வீரசிங்கம் பயணம் போகிறார்
-1-
‘இனியெண்டாலும், குடிகாரற்றை உறைப்பைக் கொஞ்சம் குறையுங்கோ, வயித்திலை அல்சர் முத்தி, கான்சர் வரப்போகுது’ என இரவுச் சாப்பாட்டின் போது பல்லவியைத் துவங்கினாள் மனைவி. திருவாளர் வீரசிங்கமோ மனைவியின் ஆரோகணத்தை காதில் வாங்குவது கிடையாது. சாப்பாட்டு விஷயத்தில் வீரசிங்கம் சமரசம் செய்வதில்லை. அவருக்கு நல்ல ‘உறைப்புக்கறி’ வேணும். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அவர் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், காரசாரமான கறி சோறு இல்லாவிட்டால், அவருக்கு அன்று நித்திரை வராது. ‘தாய் பழக்கின பழக்கம்’ என்று மனைவி புறுபுறுப்பாள். புருஷனுக்கு உறைப்புக்கறி, தனக்கும் பிள்ளையளுக்கும் காரம் குறைந்த பால் கறி என்று, தினம்தினம் சமையல் அறையில் அவள் படும்பாடு, அவளுக்குத்தான் தெரியும்.
சனிக்கிழமைகளில், பல்லின மக்கள் கூடும் சிட்னி விவசாயிகள் சந்தையிலே, வீரசிங்கத்தார் சாமான்
வாங்குவது ஒரு தனிக் கலை. கத்தரிக் காயென்றால் ஊதாநிற, நீளமான லெபனீஸ் கத்தரிக்
காய்தான் வாங்குவார். கிறீஸ்லாந்து இன பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கைப் பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா முருங்கை, பிஜிநாட்டு புடலங்காய் என அவரின் காய்கறிப் பட்டியல் கோளமயமாகும். அத்துடன்
இரத்தம் வடிய வெட்டின வஞ்சிரம் மீன் முறியும், விளை மீனும், பாரையும் அவரின் சாமான்
கூடையில் சங்கமிக்கும். மொத்தத்தில், பலதரப்பட்ட உணவு வகைகளை ருசித்துச் சாப்பிடுவதற்கே இந்த ‘மனிதப்பிறவி’ என்று
வாழ்பவர் வீரசிங்கம். அவருக்கு வாழை இலையில் சாப்பிடுவது பிடிக்கும். இலைக்காகவே
அடிவளவில் அவர் வாழை மரங்கள் நட்டுப் பராமரிக்கிறார். எந்த உணவையும் அதற்குரிய முறையில்
சாப்பிட வேண்டுமென்பது அவரது கொள்கை.
‘தோசை, இடியப்பத்தை முள்ளுக்
கறண்டியால் சாப்பிட முடியுமோ? தோசையை பிய்த்து, சட்னி, சம்பலைத் தொட்டு
சாப்பிடவேணும். இடியப்பம்,
சோறு-கறியென்றால்
கையாலை ‘பிசைஞ்சு-குழைச்சு’ சாப்பிட்டால்தான் பத்தியம் தீரும்’ எனச் சொல்வார்.
வேலை செய்யிற இடத்தில், வெள்ளைக்காரர் மத்தியில், ‘குழைச்சடிக்கிற’ ரெக்னிக்
சரிப்பட்டு வராது. இதனால் இரவு நேரங்களில்தான் சோத்தை ஒரு பிடிபிடிப்பார். ‘இரவிலை
வயிறுமுட்ட சோத்தை திண்டிட்டு, நித்திரை கொள்ளுறதாலைதான் ‘வண்டி’ வைக்குது’ என்று முடிந்த மட்டும் சொல்லிப்
பாத்தாள் மனைவி. ஊஹும், அது அவரின் காதில்
ஏறவில்லை. ‘சோத்து மாடு, எக்கேடு கெட்டாலும்
போகட்டும்’ என்று அவர் பாட்டில் விட்டுவிட்டாள்.
இந்த நிலையில்தான் வீரசிங்கத்தார்
பெய்ரூத்திலுள்ள (Beirut)
அமெரிக்க
பல்கலைக் கழகத்துக்கு, மூன்று வருடங்கள் பணி
நிமிர்த்தம் செல்லவேண்டி வந்தது. முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கையில், வீரசிங்கத்தாரை நன்கு
அறிந்த மனைவிக்கு, அவரின் பெய்ரூத் பயணம்
எரிச்சலைக் கொடுத்தது. ‘இந்த மனுஷன் மூண்டு நேரமும் லெபனீஸ் ‘ஷவர்மா' (Shawarma – Kebab) சாப்பிட்டு, கொலஸ்ரோல் ஏத்திக்கொண்டு
வரப்போகுது’ எனக் கவலைப்பட்டாள். அவளது கவலை முற்றிலும் நியாயமானதே.
வீரசிங்கத்தார் ஒரு ‘ஷவர்மா’ பிரியர். வேலை முடிந்து வரும் வழியில் மனைவிக்குத்
தெரியாமல், தினமும் அமீரக
உணவகங்களில் ‘ஷவர்மா’ வாங்கிச் சாப்பிடுவார். இதன் நீட்சியாக, அவருக்கு சமீபத்தில்
‘கொலஸ்ரரோல்’ ஏறி, மூன்று நாள்கள் அவர்
ஆஸ்பத்திரியில் படுத்தது தனிக்கதை. இனிமேல் ‘பொரியல்-கரியல்-எண்ணை’ ஆகாது எனச்
சொல்லியே ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டினார்கள்.
கோழி, வான்கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின்
இறைச்சிகளில் ‘ஷவர்மா’ தயாரிக்கப்படும். இதன் பிறப்பிடமாக பல நாடுகளைச் சொல்கிறார்கள்.
அவற்றுள் லெபனான், துருக்கி போன்றவை
குறிப்பிடத் தகுந்தது. பெரும்பாலும் கடைகளில் கிடைப்பது ஆடு அல்லது கோழி
‘ஷவர்மா’தான். எலும்பில்லாத இறைச்சியுடன் தயிர், வினிகர், உப்பு, ஒலிவ் எண்ணெய்
போன்றவற்றைக் கலந்து ஊறவைத்து, பின்பு ஒரு நீண்ட கம்பியில் அடுக்கடுக்காய் குத்தி, பக்க வாட்டில் உள்ள
அடுப்பின் உதவியுடன் சுடுவார்கள். குத்தி வைக்கப்பட்டிருக்கும் கம்பியை சுற்றி, எல்லாப் பக்கமும் வடியும்
கொழுப்பில், கறி நன்கு வேகும். நன்கு
வெந்த கறியை பக்க வாட்டில் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, கீழே இருக்கும் தட்டில்
சேகரிப்பார்கள். பின்னர் நீளமாக நறுக்கப்பட்ட தக்காளி, வெள்ளரிக்காய், ‘லெட்யூஸ்’ போன்றவற்றை
சேர்த்து, கொஞ்சம் ‘ஹூமூஸ்’ கலந்து
ஒரு ரொட்டியில் சுற்றிக் கொடுப்பார்கள். அந்த ரொட்டிக்குப் பெயர் குபூஸ், ஷவர்மா-குபூஸ்!
‘ஹூமூஸ்’ (Hummus) பற்றிய தகவலையும் இங்கு
சொல்ல வேண்டும். இது ஒரு லெபனீஸ் தயாரிப்பு. வெள்ளை சுண்டல் கடலை, வெள்ளை எள் ஆகியவற்றை
கலந்து அரைத்து, ஒலீவ் எண்ணெய் சேர்த்து
களியாக இதை தயாரிப்பார்கள். லெபனானில் எல்லா உணவு வகைகளுக்கும் இதை
தொட்டுக்கொள்ளப் பாவிப்பார்கள்.
லெபனீஸ் இனிப்பு வகைகளும் உலகப் புகழ் பெற்றவையே.
இவற்றில் சீனிப்பாகு சொட்டும். இவை எல்லாம் சேர்ந்து வீரசிங்கத்தின் மனைவியைப்
பயமுறுத்தவே, முடிந்தவரை இந்தப்
பயணத்தை தடுத்துப் பாhத்தாள். அவரோ அசைந்து
கொடுக்கவில்லை.
