Saturday, 30 January 2021

ஒட்டாத மண்

ஆசி கந்தராஜா

1: வீடே கோயிலாக…

ஏன் பிள்ளை இவன் எதியோப்பா போறானாம்? அங்கை தானே பஞ்சம் பட்டினியாலே சனம் சாகுதெண்டு பேப்பரிலே போடுறாங்கள்’ என்று என்னுடைய மனைவியைக் கேட்டார் அம்மா.

அதுதான் மாமி நல்லது. அங்கைபோய் எண்டாலும் கொஞ்சம் மெலிஞ்சு வரட்டன்’ எனப் பதிலளித்தாள் மனைவி.

எனது எடை அதிகம் என்பது என் மனைவியின் அடிமனக் கவலை. மாரடைப்பக்கு இது வழி வகுக்கும் எனக் குடும்ப டாக்டரும் சில சந்தர்ப்பங்களிலே பயமுறுத்தி இருந்தார். எனது உடம்பு மெலிவதற்கு என் மனைவி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பார்த்தும் விட்டாள். என் போக்கு அவளுக்கு நன்றாகவே தெரியும். இருபத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கை. மனுசன் றோட்டிலே இறங்கி நடக்காது என விலையுயர்ந்த ‘றெட்மில்’ மெஷினையும் வாங்கி வீட்டில் வைத்திருந்தாள். அதில் நடந்து உடற்பயிற்சி செய்தால் நேரம், தூரம், வேகம் மட்டுமல்லாது எவ்வளவு கலோரி சக்தி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கையும் துல்லியமாகச் சொல்லும் என்று அந்த மெஷின் பற்றிய மான்மியத்தையும் அவள் சொல்லி முடித்தாள். அவளுடைய மனம் கோணாதிருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாள்கள் அதிலே மூச்சிரைக்க நடந்தும் ஓடியும் பார்த்தேன். மனைவி அருகில் நின்று வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் தன்னொலியன்ற ஊக்கப்படுத்தல்களை மேற்கொண்டாள். எனது ஊளைச் சதை ஓடும் வேகத்துக்கு ஏற்ப மேலும் கீழும் குலுங்குவதைப் பார்த்து பிள்ளைகள் சிரித்தார்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளையும்?

றெட்மில்’ பயிற்சி என் உடம்புக்கு ஒத்துவரவில்லை, நெஞ்சு நோகுது என்று சாக்குபோக்கு சொல்லத் துவங்கினேன். நெஞ்சுவலி என்றவுடன் மனைவி அரண்டுவிட்டாள். பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் றெட்மில் பயிற்சியின்போதுதான் மயங்கி விழுந்து உயிரைவிட்டான். இந்த சமயத்தில் அந்தச் சம்பவத்தின் ஞாபகமூட்டல் எனக்கு கைகொடுத்து, இப்போது ‘றெட்மில்’ மெஷின் தீண்டப்படாது பழைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் அடுக்கி வைக்கும் களஞ்சியமாகப் பயன்படுகிறது.

இந்த வர்த்தமானத்தினால் எரிச்சலடைந்திருந்த மனைவிக்கு நான் மேற்கொள்ளவிருந்த எதியோப்பிய பயணம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. பல்கலைக்கழகப் பணி நிமிர்த்தமாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களிலே, எனக்குக் கிடைக்கும் பகட்டான உபசரிப்பு மனைவிக்கு தெரியாது. அதைப்பற்றி நான் விவரித்தால் நான் புளுகுவதாகவே நினைத்துக்கொள்வாள். பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே ‘சொகுஸான’ ஹோட்டல் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பார்கள். என் கொலஸ்ரோல் நிலமைக்கு ஆகாது எனக் காரணம் காட்டி எனக்கு வீட்டில் மறுக்கப்படும் வெண்ணெய், முட்டை, பேக்கன் முதலான, நான் விரும்பி உண்ணும் சகல உணவு வகைகளும் அங்கு தங்குதடையின்றிக் கிடைக்கும். என் பயண அநுபவங்களை வீட்டிலே சொல்லும்பொழுது, உணவு விஷயங்களிலே நான் தாராளமாக நடந்த செய்தியைத் தணிக்கை செய்துவிடுவேன்.

உடல் மெலிந்து புதிய கோலத்தில் திரும்ப வேண்டுமென விமான நிலையத்தில் வாழ்த்துச் சொல்லி என்னை வழியனுப்பி வைத்தாள் மனைவி. சிட்னியிலிருந்து துபாய் வரை சிங்கப்பூர் விமானம். குறை சொல்ல இடமில்லை. சொகுசான பறப்பு. துபாயில் ஒரு இரவு தங்கி, அடிசபாவுக்குப் பறக்க வேண்டும். மறுநாள் காலை துபாய் விமான நிலையத்தில் எதியோப்பியா செல்வதற்கான ரிக்கற் கௌண்டரை தேடிப்பிடிப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. வஞ்சகம் செய்யாமல் துபாய் விமானநிலையத்தை மிக விசாலமாகவே கட்டியிருந்தார்கள். பாலைவனத்தில் நிலத்துக்கா பஞ்சம்?

பொதிகள் நிறுக்கும் பெல்டில் என் பெட்டிகளை வைத்தேன். விரிவுரை நிகழ்த்தத் தேவையான குறிப்புக்கள், செய்முறை உபகரணங்கள், புத்தகங்கள், விரிவுரைகள் பதிவுசெய்யப்பட்ட குறுந்தட்டுக்கள் என ஒரு சூட்கேஸ் நிரம்பியிருந்தது. இன்னுமொரு சூட்கேசில் எனது உடுப்புகள். செய்முறை உபகரணங்கள் இருந்த பெட்டியைக் காட்டி இது உடையாது பத்திரமாக போய் சேர வேண்டும். எனவே, அதற்கு ‘‘Fragile’’ என்கிற லேபல் ஒன்றை ஒட்டும்படி சொன்னேன். என்னை ஏற இறங்க பார்த்த பணியாள் ‘நீங்கள் பொதிகளை ஒப்படைக்கலாம். ஆனால் அவை இன்று உங்கள் விமானத்தில் வராது’ என்றான் சர்வசாதரணமாக.

