Saturday 30 January 2021

 கிழக்கும் மேற்கும்

ஆசி கந்தராஜா

 

1: சோமநாதர் தாத்தாவும் பொதுவுடமை வாதமும்

ண்பன் ஒருவன் தன்னை ‘கம்யூனிஸ்ற்’ எனச் சொல்லித் திரிந்தான். அது அவன் வாலிப முறுக்கோடு திரிந்த காலம். பின்பு குடும்பம், பிள்ளைகள், பணம் என்று வசதிகள் வந்தபின், ஒப்புக்கு வெளியே பொதுவுடைமை வாதம் பேசித்திரிந்தாலும், வீட்டில் அவன் சைவப்பழம்.

கம்யூனிச கொள்கைகளின் கேள்வி ஞானத்தில், பொதுவுடைமை சித்தாந்தம் பற்றி முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதைக் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவிதத்தன’த்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று, அந்த நண்பனைக் காணும் நேரங்களில் ஞாபகத்துக்கு வரும்.

‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப்பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார். சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.

எனது இளமைப்பருவத்தில் ஏழு வருடங்கள் சோசலிஷ நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கிழக்கு ஜேர்மனியிலும், பின்பு ஜனநாயக நாடாக உரிமை பாராட்டிக் கொண்டு, முதலாளித்துவ பொருளதாரத்தைப் பயின்ற மேற்கு ஜேர்மனியில் ஆறு ஆண்டுகளும் படித்திருக்கிறேன். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் ஜேர்மனி பிளவுபட்டதால் தோன்றிய இருநாடுகளும், ஒன்றுக்கொன்று பரமவிரோதம் பாராட்டிய காலம் அது!

எழுபதுகளில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இரண்டாம் முறையாக, இடதுசாரிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பதவிக்கு வந்த பொழுது, ஸ்ரீலங்காவை ‘சோசலிஷ ஜனநாயகக் குடியரசாக’ பிரகடனப்படுத்தியிருந்தார். அந்தக் காலங்களில் கம்யூனிச சித்தாந்தங்களைப் பரப்பும் நோக்கில் சோவியத் சார்பு நாடுகள் தமது நாடுகளில் கல்வி கற்க, புலமைப்பரிசில்களை (Scholarships) வளர்முக நாடுகளுக்கு வாரி இறைந்தன. சுதந்திரம் பெற்ற கொங்கோ நாட்டின் முதலாவது மக்கள் தலைவராக உயர்ந்து, முதலாளித்துவ நாடுகளின் சதியினால் மரணமடைந்த, பற்றிக் லுமும்பாவின் நினைவாக ‘லுமும்பா பல்கலைக்கழகம்’ இதற்காகவே அன்றைய சோவியத் யூனியனில் நிறுவப்பட்டது. இதே நடைமுறையைப் பின்பற்றி சீனாவும், மாவோ சிந்தனையைப் பரப்பவென தமது நாட்டுக்கு மாணாக்கர்களை வரவழைத்தது தனிக்கதை.

தங்கடை சமயத்தைப் பரப்ப சோத்துக்கும் சீலைக்கும் ஆசைகாட்டி அந்தக் காலங்களிலே, வேதப்பள்ளிக் கூடங்களில் வாத்தியார் வேலை குடுத்தாங்களே? அதுமாதிரித்தான் இதுவும்’ என தமிழரசுதம்பித்துரை அண்ணர் அப்போது இதனை அட்டகாசமாக விமர்சித்தார். அவர் பள்ளிக்கூடத்தில் பெரிதாக படித்துக் கிழிக்காவிட்டாலும், அந்தக்காலத்து தமிழரசுக் கட்சி அரசியலை கரைத்துக் குடித்தவர். அவரது பேச்சில் எப்போதும் நகைச்சுவையும் நளினமும் இருக்கும். வேப்பமரத்தடிச் சந்தியிலே அவர் நின்று அரசியல் பேசும்போது அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமிருக்கும். அவருடைய பேச்சுக்கு ஒருவகை காந்த சக்தி இருந்தது. தம்பித்துரை அண்ணரை மொஸ்கோவுக்கு கூப்பிட்டு லுமும்பா பல்கலைக்கழகம் கம்யூனிசம் சொல்லிக் குடுத் திருந்தால் பின்நாளில் அவர் சிறந்தவொரு பொதுவுடமை பிரசாரகராக மாறியிருக்கக்கூடும். ஆனால் லுமும்பா பல்கலைக்கழகத்தின் தவப்பேறு அவ்வளவுதான். புலமைப்பரிசில் பெற்று பட்டப்படிப்பு அன்றேல் பட்டப்பின் படிப்புப் படிக்கச் செல்லும் மாணவர்கள் தாம் படிக்கும் கல்வித்துறையுடன் கம்யூனிச பொதுவுடமைச் சித்தாந்தங்களையும் அந்தந்த நாட்டு மொழயிலேயே கற்று சித்தி பெறவேண்டும். இந்த வகையில் கிழக்கு ஜேர்மனியில் கல்வி கற்க 1974ம் ஆண்டு நானும் Dresden பல்கலைக்கழகம் சென்றேன். அந்தக்காலம் இன்றைய காலம் போலல்ல. பணம் படைத்தவர்கள், அல்லது படிப்பதற்கு புலமைப் பரிசில்ள் பெற்றவர்கள் மட்டும் வெளிநாடு சென்றார்கள். பிளேன் ஏறுவதென்றால், ‘கோட்சூட் போட்டு ரை கட்டித்தான் பிளேன் ஏற வேண்டுமென்பது போன்ற பல எழுதாத விதிமுறைகள், நடைமுறையில் இருந்த காலம் அது!

உணவத் தேவையை நிறைவு செய்ய, சுதேசிய உணவு உற்பத்தியை ஊக்குவித்தல் வேண்டும் என ஸ்ரீமாவோ அரசு பிரகடனம் செய்தது. இந்த ஊக்குவித்தல் உணவு இறக்குமதியைத் தடை செய்வதன் மூலம் தீவிரப்படுத்தலாம் என்பதை அரசு தன் நிலைப்பாடாக ஏற்றது. மதிய உணவுக்கு மரவெள்ளிக் கிழங்கை அவித்து உண்பது, தேநீரை பனங்கட்டியைக் கடித்துக்கொண்டு பருகுவது, போன்ற பழக்கங்கள் அந்த உணவு நெருக்கடி காலத்திலே துவங்கின. தேநீர் கடைகளிலே ‘பிளேன் டீ’க்குப் பதிலாக ‘காட்டை’ குடித்ததும் இந்த எழுபதுகளிலேதான். உப உணவுப் பொருள்களுக்கு இறக்குமதித் தடை வந்ததினால், யாழ்ப்பாண விவசாயிகள் காசுப்பயிராக அதுவரை பயிர் செய்த புகையிலைக்கு பதிலாக மிளகாய், வெங்காயம் போன்றவற்றைப் பெருமளவு பயிர் செய்தார்கள். இந்த விஷயத்திலே யாழப்பாணத்தார் மிகவும் சுழியன்களாகச் செயல்ப்பட்டதினால், விவசாயிகள் மத்தியிலே எழுபதாம் ஆண்டுகளில் புதிய பணக்கார வர்க்கம் ஒன்று உருவாகியது. மிளகாய் விற்ற காசில் மகன் கல்வீடும் கட்டி, உழவு மிசினும் வாங்கிய புழுகத்தில் எங்கள் ஊர் சரவணைக் கிழவர் ‘அவள் ஒரு சீமாட்டி’ என ஸ்ரீமாவை ஊரெல்லாம் புகழ்ந்து திரிந்ததும் ஞாபகத்திற்கு வருகிறது. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுபதுகள்வரை அங்கேயே கல்வி பயின்ற நான் வடபகுதியில் விளைந்த மா, பலா, வாழைப்பழங்களையே அதிகமாகச் சாப்பிட்டிருக்கிறேன். கொய்யாப்பழம், நாவப்பழம், விளாம்பழம் மற்றும் தமிழ்நாட்டில் சீதாப்பழம் என அழைக்கப்படும் அன்னமுன்னாப்பழம் ஆகியனவற்றையும் சுவைத்து மகிழ்ந்துள்ளேன். பருவ காலங்களிலே சுண்டில் அளந்து விக்கப்படும் ஈச்சம்பழமும், முறுகண்டிப் பகுதியிலிருந்து வரும் பாலைப்பழமும் கிடைக்கும். அப்பிள் அறுபதாம் எழுபதாம் ஆண்டுக்காலப் பகுதியில் யாழப்பாணத்தில் விளையவில்லை. அதன் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது. தோலகட்டி என்னும் இடத்தில் கத்தோலிக்க துறவிகள் திராட்சை பயிரிட்டதாக பேசிக்கொண்டார்கள். அதன் விளைச்சல் பழமாக சந்தைக்கு வரவில்லை. ஆனால் தோலகட்டி வைன் அப்போது யாழ்ப்பாணத்தில் அரிதாக கிடைத்தது. எண்பதாம் ஆண்டுகளிலேயே, கோண்டாவில் பகுதிகளில், யாழ்ப்பாண விவசாயிகள் பெருமளவு திராட்சை பயிரிடத் துவங்கினார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு லீவில் வருபவர்கள், ரிசூ பேப்பர் சத்திய அப்பிள் பழங்களையும் திராட்சைப் பழங்களையும் தவறாது வாங்கி வருவார்கள் என்றும், இவைகளின் ஒரு பகுதி சொந்தபந்தங்களுக்கும் அயலுக்கும் பகிர்ந்து கொடுப்பது அன்றைய யாழ்ப்பாணப் பழக்கம் என்றும் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனது முதல் பறப்பு ரூஷ்ய ‘ஏரோபுளொட்’ விமானத்தில்!

ஜேர்மனிக்கு பறந்த அந்த முதல் பறப்பு என்றும் மனதில் நிற்கும் அநுபவமாகும். ரிக்கற்றை ஜேர்மன் அரசே அனுப்பியிருந்தது. அதுவரை பஸ் ரிக்கற், றெயின் ரிக்கற்றை மாத்திரம் பார்த்து பழகிய எனக்கு, விமானப் பறப்புக்கான ரிக்கற் என, ஒரு புத்தகத்தை தந்தது புதினமாக இருந்தது. இப்பொழுது அது Electronic ticket ஆகமாறிவிட்டது தனிக்கதை. விமானத்தில் மதிய உணவுடன் ‘டெசெட்டாக’ ஒரு பச்சை அப்பிள் தந்தார்கள். அன்றுதான் முதன்முதலில் எனது இருபத்திநாலாவது வயதில் ஒரு அப்பிள் சாப்பிட்டேன். பின்பு நான் பல்கலைக்கழகங்களில் அப்பிள் இனவிருத்திக்காக, மரபணு மாற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது நான் முதலில் சுவைத்த பச்சை அப்பிளை வியப்புடன் நினைத்துக்கொள்வேன். இவையாவும் இப்பொழுது சிரிப்புக்குரியனவாக இருந்தாலும், எழுபதாம் ஆண்டுகளின் முற்பகுதியில், இலங்கையின் உணவுப் பழக்கத்தில் அப்பிள் இடம்பெறவேயில்லை என்பது மகத்தான உண்மை.

‘Das Kapital (The Capital)’ என்னும் நூலை கார்ல்மார்க்ஸ் தன் தாய்மொழியாகிய ஜேர்மன் மொழியில் எழுதினார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புச் சம்பந்தமாக இதுவரை முன் மொழியப்படாத புதிய சித்தாந்தத்தை அது முன் வைத்தது. கம்யூனிச பொருளாதாரவாதத்தின் விவிலிய நூல் இதுதான். இதுகுறித்த பல்வேறு விளக்கங்களை கார்ல்மார்க்ஸ் எங்கிள்ஸ் போன்ற மேதைகள் எழுதிய கருத்துச் சாரங்களை, நான் கல்வி கற்ற தாவர தொழில் நுட்பத்துறையுடன் ஜேர்மன் மொழியிலேயே கல்வி கற்றுத் தேறும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

மரங்களைப் பற்றிப் படிக்க, ஏன்டா தம்பி பதின்மூன்று வருஷம்…?’

நான் ஜேர்மனியில் இருந்து ஊருக்கு லீவில் போகும் போதெல்லாம் பக்கத்துவீட்டு சோமநாதர் தாத்தா இப்படிக் கேட்பார். எதுவும் படிக்காமல், தாங்கள் புகையிலை, மிளகாய் வெங்காயம் நட்டு வளர்த்து நல்ல விலைக்கு விற்கவில்லையோ என்பது அவர்வாதம். கார்த்திகை விளக்கீட்டை ஒட்டி சோமநாதர் தாத்தா மிளகாய் நடுவார். மார்கழி பனிக்குளிரையும் பார்க்காமல், விடிய நாலுமணிக்கு எழுந்து கிணற்றில் தண்ணீர் அள்ளி மிளகாய் கன்றுகளுக்கு ஊற்றுவார். பனை ஓலையால் செய்யப்பட்ட ‘பட்டை’ தண்ணீர் ஊற்றப்பயன்படும். ஒருகையில் பட்டையும் மறுகையில் வாளியுமாக தோட்டத்தில் தண்ணீர் ஊற்றுவது ஒரு தனிக்கலை. பட்டையில் இருக்கும் தண்ணீர் முடிந்தவுடன் வாளியில் உள்ள தண்ணீரை பட்டைக்கு மாற்றி பட்டையால் மண்ணில் குழி விழாது தண்ணீர் ஊற்ற வேண்டும். தாத்தாவுடன் அதிகாலையில் தண்ணீர் ஊற்றப்போய் ‘ரெக்னிக்’ சரியாக பிடிபடாத நிலையில் அவரது பனை ஓலைப் பட்டையை பல தடவை உடைத்திருக்கிறேன். இதற்காக அவர் என்றைக்குமே என்னைக் கோவித்தது கிடையாது. உடைந்த இடத்தில் தார் பூசி அடுத்த நாள் பட்டையை சரி செய்து விடுவார். பட்டை செய்வது லேசுப்பட்ட விஷயமில்லை. பனம் குருத்தோலையை காயவைத்து, பின்னர் தண்ணீரில் ஊற வைத்து, அரை வட்ட வடிவில் பட்டை கோலி, நடுவில் பிடியும் வைக்க வேண்டும். பட்டையை பாவித்து முன்னுக்கு பின்னான சிறு விசுக்கலுடன், தண்ணி வார்த்தால் மண்ணில் குழிவிழாதது மட்டுமல்ல கன்றுகளும் முறியாது. இருப்பினும் இந்த தண்ணி வார்ப்பு முறை யாழ்ப்பாணத்தில் இப்போது அருகிவிட்டது. மிளகாய் கன்றுகள் வளர்ந்து பத்து கணுக்கள் விடும்போது தைப்பொங்கல் வந்துவிடும். சோமநாதர் தாத்தா தண்ணீர் வார்ப்பதை நிறுத்தி விடுவார். அந்தக்காலம் அவரது பொங்கல் விடுமுறையும்கூட. மாட்டுப்பொங்கல் முடிந்து இருவாரம் கழித்து கன்றுகள் நன்கு வாடியவுடன், மண்வெட்டியால் கொத்தி (யாழ்ப்பாணத்தில் இதை சாறுதல் என்பார்கள்), பாத்திதட்டி தண்ணீர் பாச்சுவார். ஒருவாரத்தில் மிளகாய் கன்றுகள் பூக்கத் துவங்கும். வாடவிட்டு தண்ணி விட்டால் பூக்கும் என்பது அவரது வியாக்கியானம்.