‘இந்த மனுஷன், லெபனானிலை என்னதான்
செய்யப் போகுது?’ என்று அறியும் ஆவலில், இரவுச் சாப்பாட்டின்போது
இதுபற்றி கதையைத் துவங்கினாள் மனைவி.
‘தக்காளி, கியூக்கம்பர் (Cucumber), கப்சிக்கமும் (Capcicum), பலவகை சீஸ்கட்டிகளும், லெபனீஸ் ரொட்டியும், ஒலிவ் எண்ணையும் மத்திய
தரைக் கடல் நாட்டு மக்களின் பிரதான உணவு. லெபனானில் தக்காளியும், கியூக்கம்பரும், கப்சிக்கமும் பசுமைக்
கூடங்களிலும் திறந்த வெளிகளிலும், சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் அமோக விளைச்சலைக் கொடுக்கின்றன. ஆனால் இவைகள்
பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘மலட்டு’ விதைகளிலிருந்து விளைந்தவை’.
‘ம்!’
உலகெங்கும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’
விவகாரம்;, சர்ச்சைக்குரியதாகவே
உள்ளது. இவைகளால் ஏற்படும் நீண்டகால பாதிப்புக்களை, பாமர விவசாயிகள் அறிந்திருக்க நியாயமில்லை. காலாதி காலமாக
லெபனான் நாட்டுக்கு பெருமை சேர்த்த ஊதாநிற நீட்டுக் கத்தரிக்காயும், லெபனீஸ் கியூக்கம்பரும், அங்கு சாகுபடி
செய்யப்படாதது மட்டுமல்ல,
அவை
அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன’.
‘அப்பா, மரபணு மாற்றம்
செய்யப்பட்ட மலட்டு விதைகள் என்றால் என்ன?’ என்று கேட்டு மகளும் உரையாடலில் இணைந்து கொண்டாள்.
‘சுற்றுபுற சூழலின் சமனை அழிப்பதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மலட்டு
விதைகளிலிருந்து வளரும் பயிர்களில் பெறப்படும் விதைகள், மீண்டும் சாகுபடிக்கு
பயன் படுத்த முடியாத விதைகளாகவே இருக்கும். இதற்கு ஏற்றவகையில் அதன் மரபணுக்களில்
மாற்றம் செய்யப்பட்டிருக்கும்’.
‘இதைக் கொஞ்சம் விபரமாகப் சொல்லுங்கள் அப்பா’ என ஆர்வத்துடன் கேட்டாள் மகள்.
பாடசாலையில் இப்போது அவள் ‘இயற்கைச் சூழலும் அதன் பாதுகாப்பும்’ பற்றி உயிரியல்
பாடத்தில் படிக்கிறாள்.
‘விவசாயிகள் தங்கள் மகசூலில் இருந்து ஒரு பங்கு விதைகளை, அடுத்த சாகுபடிக்கு
ஒதுக்கி வைப்பது வழக்கம். அதாவது, நெல் அறுவடை செய்யப்பட்டால், அதில் இருந்து ஒரு பங்கு, விதை நெல்லாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அடுத்த சாகுபடிக்கு பயன் படுத்தப்படும். ஆனால் மரபணு மாற்றப்பட்ட பயிர்களில்
இது சாத்தியமில்லை’
‘ஏன் அப்படி?’
‘செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள்
உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல்
‘காப்புரிமை’ பெற்றுள்ளன. இதனால், ஒவ்வொரு முறையும், அவர்களிடம் இருந்து தான், அந்த விதைகளை வாங்க
வேண்டும். பல நிறுவனங்கள்,
ஒரு படி மேலே
சென்று, மரபணுவில் மேலும் பல
மாற்றங்களைச் செய்து, மலட்டு விதைகளை
உருவாக்கும் பயிர்களை விருத்தி செய்துள்ளன. இவைகள் வளர்ந்து நல்ல விளைச்சலைக்
கொடுக்கும். ஆனால் இந்தப் பயிர்களின், விதைகளைச் சேகரித்து அவற்றை மீண்டும் விதைத்தால் அவை முளைக்காது. இதனால்
விவசாயிகள், விதைகளுக்காக எப்போதுமே
அந்த நிறுவனத்தையே நம்பி இருக்க வேண்டும். அந்த நிறுவனம் முடிவு செய்வது தான் விலை, வைத்தது தான் சட்டம்.
இதனால் உலகின் உணவு உற்பத்தி ஒரு சில தனி நிறுவனங்களின் ஏகபோக உரிமையாகிவிடும்’.
‘இலங்கையிலும் இந்த விதைகள் விற்கப்படுகிறதா?’
‘இலங்கையில், பன்னாட்டு நிறுவனங்கள்
தயாரிக்கும் மலட்டு விதைகள் விற்கப்படுவதாத் தெரியவில்லை. ஆனால் இலங்கை விவசாயத்
திணக்களகம் கலப்பின விதைகளை (F1, F2 Hybrid seeds) விற்பனை செய்கின்றன. இவை அயல் மகரந்தச் சேர்க்கை மூலம்
பெறப்பட்டவை. இந்தப் பயிர்களின், விதைகளைச் சேகரித்து விதைத்தால் அவை முளைக்கும். ஆனால் முதல் சாகுபடி போல
அடுத்த போகம் காய்க்காது. எனவே இலங்கையிலுள்ள விவசாயிகள், இப்பொழுது வழமையான விதை
சேகரிப்பை விடுத்து விவசாய திணைக்களகத்திலும் விதை வியாபாரிகளிடமும் விதைகளை
வாங்கியே நாத்து மேடை போடுகிறார்கள்’.
‘இந்தியாவில்?’
இந்தியாவிலும் கலப்பின (F1,F2 Hybrid seeds)
விதைகளே
பயிரிடப்படுகின்றன. இருப்பினும் செயற்கை முறையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட மலட்டு
விதைகளை, இயற்கை விவசாயிகளின்
பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலும் பன்னாட்டு விதை வியாபார நிறுவனங்கள், அங்கு அறிமுகம் செய்து
வெற்றி கண்டுள்ளார்கள். இதன் ஒரு வடிவம்தான் ‘பி.டி’ கத்தரிக்காய்!
‘அது சரி அப்பா, லெபனானுக்கு நீங்கள் போய், என்ன ஆராய்ச்சி செய்யப்
போறியள்?’
‘லெபனானுக்கே உரித்தான பல அரியவகைத் தாவாரங்கள் அங்குள்ள மலைப் பிரதேசங்களில்
வளர்கின்றன. அழிந்துபோகும் நிலையிலுள்ள இத்தாவரங்களை பாதுகாக்கவும்
ஆவணப்படுத்தவும் ஒரு முன்னணி உலக நிறுவனம் பணம் ஒதுக்கியுள்ளது. இந்த
வேலைத்திட்டத்தின் ஒருபகுதி வேலைகளைச் செய்ய வேண்டியது எனது பொறுப்பு’.
‘அம்மா நினைக்கிறமாதிரி நீங்கள் சோத்து மாடில்லை அப்பா, நீங்கள் ஒரு புத்தியுள்ள
மாடு’ என மகள் சொல்ல, அவளுடன் சேர்ந்து
சிரித்தார் வீரசிங்கம்.
-2-
வீரசிங்கம் ஒரு
நாட்டுக்குப் போவதற்கு முன்பு, அந்த நாடுபற்றி விலாவாரியாக அறிந்து கொள்வார். இது பல பிரயாணங்களில் அவரது
சோத்துப் பிரச்சனையைத் தீர்த்திருக்கிறது.
‘லெபனான் (அரபு மொழியில் ‘லுப்னான்’), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான சிறிய நாடு. 10,452 சதுர கிலோ மீட்டர்கள்
பரப்பளவு கொண்டது. ஓப்பீட்டளவில் இலங்கையின் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே.