நாளை நான் பல்கலைக்கழகத்தில் விரிவுரை துவங்க வேண்டும். அதற்கு இவை தேவை. எனது ரிக்கற்றில் குறிப்பிடப்பட்ட நாற்பது கிலோகிராம் பொதி என்னுடன் வரவேண்டியது தானே முறை’ எனச் சட்டம் பேசினேன். நான் பேசிய எதையும் அவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ரிக்கற்றை கிழத்து பாஸ்போட்டையும் போடிங்காட்டையும் என் முன்னே வைத்தான்.

எனது பொதி என்னுடன் வருமல்லவா?’ எனக்கேட்டு நான் அரச விருந்தாளி எனவும் சொன்னேன். ‘முயன்று பார்க்கிறேன்’ என்றவன் அடுத்த பயணியின் பொதிகளைக் கவனிக்கத் துவங்கினான். பணி நிமித்தம் அடிக்கடி நான் ஆபிரிக்க நாடுகள் உட்பட, பல்வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த பயண அநுபவம் எனக்கு முற்றிலும் புதுசு. பொதிகள் வருமா வராதா என்ற மனக் குழப்பத்துடன் இருக்கையொன்றில் அமர்ந்தேன். விமான கௌண்டர் வரிசையில் என் பின்னே நின்றவன் ஜேர்மன் நாட்டவன். இளைஞன். தனது பொதிகளைக் கையளித்த பின் என் அருகே வந்தமர்ந்து, ‘எதியோப்பியாவுக்கு முதல் பயணமா?’ எனக் கேட்டான். பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் நான் படித்தவன் என்று அறிந்ததும் மிக அந்நியோன்யமாக ஜேர்மன் மொழியிலேயே உரையாடினான். மொழி எங்களை நண்பர்களாக்கியது. தான் ஜேர்மன் அரச உதவி வழங்கும் திட்டத்தில் எதியோப்பியாவில் தொழில்நுட்ப உதவி வழங்குவதாகவும், இதனால் அடிக்கடி இவ்வாறு அங்கு பறப்பதாகவும் தகவல் சொன்னான்.

நாளை விரிவுரை என்று நீ சொல்லக்கேட்டேன். அப்படியென்றால் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள். எங்களுடைய பொதிகள் நிச்சயம் இன்றைய எமது விமானத்தில் வந்து சேராது’ என்ற செய்தியைச் சொல்லி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினான்.

ஏன் அப்படி? சர்வதேச விமான விதிகளின்படி பொதிகள் பயணிகளுடன் வர வேண்டியதுதானே முறை’ என்றேன் சற்று உரத்த தொனியில். எனது ஆவேசத்தைக் கண்டு புன்முறுவல் பூத்த அவன், ‘பதற்றப்படாதே. இந்த வழித்தடத்தில் இது சர்வசாதாரணம். விமானத்தில் பயணிகளின் பொதிகளுக்குப் பதிலாக துபாயில் இருந்து வணிகப் பொருள்கள் வந்துசேரும். அதிர்ஷ்டம் இருந்தால் நாளைக்கே எமது பொதிகள் வந்து சேரலாம்’ என நடைமுறை விபரம் சொன்னான். தகவல் அறிந்து மலைத்துப்போய் மௌனமாக இருந்தேன். தனது கைப்பையிலிருந்த உல்லாசப் பிரயாணிகளுக்கான தகவல் கையேட்டை எடுத்து என்னிடம் தந்து, ‘அதிகம் யோசியாதே, இது வழமையான சங்கதிதான். பொதிகள் வரும்வரை ஊரைச் சுற்றிப்பார். பார்க்கவேண்டிய அழகான நாடு. மக்கள் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவார்கள். ஆனால் ஆழம் தெரியாமல் காலை விட்டு விடாதே’ எனக் கண்களைச் சிமிட்டினான்.

அடிசபாபா விமான நிலையத்தில் இறங்கி கடவுச் சீட்டுச் சோதனைக்காக வரிசையில் நின்றோம். எந்த அவசரத்தையும் காட்டிக்கொள்ளாது அதிகாரிகள் நிதானமாகவே பணிபுரிந்தார்கள். வந்தவர்களுடன் சிரிக்கவும் பேசவும் நிறைய நேரம் எடுத்துக்கொண்டார்கள். விமான நிலையமெங்கும் புதிய சீமெந்தின் மணம் நிறைந்திருக்கிறது. அந்த விமான நிலையம் உதவி வழங்கும் நாடுகளின் உதவியுடன் கட்டப்பட்டதாகவும், நாட்டின் தற்போதைய இயக்கம் பெரும்பாலும் வெளிநாட்டு உதவியிலேயே தங்கியிருப்பதாகவும் வரிசையில் நின்ற நேரத்தை வீணாக்காமல் எதியோப்பிய பொருளதாரம் பற்றி ஜேர்மன் இளைஞன் குட்டிப் பிரசங்கம் செய்தான். அவனுடைய திர்வுகூறலின்படி பொதிகள் வந்து சேரவில்லை. இருப்பினும் சில பொதிகள் அங்குள்ள பெல்டில் கழன்று கொண்டிருந்தன.