நமது முன்னோர்கள் பாவித்த விவசாய செய்முறைகளில் பாரிய விஞ்ஞானத்தத்துவங்கள் பொதிந்திருந்ததை நான் பின்னாளில் புரிந்துகொண்டேன். சோமநாதர் தாத்தாவின் தாவர உடற்தொழில் (Plant-Physiology) தத்துவங்களை நினைத்து, பல்கலைக் கழகங்களில் விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது வியந்திருக்கிறேன். தாவரங்கள் வாடுவதற்கும் பூப்பதற்கும் இடையிலான தாவர உடற்தொழில் தத்துவங்களை விஞ்ஞான மாநாடொன்றில் நான் ஆராய்ச்சி கட்டுரையாக சமர்ப்பித்து பரிசு பெற்றபோது சோமநாதர் தாத்தாவை கனிவுடன் நினைத்துக்கொண்டேன். கிராமத்தில் எல்லோரையும் சமமாக நடத்திய நல்ல மனிதர் சோமநாதர் தாத்தா. எல்லோரும் வாழவேண்டும் என நினைத்து மனிதநேயத்துடன் வாழ்ந்தவர். தன்னை கொம்யுனிஸ்ற் என்று அடையாளப்படுத்தாது வாழந்த யாழப்பாண மண்ணின் அசலான மைந்தன். ஏட்டிலே கற்றுத்தேறுவதல்ல மனிதநேயம். அது மனித மனங்களின் அருட்சுரப்பிலே தோன்றுவது. இதற்கு சோமநாதர் தாத்தா வாழ்ந்த வாழ்க்கையே உதாரணம்.

சோமநாதர் தாத்தா போன்று, பட்டறிவால் விஞ்ஞானிகளாகவும் பொதுவுடமைவாதிகளாகவும் இன்னும் சிலரேனும் எமது கிராமங்களில் வாழ்வதனால்தான் யாழ்ப்பாணத்தில் ஒரு கரண்டி எண்ணையும் பஞ்சும் கொண்டு போராட்ட காலங்களில் ‘சிக்கன விளக்குகள்’ வடிவமைக்கப்பட்டனவோ?

 

2 அடுத்தவன் காணியும் பங்குக் கிணறும்!

இரண்டாவது உலக மகாயுத்தம்!

மார்ச் மாதம் 15ம் திகதி 1939ம் ஆண்டு, செக்கோ சிலவாக்கியா மீதும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாந் திகதி போலந்து மீதும் அடொல்வ் ஹிட்லர் படை யெடுத்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது. ஆறு வருடங்கள் நடந்த கொடூர யுத்தம் அது. ஜேர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ‘அச்சு நாடுகள்’ அணியிலே இணைந்துகொண்டன. இதற்கு எதிரான அணியாக ‘நேச நாடுகள்’ என்கிற அணி அமைக்கப் பட்டது. பிரித்தானியாவும் அதன் குடியேற்ற நாடுகளும், பிரான்சும் இந்த அணியில் இணைந்துகொண்டன. நேச நாடுகள் அணியினை, அமெரிக்கா இணைந்து பலப்படுத்தியது. ஈற்றிலே சோவியத் ரூஷ்யாவும் இந்த அணியிலே இணைந்தது. குடியேற்ற நாடுகள் தனிநாடுகளாகக் கணக்கெடுக்கப் படவில்லை. எனவே பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், ரூஷ்யா ஆகிய நான்குமே நேச நாடுகள் மீது நடாத்திய படையெடுப்பால் 1945ம் ஆண்டு யுத்தம் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. ஹிட்லர் படை தோல்வியைத் தழுவ, நான்கு நாடுகளும் பொட்ஸ்டம் (Potsdam) என்ற இடத்தில் கூடி, உடன்படிக்கையொன்றின் மூலம் ஜேர்மனியை நான்காக பங்கு போட்டுக்கொண்டன. யுத்த இடிபாடுகளையும் சீரழிவுகளையும் செப்பனிடும் வேலை 1949ம் ஆண்டுவரை நடந்தன. உடைந்த கட்டிடங் களைத் திருத்துவதற்காகவும், வீதிகளைச் செப்பனிடு வதற்காகவும் துருக்கியிலிருந்து கூலிகளை வரவழைத்தார்கள். இரண்டு தலைமுறைகள் கடந்த பின்பும் அவர்களில் பெரும்பாலானோர் இன்றும் ஜேர்மனியில் கீழ்த்தட்டு வாழ்வு வாழ்கிறார்கள் என்பது தனிக்கதை. முதலாளித்துவ பொருளதார அமைப்பினை முன்னெடுத்து வாழும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் பெரியண்ணர் களால் கம்யூனிச சித்தாங்களில் ஊறிய ரூஷ்யாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. பெரியண்ணர்கள் ஆதிக்கம் செலுத்தப்பார்த்தார்கள். விவசாய நாடாக இருந்த ரூஷ்யாவை தொழில்வள நாடாக மாற்றுவதிலே, இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த இருபம்பு மனிதன் ஸ்டாலினிடம் பெரியண்ணார்களின் பூச்சாண்டி பலிக்கவில்லை. வேறு வழியில்லை. தமது பகுதிகளை ஒன்று சேர்த்து மே மாதம் 1949ம் ஆண்டு ஜேர்மன் ‘சமஷ்டிக் குடியரசு’ என்ற பெயரில் மேற்கு ஜேர்மனி என்னும் நாட்டை உருவாக்கினார்கள். நம்மூர் பாஷயில் செல்வதானால் மேற்கு ஜேர்மனி, மூன்று பங்காளிகளுக்குச் சொந்தமான சொரியல் காணியாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க – பிரித்தானிய – பிரான்ஸ் அரசுகள் தங்கள் எல்லைகளை தெளிவாகவும் கச்சிதமாகவும் வரைந்து உறுதி எழுதிக்கொண்டன. பார்த்தது சோவியத் ரஷ்யா, அதே ஆண்டு ஏழாம் திகதி ஒக்டோபர் மாதம் தனது கால் பங்கு பிரதேசத்தை ‘ஜேர்மன் ஜனநாயகக் குடியரசாக பிரகடனப்படுத்திக் கொண்டது. இதுதான் கிழக்கு ஜேர்மனி என மேற்குலகால் அழைக்கப்பட்ட பிரதேசமாகும். கிழக்கு ஜேர்மனி பின்னர் தன்னை 1955ம் ஆண்டு தன்னாதிக்கம் கொண்ட தனிநாடாகப் பிரகடனப்படுத்திய போதும், பொட்ஸ்டம் உடன்படிக்கையின்படி மட்டுமல்லாமல், பாதுகாப்பு நலன்கள் கருதியும் ரஷ்யாவின் மேலாதிக்கத்தை ஏற்று நடக்க வேண்டியதாயிற்று. சோவியத் ரஷ்யா தனது ஆதிக்கத்துடன் வந்த பகுதியைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தும் என பெரியண்ணர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பங்காளிகள் சொத்தைப் பங்குபோட்டபின் வேண்டாத பங்காளிக்கு தொல்லை கொடுப்பதில்லையா? அதேபோல் ஜேர்மனியிலும் நடந்தது. கிழக்கு ஜேர்மனியை உய்ய விடக்கூடாது என தீர்மானித்து எப்படித் தொல்லை கொடுக்கலாம் என ஆராயத்துவங்கினார்கள். அவர்களின் கண்ணில்பட்டது ஜேர்மனியின் தலைநகராயிருந்த பேர்ளின். அதுவே அடொல்வ் ஹிட்லரின் காலத்தில் மட்டுமல்ல, பன்னெடுங்காலமாக ஜேர்மன் நாட்டின் தலைநகராக பெருமை பெற்றிருந்தது. பங்காளிகள் நால்வரும் ஜேர்மனியை தமக்குள் பங்கு போடும்போது, பேர்ளின் நகரம் சோவியத் ரஷ் ஆதிக்கத்துக்கு விடப்பட்ட கிழக்குப் பகுதியிலே இருந்தது. பழைமை வாய்ந்த அந்த பேர்ளின் நகரை சோவியத் ஆதிக்கத்துக்கு விட்டுவிட பெரியண்ணர்கள் விரும்பவில்லை. சொரியல் காணியிலுள்ள பொதுக்கிணறு பங்கு பிரிக்கும்போது அடுத்தவன் பங்குக்குள் வந்துவிட்டால், கிணற்றில் பங்கும் வழிவாய்க்கால் பாதையும் வேண்டுமென ஊரில் அடம்பிடிப்பார்கள். அதேபோல், தலைநகராக இருந்த பேர்ளின் நகரமும் நான்காகப் பிரிக்கவேண்டுமென பெரியண்ணர்கள் மூவரும் வாதாடிப் பெற்றுக்கொண்டார்கள். பல்வேறு நிலைப்பாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக, இதனை ஏற்றுக்கொள்வது சோவியத் ரஷ்யாவுக்கு தவிர்க்க முடியாததாயிற்று. சோவியத் ரஷ்யாவின் கால்பங்கு கிழக்கு பேர்ளினாகி ‘பேர்ளின்’ என்ற பெயரில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (கிழக்கு ஜேர்மனி) தலைநகராகியது. கிழக்கு பேர்ளின் என்றில்லாமல் ‘பேர்ளின்’ என்ற பெயரில், அது கிழக்கு ஜேர்மனியின் தலைநகராகத் தொடருதல் சோவியத் ரஷ்யாவின் பெருமைக்கு உகந்தது என சோவியத் ஆட்சியாளர் கருதினார்கள்.

அடுத்தவன் காணியின் நடுவே நமக்கொரு சிறுதுண்டு நிலம்!

இதன்மூலமே நிறையவே பங்காளிக்கு தொல்லை கொடுக்கலாம். மேற்கு பேர்ளின் நகரத்தை கிழக்கு ஜேர்மனிக்குள் வைத்திருப்பது பரம எதிரியை நடுவீட்டுக்குள் வைத்திருப்பது போன்ற அவஸ்தையை ஏற்படுத்தும் என்பது, நியாயமான எதிர்பார்ப்பாகும். கிழக்கு ஜேர்மனியில் சோவியத் ரஷ்யாவின் நண்பனாய் ஆட்சியில் அமர்ந்த சோசலிஷ ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கும் முதல்படியாக மேற்கு பேர்ளின் நகரத்தில் ஆடம்பர கார்களும், கவர்ச்சிகரமான நுகர்பொருள்களும் குவிக்கப்பட்டன. சோசலிஷ ஆட்சியில் ஆடம்பரத்துக்கு இடமில்லை. ஒவ்வொருவரின் தேவைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற ஊதியம் என்பதும், எல்லமே எல்லோருக்கும் சொந்தமானது என்பதும் சோசலிஷம் பற்றிய பாமரத் தனமான விளக்கம்.

சோறும் சீலையும் குறையாமல் இருந்தால் ஒரு மனிதனுக்கு வேறை என்ன வேணும்…,’ என்று நம்மூர் தம்பித்துரை அண்ணர் சோலிஷத்தை இலகுவாக விளக்கினார். ஆனால் மனித மனம் இயல்பாக ஆடம்பரப் பொருள்களுக்கு அங்கலாய்க்கும் என சரியாகவே மேற்குலக முதலாளிகள் புரிந்து வைத்திருந்தார்கள். வசதியான வாழ்வு தேடிய மக்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு பேர்ளின் நகரத்துக்கு தப்பியோடத் துவங்கினார்கள். ‘இது நம் ஆட்சிக்கு சரிப்பட்டு வராது’ என்று எண்ணிய ரூஷ்ய சார்பு கிழக்கு ஜேர்மன் அரசு, 13ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1961ம் ஆண்டு இரவோடிரவாக மேற்கு பேர்ளின் நகரத்தைச் சுற்றி உயர்ந்த மதில் சுவரை எழுப்பியது. அத்துடன் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளின் எல்லைகளுக்கும் கடுங்காவல் போட்டது. கட்டுக்காவலையும் மீறி பாய்ந்தோடிய கிழக்கு ஜேர்மன் மக்களை குருவி சுடுவது போல கிழக்கு ஜேர்மனியின் காவல் படைகள் சுட்டு வீழ்த்துவதாய் பெரியண்ணர்கள் பிரசாரம் செய்தார்கள். இது, கிழக்கு ஜேர்மனியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த உதவியது.

‘மேற்கு பேர்ளின் நகரம் ஒரு திறந்த வெளி மறியல் சாலைபோல் ஆக்கப்பட்டுவிட்டது’ எனக் கூப்பாடு போட்டது மேற்கு ஜேர்மன் முதலாளித்துவ அரசு.

மேற்கு பேர்ளின் நகர மக்கள் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல உரிமை உண்டு’ என வாதிட்டது அமெரிக்க, பிரித்தானனிய, பிரான்ஸ் அரசுகள்.

