Saturday, 30 January 2021

கோளமயமாதல்

ஆசி கந்தராஜா

-1-

கொட்டையுள்ள புளியாப் பாத்து வாங்கி வா’ என்றார் அம்மா. கொட்டை நீக்கிய புளியில் கடைக்கார்கள் கலப்படம் செய்கிறார்கள் என்பது அம்மாவின் எண்ணம்.

அவுஸ்திரேலியாவில் கலப்படம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எனது வாதத்தை ‘புளி நம் நாட்டிலிருந்துதானே இறக்குமதியாகிறது’ என்ற அம்மாவின் எதிர்வாதம் சாப்பிட்டு விட்டது.

புளி வாங்கி வரச் சொன்னபோதே, வீட்டில் இன்றைக்கு வெந்தயக் குழம்பு மணக்கும் என்பதை விளங்கிக் கொண்டேன். வெந்தயக் குழம்புக்குத் தனிச்சுவை சேர்ப்பது பழப்புளி என்பது அம்மாவின் வாகடம். சமையலின் சரியான பதத்தைத் தேர்ந்தெடுத்து, கணக்கான அளவிலே புளியைச் சேர்ப்பதில் அம்மா மிகுந்த கவனமெடுப்பார். இது, மூன்று தலைமுறையாக வந்துள்ள பழக்கம் என்று ஒருதடவை பக்கத்து வீட்டு மாமிக்கு அம்மா விளக்கிதும் நினைவுக்கு வருகிறது.

மகளைப் பரதநாட்டிய வகுப்புக்கு கூட்டிச்சென்று திரும்பும் வழியில், தமிழ்க் கடையொன்றில் கொட்டையுள்ள புளிதான் என உறுதி செய்தபின், அரைக்கிலோ புளி வாங்கி வந்தேன். உடனே கொட்டை நீக்கும் படலத்தை அம்மா ஆரம்பித்தார். பிசைந்து கரைத்தால் கொட்டை தானாக வந்துவிடும் என்ற எனது அபிப்பிராயம் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டது. அம்மாவைப் பொறுத்தவரை நான் இப்பொழுதும் ஒரு சின்னப் பொடியன். புளியைச் சிறு கத்தியொன்றால் கீறிக் கொட்டையைப் பிதுக்கி எடுத்து, சதையை ஒரு கிண்ணத்திலும், கொட்டையைப் பேப்பர் பை ஒன்றிலும் போட்டுக் கொண்டிருந்தார். புளியங்கொட்டையைக் காணும் பொழுதெல்லாம், எனக்கு பீற்றரின் ஞாபகம் வரும். அவன் எனக்கு அறிமுகமாகியது கதையைப் போன்று மிகவும் சுவாரஸ்யமானது.

உகண்டா நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றுக்குப் பணி நிமிர்த்தம் செல்ல வேண்டி இருந்தது. இவ்வாறு அந்நிய நாடொன்றுக்குப் பயணம் மேற்கொள்ளும் பொழுது புதை பொருள் ஆராய்ச்சியாளனின் தீவிரம் என்னுள் புகுந்து கொள்ளும். தெரிந்த நண்பர்களோ, அன்றேல் உறவினர்களோ அந்நாட்டில் வாழ்கிறார்களா என்பதை முயன்று அறிந்து கொள்வேன். இதில் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது, சுவையான உணவுகளுக்கு நான் என்றும் அடிமை. நாலு நாட்களுக்கு ஒழுங்கான கறியுடன் சோறு இல்லாவிட்டால், என் உடம்பில் யானைப் பலம் குறைந்தது மாதிரி ஓர் உணர்வு எற்படும். இதனால் என்னை என் மனைவி ‘ஒரு சோத்து மாடு’ என்று பரிகசிப்பது நான் அறியாதல்ல!

என்னிடமுள்ள நல்ல சில பழக்கங்களில் ஒன்று எனக்குக் கிடைக்கும் Visting Card அனைத்தையும் நாடு வாரியாகப் பிரித்து, பத்திரமாக ஒரு அல்பத்தில் அகர வரிசைப்படி ஒழுங்குபடுத்தியிருப்பது. அநுபவ முதிர்வினால் ஏற்பட்ட இந்தப் பழக்கம் எனக்கு பிறநாடுகளில் அநேக சகாயங்களைச் சம்பாதித்துத் தந்திருக்கின்றது. சகாயங்களில் முக்கியமானது சோறு என்பதைச் சொல்லவும் வேண்டுமா? கடினச் சொல்லொன்றுக்கு அர்த்தம் தேடுவதிலே அகராதியின் பக்கங்களைப் புரட்டுவது போல, மிக அவதானமாக Visting Cardசைப் பார்வையிட்டேன். அதிர்ஷ்டவசமாக என்னுடன் படித்த பால்யகால நண்பன் ஒருவனின் Visiting Card அகப்பட்டது. அவன் அங்குள்ள நீர் வழங்கல் திணைக்களத்தில் பணிபுரிவதாக Visiting Card சொல்லிற்று. தாமதிக்காது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன். சில மணி நேரத்தில் அவனிடமிருந்து பதில் வந்தது. ஹோட்டலில் தங்கி விடாது தன்னுடனே தங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திப் பதில் மின் அஞ்சல் அனுப்பியிருந்தான்.