யாருடைய பொதிகள் இவை? எனக் கேட்டேன்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு வந்த பயணிகளுடையதாக இருக்கலாம்’ என்றவன் பிறிதொரு இடத்துக்கு என்னை அழைத்துப் போனான். விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமாக நீண்டதொரு ஓடை. அங்கே ஆயிரத்துக்கு மேற்பட்ட செம்மண் புழுதி படிந்த சூட்கேஸ்கள் நிரை நிரையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

உனது பொதிகளும் உனக்காக ஒருநாள் இப்படிக் காத்திருக்கும். நாளை முதல் தினம் தோறும் இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்’ எனச் சர்வசாதாரணமாக எவ்வித உணர்ச்சியும் இன்றிக் கூறினான். உள்ளூர்வாசிகள் தமது பொதிகள் வராததையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. தமது கைப்பைகள் சகிதம் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். எனக்கோ எனது பொதிகள் வராதது மன உளைச்சலையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. ஜேர்மன் நாட்டவன் இதில் அநுபவப்பட்டவன். விமான நிலைய அலுவலகமொன்றுக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கு அவன் அதிகம் பேசவில்லை. எனது ரிக்கற்றையும் பாஸ்போட்டையும் தனதுடன் சேர்த்துக் கொடுத்தான். சிறிது நேரம் ஊழியர்கள் தங்களுக்குள் ‘அம்காறிக்’ (Amharic) மொழியில் பேசிக்கொண்டார்கள். முடிவில் எம் இருவருக்கும் தலா நூறு அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எதியோப்பிய பணம் ‘Birr’ கொடுத்தார்கள். என் முகபாவத்தில் எனது வினாவைப் புரிந்துகொண்டவன், பொதிகள் வரும் வரை வெளி நாட்டவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கான நட்ட ஈடு இது. அலுவலகத்தில் வந்து கேட்டால் மாத்திரமே இது கிடைக்கும்’ எனப் புதுப்புது தகவல்களைச் சொல்லி ஜேர்மன் இளைஞன் பிரமிப்பூட்டினான். பொதிகள் வந்து சேராததால் மூன்று நாள்கள் விரிவுரை இல்லை. இதனால் சர்வதேச அலுவல்களுக்கு பொறுப்பான அலுவலகத்தில் நேரத்தை போக்கினேன். அந்த அலுவலகத்துக்கு பொறுப்பான நிறைவேற்று அதிகாரி, ஏர்மியாஸ் அபேரா (Ermias Abera) என்ற இளைஞர், சுறுசுறுப்பாக அங்கு பணியாற்றினார். வெளியுலக ஊடகங்கள் சொல்வதற்கு எதிர்மாறாக, நான் எதியோப்பியாவில் சந்தித்த அனைவரும் திடகாத்திரமாகவும், ‘ரென்சன்’ எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் காணப் பட்டார்கள். சிட்னிக்கு சென்றவுடன் இதுபற்றி அம்மாவுக்கும் மனைவிக்கும் சொல்லி எதியோப்பியா பற்றிய அவர்களின் எண்ணத்தை மாற்ற வேண்டுமென எண்ணிக் கொண்டேன். அபேராவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அந்த அலுவலகமே, உதவி வழங்கும் நாடுகள் கொடுக்கும் நிதியை கையாள்கிறது. இதனால் அந்த அலுவலகம் ரொம்ப பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. அபேராவின் மேசைமேல் இருந்த தொலைபேசிகள் மாறிமாறி ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றுள் பல பன்னாட்டு தொலைபேசி அழைப்புக்கள். அத்துடன் அடிக்கடி பலர் வந்து அவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் நான் இருந்த மேசை அருகே அவ்வப்போது வந்து குசலம் விசாரித்ததுடன் அன்றைய இரவுச் சாப்பாட்டுக்கு தனது வீட்டிற்கு வரமுடியுமா? எனவும் கேட்டார். எதியோப்பிய குடும்ப கலாசாரத்தை அறிவதில் ஆர்வம் கொண்ட நான் மறுப்புக் கூறாமல் சம்மதித்தேன். தொடர்ந்து அபேராவுக்கு அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. அவரது கையெழுத்துக்காக பல பத்திரங்கள் காத்துக் கொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்த எனக்கே தலை வெடிப்பதுபோல் இருந்தது.

ஒருவழியாக அலுவலகம் முடிந்து வெளியே வந்தால் அடிசபாபா நகர் வீதியில் கிறீஸ்தவ கோவில் ஒன்றின் திருவிழா ஊர்வலம், திருசொரூபத்தை தொடர்ந்து சென்ற பெண்கள் அனைவரும் தமது பாரம்பரிய உடையான வெள்ளை நிற நெசவு நூல் ஆடையொன்றை உடம்பில் சேலை போல் சுற்றியிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ஆண்கள் நீண்ட வெள்ளை நிற அங்கியில் அணிவகுத்துச் சென்றது பார்க்க அழகாகவும் பக்தி பூர்வமாகவும் இருந்தது. எதியோப்பிய மக்களின் அன்றாட வாழ்வில் கிறிஸ்தவ கோவில்கள் செலுத்தும் பங்களிப்பு பற்றி அபேரா விளக்கமாக சொல்லி வந்தார். பயங்கர வாகன நெரிச்சலூடாக அபேராவின் வீட்டுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அடக்கமான வீடு. வீட்டின் வெளி விறாந்தையில் யேசுபிரானின் திருச்சொரூபம். அருகே ஒரு சிலுவை. வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக சிலுவையின்முன் மண்டியிட்டு கண்மூடிச் சில நிமிடங்கள் பிரார்த்தித்தார். சகல அதிகாரங்களுடன் நல்ல நிலையில் வாழ்ந்தாலும் நல்ல கடவுள் பக்தியுள்ளவர் என்று எண்ணிக் கொண்டேன். தந்தையைக் கண்டதும் குழந்தைகள் ஓடோடி வந்தார்கள். மகன் தான் செய்த கணக்கை காண்பித்தான். மகள் ஆபிரிக்க ஆரம்ப பாடசாலையில் தான் வரைந்த படங்களையும் அன்று நடந்தவற்றையும் ஆதியோடு அந்தமாக விபரித்தாள். மனைவி மகிழ்ச்சியுடன் எதியோப்பிய முறையில் தயாரிக்கப்பட்ட கோப்பியும் பலகாரங்களும் எடுத்து வந்தார். அபேராவின் தாயார் சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து எனக்கு வணக்கம் கூறினார். அபேராவும் எல்லோருடனம் கலகலப்பாக பேசி மகிழ்ச்சியாக இருந்தார். தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்தார்.

இவ்வளவு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் வீட்டில் உற்சாகமாய் இருக்கிறீர்களே? எப்படி இது சாத்தியமாகிறது’ எனக் கதையோடு கதையாக கேட்டேன்.