லெபனானின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியா, தெற்கே இஸ்ரேல், மேற்கே மத்தியதரைக் கடல்
என, மலையும் மலை அடிவாரத்தில்
கடலுமாக அமைந்த இயற்கை வனப்பு மிக்க அழகான நாடென, வீரசிங்கம் விக்கிபீடியாவில் மேய்ந்தபோது, அறிந்து கொண்டார்.
லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில், ‘டௌறா' (Daura) என்றொரு இடமுண்டெனவும், அங்கு வெளிநாட்டு
தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதாகவும், பல இலங்கை இந்திய பலசரக்கு மற்றும் சாப்பாட்டுக் கடைகள் இருப்பதாகவும்
பிறிதொரு இணையத் தளத்தில் வாசித்துத் திருப்தியடைந்தார். சனி ஞாயிற்றுக்
கிழமைகளிலே, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பீன், எதியோப்பியா ஆகிய
நாடுகளிலிருந்து பணிப் பெண்களாக லெபனானுக்கு வந்தவர்கள், கேளிக்கைகளுக்காக
‘டௌறா’கடைத் தெருக்களில் ஒன்று கூடுவதும், மேலதிக வருமானத்துக்காக சிலர் ‘பலான’ தொழில் புரிவதும் வீரசிங்கம் பின்னர்
தெரிந்துகொண்ட சங்கதிகள்.
பணிப்பெண்கள் என்றவுடன், இவர்களை நம்மூர்ப் பணிப்
பெண்களுடன் ஒப்பிடக்கூடாது. ‘டௌறா’கடைத் தெருவுக்கு இவர்கள் வரும்போது, சர்வதேச ‘மொடல்’ அழகிகள்
தோற்றுப் போவார்கள். அந்தளவுக்கு ஒப்பனை மற்றும் உடை அலங்காரம் தூக்கலாக
இருக்கும். இவர்களின் ஊதிய வேறுபாடு பற்றியும் இங்கு பதிவு செய்யவேண்டும். குறைவான
சம்பளம் பெறுபவர்கள் லெபனான் மற்றும் யோர்டனில் வேலை செய்பவர்களே. மத்திய கிழக்கு
நாடுகளில், பணிப் பெண்களின் சொந்த
நாட்டைப் பொறுத்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இருக்க இடமும், உணவும், மருத்துவ வசதியும் பணிப்
பெண்களுக்கு வழங்க வேண்டுமென்பது அரச விதி. சம்பளத்தைப் பொறுத்தவரை, 2013ம் ஆண்டு, லெபனானில் மஞ்சள் தோல்
பிலிப்பீன் பெண்களுக்கு மாதம் நானூறு அமெரிக்க டொலர்கள்வரை வழங்கப்பட்டது.
பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, இந்தியாவிலிருந்து வந்த
மாநிறப் பெண்களுக்கு முன்னூறு அமெரிக்க டொலர்கள். எதியோப்பிலிருந்து வந்தவர்கள்
பெறுவது இருநூறு அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இந்த வகையில், வீட்டிலுள்ள பணிப்
பெண்களை வைத்தே, லெபனான் எஜமானர்களின்
வசதி வாய்ப்புக்களைக் தெரிந்து கொள்ள முடியும்.
வீரசிங்கம் எப்பொழுதும் மக்களோடு மக்களாக
சேர்ந்து வாழ்ந்து, தன்னைச் சுற்றி நடப்பதை
வெகு விரைவாகப் புரிந்து கொள்வார். மத்தியதரைக் கடல் நாடுகளில் வாழும் மக்களுக்கு
பொதுவான சில பழக்க வழக்கங்கள் உண்டு. இவர்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளைச்
சட்டை செய்யவதில்லை. குப்பைத் தொட்டிகள் எல்லா இடங்களிலும் இருக்கும். ஆனால் குப்பைகள் தொட்டிக்கு
வெளியே போடப்பட்டிருக்கும். வளர்முக நாடுகளிலும் இது வழமைதான். ஆனால்
மத்தியகிழக்கு நாடுகளின் அரசுகள் அதை அப்படியே விடுவதில்லை. வெளியில் போட்ட
குப்பைகளைப் பொறுக்கி தொட்டிக்குள் போடவும், வீதிகளைச் சுத்தம் செய்யவும், வெளிநாட்டு கூலித் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.
பெய்ரூத்தில், வீதிகளைச் சுத்தம் செய்யும் பெரிய நிறுவனம் ‘சுக்லீன்' (Sukleen-Sel). இந்த நிறுவனத்தில், இந்தியாவிலுள்ள
இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏஜென்சி மூலம் வந்த நூற்றுக்கணக்கான தமிழ்
இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். அதிகாலை ஆறு மணிக்கு குப்பை அள்ளும் லொறி ஒன்றில்
இவர்களைக் கூட்டிவந்து, வீதிக்கு ஒருவராக இறக்கி
விடுவார்கள். இவர்கள் நீலநிற தடித்த பிளாஸ்ரிக் பையும், குப்பைகள் மற்றும்
சிகரெட் கட்டைகளைப் பொறுக்குவதற்கு ஏதுவான நீண்ட ‘கவ்வி’ ஒன்றும்
வைத்திருப்பார்கள். மாலை ஆறுமணிவரை தமக்கு ஒதுக்கப்படும் வீதியிலே உள்ள
குப்பைகளைப் பொறுக்கி வீதியைச் சுத்தம் செய்ய வேண்டியது இவர்கள் பொறுப்பு. மதியம்
இவர்களுக்கு தூக்குச் சட்டியில் சாப்பாடு வரும். இதற்காகவே இந்திய உணவுகளைச்
சமைக்க இவர்களுள் ஒருசிலரை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். துப்பரவு
தொழிலாளர்களுக்கு பன்னிரண்டு மணித்தியால வேலை. வாரத்தில் ஆறு நாள்கள் வேலை செய்ய
வேண்டியது கட்டாயம். பலர் ஏழு நாள்கள் வேலை செய்வதுமுண்டு. மணித்தியாலம் இரண்டு
அமெரிக்க டொலர்கள் வீதம் ஒரு நாளுக்கு 24 அமெரிக்க டொலர்கள் ஊதியம். ஒரு அறைக்குள் பத்துப்பேர் வீதம் தங்குமிடம், சாப்பாடு, மருத்துவம் இலவசம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் லீவு எடுத்தால் இவர்கள் ‘டௌறா’வுக்கு வருவார்கள். இங்குதான், சொந்த ஊருக்கு உண்டியலில்
காசனுப்ப வசதியுண்டு.
பெய்ரூத் தொழிற்சாலைகளில் கடின வேலை செய்யும்
பலர், ஞாயிற்றுக் கிழமைக்காகவே
காத்திருந்து டௌறாவில் நிறையக் குடிப்பார்கள், சிலர் சண்டை போடுவார்கள், புரியாணி சாப்பிடுவார்கள். தசைகள் முறுக்கேறினால் பெண்களுடன் ஒதுங்குவார்கள்.
வசதிபடைத்த சிலர், பணிப் பெண்களை நிரந்தரமாக
வைத்திருப்பதும் உண்டு. மொத்தத்தில் வெளிநாட்டு வேலையாட்களின் உபயத்தில், வார இறுதி நாள்கள், டௌறாவில் திருவிழாதான்.
வீரசிங்கம் குடியிருந்த தெருவுக்கு மாரிமுத்து
என்ற இளைஞனே பொறுப்பு. ஊரிலுள்ள பெண்ணைத் திருமணம் செய்து, மூன்றாம் மாதம்
பெய்ரூத்துக்கு வந்ததாகவும், லக்ஷமி உருவில் வந்த தன்னுடைய மனைவியின் அதிஷ்டத்தாலே தனக்கு வெளிநாட்டு வேலை
கிடைத்ததாகவும் சொன்னான். ஒப்பந்தம் முடியுமுன் மாரிமுத்து வேலையை விடமுடியாது.
இடையில் போய் மனைவியைப் பார்க்கவோ லெபனானுக்கு கூப்பிடவோ சம்பளம் பத்தாது, அரசும் அதற்கு அனுமதிக்காது. மூன்று மாதங்கள் மனைவியுடன் வாழ்ந்த இனிய
நினைவுகளுடன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பெய்ரூத்தில் வேலை செய்கிறான்.