ஆபிரிக்க நாடுகளில் வாழும் நம்மவர்கள் பலரை நான் அறிவேன். அவர்களுள் பெரும்பாலோர் சுற்றிவர உயர்ந்த மதில் எழுப்பப்பட்ட மாளிகை போன்ற வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்பவர்கள். காலாற வீதிகளில், பெரும்பாலும் மாலை வேளைகளில் நடப்பதற்கே பயப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினர்களுக்கு வெளித்தொடர்பு அனைத்தும் அவர்கள் வீட்டில் பணிபுரியும் ஆபிரிக்க வேலைக்காரர்கள் ஊடாகத்தான். இத்தகைய தனிமைப்படுத்துதலினால் வாடும் அவர்கள், நண்பர்கள் அல்லது நாட்டவர்கள் வருவதென்றால் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

சோத்துப் பிரச்சினை தீர்ந்த மகிழ்ச்சியில் ‘வரும் பொழுது இலங்கையின் உணவுப் பொருள்கள் ஏதாவது கொண்டுவர வேண்டுமா?’ எனக் கேட்டு மீண்டும் மின் அஞ்சல் அனுப்பியிருந்தேன். ‘கறிக்தூளும், முடிந்தால் கொஞ்சம் பழப்புளியும் கொண்டு வா’ என நண்பன் பதில் அனுப்பியிருந்தான்.

இடிஅமீன் ஆட்சிக்காலம் வரை உகண்டாவில் இந்தியர்களே வியாபாரத்தில் கோலோச்சியவர்கள். அங்குள்ள வியாபார நிலையங்கள் அனைத்தும் இந்தியர்களுக்குச் சொந்தமானவை. அவர்களுள் பெரும்பாலோர் வட இந்தியர்கள், இருபத்திநாலு மணத்தியாலத்தில் இந்தியர்களை இடிஅமீன் வெளியேற்றிய பின்பு, இந்தியர்களின் வியாபார நிலையங்கள் உகண்டாவின் சுதேசிகளுக்கு, இடிஅமீனின் ஆதரவாளர்கள் எனக் காட்டிக் கொண்டவர்கள் வசம் சென்றது. அவர்கள் வியாபார நுணுக்கம் அறியாதவர்கள். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் நிலை குலைந்தது. அங்கு வாழ்ந்த ஒரு சில இந்தியர்கள் திடீரென முஸ்லிம்களாக மாறி உகண்டாப் பெண்களை மணம் முடித்து மனைவியின் பெயரிலேயே ஒரு சில கடைகளை நடாத்தி வந்தார்கள். அவர்களது இந்தியக் குடும்பம் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ இது ஒரு சௌகரிய (Convenient) திருமணமாக கருதி வாழ்ந்தார்கள். இந்திய பொருட்கள் உட்பட உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் குவிந்திருந்த ஆபிரிக்க கண்டத்தின் ‘முத்தாக’ கருதப்பட்ட உகண்டாவில் பாரிய பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. அதிகார வெறி பிடித்து அலைந்த இடிஅமீனின் அடிப்பொடிகளாய் செயற்பட்டவர்களினால் பொருளாதாரத்தைச் சீர் செய்ய முடியவில்லை. இடிஅமீனின் அடாவடித்தனமும், சர்வாதிகார ஆட்சியும், தன்சானியாவின் இராணுவப் படையெடுப்பால் முடிவுக்கு வந்தது. இடிஅமீன் சவுதி அரேபியாவில் இறுதியாகத் தஞ்சம் புகுந்தான். அதன் பின்பு தொடங்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்காகப் படிப்படியாகப் பல நாட்டவர்களும் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களுள் ஒருவனாக எனது நண்பனும் நீர் வழங்கல் திணைக்களத்தில் பொறியியலாளனாக வேலை பெற்றுக் கடந்த ஆறு வருடங்களாக கம்பாலா – உகண்டாவில் வசித்து வருகிறான்.

அம்மாவிள் ஆளுமை என் நெஞ்சில் இறங்கியிருப்பதால், கொட்டையுள்ள புளியாகப் பார்த்து இரண்டு கிலோ வாங்கியிருந்தேன். அவுஸ்திரேலியாவில் இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு குறிச்சியிலும் தமிழர்களின் Spice Centers உண்டு. அங்குதான் மிளகாய்த்தூள், கறித்தூள் வாங்குகிறோம். பலதரப்பட்ட, பல ‘Brand’ பெயர்களில் மிளகாய்த்தூள் கிடைக்கிறது. ‘யாழ்ப்பாண முறைப்படி வறுத்து இடித்த மிளகாய்ததூள்’ என விளம்பரப்படுத்தும் தூள் வீட்டிலும் பாவித்தோம். நல்ல மணம் குணமானது. அதில் பெரிதான டின் ஒன்றையும் வாங்கி எடுத்துக்கொண்டேன்.