நான் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு சிலுவையின் முன் கண்மூடி பிரார்த்தனை செய்தது என்னை ஒரு உண்மையான கிறிஸ்தவனாக காட்டியிருக்கும். ஆனால் அதற்குமேல் இன்னுமொரு விஷயமும் உண்டு. எனது மனதை ஒரு நிலைப்படுத்தி கவலை, ரென்ஷன் எல்லாவற்றையும் அப்போது சிலுவலையில் அறைந்துவிட்டு வந்துவிடுவேன். அலுவலக ரென்ஷனை வீட்டுக்கு கொண்டுவருவதால் வீண் பிரச்சனைதான். வீட்டில் யாரும் இயல்பாகப் பழகமாட்டார்கள். வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். எதியோப்பியர்கள் வாழ்க்கையை மிகவும் இலகுவாக எடுத்தக்கொள்வார்கள். வீடு என்பது சந்தோசமாக இருக்க வேண்டிய இடம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். எமது நாட்டில் வறுமை, பஞ்சம், வியாதி எனப் பல பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும் உள்ளவற்றுடன் திருப்திப்பட்டு மகிழ்ச்சியாக வாழும் கலையில், நாம் வல்லவர்கள்’ என்றார் அபேரா.

உண்மைதான். எதியோப்பியாவில் பஞ்சம் பட்டினி என்பதற்கு அப்பால் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன. நம்மவர்களுள் எத்தனை பேர் நல்ல ‘மூட்’டில் வீடு திரும்பகிறோம்? ‘Home Sweet Home’ (வீடு இனிமையான வீடு) என்கிற நிறைவினை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் குடும்பங்கள் அரிதாகவே எனக்குத் தோன்றுகிறது. அபேராவின் வீட்டில் இருந்து எனது ஹோட்டல் அறைக்கு திரும்பும்போது சில எண்ணங்கள் என்னை மொய்த்துக் கொண்டன.

புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலே வாழும் இந்துக்கள், வரவேற்பறையில் அலங்காரத்துக்காக பெரிய குத்து விளக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் என்பதற்கான ஓர் அடையாளமாகவும் அந்தப் பெரிய குத்துவிளக்குகள் பயன்படுகின்றன. எதியோப்பியாவில் வாழும் அபேராவைப் போல, நாமும் வீடு திரும்பும் பொழுது, அந்தக் குத்துவிளக்குகளுக்கு முன்னால் தரித்து நின்று, எங்கள் அலுவலக ‘டென்ஷன்’ அனைத்தையும் வாசலிலேயே விட்டுவிட்டு, இனிய குடும்ப மணத்தை மட்டும் வீட்டுக்குள் கொண்டு வந்தால் என்ன?’

எதியோப்பியாவில் இருந்து திரும்பி வந்த பறப்பிலே ஒரு சபதம் எடுத்துக்கொண்டேன். வீட்டில் இனி மனைவி பிள்ளைகளுடன் சத்தம் போடக் கூடாதென்று!

 

2: சாலைகளே சாட்சியாக…

அன்று சனிக்கிழமை. அயலிலுள்ள அராபிய நாடுகள் போலல்லாமல், எதியோப்பியாவின் சனிக்கிழமையும் விடுமுறை நாளாகும். காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போல தோன்றியது. வீதிக்கு வந்தேன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை! உலக வங்கியின் உதவித்திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், ஆரம்பித்த – நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை ஆகிய சகல விபரங்களும் தாங்கிய விளம்பர பலகையொன்று சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி வழங்கும் உலக நிறுவனங்கள், தங்கள் பெயர்களுடன் சென்னை நகரில் தலைவர்களின் டிஜிற்றல் பனர்கள் வைப்பது போன்ற மோஸ்தரில் அடுத்தடுத்து வைத்திருந்தார்கள். எதியோப்பியா வறிய நாடு என்றும், பிற நாடுகளின் தயாளத்திலே அது வாழ்கின்றது என்றும் அவை மறைமுகமாக முரசறைகின்றனவோ என நான் நினைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. நான் தங்கியிருந்த ஹோட்டல், நெடுஞ்சாலையைக் கடக்கும் குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. நெடுஞ்சாலையில் யப்பானிலிருந்து இறக்குமதியான ஆடம்பர வாகனங்கள் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பாதசாரிகள் சர்வசாதாரணமாகக் குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத்துணிகளுடன் ஓடிப்பித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன். திடீரென ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை துரத்த அது நெடுஞ்சாலைக்கு குறுக்காக ஓடியது. சாலையில் வந்த பாரலொறி குழந்தையைக் காப்பாற்ற நினைத்து பக்கவாட்டுக்கு திரும்பியதில் எதிரே வந்த மினிபஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியது. மினிபஸ்ஸில் வந்த பயணிகள் பஸ்ஸுக்குள் நசுங்கிக் கிடந்தார்கள். ‘மரண ஓலம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை அந்த நேரத்தில் அந்த இடத்திலேதான் நான் பூரணமாக உணர்ந்துகொண்டேன். விபத்துக்குள்ளான பார லொறியில் சோளம் மா ஏற்றி வந்திருந்தார்கள். சோளம் மாச்சாக்குகள் வெளியே தூக்கி எறியப்பட்டு வீதியில் சோளம் மா கொட்டிக்கிடந்தது. மனித ரத்தம் ஆங்காங்கே சோளம் மாவை நனைத்துச் சகதியாக்கியது. கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தின் மத்தியிலே ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளும் நின்று வேடிக்கை பார்த்தார்கள். இடிபாடுகளுக்கிடையே நசுங்கிக் கிடந்தவர்களை வெளியே இழுத்துப்போடும் பணியில் நானும் ஈடுபட்டேன். லொறிச் சாரதி நொருங்கிக்கிடந்த லொறியின் முன்புறத்தில் முனகிக் கொண்டிருந்தான். அவனை வெளியே இழுத்தெடுப்பதில் வெள்ளைக்காரன் ஒருவன் முயன்று கொண்டிருந்தான்.