அவ்வப்போது மனைவியின் நினைவுகள் மின்னலடிக்கும் போதெல்லாம், ‘எவருக்கு இங்கே புரியப்
போகிறது?’ என்கிற தைரியத்தில்
‘அன்பே நான் இங்கே, நீ அங்கே, இன்பம் காண்பதெங்கே..?’ என்ற பாடலை உருக்கமாப்
பாடுவான். இப்படிப் பல மாரிமுத்துக்கள், மத்திய கிழக்கின் கொடூரமான தட்ப வெப்ப நிலையின் கீழ் தனிமையில் வாழ்ந்து, இளமையத் துலைத்து, பணத்துக்காக
ஒப்பந்தத்துக்கு மேல் ஒப்பந்தமாக வேலையை நீடித்து, ஆளே உருக்குலைந்து உருமாறிப் போவார்கள்.
மாரிமுத்து, தெருவோர மதிலொன்றில் கரிக்கட்டியால் சூலமொன்று கீறி, கீழே ‘மாரியம்மன் துணை’ என்பதை 'மரியம்மன் தூணை' என எழுதியிருந்தான்.
காலையில் அவன் வேலைக்கு வரும்போது, ஊரிலுள்ள மாரியம்மன் மீது
அவன் கொண்ட அதிதீவிர பக்தியும், அலரிப்பூவும், குங்குமமும் கூடவரும்.
கொண்டுவந்த குங்குமச் சரையை விரித்து, தனக்கும் மாரியம்மனுக்கும் திலகம் வைத்து தேவாரம் பாடுவான். பின்னர் வேலை
ஆரம்பமாகும். சில வேளைகளில் அவன் வேலைக்கு வருவதற்கு முன்பே, அங்குள்ள தெரு நாய்கள்
காலை உயர்த்தி ‘மாரியம்மன்’ மீது ஒண்டுக்கடித்து அபிஷேகம் செய்வதுமுண்டு. எது
எப்படி இருந்தாலும், மாரிமுத்துவின்
புண்ணியத்தால் வீரசிங்கம் இருந்த வீதியும் நடைபாதையும்; ஈரத்துணியொன்றால்
துடைத்து எடுத்தமாதிரி பளிச்சென்று இருக்கும்.
ஸ்பானியர்கள், இத்தாலியர்கள் போன்று, வசதிபடைத்த லெபனானியர்களும் வெகு நாகரீகமாக உடையணிவார்கள். பல்கலைக் கழகத்தில்
பேராசிரியர்கள் அனைவரும் ‘கோர்ட்-சூட்-ரை’ அணிந்தே விரிவுரைகளுக்கு வருவார்கள்.
இந்த நடைமுறை ஆஸ்திரேலியாவில் இல்லை. இருந்தாலும், வெளிநாட்டு பணியாளர்கள்
பெருமளவில் வசிக்கும் தங்கள் நாட்டில், ‘மாநிற’ வீரசிங்கம், கனவானாக உடையணிய
வேண்டுமென்றும், பணிபுரியும் இடத்தையும், ‘டாக்டர்’ என்பதையும்
முன்னிலைப்படுத்தி அவர் அறிமுகமாக வேண்டுமென்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு
மறைமுகமாக அறிவுறுத்தியிருந்தது. லெபனானில் அடிக்கடி நடைபெறும் வீதிச்
சோதனைகளிலில் வரக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதே இதற்கான காரணமென்றாலும், பல்கலைக்கழகம்
குறிப்பிட்ட ‘கனவான்’ உடை அலங்காரம், வீரசிங்கத்துக்கு மிகுந்த அசௌகரியத்தைக் கொடுத்தது.
-3-
வீரசிங்கம் வெள்ளாட்டு
இறைச்சி வாங்க சிட்னியின் புறநகர்ப் பகுதியிலுள்ள யூசுப்பின் இறைச்சிக் கடைக்குப்
போவார். அங்கு கொழுப்பில்லாத, எலும்பு நீக்கிய குறும்பாட்டு இறைச்சி வாங்கலாம். ஆஸ்திரேலியாவில் இறைச்சிக்
கடை என்பது ஊரிலுள்ள பெட்டிக்கடை போன்றதல்ல.
யூசுப்பின் கடை ஒரு மினி சுப்பர் மாக்கெட் (Mini super market) போன்றது. அங்கு உடன்
இறைச்சி தொடக்கம் இறைச்சியில் தயாரிக்கப்படும் சகல உணவுப் பொருள்களும் சகாய
விலையில் கிடைக்கும். யூசுப், அரபு நாடுகளுக்கு ஹலால் இறைச்சிகளையும் ஏற்றுமதி செய்கிறான். இதற்காக, இறைச்சி பொதி செய்யும்
பணியில், அகதி அந்தஸ்து கோரிய பல
இலங்கைத் தமிழர்கள் அவனிடம் வேலை செய்கிறார்கள். இதனால் நிரந்தர வாடிக்கையாளரான
‘தமிழன்’-வீரசிங்கம், யூசுப்புடன் நண்பனானது
ஆச்சரியமல்ல.
யூசுப் ஐந்து வயதாக இருக்கும்போதே பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்கு
புலம்பெயர்ந்ததாகச் சொன்னான். நிர்ப்பந்த காரணிகளால் லெபனான் மக்கள் பெருவாரியாக
வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தபோது பணம் படைத்தவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்களாம். ஆஸ்திரேலியா ஒரு தொலை
தூர நாடு. நீண்ட தூர பிரயாணத்தின் போது ஏற்படும் இடர்பாடுகளை எதிர்நோக்க, வசதி படைத்தவர்கள் தயாரில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த லெபனானியர்களுள்
பெரும்பாலானோர் கைத்தொழிலாளர்களும் வசதி வாய்ப்புக் குறைந்தவர்களுமே. யூசுப்பின்
தந்தை லெபனானில் இறைச்சிக்கடை வைத்திருந்ததால் சிட்னியிலும் அதேவியாபாரத்தைத்
தொடர்ந்தார். அதை ஒரு மினி மாக்கட்டாக மாற்றி, ஏற்றுமதியை ஆரம்பித்து,
வணிக வளாகமாக
மாற்றிய பெருமை யூசுப்பைச் சேர்ந்தது. யூசுப் சிட்னியிலுள்ள பல்கலைக் கழகத்தில், மத்திய-கிழக்கு நாடுகளின்
வரலாறும், வணிகமும் படித்தவன், சுறுசுறுப்பானவன், நல்ல திறமைசாலி.
அன்று திங்கள் கிழமை!
கடைகளில் வழமையாக கூட்டம் குறைவாக இருக்கும்.
கடைபூட்டும் நேரமாகப் பார்த்து, வீரசிங்கம் இறைச்சி வாங்கப் போனார். கடைபூட்டும் நேரம் மலிவு விலையில் இறைச்சி
வாங்கலாம் என்பது மேலதிக காரணம். வீரசிங்கம் கடைக்குள் நுழைந்ததும் இறைச்சிக்
கடையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ‘தமிழ்ப்பெடியள்’ அவருக்கு வணக்கம்
சொன்னார்கள். அவர்களிடம் பொறுக்கிய தமிழில், யூசுப்பும் வணக்கம் சொல்லி வீரசிங்கத்தை நலம் விசாரித்தான். சந்தர்ப்பத்தை
தவறவிடாத, வீரசிங்கம் தான் லெபனான்
செல்லும் செய்தியைச் சொல்லி பேச்சை துவங்கினார்.
‘லெபனான் என்னும் நாடு உலக வரைபடத்தில் இடம்பெற்றது 1920ஆம் ஆண்டில்தான்.
இன்றுள்ள எல்லைகளுடன் கூடிய லெபனான் பல நூற்றாண்டுகளாகவே சிரியாவின் ஒரு
மாவட்டமாகவே கருதப்பட்டு வந்தது. சிரியாவும்கூட அப்போது ஓட்டோமன் பேரரசின் ஒரு
பகுதியாக இருந்தது. முதல் உலகப் போரில் ஓட்டோமன் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, மத்திய கிழக்கில் அந்தப்
பேரரசின் கீழிருந்த பகுதிகளை, பிரான்சும் பிரிட்டனும் கூறுபோட்டுக் கொண்டன’.