உகண்டா நாட்டின் தலைநகரமான கம்பாலாவின் எண்டபே (Entebbe) விமான நிலையம் புகழ்பெற்றது. இஸ்ரேலியரின் வீரசாகசங்கள் இடிஅமீனுக்குப் பாடம் புகட்டிய விமான நிலையம் அது. பின்னர் அது சினிமாவாகவும் வந்தது. இந்த நினைவுகள் என் மனதிலே படம் காட்ட நான் Entebbe விமான நிலையத்தில் இறங்கினேன். என் நண்பன் வார்த்தை தவறாது விமான நிலையத்தில் என்னைச் சந்தித்தான். அவனுடன் உகண்டா நாட்டின் சுதேசியான ஓர் இளைஞனும் வந்திருந்தான். அவனுடைய பெயர் பீற்றர் என என் நண்பன் கூறித் தனக்கு உதவியாளனாய் அலுவலகத்தில் அவன் பணிபரிவதாகவும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

” Good Morning Master’’ எனக் கூறித் தனது உடலை நன்கு வளைத்து பீற்றர் எனக்கு வணக்கம் தெரிவித்தான். ஆஜானுபவனாகிய அந்த ஆபிரிக்க இளைஞன் தனது உயர்ந்த இறுக்கமான உடலை இரண்டாக மடித்துக் குனிந்து எனக்கு வணக்கம் கூறியது, ஆஸ்திரேலியாவில் பல காலம் வாழ்ந்த எனக்கு விநோதமாக இருந்தது. ஆஸ்திரேலிய நாட்டில் இவ்விதம் வணக்கம் சொல்வதில்லை. மேலதிகாரியையும் ‘சேர்’ என அழைப்பதில்லை. அனைவரும் அடுத்தவரை முதல் பெயர் (First name) சொல்லி அழைத்து நட்புடன் பழகிக்கொள்வோம்.

இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது அவர்கள் நாடல்லவா? நாம் இங்கு பிழைக்க வந்த அந்நியர்கள். எமக்கு என் இவ்வளவு பவ்யம் காட்ட வேண்டும்?’ என நண்பனிடம் தமிழில் கேட்டேன்.

நம்மவர்கள் வெள்ளைத்தோலுக்கு மதிப்புக் கொடுப்பதில்லையா? சொந்த நாட்டில் ‘கடைப்புலி’யாக இருந்த வெள்ளையனையும், நம் நாட்டில் நாங்கள் மிக உயர்வாக நடத்துவதில்லையா? எல்லாம் அடங்கி ஒடுங்கி அடிமைகளாக இருந்ததின் பக்க விளைவுதான் இது’ என விளக்கம் சொன்னான் நண்பன்.

எனது பிரயாணப் பொதிகளை பீற்றரே கவனமாகத் தூக்கி வந்து காரில் ஏற்றினான். அவனே காரையும் ஓட்டினான். புறநகர்ப் பகுதியிலுள்ள நண்பனின் வீடு போய்ச் சேர்ந்தோம். நண்பனின் வீட்டில் குடும்பத்தில் ஒருவனாக பீற்றர் வளைய வந்தான். இருப்பினும் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் தவறாது ‘மாஸ்டர்’ சேர்த்துக் கொண்டது மனதுக்கு நெருடலாக இருந்தது.

இரவுச் சாப்பாடு துவங்கியது. நண்பனின் மனைவி இடியப்பம் அவித்திருந்தார். முருங்கைக்காயும் உருளைக்கிழங்கும் கலந்த ‘பிரட்டல்’ கறியும், தேங்காய்ப்பால் சொதியும் மேசைமேல் இருந்தன. அவுஸ்திரேலிய பல்இன சமத்துவக் கொள்கையில் ஊறிய நான், எம்முடன் சேர்ந்து உணவருந்தும்படி பீற்றரையும் மேசைக்கழைத்தேன். நான் இவ்வாறு அழைத்ததுக்கு வேறொரு காரணமும் உண்டு. வெளியே ‘பவ்யம்’ காட்டும் பீற்றர் உள்ளே எம்மைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று அறிய ஆசைப்பட்டேன். இதனாலும் அவனுடன் நட்புடன் பழகினேன்.

‘‘No Master’’ என புன்முறுவல் ததும்ப மறுத்தவன், ஒரு தட்டில் இடியாப்பம் சொதி மட்டுமே எடுத்துக்கொண்டு, ஒரு மூலையில் அமர்ந்து இடியாப்பத்தைச் சொதியில் பிசைந்து சாப்பிடத் துவங்கினான்.

முருங்கைக்காய், உருளைக்கிழங்கு பிரட்டலையும் எடுத்துச் சாப்பிடேன், மிகச் சுவையாக இருக்கிறது’ என பீற்றரை அழைத்தேன். ஒரு புன்சிரிப்பை உதிர்த்தவாறு, மீண்டும் இடியாப்பத்துடன் சொதியை மட்டுமே எடுத்துச் சாப்பிட்டான்.

இங்குள்ளவர்கள் முருங்கைக்காய் சாப்பிட மாட்டார்கள். நீட்டு நீட்டாக மரத்தில் தொங்கும் முருங்கைக்காய்களை அவர்கள் ‘சாத்தானின் விரல்கள்’ என எண்ணிக் கொள்கிறார்கள். இதனால் இங்கு வாழும் எம்மைப்போன்ற இலங்கை, இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்’ என உகண்டா நாட்டு Contextஇல் முருங்கைக்காய்க்கு விளக்கம் சொன்னான், நண்பன்.

 

-2-

அன்று விநாயகர் சதுர்த்தி!

நண்பனின் மனைவி விரதம். கோவிலுக்குப் பீற்றர் வரவில்லை. கோவிலுக்குச் செல்லுமுன், நான் அவுஸ்திரேலியாவில் இருந்து எடுத்துச் சென்ற புளியை எடுத்து பீற்றரிடம் கொடுத்து, ‘புளியிலிருந்து கொட்டையை எடுத்துவை’ எனப் பணித்தார், நண்பனின் மனைவி.