உன் கைகளில் காயம் ஏற்படுத்திக் கொள்ளாதே இங்கு ஓடும் குருதியில் எயிட்ஸ் கிருமிகள் இருக்கக்கூடும்’ என்று எச்சரித்தவாறே அவனது துணைவி அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

இந்த அமளிக்குள்ளும் கொட்டிக்கிடந்த சோளம் மாவை அள்ளுவதில் சிலர் அவசரம் காட்டினார்கள். இரத்தம் தோய்ந்த மாவை தவிர்த்து அள்ளினாலும் அவர்கள் அள்ளி அடைத்த பைகளில் மனித ரத்தம் திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது. வயிற்றுப் பசி மனிதநேயத்தை வென்றுவிடும் என எங்கோ வாசித்தது அப்பொழுது என் நினைவில் சிறகடித்தது.

எதியோப்பியாவின் வறுமை பற்றிய பிரசாரம் அதிகமே! அங்குள்ளவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதாக பிரசார சாதனங்கள் அவல் மெல்லுகின்றன. அங்கிருந்து நான் மெலிந்து திரும்புவேன் என்ற என் மனைவியின் நம்பிக்கை, இத்தகைய பிரசாரங்களிலே வேரூன்றியதுதான். எதியோப்பியாவில் நான் தங்கியிருந்த காலத்தில், கிராமங்கள் உட்படப் பரவலாகவே நான் பிரயாணம் செய்திருக்கிறேன். தொடர்பு சாதனங்கள் விளம்பரப்படுத்தும், எலும்பும் தோலுமாக, பட்டினியால் மரித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை எதியோப்பியாவின் என் சொந்த அனுபவத்தில் நான் கண்டதில்லை. வளர்முக நாடுகளில் நிலவக்கூடிய, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மனிதர்கள் எதியோப்பாயாவிலும் வாழ்கிறார்கள். அவ்வளவே!

அம்புலன்ஸும் பொலீசும் வந்ததும் அசுர கெதியில் பாதை சீராக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த கூட்டமும் கலையத் துவங்கியது.

ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?’ எனக் கேட்டவாறே கூட்டத்தில் நின்ற எதியோப்பிய இளைஞன் ஒருவன் புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான்.

நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு பரிமாறினேன். நான் எட்வேட், என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன் (Edward Mekonnen) எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான்.

நான் தங்கியிருந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். இவன் பொய் பேசுகிறான் என்று தெரிந்தும் அவனைப் பார்த்து புன்னைகத்தேன். இவனைப் போன்றவர்கள் ஏமாற்றுப்பேர்வளிகள். இவர்களிடம் நான் மிகவும் அவதானமாக இருப்பேன். இருப்பினும் அவனது மொழிப்புலமையும், பல்வேறு மொழிகளைப் பேசிய லாவகமும் அவனைக் கவனிக்க வைத்தன. எனது புன்னகையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, வெகு இயல்பாக எதியோப்பிய கலாசாரம் பற்றி என்னுடன் ஆங்கிலத்தில் பேசினான். கறுப்பை மூடி, லேசாக வெள்ளைநிறம் பூசினால் கலவை நிறம் ஒன்று தோன்றுமே. அத்தகைய ஒரு அரிதான நிறத்தில் அவன் அழகாகத் தோன்றினான்.

உண்மைதான். எதியோப்பாயர்கள் மிக அழகானவர்கள். ஆபிரிக்க, அராபிய, இந்திய சங்கமத்தில் பல்வேறு மனித சாயல்களை அங்கு காணலாம். எடுப்பான மூக்கும், தொந்தி இல்லாத இறுக்கமான நெடிய உடல்வாகும் ஒருவகைக் கவர்ச்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் குழந்தைகள் இல்லாத பல ஐரோப்பிய தம்பதிகள் எதியோப்பிய குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வருகிறார்களா?

இந்த தத்தெடுப்பு சம்பிரதாயத்துக்காக ஐரோப்பியத் தம்பதிகள் பலர் நான் தங்கிய ஹோட்டலிலேயே தங்கியிருந்தார்கள்.

இன்று சனிக்கிழமை விடுமுறைதானே? கேளிக்கைகள் நிறைந்த உல்லாசக் கிளப்புகள் இங்கு நிறையவே இருக்கின்றன. எதியோப்பிய நடனமும் உண்டு. மார்பை குலுக்கி ஆடும் எதியோப்பிய நடனம், மிகவும் பிரபல்யமானது. போவோமா?’ எனக்கேட்டு, எட்வேட் தன் தொழிலில் சிரத்தையாக இருந்தான். இவனைப் போன்றவர்கள், இரவு விடுதிகளாலும், கேளிக்கை விடுதிகளாலும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கென கொமிஷன் அடிப்படையில் ஏஜண்டுகளாக அமர்த்தப்பட்டிருப்பவர்கள். இந்த ஏஜெண்டுகள் நாம் கொஞ்சம் அசமந்தமாக இருந்தாலும் ஏமாற்றக்கூடியவர்கள் என்பதையும், அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுவதுதான் தற்பாதுகாப்புக்கான சூத்திரம் என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனாலும் இவர்களிடம் மிக அவதானமாக நடந்துகொண்டால் நிறையவே தகவல்களையும் புதினங்களையும் அள்ளிக் கொள்ளலாம் என்பதை விமான நிலையத்தில் அறிமுகமான ஜேர்மன்காரன் சொல்லியிருந்தான்.