‘எப்படி?’
‘1919இல் இன்றைய லெபனானும்,
அதனை உள்ளடக்கிய
சிரியாவும் பிரான்சின் காப்பாட்சி நாடுகளாயின (Protectorate). ஜோர்டான், எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளை
பிரிட்டன் எடுத்துக் கொண்டது’.
யூசுப்பின் இறைச்சிக் கடைக்கு அருகே பழக்கடை
வைத்திருக்கும் சைமன் ஒரு லெபனான் மரோனைட் கீறீஸ்தவன். சிட்னியிலுள்ள பல
பழக்கடைகளுக்கு அவன் சொந்தக்காரன். பழக்கடையை மூடியபின் அருகிலுள்ள கோப்பிக்
கடையில் யூசுப்புடன் அமர்ந்து அன்றைய ‘பங்குச்சந்தை’ நிலவரம் பற்றிப் பேசுவது
வழக்கம்.
மரோனைட் கிறிஸ்துவர்கள் பணக்காரர்கள், படித்தவர்கள், லெபனான் பொருளாதாரத்தில்
இன்றும் ஆதிக்கம் செலுத்துபவர்கள். மரோனைட் கீறீஸ்தவ மதத்தில் விவாகரத்து
அனுமதிக்கப் படுவதில்லை. உலகம் முழுவதிலும், 2015ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 3.2 மில்லியன் மரோனைட்
கிறிஸ்துவர்களே வாழ்கிறார்கள். இதில் ஒரு மில்லியன் மரோனைட் கிறிஸ்துவர்கள், லெபனானில் மட்டும்
வாழ்கிறார்கள். மிகுதிப்பேர் சிரியா, சைப்பிரஸ், ஆர்ஜென்ரீனா, பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்
பரம்பி இருக்கிறார்கள். இவர்கள் இன்றும் பிரான்ஸின் செல்லப் பிள்ளைகள். மரோனைட்
கீறீஸ்தவர்களின் பக்க பலத்துடனேயே, 1943ம் ஆண்டு பிரான்ஸ் அன்றைய சிரியாவிலிருந்து இன்றைய
‘லெபனானை’ கத்தரித்து, தனி நாடாக அறிவித்தது.
‘பெய்ரூத் ஒரு குட்டி பரிஸ் என்றும், அங்கு பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கம் இன்னமும் இருப்பதாக சொல்லப்படுகிறதே, அது உண்மையா…’? எனக் கேட்டு தகவல்
அறியும் கருமத்தில் கண்ணாக இருந்தார் வீரசிங்கம்.
‘அது முற்றிலும் பொய்யல்ல. லெபனானுக்கு ‘சுதந்திரம்’ வழங்கிய பிரான்ஸ், அது எப்போதும் மேற்கு
நாடுகளைச் சார்ந்திருக்கும் வகையில் 1943இல் ஓர் அரசியலமைப்பை உருவாக்கியிருந்தது. இதன்படி இங்குள்ள முக்கிய மதங்களின்
பிரதிநிதிகள் மட்டுமே அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, 1960களின் பிற்பகுதிவரை மரோனைட் கிறிஸ்தவர் மட்டுமே குடியரசுத்
தலைவராக முடிந்தது’
‘இதை யாரும் தட்டிக் கேட்கவில்லையா?’
பேசிக்கொண்டே மூவரும் பக்கத்திலுள்ள கோப்பிக்
கடைக்கு சென்றார்கள். யூசுப் மூன்று ‘கப்பச்சீனோ’ கோப்பிகளுக்கு ஓடர் கொடுத்தான்.
சைமன் அவனது சுபாவப்படி அதிகம் பேசவில்லை. அப்பிள் பழ விநியோகம் பற்றி தொலைபேசி
அழைப்பு வர, சற்று தொலைவில் சென்று
பேசத் துவங்கினான். கோப்பியை குடித்த வீரசிங்கம் சற்று இடைவெளி விட்டு, தனது கேள்வியை
நினைவுபடுத்தினார்.
‘1970களின் தொடக்கத்திலேயே முஸ்லிம்கள், லெபனான் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராகி இருந்தார்கள். லெபனான் அரசமைப்பில்
ஒரு மரோனைட் கிறித்துவரும்,
ஒரு சுன்னி
முஸ்லிம் மட்டுமே முறையே குடியரசுத் தலைவராகவும் பிரதமராகவும் இருக்க முடியும்
என்னும் விதிகளை எதிர்க்கத் தொடங்கினார்கள்.
‘ஷியா முஸ்லிம்களுக்கு அப்போது ஆட்சியில் எந்தப் பங்கும் இருக்கவில்லையா?’
‘இல்லை. அப்போது பல்வேறு மதக் குழுக்களிடையேயும் இனக் குழுக்களிடையேயும்
இருந்து வந்த பகைமையுடன்,
பொருளாதார
ஏற்றத்தாழ்வுப் பிரச்சனைகளும் சேர்ந்து, நாட்டில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்தன. வர்த்தகம் மரோனைட்
கிறிஸ்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க, ஷியா முஸ்லிம்களோ கை வினைஞர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணைத் தொழிலாளிகளாகவும்
பிழைப்பை நடத்தி வந்தார்கள்.
ஓ..!
நாட்டின் இயற்கை வளங்களில் முக்கியமானதாக
இருந்த ‘செவ்வகில்' (Red
Cedar) மரங்கள் முற்றாக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால், நாட்டின் பல பகுதிகள்
வறட்சி நிலங்களாயின. பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் துவங்கினார்கள். எனது
குடும்பமும் அவுஸ்திரேலியா வந்தது
அப்போதுதான்’ எனச் சொல்லி நிறுத்திய யூசுப், வீரசிங்கம் வாசிப்பதற்கு சில இணைய முகவரிகளைக் கொடுத்து, விடைபெற்றான்.
இந்து சமயத்தில் சைவம், வைஷ்ணவம் போல, கிறீஸ்தவத்தில் கத்தோலிக்கம்.
புரடஸ்தாந்தம் போல, இஸ்லாத்திலும் சுனி, ஷியா என்ற இரு
பிரிவுகளுண்டு. சுனி இஸ்லாம் என்பது இஸ்லாமியப் பிரிவுகளில் ஒரு முக்கியமான
உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவுமாகும். சுனி என்ற வார்த்தை ‘சுன்னா’ என்ற
அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது
அர்த்தமாகும். உலக இஸ்லாமிய மக்கள் தொகையை பொறுத்தவரை சுனி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை
விட பெரும்பான்மையாக உள்ளது. மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85 வீதத்தை கொண்டுள்ளது.
ஈரான், ஈராக், லெபனான், கட்டார், பஹ்ரைன் ஆகிய நாடுகளை
தவிர்த்து, மற்ற அனைத்து
இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளிலும் இது பெரும்பான்மையாக உள்ளது.
ஷியா இஸ்லாமும், இஸ்லாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது
இஸ்லாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும்
பிரிவாகும். ஷியா என்ற சொல் ‘அலியை பின்பற்றுவோர்’ என்று பொருள்படும் அரபு மொழிச்
சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே
அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள். ஷியா பிரிவினர் மிக அதிகளவில்
வாழும் முஸ்லிம் நாடு, ஈரான் ஆகும். சுன்னி, ஷியா இஸ்லாமிய
பிரிவுகளுக்கு இடையே பல நூறாண்டுகளாக சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே லெபனானில் இது பாரிய போராக நடந்த காலங்களுமுண்டு.
இதுபோன்ற வரலாற்றுத் தகவல்களுக்கிடையே லெபனான்
மக்களின் மத விகிதாசாரம் பற்றியும் வீரசிங்கம் இணையத் தளங்களில் ஆராய்ந்தார்.
2014ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி, லெபனானின் மொத்த மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், 40.4 வீதத்தினர் கிறீஸ்தவர்கள், 5.6 பங்கு டுறூஸ் (Druze) மதப்பிரிவினர்.