‘Yes madam, கவலையில்லாமல் போய் வாருங்கள். நான் வீட்டை கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன்’ என்றான் பீற்றர் பணிவுடன்.

விசுவாசம் என்பதன் அர்த்தத்தை இவர்களிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களுக்கும், நெருங்கிப் பழகியவர்களுக்கும் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி உண்மையுள்ள ஊழியனாக இருப்பவன் இவன்’ எனப் பீற்றருக்கு நற்சான்றிதழ் வழங்கிப் பேசினான், நண்பன்.

கோவிலுக்குப் போகும் வழியெங்கும் முருங்கை மரங்கள், இடையிடையே புளிய மரங்களும் காணப்பட்டன.

இங்குதான் புளிய மரங்கள் இருக்கின்றனவே, எதற்காகப் பழப்புளி கொண்டுவரச் சொன்னாய்?’ என நண்பனைக் கேட்டேன்.

நமது நாட்டிலுள்ளது போன்று புளிய மரங்கள் காய்ப்பதில்லை. காய்ந்தாலும், சதைப் பிடிப்பானதாக இருக்காது. முருங்கை மரங்களைப் பார். எல்லாமே கட்டை இனங்கள், இங்குள் மரங்களும் இங்குள்ள மக்களைப் போல் அதிகம் விருத்தியடையாத இனங்களே! கலப்பு என்பதன் அர்த்தம் அதிகம் புரியாதவர்கள் மட்டுமல்ல, அதற்குரிய வாய்ப்புகளும் மறுக்கப்பட்டவர்கள்’ என ‘கூர்ப்பு’ (Evolution) பற்றிய ஒரு குட்டி விளக்கத்தை நண்பன் அவிழ்த்துவிட்டான். நண்பன் கூறியது போல முருங்கை மரத்தில் குலை குலையாகக் கட்டைக் காய்கள் தொங்கின. அவை தூரப் பார்வைக்கு விரல்கள் போன்றே தெரிந்தன. சுதேசிகள் சாத்தானின் விரல்கள் என எண்ணுவதில் தப்பில்லை என எண்ணிக் கொண்டேன்.

நண்பனின் கார் கோவிலை அடைந்தது. கோவிலைச் சுற்றி எல்லை வேலியில் நெருக்கமாக முருங்கை மரங்களை நட்டிருந்தார்கள். இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இனமாக இருக்க வேண்டும். சாத்தானின் கால்கள் போல் நீளக் காய்கள் மரத்தில் தொங்கின. சதுர்த்தி தினமாகையால் நிறையவே இந்தியர்கள் வந்திருந்தார்கள். மனிதர்கள் அதிகம் நிற்கும் தைரியத்தில், முருங்கை மர வேலியைத் தாண்டி ஆபிரிக்கச் சிறுவர்கள் கோவில் தாழ்வாரத்தில் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கோவில் மண்டபத்துள் நுழைவதற்கு முன்பு, மனைவி கொண்டுவந்த தேங்காய்களை வாங்கி வாசலில் அதற்கென வடிவமைக்கப்பட்ட கல்லிலே ஒன்றன்பின் ஒன்றாக ஓங்கி எறிந்தான் நண்பன். ஒவ்வொரு தேங்காயும் உடைந்து சிதறும் போது கூடியிருந்த சிறார்கள் அதை போட்டிப்போட்டு பொறுக்கி எடுத்து, தாழ்வாரத்தில் அமைதியாக இருந்து சாப்பிடத் துவங்கினார்கள்.

இந்துக்கோவில் ஒன்றில் ஆபிரிக்கச் சிறுவர்கள் சிதறு தேங்காய் பொறுக்குவது வெகு வேடிக்கையாயிருந்தது. இந்தக் காட்சியைப் படம் பிடிக்க விரும்பினேன். கமராவை நண்பனின் வீட்டில் விட்டு விட்டு வந்தமைக்காக என்னையே நான் நொந்தபடி தேங்காய்ச் சொட்டை ஆபிரிக்கச் சிறுவர்கள் பற்களால் காந்தித் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒவ்டிவாரு முறையும் அவர்கள் தேங்காய்ச் சில்லைக் காந்தும் போதும் அவர்களது கரிய உதடுகளுக்கிடையே பால் வெள்ளைப் பற்கள் பளிச்செனத் தெரிந்தன. அவர்களுடன் பேச்சுக் கொடுக்க முயன்றேன். ஆனால், அவர்கள் வெட்கத்துடன் பின்வாங்கிக் கொண்டார்கள். இந்தக் கூச்ச சுபாவத்தை அடிமை மனப்பான்மையின் ‘பின்தாக்கம்’ என விளங்கிக் கொண்டேன். வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற என் தோளின் பின்புறமாகத் தட்டி, ‘இவர்கள் எல்லாம் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் தெரியுமா?’ எனக் கேட்டான் நண்பன். அறியும் ஆவலில், தெரியாததற்கான பாவமாக உதட்டைப் பிதுக்கினேன்.