இந்த வாதத்தினை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டது. இதனைத் தீர்க்க இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, ஆகாய மார்க்கமாக விமானத்தில் செல்ல வேண்டும். அல்லது மேற்கு பேர்ளின் நகரத்தில் இருந்து மேற்கு ஜேர்மனிக்கு செல்ல கிழக்கு ஜேர்மனியின் தரை வழிப்பாதையைக் கடந்து செல்ல வேண்டும். இதற்கு பொட்ஸ்டம் உடன்படிக்கை இடம் கொடுக்கும். இது இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான சமாதான உடன்படிக்கை காலத்தில் (2002), யாழ்ப்பாண மக்களின் யாழ்ப்பாணம்-கொழும்பு பயணம் போன்றதுதான். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 பாதையூடாக வன்னி நிலப்பரப்பை கடந்து கொழும்பு செல்ல வேண்டும். அல்லது விமானத்தில் பறக்க வேண்டும். ‘யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புபோக, முகமாலையில் ஆமியும் ‘பெடியளும்’ செக்கிங், வன்னியை கடந்த பிறகு மாங்குளத்திலே இன்னுமொரு செக்கிங்’ என சமாதான உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் தனது யாழ்ப்பாண – கொழும்பு சொகுசு பஸ் பயணத்தைப் பற்றி வேப்பமரத்தடியிலை லெக்சர் அடிச்சுக் கொண்டிருந்த தம்பித்துரை அண்ணரிடம், ‘மாங்குளம் செக்கிங் முடிந்து ‘பெடியளின்’  ஆதிக்கத்திலிருந்த வன்னிக்கு வந்த சிங்களவன் முகமாலையை கடந்து யாழ்ப்பாணம் வராமல், வன்னிக்கை உளவறிய நிண்டிட்டால் என்னண்ணை செய்யிறது? எனக்கேட்டு அவரது வாயைக் கிளறினேன். வயதாகிவிட்ட நிலையில், பலவருடங்களின்பின் என்னைக் கண்டது தம்பித்துரை அண்ணாருக்கு மிகுந்த சந்தோசம். இருப்பினும் எனது கேள்வி அவரை கோபமூட்டவே உடம்பு இலேசாக நடுங்கியது. தமிழரசு கட்சியை அவர் எவ்வளவு ஆதரித்தாரோ அதற்கும் மேலாக அவர் ‘பெடியளை’ ஆதரிப்பது அவரின் பேச்சில் தெரிந்தது.

என்ன தம்பி விசர் கதை கதைக்கிறாய்’ வன்னிக்கு உள்ளடேக்கை பெடியள் மாங்குளத்திலே நேரத்தை குறிப்பாங்கள். வாறவர் அநுமதியில்லாமல் வன்னிக்கை அங்கை இங்கை சுத்தி திரிஞ்சால் துலைஞ்சுது. முகமாலை சோதனைச் சாவடிக்கு அவர் வாற நேரத்தை வெச்சு பிடிக்கலாடிமெல்லே. முகமாலைக்கு ஆள்வராட்டி வன்னிக்கை தான் ஆள் நிக்குது எண்டு தேடிப்பிடிச்சுப் போடுவாங்கள்’ என அபிநயத்துடன் விளக்கம் சொன்னதுடன், நீ இவ்வளவு படிச்சும் ஒரு பிரயோசனமுமில்லை என்ற தோரணையில் என்னைப் பார்த்தார்.

இதே நிலைதான் அக்காலத்தில் பிளவுபட்டிருந்த ஜேர்மனியிலும் நிலவியது.

மேற்கு பேர்ளினில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையர் நாடான மேற்கு ஜேர்மனிக்கு செல்ல, முகமாலை, மாங்குளம் சோதனைச்சாவடி போன்று, பேர்ளின் எல்லைச் சோதனை சாவடியும், கிழக்கு – மேற்கு எல்லைச் சோதனைகளையும் இருந்தன.

1961ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனி உருவாக்கிய இந்த நடைமுறையைத் தான், புலிகளும் ஸ்ரீலங்கா அரசும் சமாதான உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் பின்பற்றியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிய ஒரு சந்தர்ப்பம் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

2004ம் ஆண்டில் என் மகளுக்கு நான் பிறந்து மண் அளைந்த கைதடிக் கிராமத்தைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றிருந்தேன். என் பிள்ளைகளுள் அவளே அவுஸ்திரேலியாக்காரியாக, அவுஸ்திரேலியாவிலேயே பிறந்தவள். தன் தாத்தாக்களும் பாட்டிகளும் வாழ்ந்த அந்தக் கிராமத்தைப் பற்றிய அநேக கற்பனைகளிலும் கனவுகளிலும் வாழ்ந்தவள். அவளுடைய இந்தக் கனவுகளை நிறைவேற்ற மேற்கொண்ட பயணம் இது. மாங்குளம், முகமாலை ஆகிய இரண்டு இடங்களிலே சோதனைச் சாவடிகளைத் தாண்டிய அநுபவத்தை வைத்துக்கொண்டு, அப்பா வன்னி என்பது ஸ்ரீலங்காவைச் சேராத ஒரு தனிநாடா…? என்று கேட்டாள்.

ஏன், அப்படிக் கேட்கிறயாய்’ எனக் கேட்டேன்.

‘‘We had to go through immigration formalties at two points இல்லையா அப்பா…?’ எனக் கேட்டாள். அவளுடைய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நான் தலையைச் சொறிந்தேன்.

 

3. கார்ல் மாக்ஸ் தத்துவமும் வட்டிக்கடை வரதராஜாவும்!

சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கிடையே பாரிய வித்தியாசங்கள் உண்டு. இதை விளக்க கார்ல் மார்க்ஸ் பல நூல்கள் எழுதினார். இதுபற்றி கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அமெரிக்க டொலர்களை உதாரணம் காட்டி மாதக்கணக்கில் எமக்கு விரிவுரையும் நிகழ்த்தியிருக்கிறார். அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் ஆகியன, தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. அமெரிக்க டொலர்கள் ஆபிரிக்காவில் வாழும் கொங்கோ நாட்டு மக்களிடமும் இருக்கிறது. லற்றின் அமெரிக்காவிலுள்ள வெனின்வேலா பிரசையிடமும் இருக்கிறது. இந்த பணமெல்லாம் ஒருநாள் ஒரே நேரத்தில் அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அவர்களிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பலத்தின் சூக்குமம். சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச்சுழல வேண்டியடிதாரு பொருள். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது.’ ‘‘(Geld ist ein zirkulation mittal’’ – (German Language), Money is a circulation medium).

சோசலிஷ நாடுகளில் உபயோகத்துக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் இந்நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்குதடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.

படித்தவற்றை பிரயோகித்துப் பார்ப்பது எனது வழக்கம். இதனால் நான் பல தடவை சிக்கல்களில் மாட்டியதும் உண்டு. வட்டிக்கடை வரதராசாவும் நானும் ஒன்றாக ஊர்ப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். படிப்பில் அவனுக்கு அதிக நாட்டமில்லை. பத்தாம் வகுப்புடன் தகப்பனின் வட்டிக்கடையில் அமர்ந்துவிட்டான். இருப்பினும், வெளிநாட்டுக்குப் போக வேண்டுமென்று அவனுக்குத் தீராத ஆசை. நான் ஊருக்குச் சென்றபோது ஜேர்மன் வாழ்க்கை பற்றியும் எனது படிப்பு பற்றியும் கேட்டான்.

பணம் என்பது சுற்றிச்சுழல வேண்டியது’ என்ற கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை கதையோடு கதையாக அவிழ்த்துவிட்டேன். அடகுபிடித்த நகைகளை பத்திரப்படுத்தும் இரும்பு அலுமாரிகள் வைத்திருந்த, இரும்புக்கிறாதி அடித்த அறைக்குள் இருந்து வரதராசாவின் தகப்பன் தனது பாரிய தொந்தியைத் தடவிக்கொண்டு வெளியே வந்தார். எனது கதை அவருக்கு பிடிக்கவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

வங்கி பூட்டப்போறாங்கள் ‘காசு கொஞ்சம் எடுத்துவா…’ எனச் சொல்லி மகனை என்னிடமிருந்து பிரிப்பதில் அவசரம் காட்டினார். முடிவில், நான் அங்கிருந்து புறப்படுகையில், ‘படிச்ச பெடியன், பிழைக்கிற வழியைப் பார்’ எனச் சொல்லிக் கதவைச் சாத்தினார்.

விடுமுறையில் நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது, லங்கா சமசமாசக் கட்சிக்கும் கம்யூனிஸ் கட்சிக்கும் தேர்தல் வேலை செய்த பொன்னையா மாஸ்ரர் தொடக்கம் தமிழரசு தம்பித்துரை அண்ணர்வரை கார்ல்மார்க்ஸின் ‘பணம் சுற்றிச்சுழல வேண்டிய தத்துவத்தை’ சொல்லிப் பார்த்தேன். யாழ்ப்பாணத்தானுக்கு சோசலிஷம் சரிவருமோ? என அன்று எனக்கு ஏற்பட்ட இந்த ஐயத்துக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.

சோதனைச் சாவடிகள் மூலமும், சாவடிகளைக் கடக்கும் நேரங்களைக் குறிப்பதன் மூலமும், பிரயாண பிரச்சினையை கிழக்கு ஜேர்மன் அரசு சாதுர்யமாகச் சமாளித்ததை, முதலாளித்துவ அண்ணர்களால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. இந்தக் கெடுபிடிக்களுக்கு சரியான மருந்துகட்ட வேண்டும் என்று கறுவிக்கொண்ட முதலாளித்துவ அண்ணன்மார்கள் பொருளாதார ரீதியிலே கிழக்கு ஜேர்மனிக்குக் குழிபறிக்கும் திட்டம் ஒன்றினை அமல்படுத்தினார்கள்.

மேற்கு ஜேர்மனி தனது பணத்தை Deutsche Mark (DM) எனப் பெயரிட்டு தாரளமாக உலகமெங்கும் பரவவிட்டது. இதுவே மேற்கு ஜேர்மனியின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பேர்ளின் பணமும். ஜேர்மன் ஜனநாயகக்குடியரசான கிழக்கு ஜேர்மனி ‘‘Mark’’ என்னும் பெயரில் தனது பணத்தை அறிமுகம் செய்து தனது பணமும் மேற்கு ஜேர்மன் பணமும் சமவலுவுடையதென அறிவித்தது. தனது பொருளாதாரத்தையும் அதற்கேற்ப சோசலிஷ சிந்தாந்தத்தை விட்டுக் கொடுக்காது அமைத்துக்கொண்டது. எனது பணமும் உனது பணமும் ஒன்றல்ல! உனது நாலு Mark பணத்துக்கு எனது ஒரு DM சமமானது எனச் சொல்லி மேற்கு பேர்ளின் பணமாற்று நிலையங்களில் ஒன்றுக்கு நாலாக (1 DM = 4 Marks) மேற்கு பேர்ளின் வங்கிகள் மாற்றிக் கொடுத்தன. இதனால் மேற்கு ஜேர்மனியின் DM வைத்திருக்கும் ஒருவன், மேற்கு பேர்ளினில் ஒன்றுக்கு நாலாக மத்திய கிழக்கு ஜேர்மன் பணத்துடன் எல்லையைக் கடந்து கிழக்கு ஜேர்மனிக்கு வந்து நாலு Mark பெறுமதியான பொருள்களை வாங்க முடியும். இது அமெரிக்க ஆதரவுடனும், மேற்கு ஜேர்மன் அரச ஆசியுடனும், மேற்கு பேர்ளினில் பகிரங்கமாக நடந்த கறுப்புப் பண பரிவர்த்தனையாகும்.

கிழக்கு ஜேர்மன் அரசால் இதை தடுத்து நிறுத்தவோ அல்லது தட்டிக் கேட்கவோ முடியவில்லை. எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை கிழக்கு ஜேர்மனி விதித்த போதும் இப்பணப் பரிமாற்ற விவகாரம் தங்குதடையின்றி நிகழ்ந்தது.

ஒரு மேற்கு ஜேர்மன் பணத்துக்கு நாலாக சேரும் கிழக்கு ஜேர்மன் பணமான ‘மார்க்கை’ ஒரே நேரத்தில் கிழக்கு ஜேர்மனியில் உலவவிட்டால் என்ன நடக்கும்?

புழக்கத்தில் பணம் அதிகமாகவும், வாங்குவதற்குச் சந்தையில் பொருள்கள் குறைவாகவும் இருக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும். இதுதான் பணவீக்கம் என்பது. இதையே தம்பித்துரை அண்ணரின் பாஷையில் சொன்னால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது யப்பானிய அரசு அச்சடித்து விநியோகித்த ‘யப்பான் காசு’ மாதிரி கிழக்கு ஜேர்மன் பணத்துக்கு பெறுமதி இல்லாமல் போய்விட்டது. உனக்கு எது தேவையோ அதை மாத்திரம் தேடு. சோசலிஷ சித்தாந்தத்தில் பகட்டுக்கும் ஆடம்பரத்துக்கும் இடமில்லை. சவர்க்காரமா? தலைக்கு வைக்கும் சம்புவா? இதில் எதற்கு பலவகைகள்? எனவே, அங்கு ஒருவகை மாதிரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மேற்கு ஜேர்மன் மக்களின் பகட்டான உடுபுடவைகள், சொகுசான கார்கள், வசதியான வாழ்க்கை – இவற்றை எல்லாம் பார்த்த கிழக்கு ஜேர்மன் மக்கள் மனதில், அதிருப்தி மனப்பான்மை அசுர வேகத்தில் வளர்வது தவிர்க்க முடியாததாயிற்று.

எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், அடிப்படை வசதிக்கான உத்தரவாதம் என்ற சோசலிஷ சித்தாந்தம் அங்கு எடுபடவில்லை. உல்லாச வாழ்க்கை என்னும் மேற்கு ஜேர்மன் கவர்ச்சிக் கன்னி சுலபமாகவே ஏப்பமிட்டாள்.