இஸ்லாமியர்களுள், சரிசமமாக 27வீதம் சுனி பிரிவினரும் 27 வீதம் ஷியா பிரிவினரும்
வாழ்கிறார்கள். 40.4 வீத கிறிஸ்தவர்களுள்
பெரும்பான்மையோர் (21வீதம்) மரோனைட்
கத்தோலிக்கர். மிகுதி கிறீக்- மற்றும் அமெரிக்கன் ‘ஓத்தொடொக்ஸ்’ கிறீஸ்தவப்
பிரிவினர்.
வீரசிங்கத்தார் இலங்கையில் வாழ்ந்தபோது சுனி, ஷியா என்ற இஸ்லாமிய
பிரிவுகளை அறிந்திருக்கவில்லை. இலங்கையில் முஸ்லீம்கள் அனைவரும் ஒரே
இஸ்லாமியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். பின்னர் தீர விசாரித்தபோது, ஈரானியத் தொடர்பினால்
கிழக்கிலங்கையின் சில பகுதிகளில், குறிப்பாக ஓட்டமாவடிக் கிராமத்தில் ஒரு சிறிய அளவில் ஷியா பிரிவு ஒன்று
உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஒரு மதறசாவும் நடத்தி வருகிறார்கள். மற்ற
நாடுகள் போன்று இலங்கையில் ஷியா முஸ்லீம்களுக்கான தனியான பள்ளிவாசல்கள் இருப்பதாக
தெரியவில்லை. இதேவேளை, இந்தியாவில் 2005ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த
இஸ்லாமியர்களில் கால்பங்கு ஷியா, மிகுதி சுனி முஸ்லீம்கள் என உசாத்துணை நூல்கள் சொல்வதையும் வீரசிங்கம் குறித்துக்
கொண்டார்.
-4-
ஒரு ஆளுக்கு அளவாய், சோறு சமைக்கக் கூடிய
சின்ன றைஸ்குக்கர், சிட்னித் தமிழ்க்
கடைகளில் கிடைக்கும் யாழ்ப்பாண கறித்தூள், சரக்குத்தூள் சகிதம் பெய்ரூத்தில் வந்திறங்கி, விமான நிலைய வாசல் மூலையிலே, சப்பாத்து நாடாவை இறுக்கிக் கட்டவென குனிந்த வீரசிங்த்தை, தமிழ்ப் பெயரொன்று
வரவேற்றது. விமான நிலைய திருத்த வேலையை, எமது உடன்பிறப்பொன்று செய்திருக்க வேண்டும். சீமெந்து பூசி காய முன்னர், குச்சியொன்றினால்
‘இராசதுரை’ என்ற தன்னுடைய பெயரை ‘இரசதூரை’ என எழுத்துப் பிழையுடன் எழுதி, திகதி மாசம் வருஷத்துடன்
‘சகோதரம்’ பதிவு செய்திருந்தது.
அரபு மொழி தெரியாத வீரசிங்கத்துக்கு உதவி செய்ய, அப்துல்லா என்ற மாணவனை
பல்கலைக் கழகம் நியமித்திருந்தது. அவன் டாக்டர் பட்டத்துக்காக, லெபனான் நாட்டின் பூர்வீக
தாவர இனங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவன். பெய்ரூத்திலுள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்திலே
படிப்பது, அராபிய உலகிலே
பெருமையாகப் பேசப்படும் சங்கதி. இங்கு படிப்பதற்கு மிகுந்த பொருள் வளம் அமைய
வேண்டும். அப்துல்லாவும் மேட்டுக் குடியைச் சேர்ந்தவனே. அவனுடைய குடும்பம்
‘மெடிற்றேனியன்’ நாடுகள் முழுவதற்கும், விவசாய விதைகளையும் பூச்சி கொல்லிகளையும் சந்தைப்படுத்தும் மிகப் பெரிய
நிறுவனத்தின் சொந்தக்காரர்கள். முப்பாட்டனால் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம்
மூன்றாவது தலைமுறையாக அப்துல்லாவின் தந்தையால் தற்போது நிர்வகிக்கப் படுகிறது.
தன்னுடைய படிப்பு முடிந்ததும் தங்கள் குடும்ப நிறுவனத்தை தான் நிர்வகிக்கப் போவதாக
பெருமையோடு சொன்னான்.
தென் லெபனானில் பெரும்பான்மையினராக ஷியா
முஸ்லீம்களே வாழ்கிறார்கள். தென் லெபனானின் எல்லையாக, இஸ்ரேல் இருப்பதால்
எப்பொழுதும் இப்பகுதி பதட்ட நிலையில் இருக்கும். இதனால் இங்குள்ள விவசாயப்
பண்ணைகளுக்கு விஷயம் செய்யும்போது, சுனி முஸ்லீமான அப்துல்லாவுடன் தென்பகுதியைச் சேர்ந்த இரண்டு ஷியா பிரிவு
மாணவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமென, பல்கலைக் கழக நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இங்குதான் இஸ்ரேலியர்களுக்கு
சிம்ம சொப்பனமாக விளங்கும் ஷியா ஆதரவு ‘ஹிஸ்புல்லா’ இயக்கம் நிலை கொண்டுள்ளதாக, அப்துல்லா சொன்னான். தென்
லெபனானில் பல பாஸ்தீனிய அகதி முகாம்களும் உண்டு. இதனால் இஸ்ரேல், லெபனான்மீது போர்
தொடுக்கும் போதெல்லாம் அழிவுக்குள்ளாவது இப்பகுதியே. தென் லெபனானில் யாழ்ப்பாண
சுவாத்தியம் உண்டு. அங்கு மா, வாழை, தோடை, எலுமிச்சை தொடக்கம் எல்லா
உலர்வலயப் பயிர்களுகளும் நன்கு வளரும். ஆனால் வட லெபனானில் வாழ்பவர்கள், பெரும்பாலும் சுனி பிரிவு
முஸ்லீம்களே. இவர்களில் பலர் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள். இங்குள்ள உப-உலர்வலய சுவாத்தியம், இலங்கையின் மலையக
சுவாத்தியத்துடன் ஒப்பிடக்கூடியது. லெபனானின் மலை உச்சிகள ரம்மியமானவை. அங்கு
உறைபனிகள் நிறைய உண்டு. பனி விழையாட்டில் ஈடுபடும் உல்லாசிகள் இரண்டு அல்லது
மூன்று மணித்தியால பிரயாணத்தில் பிக்கினி, அரைக் காற்சட்டை சகிதம் மத்திய தரைக் கடலில் படகு சவாரி செய்யக்கூடிய
லெபனானின் நில அமைப்பு, வீரசிங்கத்துக்கு மிகவும்
பிடித்துக் கொண்டது.
அப்துல்லாவுடன் தொழில் நிமிர்த்தம், லெபனானிலுள்ள முக்கிய
விவசாய பண்ணைகளுக்கு அலுக்காது போய்வந்தார் வீரசிங்கம். இதற்கு வேறொரு உபரிக்
காரணமும் உண்டு. வீரசிங்கத்துக்கு புறொயிலர் கோழியை கண்ணிலும் காட்டப்படாது. ‘புறொயிலர்
கோழி நெருப்பிலை வாட்டித் தின்னத்தான் சரிவரும், யாழ்ப்பாண உறைப்புக் கறிக்குத் தோதுப்படாது’ என்பது அவர்
வாதம்.
சாப்பாட்டு விஷயங்களில், வீரசிங்கத்தாரின்
‘வீக்னஸ்ஸை’ அப்துல்லா விரைவில் புரிந்துகொண்டான். அவனது ஆராய்சி
செய்முறைகளுக்கும் ஆராய்சிக் கட்டுரை எழுதுவதற்கும் வீரசிங்கத்தின் உதவி தேவை.