இங்கு வழங்கப்படும் பிரசாதத்துக்கும், அன்னதானத்துக்கும் தான். இங்குள்ள ஆபிரிக்கர்கள் எமது உணவை ருசித்துச் சாப்பிடுவது மட்டுமல்ல, நமது உணவு வகைகளை சுவையாக சமைக்கவும் தெரிந்தவர்கள். வீதியோரக் கடைகளில் ஆபிரிக்கர்கள் சப்பாத்தி கட்டு விற்பதை சர்வசாதாரணமாகக் காணலாம். இங்குள்ள உணவு விடுதிகளில் இந்திய உணவும், மேற்கத்திய உணவு வகைகளும் மாத்திரம்தான் இருக்கும். அதிகமேன், நேற்று நாம் சாப்பிட்ட இடியப்பம் அவித்ததும், பால்சொதி வைத்ததும் பீற்றர் தான்’ என்றான் நண்பன்.

சாத்தானின் விரல்களை (முருங்கைக்காய்) யார் வெட்டி சமைத்தார்கள்?’

முருங்கைக்காயைக் கண்டால் குசுனிப் பக்கமே பீற்றர் கால் வைக்க மாட்டான். இவர்களும் பேய், பிசாசு, பில்லி சூனியம் என்பவற்றில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பல விடயங்களை சகுனம் பார்த்தே செய்கிறார்கள்’ என உகண்டா வாழ் ஆபிரிக்கருடைய பண்பாட்டு இயல்புகளை நண்பன் விளக்கினான்.

விநாயகர் பூசைக்கு மணி ஒலித்தது. அர்ச்சகர் வட இந்தியர். அவரது பூசை முறை நமது முறையிலும் வித்தியாசமாக இருந்தது. பாத அணிகளை மட்டுமல்ல, கால்சட்டை கழன்று விழாமல் இறுக்கிக் கட்டியிருந்த எனது ‘பெல்ற்’ரையும் அவிழ்த்து வைக்கும்படி நண்பன் சொன்னான். தோல் சாமான்கள் எதுவும் கோவிலுக்குள் வரக்கூடாதென விளக்கம் சொன்னார் அர்ச்சகர்.

கருங்கல்லிலான விநாயகர் சிலையை தூரத்தே நின்று கும்பிட்டுப் பழகிய எனக்கு, வட இந்தியர்களின் வணங்கும் முறை வித்தியாசமாக இருந்தது. கர்ப்பக்கிரகத்தில் வெள்ளை மாபிளிலிலான விநாயகர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் அனைவரும் கர்ப்பக் கிரகத்துள் நுழைந்து விநாயகரின் தும்பிக்கையைத் தொடுவதும், பால் வார்ப்பதும் தீபம் காட்டுவதுமாக இருந்தார்கள். இந்த வழிபாட்டு முறைக்கு அர்ச்சகர் ஏன் என எண்ணியபடி சிறுவர்கள் அமர்ந்திருக்கும் தாழ்வாரத்துக்கு வந்தேன். இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ‘பெல்ற்’ இல்லாமல் இடுப்பிலிருந்து நழுவி விழும் கால்சட்டை எனக்கு பெருத்த அசௌகரியத்தைக் கொடுத்தது. வெளியே வரும்போது வாசலை ஒட்டினால் போல் சுவரிலே மாட்டப்பட்டிருந்த சிவபெருமான் படமொன்று கண்ணில் தென்பட்டது. அதில் சிவன் மரவுரி தரித்து புலித்தோல் ஆசனத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்!

வெளியே அமர்ந்திருந்த சிறுவர்களுள் ஒருவன் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவ்வப்போது பள்ளிக்கூடம் போகிறவனாம். சிறிது ஆங்கிலம் பேசினான்.

நீங்களும் உள்ளே வரலாமேஎன அவனிடம் கேட்டேன்.

நாங்களா…?’ எனத் தன் புருவத்தை உயர்த்தினான் சிறுவன்.

ஆம் நீங்கள்தான். ஏன் வரக்கூடாதா?’ என மீண்டும் கேட்டேன்.

நாங்கள் உங்கள் சாமியைத் தொடக்கூடாதாம். வெளியே தான் இருக்க வேண்டுமாம். அதனால் என்ன? இங்கே கிடைக்கும் சாப்பாடு சுவைக்கிறதே’ என்று கூறிச் சிரித்தான் சிறுவன்.

வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நாட்டில் வாழ்ந்துகொண்டே அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது என்ன நியாயம்?’ என பூசைத் தட்டு பிரசாதம் சகிதம் மனைவியுடன் வந்த நண்பனைக் கேட்டேன்.

தப்புத்தான். இருப்பினும் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறதே’ எனச் சமாளித்த நண்பன், முன்பின் தெரியாத ஆபிரிக்க சிறுவர்களுடன் நெருங்கிப் பழகாதே, உன்னை உச்சிக்கொண்டு போய்விடுவார்கள்’ என எச்சரித்தான்.

