திரிந்த அம்மா, பின்னர் களைத்துப்போய் அமைதியானார்.

கால ஓட்டத்தில் நான் விவசாயப் படிப்பின் இறுதி ஆண்டுக்கு வந்துவிட்டேன். விவசாயத்தில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக சிறப்புப் பிரிவில் அனுமதி கிடைத்தது. வேதவல்வி அக்காவின் வழிகாட்டலில் நான் செய்த செயல் திட்டங்களைப் பாராட்டி உள்ளுர் பத்திரிகைகள் சிலாகித்து எழுதின. இதில் ஒரு செயல் திட்டம்தான் பொலோனியா (Paulownia) மர வளர்ப்பு. இந்த மரம் பற்றிய விபரத்தை முதலில் சொன்னவர் சுந்தரமூர்த்தி அண்ணை. இந்த மரத்தின் பிறப்பிடம் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள். இலங்கையிலும் இது நன்கு வளரக்கூடிய சுவாத்தியம் உண்டு. இவை கலட்டிப்பாங்கான மண்ணிலும் வளரும் என விபரம் சொன்னார் சுந்தரமூர்த்தி அண்ணை.

பார்த்துக் கொண்டிருக்க பொலோனியா மரம் வளரும்’ என ஒரு சொல்லடை உண்டு. முப்பது பாகை சதமளவு வெப்ப நிலையில், சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் மரம் கிசுகிசுவென வளர்ந்து, முதலாவது வருடமே பத்துப் பன்னிரண்டு அடி உயரத்துக்கு வளருமென்றும், மூன்று நான்கு வருடத்தில் 18 அடி உயரமும் ஒரு அடி விட்டமும் கொண்ட பெலமான நீண்ட உருளை வடிவான மரத்தை, அறுவடை செய்யலாம் எனவும் உசாத்துணை நூலில் கூறப்பட்டிருக்கிறது. பத்து வருடங்களில் அறுபது அடிக்குமேல் வளரக்கூடிய பொலோனியா மரங்களும் உண்டென ஆராச்சிக் கட்டுரை ஒன்று சொல்கிறது.

பொலோனியா மரத்தின் பலகை பாரம் குறைந்தவை, உறுதியானவை, அழகானவை. 0.0254 மில்லி மீற்ரர் தடிப்பில், அதன் அழகு கெடாமல் நுண்ணிய மேலொட்டுப் பலகையாக சீவக் கூடியவை. விலை உயர்ந்த நரம்பு இசை வாத்தியக் கருவிகளில், பொலோனியா மரப் பலகையே பாவிக்கப்படுகிறது. கப்பல் கட்டும் தொழிலில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ‘அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொலோனியா மரத்தில் மக்கள் முதலீடு செய்கிறார்கள், இதற்காக ‘பங்கு’களை விற்பனை செய்யும் பல நிறுவனங்கள், இங்கு இலாபகரமாக இயங்குகிறன’ என்றார் அக்கா.

நிஜமாகவா அக்கா? இதைக் கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ, என விழிகளை விழித்து ஆர்வமானேன் நான்.

பொலோனியா மரக்கன்றுகளை நடும்போது, குறித்த எண்ணிக்கையிலான மரக் கன்றுகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி பணம் கட்டப்படும். பத்து வருடங்களில், மரம் ஐம்பது, அறுபது அடி உயரம் வளர்ந்த பின் மரத்தை வெட்டி விற்பார்கள். வளர்ப்பு மற்றும் பராமரிப்பு செலவு போக, கிடைக்கும் இலாபம் முதலீடு செய்தவர்களுக்கு. மரங்களை வாங்குவதற்கு பணம் இல்லாதவர்கள் ‘பங்கு’களையும் வாங்கலாம். மலேசியாவில் பொலோனியா மர வளர்ப்பு, பெருவெற்றி அளித்துள்ளது. இதனால் பொலோனியாவை அங்கு, பணம் காய்க்கும் மரம் என அழைப்பார்கள் எனத் தகவல் சொல்லி, புல்லரிக்க வைத்தார் அக்கா.

கந்தையா அம்மானின் கலட்டிக் காணியில், பொலோனியா மரக்கன்றுகளை பரீட்சார்த்தமாக நடுவதென தீர்மானிக்கப் பட்டு, ஆரம்ப கட்ட வேலைகளைத் துவங்கினார் சுந்தரமூர்த்தி அண்ணை. யாழ்ப்பாண சுவாத்தியத்துக்குத் தோதான பொலோனியா விதைகளை தருவித்து நாற்று மேடையும் போட்டாயிற்று. வேதவல்லி அக்கா அப்போது நிறைமாத கர்ப்பினி. அதனால் அறிவுரைகளுடன் தன் பங்களிப்பை மட்டுப்படுத்திக் கொண்டார்.