இதனால் விவசாய பண்ணைகளுக்குப் போகும் பொழுதெல்லாம் நாட்டுச் சேவலும், வெள்ளாட்டு இறைச்சியும்
பொதிசெய்து, தயாராக இருக்குமாறு
பார்த்துக் கொண்டான். இப்படி ‘தாஜா’ செய்வது லெபனானியர்களின் இரத்தத்தில் ஊறிய
பழக்கம். தமக்கு ஏதாவது தேவையென்றால் லஞ்சம் கொடுப்பது தொடக்கம் எல்லா வகை
யுக்திகளையும் பிரயோகிப்பார்கள். இந்த வகையில் அப்துல்லா சாப்பாட்டு விஷயங்களில்
வீரசிங்கத்தை நன்றாகவே குளிர்வித்தான். இதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து
லெபனானில் தனியே இருப்பது வீரசிங்கத்துக்கு கஷ்டமாகத் தெரியவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வீரசிங்கத்துக்கு
ஓய்வுநாள். இளைஞன் ஒருவன் தன்னுடைய தந்தையுடன் அவரது வசிப்பிடத்துக்கு
வந்திருந்தான். இளைஞன் அட்சர சுத்தமாக ஆங்கிலம் பேசினான். தென் லெபனானின் புராதன
நகரமான சைடா (Saida) அருகே, பாரிய பசுமைக் கூடங்களில்
சேதன முறையில் தந்தையுடன் தான் விவசாயம் (Organic Farming) செய்வதாகச் சொன்னான். 2006ம் ஆண்டு நடைபெற்ற ‘இஸ்ரேல்-ஹிஸ்புல்லா’ யுத்தத்திலே, தன்னுடைய படிப்பு
குழம்பியதாகவும் மேலதிக தகவல் சொன்னான்.
‘இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளைப்
பாவிக்காமல் விளைவிக்கும் பொருள்களின் விலை, மிக அதிகமாக இருக்கும். லெபனானில் இவற்றுக்கு ‘கிராக்கி’ இருக்கிறதா?’ எனக்கேட்டு வீரசிங்கம்
கதையைத் துவங்கினார்.
‘போரின் விளைவுகளால் ‘கான்சர்’ உட்பட பல புதுப்புது வியாதிகள் இங்கு
பரவியுள்ளன. இதனால் என்ன விலை கொடுத்தாகிலும் இரசாயன பாதிப்பற்ற இயற்கை உணவுகளை
இங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள். உண்மையைச் சொன்னால் மக்களின் தேவைக்கேற்ப
எம்மால் இவற்றை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. இதனால்தான் இயற்கை முறை
‘இனவிருத்தி’ பற்றி அறிய,
அப்பா உங்களிடம்
வந்துள்ளார்’ என்றான் இளைஞன்.
‘ஆதிகாலம் தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கை மூலம்தான் தாவரங்கள் இனவிருத்தி
செய்யப்பட்டன. ஒரு தாவரத்தின் மகரந்த மணிகள் அதே இன, இன்னொரு தாவரத்தின் சூல்முட்டையுடன் இணையும்போது, புதிய இயல்புகள் கொண்ட
தாவரம் உருவாகிறது. இங்கு நடைபெறுவது இயற்கையான மரபணு கலப்பு. இதேவேளை மா, தோடை, எலுமிச்சை, மாதுளை போன்ற மரங்களில், ஒட்டுக் கன்றுகள் பற்றிக்
கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு வெவ்வேறு இயல்புகள் கொண்ட, ஒரேவகை தாவரத்தின்
பதியன்களை (கிளைகள்) விவசாயிகளே இணைத்து, இரண்டு மரங்களினதும் நல்ல குணங்களைக் கொண்ட புதிய ரகங்களை உருவாக்கி
விடுவார்கள். இங்கு மரபணு கலப்பு அல்லது மாற்றங்கள் ஏற்படுவதில்லை’.
‘சற்று விபரமாகச் சொல்லுங்கள் ஐயா. மரபணு என்றால் என்ன?’ இளைஞனின் தந்தை அதிகம்
படிக்காவிட்டாலும் பட்டறிவு கொன்டவர். விபரம் அறியும் ஆவலில் இதனைக் கேட்டார்.
‘ஒரு உயிர் அதன் சந்ததிக்குரிய இயல்புகளை, அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை, மரபணு என்கிறோம். இந்த மரபணு, தாய் தந்தையின் உருவ அமைப்புகளையும் குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு
கடத்துகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து
உயிர்களுக்கும் பொதுவானது’.
‘ஒரு குழந்தை பிறந்த உடன் அதைப் பார்ப்பவர்கள் ‘அப்பா மாதிரி மூக்கு, அம்மா மாதிரி காது’ என்று
சொல்வார்களே. இப்படி அப்பா மாதிரி, அம்மா மாதிரி, தாத்தா மாதிரி ஒரு
குழந்தை பிறக்க காரணமாக இருப்பது மரபணுக்களே’ என விளக்கம் சொல்லி, தந்தைக்கு விஷயத்தை
இலகுவாக்கினான் இளைஞன்.
இவர்கள் வரும்போது ஆட்டுப் பாலில் செய்யப்பட்ட
லெபனீஸ் சீஸ் கட்டிகளும்,
சுத்தமான ஒலிவ்
எண்ணையும், லெபனான் றொட்டியும்
கியூக்கம்பர், தக்காளியும் கொண்டு
வந்திருந்தார்கள். இது லெபனானியர்களுக்கே உரித்தானதொரு பண்பு. யாரையாவது
சந்திக்கச் சென்றால், வெறுங்கையுடன் செல்லக்
கூடாதென்பது இவர்களின் பொதுவான கலாசாரம்.
வீரசிங்கம் தன் பங்குக்கு இலங்கை தேயிலையில்
தேநீர் தயாரித்து வந்து, அவர்கள் முன்னமர்ந்தார்.
‘மரபணு மாற்ற தொழில் நுட்பமென்றால் என்ன?’ எனக் கேட்டு விட்ட இடத்தை நினைவுபடுத்தினார் தந்தை.
‘ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள இயல்புகளை (பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல், போன்றவை) ஒரு
தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை
‘ஜீன்’கள் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் மரபணுக்கள். ஓர் உயிரிலிருந்து நமக்கு
தேவையான இயல்புகளைக் கொண்ட மரபணுக்களை பிரித்து, வேறு ஒரு உயிருக்குச் செலுத்தி, அந்த உயிருக்கு புதிய
குணாதிசங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்ற தொழில்நுட்பம்’ என விளக்கம்
சொன்ன வீரசிங்கம், அவர்களின் ‘றெஸ்போன்ஸுக்கு’
காத்திராமல் தொடர்ந்தார்.
‘ஈரான், வடகொரியா, இந்தியா போன்ற நாடுகள்
அணு ஆயுத பரிசோதனை செய்த போது, அமெரிக்கா துள்ளிக் குதித்து அந்த நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதித்தது.
இந்தத் தடை அந்த நாடுகளுக்கு பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எனவே
அதன் காரணத்தை ஆராய்ந்த பன்னாட்டு முதலைகள், விவசாயம்தான் பல நாடுகளைக் காக்கிறது என்பதை கண்டு கொண்டார்கள். ‘ஒருவனை
பட்டினி போட்டு, உணவுக்காக அவன்
இன்னொருவனை சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டால், அவனை அடிமைப்படுத்திவிடலாம்’ என்ற சூக்குமம், அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இதனால்தான் இவர்கள், பல நாடுகளின் விவசாயத்தை
சீரழிக்கும் முயற்சியில் இறங்கினார்கள்’.
நிஜமாகவா..? இதைத்தான் பன்னாட்டு விதைவியாபார நிறுவனங்கள் செய்கிறார்களா?
‘ஆம். மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி, மரபணு மாற்றம்
செய்யப்பட்ட பல மலட்டு விதைகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த மலட்டு விதைகள் ஒரு
முறை மட்டுமே விளைச்சலைக் கொடுக்கும். அந்த வருட விளைச்சலில் விவசாயி சேகரித்த
விதைகளை அடுத்த போகம் விதைத்தால் அவை முளைக்காது. அதுமட்டுமல்ல, மலட்டு பயிர்களின்
மகரந்தம் மற்ற பயிர்களுக்கு சென்று அதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடந்தால், அந்தப் பயிர்களும், இதே போன்ற மலடான
விதைகளைத்தான் உற்பத்தி செய்யும்’.
‘என்ன சொல்கிறீர்கள்...?’