பூசை முடிந்து வீடு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தோம். வரும் வழியில் பலதும் பத்தும் பேசியபடி வந்தோம். உகண்டாவில் வாழும் வெவ்வேறு Tribal இனங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கலந்துரையாடும் போது பீற்றர் பற்றிப் பேச்சுத் திரும்பியது. பீற்றரின் குல வழக்கப்படி சிறு வயதிலேயே அவனுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாம். பீற்றருக்கும் பெண்ணுக்கும் பதினைந்து வயது வித்தியாசம். பெண் அப்போது படித்துக் கொண்டிருந்தாள். அவள் தொடர்ந்து படிக்க விரும்பியதால் அவளின் படிப்பிற்கான செலவையும் இவனே ஏற்றுக்கொண்டானாம். படிப்பை முடித்த பின்பும் இவனுடன் கூடி வாழ்வதை அவள் பின் போட்டுக்கொண்டே வந்தாள். பின்புதான் தெரிய வந்தது. அவள் வேறொரு பணக்காரனுடன் தொடர்பு வைத்திருப்பது.

பீற்றர் என்ன செய்தான்?’ எனக் கதைப் பிரியனான நான் நண்பனைக் கேட்டேன்.

இடையில் பிடித்துக் கொண்டவனை மறந்து தன்னுடன் வந்து வாழும்படி’ மனைவியை பீற்றர் அழைத்தானாம்.

உன்னிடம் என்ன கார் பங்களா இருக்கிறதா? என்ன சுகத்தை உன்னிடம் காணப்போகிறேன்?’ என முகத்தில் அடித்தால் போல் அவள் கூறிவிட்டாளாம். சென்ற வருடம் தான் பீற்றருக்கு அவனது குல வழக்கப்படி விவாகரத்துக் கிடைத்தது’ என்று நண்பனும் மனைவியும் தெட்டம் தெட்டமாக விஷயத்தைக் கூறினார்கள்.

பீற்றரின் நல்ல மனதுக்கு நிச்சயம் நல்லதொரு பெண் கிடைப்பாள்’ என அவனுக்காக அனுதாபப்பட்டேன்.

அங்கேதான் சிக்கல். பீற்றரிடம் மணப்பெண் கூலி கொடுப்பதற்கு பணம் இல்லை. இங்கு ஆண்கள், மணம் முடிக்கும் பெண்ணின் தந்தைக்குப் பணம் செலுத்தி பெண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாங்க வேண்டுமென்றும் சொல்லலாம். எங்கள் ஊரிலே சீதனக்கொடுமையால் பெண்கள் பலர் வாழ முடியாது அவதிப்படுகிறார்கள். ஆனால் இங்கோ, பல ‘Tribal’ இனங்களில் சீதனக் கொடுமையால் வாழாவெட்டிகளாக ஆண்களே வாழ்கிறார்கள். அத்தகையவர்களுள் பீற்றர் ஒருவன்’ என்று பீற்றரின் குலத்தவர்கள் கடைப்பிடிக்கும் திருமணச் சம்பிரதாயங்களை நண்பன் சிரத்தையுடன் விளக்கினான்.

இப்போது பீற்றர் ஒரேயொரு நம்பிக்கையிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறானாம். அந்தப் பணக்காரன் அவளை ஒழுங்காக கலியாணம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவளுக்காக கொடுத்த மணப்பெண் கூலியையும், படிப்புக்குச் செலவு செய்த காசையும் பீற்றர் திரும்பி கேட்டு வாங்க முடியும்’ என மேலும் விபரம் சொன்னார் நண்பனின் மனைவி.

இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலேயே பாலியவிவாகங்கள் நடைபெறுவதைத் தடுக்கச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் திருமண வயசு வருவதற்கு முன்னரே பெற்றோருடைய சம்மதங்களுடன் விவாகங்கள் நடைபெறுகின்றன. ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள சில நாடுகளிலே, குலஆசாரங்களின் படி சிறுவயதில் கல்யாணம் செய்துகொள்வது சௌகரியமானது என எண்ணுகிறார்கள். ‘மணப்பெண் பணம்’ என்பது, விவாகம் செய்யும் வரையிலும் ஒரு பெண்ணைத் தந்தை வளர்ப்பதற்கு உண்டாகும் செலவு எனச் சொல்லப்படுகிறது. வயசு அதிகரிக்க, பணத்தொகை உயரவே செய்யும். அது மட்டுமல்ல, அழகான பெண்களுக்கு விலை அதிகம் நிர்ணயிக்கப்படுகின்றது’ என்று மேலதிக தகவல் தந்து என்னை நண்பன் திணறடித்தான்.

நண்பனுடனான இந்த உரையாடல் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது.

கிராமங்களிலே கூட மணப்பெண் கூலியாக காசு பணம் பரிமாறப்படுகிறதா?’என நான் கேட்டேன்.

ஏன்? நகரத்திலே கூட பழைமை விரும்பிகள் மணப்பெண் கூலியை இன்னமும் மிருகங்களின் தலைகளை எண்ணியே மதிப்பீடு செய்கிறார்கள். இங்கு ஆடு மாடுகளிலும் பார்க்க பன்றிகளின் மதிப்பு அதிகம். இப்பொழுது மாற்றங்கள் புகுகின்றன. நகரத்தில் வாழும் படித்த பெண்கள், மணப்பெண் கூலியை தன் பெயரிலேயே பணமாகச் செலுத்தும்படி கேட்டுக் கொண்டாலும், மணப் பெண் கூலி பெண்ணுக்குப் பாத்தியதையாகிவிடுகின்றது. பெண் மறுமணம் செய்து கொள்வாளானால் முதல் கணவன் செலுத்திய கூலிப் பணம் அவனுக்கு மீண்டும் கிடைக்கும். ஆனால், இப்போது நகரத்துப் பெண்களில் பலர் விவகாரத்துப் பெற்றுக்கொண்டு, மறுமணம் செய்யாமல் மணப்பெண் கூலியை அனுபவித்தபடி பணக்கார வாலிபர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கும்மாளமடிப்பது சர்வசாதாரணம். இப்பொழுது கும்மாளம் போடும் பீற்றரின் மனைவியின் பணக்காரக் காதலன் பீற்றரின் மனைவியைத் திருமணம் செய்வானானால் பீற்றர் செலவு செய்த பணம் இவனுக்குத் திரும்ப கிடைத்துவிடும்.