எட்வேட் தன் தொழிலுக்கு புதியவன் என்பதை அவனுடன் பேசிய கொஞ்ச நேரத்திலே புரிந்து கொண்டேன். ‘கற்றுக்குட்டியான அவனிடம் நான் தொலையமாட்டேன்’ என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

கோப்பி குடிப்போம் வா!’ என அவனை அழைத்தேன். அவனுக்கு மகிழ்ச்சி. அருகில் இருந்த கோப்பிக்கடை ஒன்றைக் கண்டுபிடித்தோம். அதற்குள் நுழைந்தோம். எதியோப்பியாவின் மலைப்பகுதிகளிலே நிறைய கோப்பிச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அங்கு விளையும் கோப்பி பற்றி எதியோப்பியர்கள் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

எதியோப்பியா ஸ்பெஷல் கோப்பி’ என்ற விளம்பரங்களுடன் வீதியோரம் பல கடைகள் வியாபாரம் செய்கின்றன. கண் அசைவால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் எதியோப்பிய அழகிகள் இங்கும் தமது வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பார்கள். காலை வேளைகளில் கோப்பிக் கடையில் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. கோப்பிக்கடையின் மூலையொன்றில் நாங்கள் வசதியாக அமர்ந்துகொண்டோம். அவனுடன் கேளிக்கை விடுதியொன்றுக்கு நான் செல்லாத ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது. அன்றைய அவன் சீவியம், அவனுக்கு கிடைக்கும் கொமிஷனில் தான் தங்கியுள்ளது. என்னிடம் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றெண்ணி, என்னைக் கழற்றிவிட எத்தனித்தான்.

ஆயிரம் ‘Birr‘ (எதியோப்பிய பணம்) எடுத்து, ‘இதை வைத்துக் கொள்’ எனக் கூறினேன்.

சேர்!’ என ஏதொ சொல்ல அவதிப்பட்டான்.

வார்த்தைகள் அவன் தொண்டையில் அடைத்துக் கொண்டன. ஒருவகைத் திணறல். அவனுடைய செயலுக்கான காரணம் எனக்கு புரிந்தது. அவனுக்கு நான் கொடுத்த பணம் அவனது ஒருவார ஊதியம். டொலரிலே செலவு செய்து பழகிய எனக்கு அது பெரிய தொகையல்ல. உண்மையாகவே இந்தப் பணம் எனக்கா? கேளிக்கை விடுதிக்கும் வரமாட்டேன் என்கிறீர்களே?’ என ஒருவித சந்தேகத்துடன் ராகம் இழுத்தான்.

உனக்குத்தான், உன்னுடன் சாவகாசமாகப் பேச வேண்டும். எடுத்துக்கொள்’ என்றேன். நன்றியுடன் என்னைப் பார்த்து சலாம் வைத்தபோது அக்கண்களிலே சுரந்து நின்ற கண்ணீரை நான் அவதானிக்க தவறவில்லை.

 

3: மொழியே உணர்வாக…

எதியோப்பிய மலைப்பிரதேசத்தின் எரிற்றியா எல்லையில் அமைந்த கிராமம் அது! அழகான கிராமம். அங்குதான் எட்வேட் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும், படித்ததெல்லாம் கிராமத்தை ஒட்டிய Axum என்ற நகரத்தில் கிறீஸ்தவ மிஷனரி பாடசாலையொன்றில், சரித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகவும் பிரென்ஞ், ஜேர்மன், லற்றின் ஆகிய மொழிகளைத் துணைப்பாடங்களாகவும் கற்றதாகச் சொன்னான்.

சரித்திர ரீதியாக, எதியோப்பியா அபிசீனியா (Abysinia) என்றழைக்கப்பட்டது. அண்டை நாடான எரிற்றியாவை இத்தாலியர் தமது குடியேற்ற நாடாக்கினர். அங்கிருந்து எதியோப்பியாவை இணைத்துக் கொள்ள இத்தாலி முயன்றது. இவை பற்றிய பூரண எதியோப்பிய வரலாற்று அறிவு அவனுக்கு இருந்ததை அவனுடன் பேசிய குறுகிய நேரத்தில் தெரிந்துகொண்டேன்.

எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் இலங்கை ஈழப்பிரச்சனையிலும் உண்டு. எதியோப்பிய புத்திசாலி இளைஞன் ஒருவன் இதை எப்படிப் பார்க்கிறான் என்பதை தெரிந்துகொள்ளவே அவனிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். இல்லையேல் விலைமாதர்களுக்கு வாடிக்கை பிடிக்கும் ஒரு ஏஜெண்டிற்கு நான் ஆயிரம் ‘Birr’ பணத்தை விட்டெறிந்திருக்க மாட்டேன்.

எதியோப்பியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி Amharic. இதுவே எதியோப்பிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழி. எரிற்றியாவில்Tigrinya என்கிற மொழியே பொதுவழக்கில் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த எரிற்றியா, இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின், பிரித்தானியகர்களின் நிர்வாகத்துக்குரிய நிலப் பரப்பாக்கப்பட்டது.

இலங்கையின் தமிழப்பகுதிகள் எவ்வாறு 1832ம் ஆண்டு பிரித்தானியரின் நிர்வாக வசதிக்காக சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்டனவொ, அவ்வாறே ஆட்சி வசதிக்காக 1952ம் ஆண்டு பிரித்தானியர்களால் எரிற்றியாவும் எதியோப்பியாவும் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இது பச்சை மண்ணையும் சுட்ட மண்ணையும் இணைக்கும் விவகாரம்தான்! எரிற்றிய மக்கள் எதியோப்பிய தேசியத்தில் கரைந்து போகத் தயாராக இல்லை. இதனால் இனப்போர் எழுந்தது. இரண்டு பக்கமும் உயிர் சேதம் பெருகியது. எட்வேட் பிறந்து வளர்ந்த எரிற்றிய எல்லையோர மலைப்பிரதேசத்தில் கிளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டதாக நான் ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். இதுபற்றி அவனிடம் கேட்டேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவன் தன் முன்னே மேசையில் இருந்த கோப்பியை ஒரே மடக்கில் குடித்த பின்னர் பேசத்துவங்கினான்.

எரிற்றியாவில் இருந்து கொண்டே எதியோப்பியாவை அடிமைப்படுத்த இத்தாலி முயன்றது. காடுகளும் தொடர் மலைகளும் நிறைந்துள்ள எதியோப்பியாவில் மலை வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட எதியோப்பிய அரசனையும், வில்லும் அம்பும் ஏந்திய அவரது படையையும் வெல்ல முடியவில்லை. 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ம் ஆண்டு வரை இத்தாலிய ஆதிக்கம் எதியோப்பியாவின் சில பிரதேசங்களில் இருந்த போதிலும், எதியோப்பியா யாருக்கும் என்றுமே அடிமைப்பட்ட நாடாக இருந்ததில்லை. என் தந்தை வழிப்பாட்டனார் இத்தாலியர்களுடன் தீரமுடன் போர் புரிந்து மாண்டதாக என் தந்தை கூறுவார்.’