இதே வேளையில் இங்கு இன்னுமொன்றையும் சொல்லியாக வேண்டும். கம்யூனிசம் சோசலிஷம் என சோசலிஷ நாடுகளில் பொதுவுடைமை பேசித்திரிந்த ஊருக்குப் பெரியவர்கள் சோசலிஷ நாடுகளில் வாழும் மற்றவர்களைவிட வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எங்கிருந்தோ மேற்குலக ஆடம்பர பொருள்கள் கிடைத்த வண்ணமிருந்தன. எமக்கு கம்யூனிசம் போதித்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி மேற்குலக ஆடம்பர உடைகள் அணிந்து பவிசு காட்டித்திரிவார். இதனால் மாணவர்கள் மத்தியில் அவருக்கு ‘கறுத்தாடு’ என்ற பட்டம் நிலைத்தது. மாணவர்களுக்குள்ளும் பல கறுத்தாடுகள் இருந்தன. வளர்முக நாடுகளில் இருந்து அரசாங்கங்கள் மூலமாகவும் கம்யூனிச கட்சியூடாகவும் மாணவர்களை வரவழைத்து கம்யூனிசம் போதிக்க முனைந்த போதிலும் இவர்களுள் பெரும்பாலானோருக்கு இதில் நாட்மிருக்கவில்லை. முதலாளித்துவம் நடைமுறையில் உள்ள நாட்டில் பிறந்த அவர்கள் புதிய பண வருவாய்களையும் ஆடம்பரங்களையும் நாடியது வியப்பில்லை. கிழக்கு ஜேர்மன் மக்கள் சோவியத் சார்பு நாடுகள் தவிர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு பிரயாணம் செய்யச் சுலபமாக அநுமதி பெற முடியாதவர்களாக வாழ்ந்தார்கள். ஆனால் வளர்முக நாடுகளில் இருந்து புலமைப்பரிசில் பெற்று கல்வி கற்கச் சென்ற மாணவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. இதனால் நீண்ட கோடை விடுமுறைகளிலே மேற்கு நாடுகளுக்குச் சென்று உழைத்துச் சம்பாதித்தார்கள். இவ்வாறு அவர்கள் உழைத்ததிலும் சம்பாதித்ததிலும் தப்பேதும் இல்லை. அவ்வாறு சம்பாதித்த மேற்குலகப் பணத்தைக் கள்ளச் சந்தையில் மாற்றி, தமக்கு ஆதரவு தரும் கம்யூனிச நாட்டின் பொருளாதாரத்திலே பணவீக்கத்தை ஏற்படுத்த உதவியது மிகத்தவறான செயற்பாடாகும். லுமும்பா பல்கலைக்கழகத்தில் அன்று கல்வி கற்ற மாணவர்கள் மேற்கு நாடுகளில் வாங்கிய ‘ஜீன்ஸ்’ கால் சட்டையை மொஸ்கோவில் விற்பதன் மூலம் தமது சொந்த நாட்டுக்கு விமானப்பயணச் சீட்டை வாங்கும் வசதியைப் பெற்றதாக பெருமைப்பட்டவர்களை நான் அறிவேன். சோசலிஷ நாடுகளிலே அக்காலத்தில் நிலவிய ஆடம்பர மோகத்தை மூன்றாம் உலக மாணவர்கள் சுரண்டி ஆதாயம் கண்டமை எத்தகைய தர்ம நியாயங்களுக்கும் ஏற்றதல்ல. இந்த மனக் குறுகுறுப்பினை ஒரு தடவை தம்பித்துரை அண்ணரிடம் வாய் தவறிச் சொல்லிவிட்டேன்.

டேய் தம்பி, எங்கடையவன் சாப்பிட்ட சட்டிக்குள்ளே ஏதோ செய்தது போலத்தான் வெளிநாட்டிலும் செய்யிறாங்கள்’ என்று வேப்பமரத்தடிக் கூட்டத்திலே இதுபற்றி ஒரு பிரசங்கமே நடத்தி முடித்தார்.


4: வெள்ளைத்தோலும் வெந்தையக் குழம்பும்!

கிழக்கு ஜேர்மனியில் படித்த சிங்கள நண்பன் ஒருவனை பல ஆண்டுகளின் பின் கொழும்பில் சந்தித்தேன். நாம் இருவரும் அங்கு பல்கலைக்கழகத்தில் ஒரே காலத்தில் வெவ்வேறு கல்வித்துறைகளில் கல்வி கற்றவர்கள். இப்பொழுது அவன் உல்லாசிகளுக்கான, நாலு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கொழும்பில் நிர்வகிக்கிறான். இரவு உணவு உண்ண தன் ஹோட்டலுக்கு அழைத்திருந்தான். பழைய நினைவுகளை அங்கு பகிர்ந்து கொண்டோம்.

நான் கன பிழைகள் விட்டிட்டன். உன்னைப் போல, ஊர்ப்பெட்டையை கட்டியிருந்தால் இப்ப சந்தோசமாக வாழ்ந்திருப்பன்’ என கதைகளோடு கதையாகச் சொல்லிக் கவலைப்பட்டான். தலை நரைத்த வயதில் இப்போது அவன் சிங்கள முதிர்கன்னி ஒருத்தியை, மூன்றாம் தாரமாக கட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது அவன் பரிதாபம். கிழக்கு ஜேர்மனியில் படித்த காலத்தில் ஜேர்மன் பெண்களுடன் சிநேகிதமாக இருப்பது கௌரவச் சின்னமாக கருதப்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் ஆடம்பரப் பொருள்களைச் காட்டி பெண்களை மடக்குதல் அப்போது சுலபமாக இருந்து. கால ஓட்டத்தில் இருவரும் கூடி குழந்தை பெறுவதும், திருமணம் செய்வதும் தவிர்க்க முடியாததாகி விடும். வெளிநாட்டு மாணவர்களை திருமணம் செய்யும் கிழக்கு ஜேர்மன் பெண் கணவன் நாட்டுக்குச் செல்லச் சட்டப்படி உரிமைவுண்டு. ‘கணவன் நாட்டுக்கு செல்கிறேன்’ எனக்கூறி கிழக்கு மேற்கு ஜேர்மன் எல்லையை கடந்து, மேற்கு ஜேர்மனிக்குள் நுழைந்தபின் வெளிநாட்டுக் கணவனை விவாகரத்துச் செய்து அதிர்ச்சி வைத்தியம் செய்த பெண்கள் பலர். சிங்கள நண்பனை இவ்வாறு ஜேர்மன் பெண்கள் இருவர் ஏமாற்றியிருக்கிறார்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்கும் சிங்களக் கிராமத்தில் இருந்து, கிழக்கு ஜேர்மனிக்கு வந்தவன் அவன். தன் கதை முழுவதும் சொல்லி வருத்தப்பட்டான்.

‘வெள்ளைத் தோலுக்கும் வெந்தையக்குழம்புக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்படக்கூடாது’ என நான் சொல்ல, அவனும் உண்மைதான் எனக்கூறி வாய்விட்டுச் சிரித்தான். இருப்பினும் அந்தச் சிரிப்பின் கடைக் கோடியிலே பதுங்கியிருந்த சோகம் என்னை வருத்தியது. கிழக்கு ஜேர்மனியில் சோசலிஷ ஆட்சியின் கீழ் கல்வி கற்ற மாணவர்களுள், திறமைச் சித்தியடைந்தவர்களுக்கு குறிப்பிட்ட துறையில் பட்டப் பின் படிப்புக்கு, மேற்கு ஜேர்மனியில் வாய்ப்பிருந்தது. இற்கான புலமைப்பரிசிலை மேற்கு ஜேர்மன் அரசு வழங்கியது. இது ஒரு வகையில், கம்யூனிசம் படித்த மாணவர்களின் பொதுவுடைமைக் கொள்கையை மாற்றியமைக்காக எடுத்த முயற்சியாகவும் கருதப்பட்டது. கிழக்கு ஜேர்மன் பல்கலைக்கழக பட்டங்கள் மேற்கு ஜேர்மனியில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்த வகையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கான மேற்கு ஜேர்மன் அரசின் புலமைப் பரிசில் எனக்கும் கிடைத்தது. இதன் காரணமாக மேற்கு பேர்ளின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்து என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். எண்பதுகளின் இறுதியில் சோவியத் சார்பு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவிலும் பணவீக்கத்திலும் அந்நாடுகளின் ஸ்தரம் குலைந்தது. இதனைத் தோற்று விப்பதற்காகத்தான் முதலாளித்துவ அண்ணன்மார்கள் பாடுபட்டு உழைத்தார்கள் எண்பது கம்ப சூத்திரமல்ல.

கிழக்கு ஜேர்மனியிலும் போலந்திலும் அடிக்கடி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பெற்றன. சோவியத் ரஷ்யாவைப் பொறுத்தவரை கிழக்கு ஜேர்மனி மட்டுமல்ல, பல்கேரியா, ஹங்கேரி, ரூமேனியா, செக்கோசிலவாக்கியா, யூகோசிலவாக்கியா, போலந்து போன்ற நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்நாடுகளில், பெருமளவில் ரஷ்யப் படைகள் நிலை கொண்டிருந்தன. இருப்பினும் கிழக்கு ஜேர்மனியில் பணிபுரியும் வாய்ப்புக்காக, ரஷ்யப்படையினர் காத்துக் கிடந்தார்கள். இந்த வாய்ப்புக்குப் படையினர் மத்தியில் பெருத்த கிராக்கி நிலவியது மறைக்க முடியாத உண்மை. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என அழைக்கப்பட்ட சோசலிஷ நாடுகளுள், கிழக்கு ஜேர்மனி (ஜேர்மனி ஜனநாயகக் குடியரசு) அபிவிருந்தியடைந்த நாடாகவும், ஒப்பீட்டளவில், ஆடம்பரப் பொருட்கள் நிறைந்த நாடாகவும் விளங்கியமைதான் இக்கவர்ச்சிக்கான காரணம். இதனால் மற்றைய சோசலிஷ நாடுகளில் இருந்து மக்கள், கிழக்கு ஜேர்மனிக்கு வந்து தரமான பொருட்களையும் ஆடம்பரப் பொருட்களையும் பெருமளவில் வாங்கிச் சென்றார்கள். மொத்தத்தில், ‘சோசலிஷ வாழ்வும் வளமானதுதான்’ என வெளிஉலகுக்குக் காட்டும் காட்சிப் பெட்டகமாக கிழக்கு ஜேர்மனி அப்போது விளங்கியது. இதுபற்றிய உரையாடலும் நான் சிங்கள நண்பனைச் சந்தித்தபோது இடம்பெற்றது.

சோசலிஷ நாடுகளில் கிழக்கு ஜேர்மன் பணத்துக்கு மிகுந்த கிராக்கி இருந்தது. சோசலிஷ நாடுகளுக்குள், கறுப்புச் சந்தையில் அதை மாற்றிக் கொள்ளலாம். சிங்கள நண்பன் ‘வொட்கா’ என அழைக்கப்படும் மதுப்பிரியன். ‘போலந்து வொட்கா’ உலகப் பிரசித்தி பெற்றது. கிழக்கு ஜேர்மன் பணத்தை கறுப்பச் சந்தையில் போலந்து பணத்துக்கு மாற்றி எல்லை கடந்து போலந்து சென்று, வொட்கா வாங்கி வருவான். நமது சந்திப்பின்போது வொட்காவை நினைத்து நாக்கைச் சப்புக் கொட்டினான். கிழக்கு ஜேர்மனியின் ஆட்சி வீழ்ந்து, கிழக்கும் மேற்கும் ஒன்றுபட்ட பின், கிழக்கு ஜேர்மனியில் இருந்து பல உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதாகவும் சமீபத்தில் ஒரு உல்லாசி போலந்து வொட்கா பரிசளித்ததாகவும் சொன்னான்.

என்னதான் இருந்தாலும் ஜேர்மனியர்கள் கனவான்கள் தான். சொன்ன வேலையை நேரம் தவறாமல் திறம்பட செய்பவர்கள். உனக்குத் தான் தெரியுமே, நான் எதையும் என்றைக்கும் நேர காலத்துக்கும் செய்ததில்லை. எனது கல்வி உட்பட! அதுதான் குடும்ப வாழ்க்கையில் ஜேர்மன் பெண்களுடன் ஒத்துப்போக முடியவில்லைப் போலும்’ என மீண்டும் வெள்ளைத்தோல் மோகத்தைத் துறக்காது பேசினான். எனக்கு சிங்களம் தெரியாது. ஆங்கிலத்திலேயே உரையாடினோம். அருகில் உட்கார்ந்திருந்த அவனது நாட்டுப்புறச் சிங்கள மனைவிக்கோ அரைகுறை ஆங்கில அறிவுதான் என்பதைத் தெரிந்துகொண்டேன். எங்களுடைய உரையாடலிலே அவள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், மனைவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, எப்பவோ நடந்த காதல் லீலைகளைப் பற்றிப் பேசுதல் நாகரீகம் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். நண்பனின் மனைவி எத்தகைய பாவமும் காட்டாது அமர்ந்திருந்தது. மேலும் பரிதாபகரமாக இருந்தது. அவளுடைய அப்பாவித்தனத்தினைப் பரிகசிப்பதுபோல நண்பன் நடந்துகொள்வதைத் தவிர்ப்பதற்காக, அவர்களிட மிருந்து விடைபெறுவதற்கு அவசரம் காட்டினேன். அவன் மனைவி நாகரீகமாக நடந்துகொண்டாள். ஹோட்டல் வாசல் வரை அவளும் கணவனுடன் நடந்து வந்து விடை தந்தாள். ஹோட்டல் வாசலில், வெளிநாட்டு உல்லாசிகள் இலங்கைப் பெண்களுடன் கூடி நின்றார்கள். அந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கிடைத்த வாடகைக் காதலிகளே அவர்கள்!

உல்லாசிகள் தங்கள் இலங்கைக் காதலிகளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவையும் இணைந்துதான் இலங்கையிலே சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகின்றார்கள் என்பதை நேரிலே பார்த்துச் சங்கடப்பட்டேன். நண்பனின் மனைவியைப் பார்த்தேன். இவற்றைக் கண்டுகொள்ளாத லாவகத்திலே, அவள் சிங்களப் பெண்மையைக் காப்பாற்றி நிற்பதாக எனக்குத் தோன்றியது.