‘இந்த விதைகள் அமோக விளைச்சலைக் கொடுக்கும் என்றும், அதிக மகசூலைத் தரும்
என்றும் சொல்லப்படுவது ஒரளவு உண்மையென்றாலும், ஒருமுறை அந்த விதைகளைப் பாவித்து அமோக விளைச்சலைப் பெற்றால், அவற்றின் விதைகளைப்
பாவித்து அடுத்தபோகம் பயிர் செய்யமுடியாது. காரணம் இவை முளைக்கும் திறனற்றவை.
இதனால் விவசாயிகள் அனைவரும் விவசாய விதைகளுக்காக, பன்னாட்டுக் கம்பனிகளில் தங்கியிருக்க வேண்டும்’.
‘அப்படியா? என்ன அநியாயம் இது..!’
‘மான்சாண்டோ போன்ற விதை நிறுவனங்கள் தாங்கள் விற்கும் விதைகளில் Terminator என்ற தொழில் நுட்பத்தை
பயன்படுத்துகின்றன. இதனால் இந்த விதைகளிலிருந்து விளையும் தானியங்களிலிருந்து
பெறப்படும் விதைககைளில் கருமுளை இருக்காது.’
‘மலட்டு விதைகளை வாங்கி விவசாயம் செய்பவர்கள் எக்கேடு கெட்டாலும் போகட்டும்.
எங்களைப் போன்றவர்கள் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்யலாமல்லவா?’
‘இதில்தான் பெரும் சிக்கல் உள்ளது. உதாரணத்திற்கு, ஒருவர் பாரம்பரிய
முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அடுத்த வயலில், இன்னொருவர் மரபணு
மாற்றப்பட்ட கத்தரிக்காய் சாகுபடி செய்தால் பாரம்பரிய முறையில் விளைந்த
கத்தரிக்காய் விதைகளிலும்,
மரபணுமாற்றம்
நிகழ்துவிடும்’.
‘அதெப்படி...?’
‘மகரந்த சேர்க்கை மூலம் தான், கத்தரிப் பூ, கத்தரிக்காயாக
மாறமுடியும். மரபணு மாற்றப்பட்ட கத்தரி வயலில் இருந்து மகரந்த மணிகள், காற்று மூலம் அல்லது
தேனீக்கள் மூலம் பாரம்பரிய வயலுக்கு பரம்பி, மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இதனால் பாரம்பரிய வயலிலும் மரபணு மாற்றப்பட்ட
கத்தரிக்காய்கள் தான் உற்பத்தியாகும். ஒரு முறை இப்படி மரபணுக்கள் மாறிவிட்டால், அந்த மாற்றத்தை நீக்க
முடியாது.’
‘ஒட்டுமொத்த விவசாயிகளும் பன்னாட்டு கம்பனிகளின் மரபணு மாற்றப்பட்ட விதைகளை
வாங்க மறுத்தால்...?’
‘இப்படியான ஒரு எதிர்ப்பு நிலை இந்தியாவில் ஏற்பட்டது. விதை நிறுவனங்கள்
அசரவில்லை. பதிலாக, விவசாயிகளுக்கே அவர்கள்
‘செக்’ வைத்து ஆட்டத்தை துவங்கினார்கள்.’
‘எப்படி...?’
‘ஓரு கிராமத்தில் ஒருசில விவசாயிகளுக்கு மூளைச்சலவை செய்து, மரபணுமாற்றப்பட்ட விதைகளை
இலவசமாகக் கொடுத்து, விவசாயம் செய்வதற்கான
செலவையும் தருவதாக, சில வருடங்களுக்கு
ஒப்பந்தம் போடுவார்கள். அவர்களும் ஆங்காங்கே மரபணுமாற்றப்பட்ட விதைகளை விதைத்து
பயிர் செய்வார்கள். இவை விளைந்து பாரம்பரிய பயிர்களிலும் பார்க்க அதிக விளைச்சலைக்
கொடுக்கும். இதேவேளை இவர்களின் மரபணுமாற்றப்பட்ட பயிர்களிலுள்ள மகரந்தமணிகள், அடுத்த வயலுக்கு பரவி
பாரம்பரிய பயிர்களின் மரபணுவை மாற்றிவிடும். மொத்தத்தில் சில வருடங்களுக்குப் பின்னர், கிராமத்திலுள்ள எல்லா பயிர்களும் கரு முளைகளற்ற, மலட்டு விதைகளையே உற்பத்தி செய்யும். இந்த நிலையில், எல்லா விவசாயிகளும் விதை
தானியங்களுக்காக விதை நிறுவனங்களையே தங்கி இருக்கவேண்டும். அப்போது அவர்கள்
சொன்னதுதான் விலை.’
‘Terminator தொழில் நுட்பதத்தை பயன்படுத்தி உருவான மரபணுமாற்றப்பட்ட
பயிர்கள் வளர்ந்து, மலட்டு விதைகளை உற்பத்தி
செய்தால், விதை வியாபாரிகள் எப்படி
முளைக்கக்கூடிய விதைகளை உற்பத்தி செய்து விற்கிறார்கள்?’
இளைஞனின் இந்த சந்தேகமும் கேள்வியும்
நியாயமானதே.
‘இதுதான் அவர்களது திறமை. இந்த சூக்குமம் வெளியே தெரிந்தால் அவர்களது வியாபாரம்
படுத்துவிடும். இதை அவர்கள் படு இரகசியமாக வைத்திருப்பார்கள்.
‘சரி...!’
‘பலவருட ஆராச்சியின் பின்னர் விருத்தி செய்யப்பட்ட தாவரங்கள் அவர்களிடம்
இருக்கும். அவற்றை மூடிய வயலில் விதைத்து, கட்டுப்பாடான முறையில் மகரந்தச் சேர்க்கை நடத்துவார்கள். அந்தப் பயிர்கள்
‘முளைக்கக்கூடிய’ மலட்டு விதைகளைக் கொடுக்கும். அந்த விதைகளையே அவர்கள்
விற்பார்கள்.’
‘ஆனால் அதில் விளைந்த விதையை, அடுத்த போகம் விவசாயிகள் விதைத்தால் அவை முளைக்காது, அப்படித்தானே...? கிட்டத்தட்ட F1, F2 கலப்பின விதைகளைப்போல, என்று சொல்லுங்களேன்’
‘இதில் ஒரு சிறிய திருத்தம். F1, F2 கலப்பின விதைகள் மலட்டு விதைகளல்ல. இந்த விதைகள் அடுத்த போகமும் முளைக்கும்.
ஆனால் இவை F3, F4 என மேலும் கலப்படைவதால்
முதல்போக விளைச்சலைக் கொடுக்காது. இதனால் இதை விதைத்தவர்களும், விதை தானியங்களுக்காக
விதை நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும்.’
நேரம் நான்கு மணியாகி விட்டது. பல விடயங்களைப்
பேசிய பின்னர், வசதியான ஒரு நாள் லெபனான்
நடன நிகழ்ச்சிக்கு போக அழைப்பு விடுத்து அவர்கள் விடை பெற்றார்கள்.
உண்மைதான். லெபனானியர்களின் நடனம் மிக அழகானது.
அவர்களின் ‘பெலி டான்ஸ்சை (Belly Dance) காண கோடி கண்கள்
வேண்டும். அவர்களின் இசையும் பக்க வாத்தியங்களும் மனதைக் கிறங்க வைக்கும். ஆனால், இன்றிரவு லெபனான்
மலைகளில் வளரும் தாவரங்கள் பற்றிய விபரங்களைத் தரவேற்றி நாளை அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டும். அத்துடன் மனைவியும் தொலை பேசியில் தொடர்பு கொள்வாள்.
கொழுப்புச் சாப்பாட்டை கையாலும் தொடுவதில்லை
என்று சத்தியம் செய்யாத குறையாக அவளுக்கு கதை சொல்ல வேண்டும்.
இத்தகைய அலைக்கழிவுகளிலிருந்து தன்னை
விடுவித்துக் கொள்ள, மாலை நேர தூக்கத்துக்கு
ஆயத்தமானர் வீரசிங்கம்.
ஆசி கந்தராஜா (2015)
No comments:
Post a Comment