இதனைக் கூறியபோது எட்வேட் பெருமிதமடைந்தான். அது நியாயமானதும் கூட.

உன் தந்தை இப்போதும் நீ பிறந்த கிராமத்தில்தான் இருக்கிறாரா?’ எனக் கேட்டேன்.

அவரும் கொல்லப்பட்டு விட்டார்.’ என்றவன் சில விநாடி மௌனத்தின்பின் மீண்டும் தொடர்ந்தான்.

இத்தாலிய ஆதிக்கத்ததுக்கெதிராக எதியோப்பியர்கள் தீரமுடன் போரிட்டார்கள் இங்கேதான் பிரித்தானியர்கள் வழமை போல தங்கள் மூக்கை நுழைத்துக் கொண்டார்கள். எதியோப்பிய வீரர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக்கூறிக் கொண்டு போரில் இத்தாலியகர்களை வெற்றிகொண்டு இரு நாடுகளையும் இணைத்தார்கள்’ எனக்கூறி நிறுத்தினான்.

அங்கேதான் பாரிய வரலாற்றுத் தவறு ஏற்பட்டது’ எனப் புத்தகங்களிலே படித்த என் ஞானத்தை அவிழ்க்கத் துவங்கிய பொழுது சைகை மூலம் என்னை நிறுத்தி, அவன் தொடர்ந்தான்.

நீங்கள் சொல்வது உண்மைதான். இத்தாலியர்களை வெளியேற்றுவதில் எதியோப்பியர்களும் எரிற்றியர்களும் சேர்ந்தே போரிட்டார்கள். பிரித்தானியர்களால் இரு நாடுகளும் இணைக்கப்பட்டபின், எதியோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்க, எதியோப்பியர்களுக்கும் எரிற்றியர்களுக்கு மிடையில் போர் எழுந்தது…’

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு. இதே நிலைமை தான் எனது தாய் நாடாகிய ஸ்ரீலங்காவிலும் நடந்தது. என் தந்தையர் நாடான தமிழ் ஈழத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்த ஆங்கிலேயர் சிங்கள இனத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தார்கள்’ என்றேன்.

உங்கள் நாட்டுப் பிரச்சனைபற்றி நான் படித்த மிஷன் பாடசாலையில் மதபோதகர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிங்களம் அங்கு அரச மொழியாக்கப்பட்டது போலவே, இங்கும் இணைக்கப்பட்ட இரண்டு நாட்டுக்கும் எதியோப்பிய மொழியாகிய Amharic பொது மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டது.’

எதியோப்பியாவுடன் ஒப்பிடும்போது எரிற்றியா பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானது. எரிற்றியர்களின் மொழி, கலாசாரம் ஆகியன எதியோப்பியர்களிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டன. செயற்கையான அரசியல் இணைப்பு ஓர் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா? கொதிக்கும் எண்ணைக் கொப்பரையிலிருந்து தப்புவதற்கு நெருப்பில் குதித்த கதை போல இத்தாலியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு எதியோப்பியரின் ஆதிக்கத்திற்குள் சிக்கி எரிற்றியர்கள் விழித்தார்கள்’ என்றேன். இதைச் சொல்லும்பொழுது ஈழத்தமிழர் அநுபவிக்கும் துயர்களை நினைவுபடுத்திக் கொண்டதால் உணர்ச்சி வசப்பட்டேன்.

நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். எரிற்றியர் களால் மொழித்திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எரிற்றிய மக்கள் Amharic மொழியைப் பேசவும் பயிலவும் மறுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கிளர்ச்சியில் 1993ம் ஆண்டு ‘எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கம்’ எரிற்றியாவை தன்னிச்சையாகத் தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது…’

அந்த வரலாற்றைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லேன்’ என ஆவலுடன் கேட்டேன்.

‘1974ஆம் ஆண்டில் எதியோப்பியாவில் சோவியத் சார்புடைய கம்மியூனிச சித்தாந்தத்திற்கு ஆதரவானவர் களுடைய கையோங்கி, இராணுவப் புரட்சி மூலம் சோவியத் யூனியனுக்கு விசுவாசம் தெரிவித்த இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

உலகில் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றிருந்த எதியோப்பிய மக்களால், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம் எதியோப்பியாவில் தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா? எரிற்றிய விடுதலைக்குப் போராடிய எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துடன் கம்யூனிச இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட ஆரம்பிக்கப்பட்ட எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம் சேர்ந்து கொண்டது…’

இந்த இடத்தில் எட்வேட் ஒரு முத்தாய்ப்பு வைத்தான். ஏன் பேச்சை நிறுத்தி எழுந்தான் என்பது விளங்கவில்லை. சிரித்தவாறே சங்கடத்துடன் சிறுநீர் கழித்து வருவதாகக் கூறிச் சென்றான்.

எதியோப்பிய மக்கள் விடுதலை இயக்கம் போன்றே இலங்கையிலும், ஜே.வி.பி. என்கிற மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள விடுதலைக்கென்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது இனவாத சக்தியாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்டேன்.

எட்வேட் ஒரு சிகரெட்டை பற்ற வைத்த வண்ணம் மீண்டும் என் முன்பாக வந்தமர்ந்தான்.

இரண்டு இயக்கங்களும் சோவியத் சார்புடைய இராணுவ ஆட்சிக்கு எதிராக போர் புரிந்தார்கள். மிகுதியைச் சொல்லு…’ என விட்ட இடத்தை நினைவுபடுத்தி அடி எடுத்துக் கொடுத்தேன்.