 

5: உலக அகதிகளும் சோசலிச தப்புத் தாளங்களும்…!

ஊரில் இருந்து அம்மா கடிதம் எழுதியிருந்தார். நாடு இப்போது சீராக இல்லை. இனக்கலவரங்களும், சண்டைகளும் சுற்றி வளைப்புத் தேடுதல்களும், கைதுகளும் வகை தொகையின்றி நடைபெறுகின்றன. உங்கேயே இருக்கப் பார்’ என்பன அவர் கடிதத்தின் வாசகங்கள். ஒரு தாயே, தாய்நாட்டுக்குத் திரும்பாதே என மகனுக்கு எழுதியிருந்தார். என் தாய்நாட்டின் துரிதகதிச் சீரழிவை நான் தெளிவாகவே ஊகித்துக் கொண்டேன்.

1983ம் ஆண்டு இனக்கலவரத்தின்பின், இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் மேற்கு ஐரோப்பாவை நோக்கி வரத் துவங்கினார்கள். இதற்கு வசதியாக அமைந்தது உலக அகதிகள் இறங்குதுறையாக அக்காலத்தில் செயற்பட்ட கிழக்கு பேர்ளின் நகரம். கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரத்திலும், மக்களின் ஆடம்பர மோகத்திலும் மேற்கு ஜேர்மனி புகுந்து விளையாடி நெருக்கடி கொடுக்க, வந்திறங்கும் அகதிகள் மூலம் மேற்கு ஜேர்மனிக்கு தொல்லை கொடுத்து, கணக்கை சரிசெய்யும் முயற்சியில் கிழக்கு ஜேர்மனி ஈடுபடலாயிற்று. இதற்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்பும், பேர்ளின் நகரம் குறித்த பொட்ஸ்டடம் உடன்படிக்கை விதிகளும், வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தன. மேற்கு பேர்ளின் நகரம் கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்கு ஜேர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டதால், மேற்கு பேர்ளினுக்குள் வந்து சேர்ந்துவிட்டால், மேற்கு ஜேர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்துக் கோருதல் சாத்தியமாக அமைந்துவிடும். பின்னர் அங்கிருந்து வேறு பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், தரை எல்லையை கடந்து சென்றடைதல் அப்போது சாத்தியமாக இருந்தது. 1980ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த ஐரோப்பிய நாடுகளி குடிவரவு விதிகளில், தற்போது புகுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் இருக்கவில்லை. எனவே அகதிகள் பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, டென்மார்க் நோர்வே என்றும், பின்னர் அங்கு தமது வாழ்க்கை ஸ்திரப்படுத்திக்கொண்டு பிரித்தானியா, கனடா என ஆங்கிலம் பயிலும் நாடுகளுக்கு பெயர்தல் சாத்தியமாயிற்று. பிளவுபட்ட ஜேர்மனிகள் 1990ம் ஆண்டு இணையும்வரை பூமிப்பந்தெங்கும் தமிழன் புலம்பெயர்வதற்கு நுழைவாயிலாக அமைந்தது கிழக்கு பேர்ளினும், அதனுடன் இணைந்த மேற்கு பேர்ளினின் பூகோள அமைப்புமே என்பது இதுவரை பதிவு செய்யப்படாத உண்மையாக உள்ளது. மேற்கு பேர்ளின் Tegal என்னுமிடத்தில் துவங்கும் ஆறாம் இலக்க சுரங்க இரயில் பாதையொன்று, கிழக்கு பேர்ளின் நிலப்பரப்பின் கீழாகச் சென்று மேற்கு பேர்ளினிலுள்ள Alt Mariendorf என்னுமிடத்தில் முடிவடைந்தது. (இப்பாதையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன). இச்சுரங்க இரயில் பாதையில் கிழக்கு பேர்ளினுக்குள் வரும் ஒரு சில சுரங்க இரயில் நிலையங்களுள், Friedrich Strasse என்னுமொரு நிலையத்தை தவிர மற்றைய நிலையங்களை கிழக்கு ஜேர்மன் அரசு மூடிவிட்டது. Friedrich Strasse சுரங்க நிலையத்தூடாக வெளிநாட்டவரும், பிரயாணம் செய்ய அநுமதிக்கப்பட்ட மூத்த பிரஜைகள் என அழைக்கப்பட்ட அறுபத்தைந்து வயதை தாண்டிய கிழக்கு ஜேர்மன் முதியவர்களும் மாத்திரம், மேற்கு பேர்ளினுக்கு பிரயாணம் செய்ய அநுமதிக்கப்பட்டார்கள். ரஷ்ய விமானங்கள் மூலம் பெருந்தொகையாக, கிழக்கு பேர்ளின் சோர்ணபெல்ட் விமான நிலையம் வந்திறங்கும் உலக அகதிகளுகு;கு கிழக்கு ஜேர்மன் அரசு ஒரு நாள் விசா கொடுத்து Friedrich Strasse சுரங்க நிலையத்துக்கு வழிகாட்டி மேற்கு பேர்ளினுக்கு செல்ல அநுமதித்தது. போக வழி தெரியாது. கிழக்கு ஜேர்மனிக்குள் அலைந்து திரிந்த அகதிகளை விசா காலவதியாகமுன் தேடிப்பிடித்து Friedrich Strasse சுரங்க நிலையத்திற்கு கொண்டுவந்து வழிகாட்டும் பொறுப்பினையும் கிழக்கு ஜேர்மன் பொலீசார் ஏற்றிருந்தார்கள். ஐந்து நிமிடங்களுக்கு ஒன்றாக, ஆறாம இலக்கப் பாதையூடாகச் செல்லும் சுரங்க இரயில் ஊடாகவும், S-Bahn எனப்படும் தரைவழி இரயில் மூலமாகவும், மேற்கு பேர்ளின் மக்களோடு மக்களாகச் செல்லும் அகதிகளை, மேற்கு பேர்ளின் எல்லையில் தடுத்து நிறுத்த மேற்கு பேர்ளின் அரசால் முடியவில்லை. அகதிகளின் வரவை கட்டுப்படுத்துவதாயின் இந்தச் சுரங்க இரயிலில் பிரயாணம் செய்யும் எல்லாப் பிரயாணிகளையும் சோதனையிட வேண்டும். ஐந்து நிமிட இடைவெளியில் வரும் இரயில்களிலே முழுமையான தேடுதல் சாத்தியப்படவில்லை. பேர்ளின் நகர் பற்றி பொட்ஸ்டம் உடன்படிக்கையில் உள்ள ஓட்டைகள், அகதிகளின் இலகுவான புலப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என, கொள்கை வகுத்தோர் அன்று உணர்ந்திருக்க நியாயமில்லை! சோவியத்யூனியனும் கிழக்கு ஜேர்மனியும் அகதிகள் விடயத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்ததை ஊன்றிக் கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். பெருந்தொகை அகதிகள் ரூஷ்ய விமானமான Aerofoltஇல் பறந்ததின் மூலமும், ஒருநாள் கடவை விசாவுக்கு கிழக்கு ஜேர்மன் அரச நிர்வாகம் பணம் அறிவிட்டதின் மூலமும் பெருந்தொகையான வருமானம் பெற்றார்கள். கிழக்கு ஜேர்மனிக்குள் இருக்கும் குப்பைத்தொட்டியாக மேற்கு பேர்ளினைப் பாவித்து பல்லாயிரக்கணக்கான உலக அகதிகளை வகை தொகையின்றி மேற்கு பேர்ளினுக்குள் தள்ளித்தொல்லை கொடுத்தார்கள். இதனால் எண்பதாம் ஆண்டுகளில் சுற்றி வர மதில்சுவரால் தனிமைப்படுத்தப்பட்ட மேற்கு பேர்ளின் நகரம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. அகதிகளின் இத்தகைய படையெடுப்பு மேற்கு ஜேர்மன் அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது. அகதிகளின் வருகையால் வெளிநாட்டவர் எல்லோரையுமே ஒருவித வெறுப்புணர்வுடன் ஜேர்மன் மக்கள் பார்க்கத் துவங்கினார்கள். பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சி முடித்து மேற்கு ஜேர்மன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த எனக்கும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே புதிய சூழல் சில அசௌகரியங்களை ஏற்படுத்தியது.

அத்துடன் ஒரு தொழிலைச் செய்ய ஜேர்மன் பிரசை ஒருவர் அந்நாட்டில் இருப்பாரானால் அத்தொழில் மற்றவர்களுக்கு இல்லை என்ற சட்டம் இன்றும் ஜேர்மனியில் கடுமையாக அமுல்படுத்தப்படுகிறது.

நமது பிள்ளைகள் இந்த நாட்டிலே வருங்காலத்தில் என்னப்பா செய்யப் போகுதுகள்,’ என என் மனைவி நச்சரிக்கத் துவங்கினாள். நான் கல்வி கற்ற உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு உலகமெங்கும் அப்போது மவுசு இருந்தது. எனவெ பல்இன பல்கலாச்சாரத்தை மனதார ஏற்கும் ஆஸ்திரேலியாவுக்கு 1987ம் ஆண்டு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தேன்.

நான் ஜேர்மனியில் வாழ்ந்த பதின்மூன்று வருடங்களும் அநுபவபூர்வமாக மகிழ்ந்து வாழ்ந்த காலங்கள். இருப்பினும் பல்இன கலாசாரத்தை ஏற்காது ‘ஜேர்மனி ஜேர்மன் மக்களுக்கே’ என்ற கொள்கை வைத்திருக்கும் ஒரு நாட்டில் எனது சந்ததி தொடர்ந்து வாழ மனைவி விரும்பாததற்கு நிறையவே காரணங்கள் இருந்தன. ஜேர்மன் மொழியை என்னால் என் தாய்மொழி போல் பேச முடியும். எனது கல்வி மட்டுமின்றி பட்டப் பின்படிப்பு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஜேர்மன் மொழியிலேயே எழுதியிருந்தேன். ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த புதிதில் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் நிகழ்த்தும்போது பழக்கதோசத்தால் ஜேர்மன் மொழியிலேயே சிந்தித்தேன். பிறமொழியாக இருந்தாலும் கல்வி கற்ற மொழியின் ஆதிக்கம் பெரியது என்பதை உணர்ந்த காலங்கள் அவை! தமிழ்மொழி மீது நான் கொண்டுள்ள அதீத அக்கறைக்கு என் ஜேர்மன் அநுபவமும் ஒரு காரணமோ எனச் சில சமயங்களிலே நினைப்பதுண்டு. கைதடி மண்ணிலே பிறந்த நான், ஆங்கில மொழி கற்றதன் பயனாகவே ஐரோப்பிய நாட்டிலே கல்வி கற்கக் கூடியதாக இருந்தது. ஜேர்மன் பல்கலைக்கழக அநுபவம் ஜேர்மன் மொழியிலே எனக்குப் புலமையை ஏற்படுத்தித் தந்தது. இதனால் என் வாழ்க்கை வளம் பெற்றது உண்மையே. ஆனால் தொழில் மொழி எது பயிலப்பட்ட போதிலும், மரபு வழி வளங்களைத் தாய்மொழி மூலமே பெற்றுக் கொள்ளுதல் சாத்தியம் என்பதை அநுபவ வாயிலாகவே நான் உணர்ந்துகொண்டேன்.

 

6: யப்பான் பெண்மணியும் பேர்ளின் சுவரும்…!

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகப் பணி நிமிர்த்தம், ஆஸ்திரேலியாவில் இருந்து யப்பானிலுள்ள சுக்குபா பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். நான் அங்கு தங்கியிருந்த விருந்தினர் விடுதியில் உள்ள ரெலிவிஷனில் யப்பானிய நிகழ்ச்சிகளே தெளிவாகத் தெரிந்தன. யப்பான் நாடு பல சிறப்புகள் பெற்றுள்ளன. சூரியன் உதிக்கும் நாடு அது. பூகம்பங்களை இயல்பாக ஏற்று அங்கு மக்கள் வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டு, உலகின் பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ள நாடு. அதன் வளர்ச்சி உலக நாடுகளை பிரமிக்க வைப்பது. இரண்டாம் உலகப்போரிலே, ஜேர்மனியின் கூட்டாளியாகப் போராடியது.

ஜேர்மனி – இத்தாலி – யப்பான் ஆகிய நாடுகள் இணைந்த கூட்டணியை ‘அச்சு நாடுகள்’ என அழைத்தார்கள். ஜேர்மனி தோற்ற பிறகும், இரண்டாம் உலக யுத்தத்தில் நின்று சமர் செய்த நாடு யப்பான். அணு ஆயுதப் பிரயோகத்தால் மட்டுமே அது அடிபணிந்தது. சாம்பலிலிருந்து உயிர் பெற்றெழும் பீனிக்ஸ் பறவைப்போல, இன்று பொருளாதார வல்லரசாக எழுந்து நிற்கின்றது. யப்பானில் இருந்தபொழுது இந்த வரலாற்றுப் பின்னணி என் மனசில் எழுந்தது.

நவம்பர் மாதம் 9ம் திகதி 1989ம் ஆண்டு பல்கலைக்கழக பணிகள் முடிந்தபின் விடுதிக்கு வந்து ரெலிவிஷனைப் போட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. கனவு காண்கிறேனோ என எண்ணி என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். நான் கண்டது நிஜம் தான். கிழக்கு ஜேர்மன் ஊடாக மக்கள் மேற்கு பேர்ளினுக்குள் சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.

‘Check Point Carlie‘என்பது கிழக்கு மேற்கு பேர்ளின் எல்லையில் உள்ள பிரதான சோதனைச் சாவடி. அதனூடாக கிழக்கு ஜேர்மன் மக்கள், மேற்கு பேர்ளினுக்குள் செல்ல கிழக்கு ஜேர்மன் அரசு அனுமதிக்காது. பேர்ளின் மதில் சுவரையும், சோதனைச் சாவடியையும் ஒட்டி கிழக்கு பேர்ளின் பக்கத்தில், சூனியப்பிரதேசம் உண்டு. கிழக்கு ஜேர்மன் மக்கள் சூனியப் பிரதேசத்தைக் கடந்து இலகுவில் மேற்கு பேர்ளினுக்குள் புகுந்துவிட முடியாது. கைது செய்யப்படுவார்கள். மீறினால் சுடப்படுவார்கள்.