இவ்வாறு நிகழ வேண்டுமென்று தவம் கிடக்கிறான் பீற்றர். ஆனால் அவளோ இவனுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறாள்’ என முழு விஷயத்தையும் என் நண்பன் விளக்கினான்.

பணமில்லை என்ற ஒரே காரணத்துக்காகத்தான் பீற்றரை மனைவி வெறுக்கிறாளா?’ என நான் ஆதங்கம் மேலிடக்கேட்டேன்.

இங்குள்ள பெண்கள் மத்தியில் பணம் படைத்தவனுக்கே போட்டி இருக்கிறது. பணக்காரக் கிழவர்கள், பல இளம்பெண்களை மணம் முடித்திருக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் மத்தியிலே உல்லாச வாழ்க்கையும், காரும் பங்களாவும் முக்கிய இடம் வகிக்கிறது. பீற்றர் பாவம், அவனிடம் உண்மையான உழைப்பும் தன்னம்பிக்கையும்தான் இருக்கிறது. இவை வசதியான வாழ்க்கையைத் தராது என நினைக்கிறாள் பீற்றரின் மனைவி’ என்று விளக்கம் சொன்னான் நண்பன்.

பீற்றர் மேல் அனுதாபம் மேலிட அவனது நினைவுகளுடனேயே நண்பனின் வீடு வந்து சேர்ந்தேன்.

வெண் பற்களை வெளியே தெரியச் சிரித்து எம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் பீற்றர், வீட்டை நன்கு சுத்தம் செய்து தோய்ந்த உடுப்புக்களை அயன் பண்ணி அடுக்கியிருந்தான். சாப்பாட்டு மேசையில் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட புளியங்கொட்டைகள் ஒரு கிண்ணத்தில் இருந்தன.

சமையலறைக்குச் சென்ற நண்பனின் மனைவி, ‘படுபாவி’ எனச் சொன்னவாறு குப்பை, கழிவுகள் போடும் வாளியுடன் வெளியே வந்தார். அந்த ஊத்தை வாளிக்குள் கொட்டை நீக்கப்பட்ட புளி முழுவதும், ஊத்தைகளுடன் கலக்கும் வகையில் போடப்பட்டிருந்தது.

புளியை ஏன் இந்த ஊத்தை வாளிக்குள் போட்டாய்?’ என்று என் நண்பனின் மனைவி ஆத்திரத்தை அடக்கமாட்டாமல் சத்தம் போட்டார்.

நீங்கள் கொட்டையை நீக்கிவை என்று சொன்னீர்களே மடம். இதோ கொட்டைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தி வைத்திருக்கிறேன். கழிவைத்தான் குப்பை வாளிக்குள் போட்டேன்’ என மிகப் பணிவாகப் புளியங்கொட்டைகள் உள்ள கிண்ணத்தைக் காட்டினான், பீற்றர்.

கோபத்தின் மத்தியிலும், அவனுடைய அப்பாவித்தனமான செயலைப் பார்த்து, எங்கள் சிரிப்பிலே நண்பனின் மனைவியும் கலந்து கொண்டார்.

பார்த்தயா? கொடுக்கும் அறிவுறுத்தல்படி எவ்வாறு கன கச்சிதமாக வேலை செய்கிறார்கள் என்று. அவனில் பிழை இல்லை. கோப்பி உகண்டாவில் நிறைய வளர்கிறது. கொட்டையைச் சுற்றியுள்ள வெளிச்சதையை நீக்கிவிட்டு கொட்டையைத்தான் வறுத்து இடித்து கோப்பியாக குடிக்கிறோம். அதே போலத்தான் புளியங்கொட்டையையும் அவன் எண்ணியிருக்க வேண்டும்’ என மனைவி மீது பிழையைப் போட்டான் நண்பன்.

உங்களின் உண்மையுள்ள ஊழியன்தானே அவன், அவனுக்கு விளங்கும் மொழியில் நீங்கள் சொல்லியிருக்கக்கூடாதோ, உங்களது நண்பர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் புளியை இங்கு கொண்டுவந்து சேர்த்திருப்பார்…’ என்று முணு முணுத்தபடியே படுக்கை அறைக்குள் சென்றுவிட்டார்.

பல்கலைக்கழகத்திலே என் பணி இனிதே நிறைவேறியது!

இனி ஊரர் திரும்பும் ஆயத்தங்கள். நண்பனும் நானும் வரவேற்பறையில் இருந்து நமது சொந்த ஊர்ப் புதினங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம். இடையிடையே சர்வதேச விவகாரங்கள், மாறுபட்ட கலாசாரங்கள் பற்றிய தகவல்களும் எமது பேச்சில் இடம்பெற்றன. பீற்றரும் ஒரு மூலையில் அமர்ந்து எமது உரையாடலில் கலந்துகொண்டது மகிழ்ச்சியை அளித்தது. ஆபிரிக்கச் சமூகம், அவை சார்ந்த சிக்கல்கள், இன்றைய இளம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியன பற்றி மிக ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பீற்றர் அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தான். அவனது சமூக சிந்தனை, அவனது கருத்துக்கள் யாவும் அவன் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தின.