சித்திரை வருஷப் பிறப்பும் நெருங்கியது.

சவாரிக்குப் பழக்கவென கந்தையா அம்மான் இரண்டு நாம்பன் மாடுகளை புங்குடுதீவில் வாங்கியிருந்தார். இவை யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த சவாரிப் போட்டியில், சென்ற வருடம் வெற்றி பெற்ற மாடுகளின், தாய்பசு ஈன்ற கன்றுகள். இரண்டு நாம்பன் மாடுகளுக்கும் இப்பொழுது பயிற்சி நடக்கிறது. இந்த வருஷப் பிறப்புக்கு இவை, நீர்வேலி வாய்க்கால் தரவைப் போட்டியில் ஓடும். இடைவிடாத பயிற்சியின் போது ஒரு நாம்பன் மாட்டின் கால் குளம்புக்கு மேலே, உராய்வு ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. அதற்கு இலுப்பெண்ணையைச் சூடாகக்கி, கறிமஞ்சள் கலந்து பூசவேண்டும், இல்லையேல் புழுப்பிடிக்கும் எனறார் உள்ளுர் மாட்டு வைத்தியர். இதற்காக இலுப்பெண்ணை தேடி நான் அலையாத இடமில்லை. இறுதியில் நாகமுத்து பரியாரியார், மூன்று வருடங்களுக்கு முன்னர் செக்கில் ஊற்றி, மருந்துக்கென வைத்திருந்த இலுப்பெண்ணை மண்டியில் கொஞ்சம் வாங்கி வந்தேன்.

ஊரில் நின்ற இலுப்பை மரங்கள், தறிக்கப்பட்டுவிட்டன. இலுப்பை வறட்சியைத் தாங்கக் கூடியது. குளிர்மையானது. பெலமானது. இதனால் இதை தீராந்தியாகப் பாவிப்பார்கள். கால் நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் இலுப்பெண்ணை சிறந்த மருந்து என மாட்டுவைத்தியர் சொன்னாலும் இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபடவில்லை. இலுப்பெண்ணையில் ஐம்பது வீதத்துக்கு மேல் கொழுப்பு இருப்பதால் இது சவர்க்காரம் செய்யப் பாவிக்கப்படும். நீண்ட நேரம் நிண்டெரியும் என்பதால் கிராமங்களில் விளக்கு எரிக்கவும், கார்த்திகை விளக்கீட்டின் போது சூள் கொழுத்தவும் பாவிப்பார்கள். இலுப்பை, வேம்பு, மகிழ் மரங்களை இன்றைய சந்ததியினர் யாரும் நடுவதாகத் தெரியவில்லை. எதிர்காலத்திலாவது இளவல்கள், குறைந்தபட்சம் ஒரு மரக் கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டுமென்பதே எனது அவாவும் ஆசையும்.

புதிதாக வாங்கிய நாம்பன் மாடுகளைப் பழக்குவது, இலேசாக இருக்கவில்லை. கால் குளம்புக்கு மேலே காயம்பட்ட நாம்பன் மாடு முரண்டு பிடித்தது. இலுப்பெண்ணை மண்டியில், மஞ்சள் கலந்து சூடாக்கி காயத்தில் தடவ, சூடு தாங்காத நாம்பன் மாடு, கட்டை அறுத்து வெருண்டோடி, வாழை மரத்தின் கீழே நின்ற அக்காவை முட்டித் தள்ளியது. கீழே விழுந்த வேதவல்லி அக்கா நோ தாங்காமல் அலறினார். பன்னீர் குடம் உடைந்திருக்க வேண்டும். ஆளும்பேருமாக செட்டியின் காரில் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்கா பிளைக்கவில்லை.

அக்காவின் பிரிவால் ஊரே திகிலடித்து நின்றது!

வயது தெரிந்த நாள் முதல், வேதவல்லி அக்காவே எனது ஆதர்ஷம். எனக்கு முன்மாதிரியாகவும், முகவரியாகவும் இருந்தவர் அவரே. வாழைத் தோட்டத்துக்கும் வேதவல்லி அக்காவுக்குமான உறவு தனித்துவமானது. அவரின் இறப்புக்குப் பின்னர் வாழைத் தோட்டத்துக்கு நான் செல்வதில்லை. இருந்தாலும், ‘குலையை ஈன்ற பின், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும், வாழை…!’ என வேதவல்லி அக்கா சொல்லும் கைக்கூ கவிதை, அசரீரியாக இன்னும் ஒலிக்கிறது!

ஆசி கந்தராஜா (2015)

No comments:

Post a Comment