ரெலிவிஷனில் யப்பான் மொழியில் சொன்ன விபரம் புரியவில்லை. விடுதியின் வரவேற்பறைக்கு ஓடிப்போனேன். அங்கு விருந்தினரை வரவேற்கவென இருக்கும் பணிப்பெண் சிறிது ஆங்கிலம் பேசுவாள். அவளிடம் விபரம் கேட்டேன். ‘பேர்ளின் சுவர் திறக்கப்பட்டுவிட்டது. கிழக்கு ஜேர்மன் மக்கள் தங்குதடையின்றி மேற்கு பேர்ளினுக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள்.’ இவ்வாறு தொட்டம் தொட்டமாக, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவள் கூறினாள். கிழக்கு ஜேர்மனி, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட 1989ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் சோவியத் தலைவர் கொபச்சோவ் (Goberchev) கிழக்கு பேர்ளின் வந்ததும், காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும்படி கிழக்கு ஜேர்மன் அரசை வற்புறுத்தியதும், அதற்கு SED கட்சி தயக்கம காட்டியதும் நான் அவுஸ்திரேலியாவிலே இருந்தபொழுது அறிந்த சமாச்சாரங்கள். ஆனால் இரு துருவங்களாக திகழ்ந்த இருநாடுகள் இவ்வளவு விரைவில் ஒன்றிணையும் என்பது யாருமே எதிர்ப்பார்க்காத, சடுதியிலே நிகழ்ந்த சம்பவமாகும். இரு ஜேர்மனிகளும் இணைந்த பின்பு, 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேர்ளின் சுவர் முற்றாக இடித்து அகற்றப்பட்டது. இடிக்கப்பட்ட பேர்ளின் சுவரின் சிறிய கொங்கிறீற் துண்டுகள் ஞாபகச் சின்னங்களாக 1990ம் ஆண்டுகளின் முற்பகுதியில் விற்கப்பட்டன. அதில் ஒரு துண்டு சிட்னியில் எமது வீட்டின் வரவேற்பறையில் நான் முன்பு படித்த கொம்மியூனிச புத்தகங்களுடன், கடந்தகால ஜேர்மன் வாழ்க்கையை இன்றும் எனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாத சோவியத் யூனியன், மிகப்பெருந்தொகைப் பணத்தை மேற்கு ஜேர்மனியிடம் பெற்றுக்கொண்டதன் பின்னரே இருநாடுகளின் ஒன்றிணைப்பை அனுமதித்தார்கள் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி 1990ம் ஆண்டு ஜேர்மன் நாட்டின் அதிபராக இருந்த ஹேல்மூட் கோல் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற கிழக்கு ஜேர்மனியின் பெயர் இனிச் செல்லாது என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த ஜேர்மனியாகியது. இதன் பின்னணியில் போலந்து, பல்கேரியா, செக்கோசிலவாக்கியா, ஹங்கேரி, ரூமேனியா, யூகோசிலவாக்கியா ஆகிய நாடுகளும் சோவியத் யூனியனின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட்டன. செக்கோசிலவாக்கியாவில் இருந்து செக்குடியரசும் சிலவாக்கிய குடியரசும் உருவாகின. யூகோசிலவாக்கிய பிரிந்து சேர்பியா குரோசியா குடியரசுகள் தோன்ற வழி சமைத்தது. உக்ரேன், லுத்துவேனியா, லற்வியா போன்றவை ரஷ்யாவின் சோவியத் யூனியனில் இருந்து தனிநாடுகளாகப் பிரிந்தன. இந்த மாற்றங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் அந்தலை சகாப்தத்தில் நிகழ்ந்தன. கிழக்கிலும் மேற்கிலுமாக, சோசலிச முதலாளித்துவ அமைப்பின்கீழ் ஜேர்மனியில் பலகாலம் வாழ்ந்து அனுபவித்தவன் என்ற உணர்வின் உந்துதலினால், ஒன்றிணைந்த ஜேர்மனியின் தற்போதைய நிலவரத்தை நேரில் காண ஆசைப்பட்டேன். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி, நான் கல்வி கற்ற ஜேர்மன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் விஞ்ஞான மகாநாட்டுக்கு சிறப்பு பேச்சாளராக என்னை அழைத்திருந்தது. இப்பல்கலைக்கழகம் முன்னர் மேற்கு ஜேர்மன் ஆட்சிக்குட்பட்ட மேற்கு பேர்ளின் பிரதேசத்தில் அமைந்திருந்தது.

பிறந்த மண்ணில் இருபத்திமூன்று ஆண்டுகள் வாழ்ந்தேன். அதில் முதல் பத்து ஆண்டுகளையும் அறியாத குழந்தைப்பருவம் எனக் கழித்துவிடலாம். மீதி பதின்மூன்று ஆண்டுகளை குதியன் குத்திய விடலைப்பருவம் என அடையாளப்படுத்துதல் பொருந்தும் என நினைக்கின்றேன். இந்த உலக வாழ்வின் இயல்புகளை இனங்கண்டு, தீதும் நன்றும் பகுத்தறியும் பதின்மூன்று முத்தான வாலிபப் பருவத்து ஆண்டுகளை நான் ஜேர்மன் மண்ணிலேதான் ஆண்டு அநுபவித்தேன். என் வாழ்க்கையின் அர்த்தங்களைக் கற்பித்த மண், என் வாழ்க்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற கல்வியை எனக்களித்து என்னை மனிதனாய் நிமிர்த்து நிற்கச் செய்த மண். என் இரண்டாவது தந்தை மண்ணைத் தரிசிக்கும் ஒரு மனோபாவத்துடன், நான் விமானத்தில் ஏறினேன். ஜேர்மனி நோக்கிய பறப்புத் துவங்கிற்று.

 

7: ஜேம்ஸ் சிமித்தும் அவன் பிடித்த மூன்றுகால் முயலும்…!

பேர்ளின் சுரங்க ரெயில்வண்டி நிலையமொன்றில் ‘நித்திய குடிகாரன்’ வகையைச் சேர்ந்த ஒருவனை, பொலீசார் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவனைச் சுற்றி அவன் குடித்து முடித்த ‘மினிக்குவாட்டர்’ மதுப்போத்தல்களும், சிகரெட் குறைக் கட்டைகளும் நிறைந்து காணப்பட்டன. இவைதான் பொலீஸ்காரரை எரிச்சலடையச் செய்திருக்க வேண்டும்.

சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாது சுகாதாரம் பேணுவதில், ஜேர்மன் அரச இயந்திரம் எடுக்கும் அக்கறையின் வெளிப்பாடாக இந்த முற்றுகை, அன்றேல் விரட்டுதல் நடக்கிறது. ‘போத்தல்களைப் பொறுக்கிக்கொண்டு ரெயில் நிலைய மேடையை விட்டு வெளியேறு’ என பொலீஸ்காரன் உரத்துச் சத்தமிட்டான்.

நான் ஏன் வெளியேற வேண்டும், இது என் நாடு. ஜேர்மனியில் எங்கு வேண்டுமானாலும் படுப்பதற்கும் இருப்பதற்கும் எனக்கு பூரண உரிமை உண்டு. என்னை விரட்ட நீ யார்…?’ என உரத்த தொனியில் தூஷண வார்த்தைகள் பல கலந்து, வாதிட்டுக் கொண்டிருந்தான் ‘நித்திய குடிகாரன்.’

அந்தக் குரலை எங்கேயோ கேட்டிருப்பதான உணர்வு சுரீரெனச் சுட்டது. உற்றுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. என்னுடன் ஒன்றாக பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்த ஜேம்ஸ் சிமித் தான்! அவனருகில் சென்று, ‘என்னைத் தெரிகிறதா…?’

எனக் கேட்டேன். கண்களை சுருக்கி அருகில் வந்து பார்த்தவன்,

ஸ்ரீலங்கா நண்பனே, எப்போது பேர்லினுக்கு வந்தாய்?’ எனக்கேட்டு என் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கினான். ஜேம்ஸின் நிலையில், அவனுடன் உறவாட இன்னொருவன் வந்ததை ஜேர்மன் பொலீஸ்காரன் விரும்பவில்லை. உடனடியாக அவனை ரெயில் நிலைய மேடையை விட்டு வெளியேறுமாறு பொலீஸ்காரன் மீண்டும் கடின தொனியில் கட்டளையிட்டான்.

வா, வெளியே போவோம்’ என ஜேம்ஸை அழைத்தேன்.

ஒரு மினிக் குவாட்டர் மது வாங்கித் தருவாயா, எனக் கேட்டவாறே அவன் பின் தொடர்ந்தான்.

தேவையில்லாத சர்ச்சையிலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைத்த பொலீஸ்காரன் அவ்விடம் விட்டு அகன்றான்.

என்ன நடந்தது உனக்கு…? இது என்ன கோலம்….?’ என சுரங்கப் பாதையின் வெளியே வந்ததும் கேட்டேன்.

நண்பா, கை நடுங்குது. சீக்கிரம் மதுப்போத்தல் ஒன்று வாங்கித்தா’ என என் கைகளைப் பிடித்தான். உண்மையில் அவனது கைகள் இரண்டும் வெட வெடத்து நடுங்குவதை அவதானித்தேன். ஜேர்மனியில் பேப்பர் கடை, காய்கறிக் கடை, சாப்பாட்டுக் கடை என எல்லா கடைகளிலும் மதுப்போத்தல்கள் ‘மினிக் குவாட்டர்’ சைஸ் தொடக்கம் வெவ்வேறு சைஸ் வரை வெவ்வேறு வடிவங்களில் விற்பனைக்கு உண்டு. நித்திய குடிகாரர் பைகளிலே இத்தகைய மினிக்குவாட்டர் போத்தல்கள் எப்போதும் கைவசம் இருக்கும். போதை தெளியும் போதெல்லாம் இவற்றைக் குடித்துவிட்டுப் பொதுவிடங்களில் உள்ள இருக்கைகளிலே சுருண்டு படுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் தமது உறவுகளைத் தொலைத்தவர்கள். மது போதையிலே வாழ்க்கையின் அர்த்தங்களையும் சுருதிகளையும் தேடிக் கொண்டிருப்பவர்கள். மாலையானதும் ‘penners’ என ஜேர்மன் மொழியில் அழைக்கப்படும் இவ்வகை குடிகாரர்களை சமூக சேவை இலாகா தங்கள் வண்டியில் கூட்டிச் சென்று இவர்களுக்காகவே அரசால் நிர்வகிக்கப்படும் விடுதியில் விடுவார்கள். விடிந்ததும், மீண்டும் ஒரு நாள்! வழக்கம்போல இவர்கள் வீதிக்கே வந்துவிடுவார்கள்.

ஜேம்ஸ் வீதி அருகில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்தபடி என்னை பரிதாபமாகப் பார்த்தான். மதுவுக்காக அவன் யாசிப்பது புரிந்தது. போதை முறிவதற்கிடையில் அவனுக்கு மது வேண்டும். அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் செறிவு குறைந்த மினிக்குவாட்டர் போத்தல் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். ஒரே மடக்கில் போத்தலை காலி செய்தவன் தன்னை ஆசுவாசுப்படுத்திக்கொண்டு தன் கதையைச் சொன்னான்.

ஜேம்ஸ் மிகுந்த புத்திசாலி. எதையும் வினாடியில் கிரகித்துக் கொள்வான். ஆனால், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனச் சாதிப்பவன். யாருடைய பேச்சையும் கேட்க மாட்டான். மற்றவர்கள் கருத்துச் சொல்வதையும் அனுமதிக்க மாட்டான். இதனால் பேராசிரியருடன் முரண்பட்டுக் கொண்டான். பல்கலைக்கழகத்திலும் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டான் விழைவு – பாதியில் பட்டப் பின் படிப்பை முறித்துக் கொண்டதுடன், எந்த வேலையிலும் அவனால் நிலைத்து நிற்க முடியவில்லை. படிப்பில் மட்டுமல்லாமல் ஜேம்ஸ் வாழ்விலும் ஒரு வகைப் புரட்சியை ஏற்படுத்தியவன். பள்ளிப்பருவத்திலேயே இவன் ஒருத்தியை காதலித்து, ஒரு குழந்தைக்கும் தந்தையாகிவிட்டான். இருப்பினும் விடலைப்பருவத்து கனவுக் காதலின் அவசர விளைவல்ல அது என்பதிலே உறுதியாக இருந்து, அவளையும் குழந்தையையும் ஏற்றுக்கொண்டான். நாளாக, நாளாக அவனது புரட்சிகர சிந்தனைகள் ‘அல்ககோலில்’ கரைந்து போயின. ஜேர்மன் நாட்டின் வரை விலக்கணத்தின்படி அவன் இப்பொழுது ‘வீடு வாசலற்ற தெருப்பொறுக்கி….!’

இவனது பிடிவாதமும் இம்சையும் தாங்கமுடியாது மனைவியும் பிள்ளைகளும் இவனைவிட்டுப் பிரிந்துவிட்டனர். இவன் நித்திய குடிகாரனாக இப்போது நடைபாதையில் வாழ்கிறான்.