மெதுவாக குடும்ப விசயங்களுக்கு எமது உரையாடல் திரும்பியது. நண்பனுக்குப் பல சகோதரிகள், இவன்தான் குடும்பத்தில் ஒரு ஆம்பிளை, அதுவும் மூத்தவன், வஞ்சகமில்லாமல் அடுத்தடுத்து ஆறு பிள்ளைகளைப் பெத்துப்போட்டு தகப்பன் கண்ணை மூடி விட்டார். இவனே குடும்ப பொறுப்பை ஏற்ற ஒவ்வொன்றாக கரைசேர்த்து வந்தான். கடைசித் தங்கை ஒன்றுக்கு இன்னமும் திருமணமாகாதது எனக்குத் தெரியும். இதுபற்றி விசாரித்தேன்.

பணம்தான் பிரச்சினை’ என்றான். மனைவி இப்போது புறுபுறுக்கத் தொடங்குவதாகவும், எமக்கென்று ஒரு சேமிப்பு வேண்டாமா? எமது பிள்ளைகளை யார் பார்ப்பார்கள்? என்று மனைவி கேட்பதாகச் சொல்லி வருத்தப்பட்டான் நண்பன். யாழ்ப்பாணத்திலுள்ள சீதன நிலவரம் பற்றியும், ஆம்பிளையாக இருந்தால், அதற்கு ‘பத்து இலட்சம்’ என்ற நிலையையும் நான் கூறியதை செவிமடுத்த பீற்றர் ‘என்ன விசித்திரம், இங்கு ஆண்கள் சீதனக்கொடுமையால் கஷ்டப்படுகிறோம். உங்கள் நாட்டிலோ பெண்கள் வாடுகிறார்கள்’ என்று கூறிச் சிரித்தான்.

அன்று படுத்தும் தூக்கம் வரவில்லை. பீற்றர் இறுதியாகச் சொல்லிச் சிரித்த ‘விமர்சனக் குறிப்பு’ மீண்டும் மீண்டும் என் மனக் கண்முன் வந்து போயின. யாழ்ப்பாணத்திலே நிலவும் சீதனச் சந்தை பற்றி விலாவாரியாகச் சொல்லத் தேவையில்லை. கல்யாணத் தரகர்கள் பெற்றுள்ள செல்வாக்குப் பற்றி கதை கதையாகச் சொல்லலாம். கமக்கட்டுக்குள் குடையுடன் செருப்புத் தேயத் தரகர்கள் நடந்து திரிந்த காலம் போய், அதிஉயர் தொழில்நுட்பச் சாதனங்களுடன் கொழும்பிலும் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தரகர்கள் அலுவலகம் நடாத்துகிறார்கள். குடும்பப் பின்னணி, சாதி, படிப்பு-கம்பஸ்ஸா அல்லது வெளிவாரிப் படிப்பா, பார்க்கும் உத்தியோகம், சம்பளம், அழகு என்கிற பல்வேறு தகுதிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. புத்திஜீவிதப் பேருரைகளும், பெண்கள் விடுதலை முழக்கங்களும் மேடையில் மட்டுமே செல்லும். வாழ்க்கைக்கு என்றுமே உதவுவதில்லை என்ற எண்ணம் மேலிட, புரண்டு புரண்டு படுத்தேன். உண்மையில் உலகம் சுருங்கி விட்டது. நாளை மறுதினம் அவுஸ்திரேலியாவில் மனைவி மக்களுடன் இருப்பேன்.

உலகம் ஒரு கிராமமாகியுள்ளது’ என்ற சொல்லடை புழக்கத்துக்கு வந்துள்ளது. என் நண்பனின் தங்கையிடம் பணமில்லை. இதனால் அவளுக்கு ஒரு கல்யாண வாழ்க்கை வாய்க்கவில்லை. முதிர்கன்னியாகப் பெருமூச்சுவிட்டு வாழ்கிறாள். இங்கு பீற்றர் நல்ல உழைப்பாளி, நேர்மையானவன், புத்திசாலி, வாட்டசாட்டமாக இருக்கிறான். அவனால் ஒரு பெண்ணை கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்த முடியும். அவன் இப்போது மணப்பெண் கூலி கொடுக்க முடியாமல், கட்டை பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மண வாழ்க்கையின் அடிப்படைத் தேவை என்ன? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே!

அவர்கள் குடும்ப உறவில் செழிக்கும் பருவத்தினராக இருக்க வேண்டும். என் நண்பன் பீற்றருக்குத் தன் தங்கையைக் கலியாணம் செய்து கொடுப்பானா? அன்றேல் மாஸ்டரின் தங்கையைக் கலியாணம் செய்யப் பீற்றர் முன் வருவானா?

எல்லைகள் அறுந்துபோன கோளமயமதால் (Globalization) என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தினை, நாளை என் வீடு நோக்கிய பறப்பிலே தேடுவேனா?

 

(2010)

 

No comments:

Post a Comment