எனக்குத்தான் எல்லாம் தெரியும். நான் சொல்வதைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டும்|’ என்ற எண்ணங்கொண்டவர்களுக்கு ஜேம்ஸின் வாழ்க்கை ஒரு பாடமாகும். எங்களில் எத்தனைபேர் மற்றவர்களை முழுமையாக பேசவிடுகிறோம், மற்றவர் தன் கருத்தை சொல்லி முடிக்குமுன்பே இடையில் மறித்து தன் கட்சியை உரத்த குரலிலே கூறி தான் சொல்வதே சரியெனச் சாதிக்க முயல்கிறோம். ஒரே நேரத்தில் எல்லோரும் பேசுவதால் கூச்சலும் குழப்பமும்தான் மிஞ்சுகிறது. மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துச்சொல்ல ஜேம்ஸ் என்றைக்கும் அனுமதித்தது கிடையாது. பல்கலைக்கழக கலந்துரையாடலில் அவன் என்றைக்குமே மற்றவர்களைப் பேச அனுமதித்ததும் கிடையாது. இத்தகைய ராங்கியினால் அவனால் புதிதாக விஷயங்களைக் கற்றுக் கொள்ளமுடியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற ரீதியில் பேசுவதால் சண்டைதான் எழும். இதுதான் ஜேம்ஸ் தன் மனைவி பிள்ளைகளைப் பிரிவதற்கு முக்கிய காரணமாய் இருந்தது. மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து பன்சிரிப்போடு அவர் மனம் நோகாதபடி மெதுவாகக் கருத்துக்கள் சொல்லத் தெரியாததினால், ஜேம்ஸ் வீழ்ந்துவிட்டான்!

எங்களுடைய கருத்துக்களை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. ஆனால், எதிரியின் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும் பண்பு, அறிவு நாகரிகத்திற்குத் தேவை. அதற்கு ‘ஜனநாயகம்’ ‘புண்ணாக்கு’ ‘புடலங்காய்’ எனத் தோதான வார்த்தைகளைத் தேடி அலையத் தேவையில்லை. எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், என்று வள்ளுவர் என்றோ நமது அறிவுரை வழங்கிவிட்டார். ஜேர்மனியனாகப் பிறந்த ஜேம்ஸ், ஒரு கார்ல் மார்க்ஸாகவோ, ஐன்ஸ்டீனாகவோ, ஃபிராய்டாகவோ தனது அறிவு மேதவையை நிலைநாட்டியிருக்கக்கூடும். அதில் எனக்குச் சந்தேகமில்லை.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்என்பதை நிலை நாட்டுவதில் வீறுகொண்டு வாழ்ந்த ஜேம்ஸ், இன்று தன் அறிவு அனைத்தையும் ஒரு மினிகுவாட்டர் மதுப்போத்தலுக்குள் அடைத்து வாழ்கின்றான். துக்கம் என் தொண்டையை அடைத்தது. அவனுக்கு இன்னொரு மினிகுவாட்டர் வாங்கிக் கொடுத்துவிட்டு, கனத்த மனத்துடன் விஞ்ஞான மாநாட்டுக்கு செல்ல ரெயில் ஏறினேன்.

 

8: கிழக்கு ஜேர்மன் மேரியும் வாழைப்பழக் கேக்கும்…!

விஞ்ஞான மாநாடு முடிந்தது!

மறுநாள் கிழக்கு ஜேர்மனியில் என்னுடன் ஒன்றாகப் படித்த நண்பன் எரிக்கிடம் சென்றேன். அவன் இப்போதும் அங்கே தான் குடும்பத்துடன் வாழ்கிறான். படிக்கும்போது அவன் பொதுவுடமைத் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்தவன். உருக்குத் தொழிற்சாலையொன்றிலே வேலை செய்த சாதாரணத் தொழிலாளியின் மகனாக அவன் பிறந்தான். அன்றைய சோசலிஷ ஆட்சி அமைப்பு இல்லையேல், அவன் உயர்கல்வி கற்கும் வாய்ப்பையே பெற்றிருக்கமாட்டான். எரிக்கும் மனைவி மேரியும் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சோசலிஷ ஆட்சியின்போது அவர்கள் அரசு கொடுத்த ஒப்பீட்டளவில் வசதியான இரண்டு அறை தொடர்மாடிக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் குடியிருந்தார்கள். நான் சென்றபோது அவர்கள் வாழ்ந்த வீடு முன்புபோல் வசதியான வீடு என்று சொல்வதற்கில்லை. கிழக்கும் மேற்கும் இணைந்த பின்பும் கிழக்குப் பகுதியில் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் பௌதீக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை என்னால் அவதானிக்க முடியவில்லை.

மேரி கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள். எரிக்குடன் பலதையும் பேசிக் கொண்டிருந்த நான் ‘ஒன்றிணைந்த ஜேர்மனியில் உன் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?’ என நட்புரிமை பாராட்டிக் கேட்டேன். வரவேற்பறையை ஒட்டிய சமையல் அறையில் நின்ற மேரி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். எரிக் மௌனம் காத்தான்.

எனது கேள்வி தவறென்றால் மன்னித்துக்கொள்’ என்றேன்.

இதில் தவறெதுவுமில்லை’ என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டவன், வார்த்தைகளைக் கவனமாக தெரிந்தெடுத்து பேசத் துவங்கினான்.

வயிறார உணவும், வசிப்பதற்கு வீடும், வருமானத்திற்கு ஒரு தொழிலும் இருந்துவிட்டால் மனித மனம் ஆடம்பரத்தை நாடும். அன்றைய சோசலிஷ ஆட்சியில் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த நாம், மேற்கு ஜேர்மனியில் முதலாளித்துவ அமைப்பின்கீழ் பாலும் தேனும் வீதிகளில் வழிந்தோடுவதாக நினைத்தோம். ஆனால் இப்போது அது மாயை எனத் தெரிந்தது மட்டுமல்லாமல், அடிப்படை வசதிக்கே எலியோட்டத்தில் ஈடுபடும் அவதி வந்துவிட்டதை உணர்கிறோம்.’

இதைச் சொன்னபின் எரிக் பெரூமூச்சொன்றை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

சோசலிஷ அமைப்பின்கீழ் வேலை நிரந்தரம் என்ற நிலைமை மாறி, வருடா வருடம் வேலை ஒப்பந்தம் நீடிக்கப்பட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இப்பொழுது எழுந்துள்ளது. அமெரிக்க Hire and Fire கொள்கைதான் இங்கும்’ எனத் தன் கருத்தைக் கூறியபடி மேரியும் எங்களுடைய உரையாடலிலே கலந்து கொண்டாள்.

ஜேர்மனியில் பலவகையான ருசிமிக்க கேக் வகைகளைச் செய்வார்கள். Torte‘ எனப்படும் ஒருவகையை நான் விரும்பிச் சுவைப்பேன். கேக் மாவின் மேலே பலவகை பழத்துண்டுகளைப் போட்டு அதன்மேல் ஜெலி ஊற்றி அந்த கேக்கை சுவையுள்ளதாக்குவார்கள். அன்று மேரி வாழைப்பழ ‘Torte‘ செய்திருந்தாள். வாழைப்பழத்தைப் பார்த்ததும் புன்னகைத்தேன். எனது புன்னகையின் அர்த்தத்தை சரியாக ஊகித்தவள், ‘உண்மைதான், சோசலிஷ ஆட்சியில், அன்று வாழைப்பழம் எமக்கெல்லாம் ஆடம்பரப்பொருள். வாழைப்பழ இறக்குமதி அப்போது இல்லை. ஒன்றிணைந்த ஜேர்மனியில் இப்போது வாழைப்பழம் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், ஆடம்பரப் பொருள்களைக் காட்டி மேற்கு ஜேர்மன் நிறுவனங்கள் எம்மை ஏமாளியாக்கியது சுவாரஸ்யமான சோகக்கதை’ எனச் சொன்னாள் மேரி.

ஆடம்பரம்’ என்ற சொல் மேரியை எரிச்சலடைய வைத்ததை அவளின் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டேன். எதையும் ஒளிவு மறைவின்றிப் பேசுதல் அவள் சுபாவம். அளிடமிருந்து கதை பிடுங்கும் ‘யாழ்ப்பாணக் குணம்’ என்னுள் புகுந்து கொள்ளவும், ‘அது என்ன ஏமாளியாக்கிய கதை?’ எனத் தூண்டிலை அவளை நோக்கி வீசினேன்.

கிழக்கும் மேற்கும் தொண்ணூறாம் ஆண்டு ஒன்றிணைந்த புதிதில், முதலாளித்துவ நிறுவனங்கள் கிழக்கு ஜேர்மனியை புதிய சந்தையாக நினைத்து படையெடுத்தது…’ எனக் கதையை துவக்கிய மேரியை இடைமறித்து, ‘மக்களிடம் வாங்குவதற்கு பணமிருந்ததா?’ என என் ஊகங்களுக்குத் தெளிவு பெறுவதற்காகக் கேட்டேன்.

பென்ஸ் கார் ஒன்றை வாங்கி எரிக் கடனாளியாக இருப்பதையும், அதற்கு பெற்றோல் ஊற்றுவதற்கே இப்போது கஷ்டப்படுவதையும் மேரி விரிவாகவே விளக்கினாள்.

‘கார் விற்க வந்தவர்கள், வட்டிக்கு பணம் கொடுக்கும் நிறுவனங்களையும் கூடவே அழைத்து வந்தார்கள். சுவர்க்க வாசல் திறந்ததாகவே நினைத்து விலை உயர்ந்த கார்களையும் ஆடம்பரப் பொருட்களையும் கடன் பத்திரத்தில் கையெழுத்து வைத்து கணக்கு வழக்கின்றி வாங்கினார்கள். இந்தப் போக்கிலே அள்ளுண்ட எரிக்கும் ஒரு பென்ஸ் கார் வாங்கினான். அதுவரை சோசலிஷ பொருளாதாரம் மட்டும் தெரிந்த கிழக்கு ஜேர்மன் மக்கள் முதலாளித்துவ தில்லுமுல்லுகளின் ஆழ அகலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதன் காரணமாகப் பலர் இன்று, கடனாளியாக இருக்கிறார்கள். அத்துடன் அதிவேக கார்களுக்கு பழக்கப்படாத பலர் விபத்துக்களைச் சந்தித்ததும் உண்டு. நாம் வாங்கிய பென்ஸ் காரின் பெறுமதி ஒரு வருடத்தில் கால்பங்கு குறைந்துவிட்டது. ஐந்து வருட்தில் அதன் பெறுமதி பூஜ்ஜியமாகிவிட்டது. இதற்காக வாங்கிய கடனோ இப்போது பலமடங்காகி விட்டது.’

தனது வாழ்க்கை நிலையைக் கூச்சப்படாமல் கூறினாள் மேரி.

சோசலிஷ ஆட்சியின்போது கிழக்கு ஜேர்மனியில் இரண்டு வகைக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இரண்டு சிலிண்டர் இரண்டு Stroke என்ஜின் பூட்டிய ‘Traband‘ கார். மிகவும் வேகம் குறைந்த 700 CC என்ஜினைக் கொண்ட இக்கார் 1955ம் ஆண்டு உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தன. உலகத்திலே முதலில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் (Plastic body) கார் இதுவே. பார்ப்பதற்கு நெருப்புப் பெட்டி போல் இருக்கும். இக்காரை வாங்குவதற்கு பதிவு செய்த பின் சோசலிஷ ஆட்சியின் கீழ் ஆறு வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.

அடுத்த வகை கார் மூன்று சிலிண்டர் ‘Wartburg‘ என்னும் கார். இதுவும் இரண்டு Strok என்ஜின் பொருத்தியது. ஒப்பீட்டளவில் Traband காரிலும் ஆடம்பரமானது. முன்னதிலும் பார்க்க இது வேகமாக ஓடக்கூடியது.

Autobahn எனப்படும் நெடுஞ்சாலைகளில் மேற்கு ஜேர்மனியின் அதிவேக ஆடம்பரக் கார்களைப் பார்த்தவர்களுக்கு தாமும் அப்படி ஒரு ஆடம்பர காரில் செல்ல வேண்டுமென விரும்பியதில் வியப்பேதுமில்லை. இருப்பினும் விரலுக்கேற்ற வீக்கம் வேண்டுமென்பதை ஆடம்பர மோகத்தை நாடிய வேகத்தில் மறந்து போனது அவர்களைச் சிக்கலில் மாட்டிவிட்டது. எரிக்கின் தந்தை பணிபுரிந்த உருக்குத் தொழிற்சாலையில் நானும் பல்கலைக்கழக விடுமுறைகளின்போது பணி புரிந்திருக்கிறேன். எரிக்கின் தந்தையே எனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தார். அவரின் ஞாபகம் வரவே அவரின் சுக நலம் விசாரித்தேன்.

உனக்குத்தான் தெரியுமே சோசலிஷ ஆட்சியின்கீழ் இங்கிருந்த தொழிற்சாலைகளெல்லாம் அரசுக்கு சொந்தமானவை என்பது. இரவோடிரவாக ஜெர்மனி ஒன்றிணைந்தபின், சோசலிஷ ஆட்சியின்கீழ் அரசுடைமையாக்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் தனியார் மயப்படுத்தப்பட்டன. எரிக்கின் தந்தை பணிபுரிந்த உருக்கு ஆலையை, மேற்கு ஜேர்மனியில் கொடிகட்டி பறந்து, பெரும் லாபம் ஈட்டிய தனியார் உருக்கு ஆலையொன்று, ‘அடையாளமாக’ (Symbolic) ஒரு ஜேர்மன் மார்க் பணம் கொடுத்து அரசிடம் வாங்கியது. தொழிற்சாலையை நிர்வகிக்கவும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தவும் ஒன்றிணைந்த ஜேர்மன் அரசு பெருந்தொகை பணம் கொடுத்தது. இந்த வகையில்தான் கிழக்கு ஜேர்மன் நிறுவனங்கள் எல்லாம் நவீன மயப்படுத்தப்படும் எனக்கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் இந்த நவீன மயப்படுத்தல் மூடுவிழாக்களுக்கான துவக்கமாகவே இருந்தது. அரசிடம் இருந்து கிடைத்த பணத்தை மேற்கு ஜேர்மனியில் உள்ள தமது ஆலைகளுக்குச் செலவு செய்த முதலாளித்துவ நிறுவனங்கள், திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் இரண்டு மூன்று வருடங்கள், கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆலைகளை நட்டத்தில் இயங்கிவிட்டன. இறுதியில் அந்த ஆலைகளிலே வேலை செய்த திறமைமிக்க ஊழியர் சிலரையும் நல்ல நிலையிலுள்ள இயந்திரங்களையும் மேற்கு ஜேர்மன் ஆலைக்கு எடுத்துச் சென்றபின், இங்குள்ள ஆலையை மூடிவிட்டார்கள். இதனால் கிழக்கு ஜேர்மனியிலே வாழ்ந்த தொழிலாளர்களிலே அநேகர் வேலையற்றோராக நடுத்தெருவில் விடப்பட்டார்கள். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்கிற கதையே தான்! சோசலிஷ ஆட்சியின்கீழ் கிடைத்த, அடிப்படை வசதிகளுக்கான உத்திரவாதத்தைப் பின்னர்தான் கிழக்கு ஜேர்மன் மக்கள் நினைத்துப் பார்க்கத் துவங்கினார்கள்…’ என மேரி விபரம் சொன்னாள்.

இந்த அவல நிலை குறித்து ஒரு சோக உணர்வு என்னுள் படர்ந்தது. நான் மௌனித்தேன். என் உடலின் பாஷயை மேரி புரிந்திருக்க வேண்டும்.

அந்த கதைகளை விடு, வாழைப்பழ Trorte சாப்பிடு. இது உனக்காகவே செய்யப்பட்டது. முன்னரென்றால் இவ்வளவு தாராளமாகச் செயற்பட்டிருக்கமாட்டேன். இப்போது ஆடம்பர முதலாளித்துவ அமைப்பில் வாழ்கிறேனல்லவா….’ எனக்கூறிச் சிரித்தாள்.

சோகத்திலும் வெடித்த அந்த நகைச்சுவைக்குறிப்பிலே நானும் கலந்து சிரித்தேன்.

நீங்கள் முன்பு இருந்த அரச தொடர்மாடியும் தனியார் மயமாகிவிட்டதா’…? மேரி தந்த வாழைப்பழ கேக்கைச் சாப்பிட்டபடி, கேட்டேன்.

சும்மா விட்டு வைப்பார்களா? இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முன் கட்டப்பட்ட கட்டிடங்களை தமதென பலர் ஆட்சி உரிமை கோரி பழைய காணி உறுதிகளுடன் வந்தார்கள். பொதுவுடமை சொத்தாக சோசலிஷ ஆட்சியின்கீழ் இருந்த கட்டிடங்கள் மீண்டும் தனியார் கைவசம் போனவுடன் வாடகை கூடியது. அத்துடன் போட்டியும் அதிகரித்தது. சோசலிஷ ஆட்சியின்கீழ், குடும்ப நபர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே வீடு கொடுக்கப்பட்டது. தேவைக்கேற்ற விசாலம். ஆனால் இப்போது இரண்டு பேர் உள்ள குடும்பத்தினர் பணமிருந்தால் அதிக அறைகளுள்ள பெரிய வீட்டிலே வாழ முடிகிறது. இதனால் பணமற்ற பலர் தங்கள் குடியிருப்பு வசதிகளை இழந்தார்கள். நாம் இப்போதிருக்கும் இந்த வீட்டை வாடகைக்கு எடுக்கப்பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல…’ என விவரித்தாள் மேரி.

முன்பு கம்யூனிசம் போதித்த பேராசிரியர்களும், நிறுவனங்களில் பணிபுரிந்த கம்யூனிச சார்பு SED கட்சி செயலாளர்களும் இப்போது என்ன செய்கிறார்கள்’? எனக் கேட்டேன். இவர்களே சோசலிஷ ஆட்சியின்கீழ் தனிக்காட்டு ராஜாக்களாக சுகபோக வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் நிலை என்ன என்பதை அறிவதில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எரிக் அப்போது பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் SED கட்சி செயலாளராகவிருந்து பொதுவுடமைத் தத்துவங் களை உசாராகப் பேசியவன். எனது கேள்வி அவனது உணர்வுகளை உசுப்பியிருக்க வேண்டும். இதை அவனது முகபாவம் காட்டிக் கொடுத்தது. இருப்பினும் அமைதியாகப் பேசத்துவங்கினான். ஜேர்மனியர்களின் சுபாவமே அதுதான். மலையே போனாலும் பதட்டப்படாது மிக அமைதியாக இருப்பார்கள்.

அவர்களில் பலர் பச்சோந்திகளாக மாறி முதலாளித்துவம் பேசத்துவங்கிவிட்டார்கள். கம்யூனிசம் நடைமுறையில் தோற்றதற்கு இவர்களைப் போன்ற பச்சோந்திகளும் ஒரு காரணம்’ என்று நொந்து பேசிய எரிக்கை இடைமறித்து, ‘அவர்கள் பிழைக்கத்தெரிந்தவர்கள்’ என்று அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தாள் மேரி.

 

9: முடிவும் விளக்கமும்!

பெட்டியில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கீழே கொட்டித் தேடினேன். வரும்போது அணிந்து வந்த கால்சட்டை, சேட், கோட் பொக்கற்றுக்குள்ளும் கைவிட்டப் பார்த்தேன். அந்தப் பட்டியலோ அகப்படவில்லை. நான் வெளிநாடு போகும் போதெல்லாம் என் மனைவி எதைத்தான் மறந்தாலும், வீட்டுக்கு வாங்கிவர வேண்டிய சாமான்கள் பட்டியலைத் தர மறுப்பதில்லை. அதை எங்கோ தொலைத்துவிட்டு இரண்டு நாள்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். தான் சொல்ல மறந்த மேலும் சில சாமான்களை, நேற்று மின் அஞ்சல் மூலமும் அனுப்பியிருந்தாள்.

நாளை சிட்னி நோக்கிய எனது பறப்பு. இனித் தாமதிக்க நேரமில்லை. முடிந்த வரை மூளையை கசக்கி நினைவுபடுத்தி மனைவி சொன்ன சாமான்களைக் குறித்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் புறப்பட்டேன்.

வணிக வளாகத்தில் ஒரு எதிர்பாராத சந்திப்பு.

பல்கலைக்கழகத்தில் எனக்கு சோசலிஷ பொருளாதாரம் கற்பித்த ஜேர்மன் பேராசிரியர் புதிய கோலத்தில் வந்திருந்தார். இலகுவில் என்னை இனம் கண்டவர், ‘எப்படி இருக்கிறாய்? எப்போது வந்தாய்’? எனக் குசலம் விசாரித்தார். அவர் அணிந்திருந்த ஆடை எனக்கு வியப்பைக் கொடுத்தது. தொழிலாளர்கள் அணியும் நீலநிற அங்கி அணிந்து, தச்சு வேலைகள் செய்வதற்கான ஆயுதங்கள் அடங்கிய பையொன்றை வைத்திருந்தார். நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்று அங்கு வாழாதது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது பேச்சில் புரிந்து கொண்டேன். சோசலிஷ அமைப்பின்கீழ் சோசலிஷ நாட்டில் கல்விகற்ற மாணாக்கர்கள், தமது சொந்த நாட்டுக்கு திரும்பச் சென்று அங்கு பணிபுரிய வேண்டுமென்பது எதிர்பார்ப்பு. ஆனால் நானோ, கிழக்கு ஜேர்மனியில் இருந்து, அவர்களின் பரம வைரியாக் கருதப்பட்ட மேற்கு ஜேர்மனிக்குச் சென்று தொடர்ந்து கல்வி கற்று, தற்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வது பேராசிரியரைப் பொறுத்தமட்டில் ஏற்க முடியாததொன்று. இலங்கையில் நிலவிய நிர்ப்பந்த புலப்பெயர்வுக்கான காரணிகளை நான் பொறுமையுடன் சொன்னதும் அவர் ஓரளவு சமாதானமடைந்தார். யூதர்களுக்கு ஜேர்மனியில் நடந்த அட்டூழியங்களை அவர் அறிந்திருந்தார். இடையில் சோக நினைவுகளின் இறுக்கம் நுழையப் பார்த்தது. உரையாடலை வேறு கோணத்தில் திசை திருப்ப விரும்பி, ‘இதுவென்ன புதுக்கோலம்’ என பேராசிரியரைக் கேட்டேன். சிறிது நேர மௌனத்தின் பின், தன்னிலை விளக்கம் கொடுக்கும் தோரணையில் பேராசிரியர் பேசத்துவங்கினார்.

சோசலிஷ சமுதாய அமைப்பில் அனைவரும் தொழிற்கல்வி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை நீ அறிந்திருப்பாய். அந்த வகையில் நான் தச்சுத்தொழில் கற்றவன். எனக்கு உயர்கல்வி வாய்ப்பைத் தந்தது மட்டுமல்லாது பேராசிரியராக உயர்வு தந்ததும் சோசலிஷ கட்டமைப்பே. அதற்கு நான் என்றும் கடமைப்பட்டவன். பொதுவுடமை கொள்கையை நான் அன்றும் இன்றும் முழுதாக நம்புகிறேன். பலரின் கண்களுக்கு அது தோற்றுப்போன சங்கதியாக இருக்கலாம். கம்யூனிசம் என்றும் தோற்கப்போவதில்லை. அதைக் கடைப்பிடித்த முறைதான் தோற்றுப்போனது. கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த பின் இரவோடு இரவாக கொள்கைகளை மாற்றிக்கொள்ள என்னால் முடியவில்லை. என்னையே ஏமாற்றிக்கொண்டு முதலாளித்துவ அமைப்பில் பச்சோந்தியாக வாழ என் மனம் என்றும் இடம் கொடாது. இதனால் என் பேராசிரியர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு எனக்குத் தெரிந்த கைத்தொழில் இறங்கிவிட்டேன். இப்போது எனக்கு நான்தான் ராஜா, தனிக்காட்டு ராஜா என வைத்துக் கொள்ளேன்’ எனக்கூறிச் சிரித்தார் பேராசிரியர்.

கிழக்கு ஜேர்மனியில் சோசலிஷ ஆட்சி நடைபெற்ற காலத்தில் SED என அழைக்கப்பட்ட பொதுவுடமை கட்சியில் சேராதவர்கள் எந்தவொரு உயர் பதவியையும் வகிக்க முடியாது. இதற்குப் பல்கலைக் கழக பேராசிரியர்கள் விதிவிலக்கல்ல. சந்தர்ப்பத்துக்கேற்ற வகையில் பொதுவுடமைவாதம் பேசித்திரிந்த பல பேராசிரியர்களும், அரச சலுகை பெற்ற உயர் அதிகாரிகளும் இரவோடிரவாக முதலாளித்துவ சிந்தனைவாதிகளாக மாறி பதவிகளைத் தக்கவைத்துக்கொண்ட சம்பவங்கள் பல உண்டு. இருப்பினும். பேராசிரியரைப் போன்ற, கொண்ட கொள்கை மாறாத பொதுவுடமைவாதிகள் பலர் இன்னமும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள் என்பது அதிகம் பரப்புரை செய்யப்படாத உண்மையாகும்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள அரச நிறுவனங்களில், கிழக்கு ஜேர்மன் மக்களை வேலைக்கமர்த்த வேண்டுமென்கிற நல்லெண்ணத்தில் பலரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு ஜேர்மன் மக்களால் புதிய அமைப்பிலே இலகுவில் இரண்டறக் கலக் முடியவில்லை என்பதை, அவர்களின் நடத்தை மறைமுகமாகக் காட்டியது. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது என்கிற ரீதியிலே, தனித்தனிக் குழுக்களாகவே, வேலை செய்த இடங்களில் செயற்பட்டார்கள் (2009). கிழக்கு ஜேர்மன் மக்கள் மனதில் அப்போதிருந்த தாழ்வு மனப்பான்மையும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். முதலாளித்துவம் அளிக்கும் தனிநபர் முயற்சிகளின் வெற்றிகள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை, அவர்கள் நான்கு சகாப்தங்களாக இழந்தமையே, இதற்கு காரணம் என மேற்கு ஜேர்மன் நண்பன் புதிதாக இன்னொரு விளக்கம் சொன்னான். இருப்பினும், எல்லைகள் அறுந்து மதில் சுவர் வீழ்ந்த பின்பும், மேற்கு ஜேர்மன் மக்கள் மனதில், கிழக்கு ஜேர்மன் மக்களைவிட தாம் எப்போதும், எதிலும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் இன்னமும் இருக்கிறது.

நாஜி ஹிட்லரின் இனத்துவேசக் கொள்கைகள் மீண்டும் தலைதூக்குவதான கோலம் ஜேர்மனியில் முளை கொண்டுள்ளதாக எனக்குத் தோன்றியது. அடொல்வ் ஹிட்லர், அகண்ட ஜேர்மனியைக் காணும் கனவுகளை ஜேர்மனி மக்கள் மனதில் எழுப்பி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி ஏற்றதிலிருந்து அதனைச் செயல்படுத்தும் பல திட்டங்களை முடுக்கிச் செயல்பட்டார். இறுதியில் யுத்தத்தில் தோல்வியுற்றதால் நாடு பிளவுற்றது. அரசியல் சிந்தாந்த வேறுபாடுகளுக்காக, ஒரே இன மக்கள் வாழும் நாட்டினைக் கூறாக்கி, இருவேறு நாடுகள் அமைத்தால், அதிக காலம் நீடிக்காது என்பதை ஜேர்மன் வரலாறு நிரூபித்தது. இதுவே பிறிதொரு வகையில் வியட்நாமிலும் நடந்தது. கொரியப் பிரிவினை இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்து நிற்கப்போகிறது என்று எதிர்காலம் ஆவலுடன் காத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது! அதேபோன்று, அரசியல் காரணங்களுக்காக இருவேறு இனங்களைச் சேர்ந்தவர்களின் இருநாடுகளை ஒன்றிணைப்பதும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க மாட்டாது. இதற்கு உதாரணம் எறிற்றியாவும் எதியோப்பியாவும். உலகமயமாதல் என்பது தவிர்க்க இயலாத தற்கால பொருளாதார நியதி என்று பரப்புரை செய்யப்படுகிறது. உலகமயமதால் பொருளாதார நியதியா, என்பதை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து தர்க்கிக்கட்டும்! உலகமயமாதல் என்பது சிறுநாடுகளின் இறையாண்மை வழங்கும் ஏற்பாடாக அமையாது இருத்தல் நன்று. இறையாண்மை தனிமனித சுதந்திரத்தின் நுழை வாயிலாக அமைதலே ஏற்புடையதாகும்.

(2010)

 

No comments:

Post a Comment