சோவியத் சார்பு இராணுவ ஆட்சி, சர்வதேச முதலாளித் துவத்துக்குத் தோதுப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், இரண்டு விடுதலை அமைப்புகளும் இணைந்து போராடுவதை சாத்தியப்படுத்துவதில் வெற்றிபெற்றன. இதனால் சோவியத் சார்பு ஆட்சி வீழ்ந்தது. இந்த போட்டத்தின் தொடர்ச்சியாக எரிற்றியர்கள் 1993ம் ஆண்டு எரிற்றியாவை தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்’ என்றான்.

அந்த நிகழ்ச்சிகளை அசைபோடுபனைப் போல் எட்வேட் மௌனம் சாதித்தான்.

இந்தப் பிரிவினைப் பிரகடனத்திற்குப் பின்னர் அமைதி நிலவியதா?’ எனக் கொக்கி போட்டு அவனை மீண்டும் சம்பாஷனைக்குள் இழுத்தேன்.

அதுதான் இல்லை. 1998ம் ஆண்டு மீண்டும் எதியோப்பிய எரிற்றிய எல்லைப்பிரச்சினை துவங்கியது. அந்த கிளர்ச்சியில் தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். எரிற்றிய எல்லையில், எதியோப்பியாவுக்குள் எரிற்றியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் இரவோடு இரவாக உடுத்த உடுப்புடன் எரிற்றியாவுக்குத் துரத்தப்பட்டார்கள். அவர்களுள் என் காதலியும் ஒருத்தி. அவளை இன்னும் நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். அவளை இனிப்பார்ப்பது சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை…’ என்றான் பரிதாபமாக.

உன் தாயார் எங்கிருக்கிறார்? உனக்கு சகோதரர்கள் இல்லையா?’

ஏனைய உறவுகளை நினைவுபடுத்தல், காதலியை மறப்பதற்கான வடிகாலாய் அமைதல் கூடுமென்கிற எண்ணத்தினாலுங் கேட்டேன். இப்பொழுது அதை மீள நினைத்துப் பார்க்கையில் விடுப்புக் கேட்கும் ‘யாழ்ப்பாணம்’ என்னுள் வாழ்வதாகவுந் தோன்றுகிறது.

தொழில் நிமிர்த்தம் என் தாய் எரிற்றியாவில் இருந்து எதியோப்பியாவின் எல்லையோரம் உள்ள Axum நகரத்துக்குக் குடிபெயர்ந்ததாக அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு மருத்துவத் தாதி. என் தந்தை இத்தாலியில் பயிற்சி பெற்ற பிரபல மருத்துவர். என் தந்தையின் தாதியாகப் பணிபுரிந்த போது இருவரும் காதலித்து மணம் முடித்துக் கொண்டார்களாம்!

இந்தக் தகவல்களை கூறியபின், எட்வேட் தன் இரு கைகளாலும் முகத்தை பொத்தியவாறு மௌனமாக இருந்தான். பின்னர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.

அவன் கதை தொடர்ந்தது.

கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததாக குற்றம் சாட்டி, சோவியத் சார்பு எதியோப்பிய இராணுவம், என் தந்தையை சிறையில் அடைத்தது. பல மாதங்களின் பின்னர் அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது. தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் எனது தாய் எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தாதியாக பணிபுரிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓர் இரவு இராணுவம் என் தாயையும், அவருடன் வகித்த அனைவரையும் அவர்களுடைய வீட்டிலேயே சுட்டுக் கொன்றது. நான் மிஷனரி பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்ததால் தப்பிப் பிழைத்தேன். அதன்பின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அடிசபாபாவில் வாழ்கிறேன். நான் படிக்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன்’ என்றவன் சிகரெட்டை வெறுப்புடன் நூர்த்து எறிந்தான். அந்த நேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நாமிருந்த கோப்பிக் கடைக்குள் நுழைந்து எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசுரத்தை விநியோகித்தார்கள். உணவு விடுதிகள், கேளிக்கை நிலையங்கள் எனப் பொது இடங்களில் அடிக்கடி இவர்கள் இத்தகைய பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கயூடாக பெருந்தொகை பணத்தைச் செலவு செய்கிறது. இருப்பினும் எயிட்ஸ் நோய் எதியோப்பிய சௌக்கியத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. எட்வேட் துண்டு பிரசாரத்தை வாங்கவில்லை. வேண்டாம் என தலை மூலம் தெரிவித்தான். அதிதீவிர பிரசாரத்தினால் ஏற்படச் சலிப்பாகக்கூட இருக்கலாம். நீ ஒரு வைத்திய பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன். எயிட்ஸ் இங்கு பாரிய பிரச்சனை என்பது உனக்குத் தெரியும். இருப்பினும் கேளிக்கை விடுதிக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வது தவறாக தெரியவில்லையா?’

அவனுடைய செயலுக்கு அர்த்தம் தேட விழைந்ததினால் இவ்வாறு கேட்டேன்.

தவறுதான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் கனவு, சரித்திர பாடத்தில் பல்கலைக்கழகப்பட்டம் பெற்று ஒரு பேராசிரியராக வேண்டுமென்பதே. அதற்குப் பணம் வேண்டும். முன்பின் தெரியாத, எனக்கென யாருமற்ற இந்த அடிசபாபா நகரத்திலே, அன்றாடம் உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாக உள்ளது. போரின் தாக்கத்தினால் நல்லொழுக்க விதிகள் செத்துவிடுகின்றன….’

உனக்குத்தான் பல மொழிகள் தெரிகிறதே. இந்தத் தகைமையை வைத்து நல்ல வேலை என்று தேடிக்கொள்ள முடியாதா?

Sir, நீங்கள் வாழும் உலகம் வேறு. ஆபிரிக்கா வேறு. இங்கு வேலை எடுப்பதானால் ‘சிபார்சு’ வேண்டும். யாராவது பிணை நிற்கவேண்டும். முன்பின் தெரியாத இந்த நகரத்தில் எனக்கு பிணை கொடுக்க யார் வருவார்கள், நான் பார்ப்பது நியாயமான தொழிலல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

மதியம் தாண்டிவிட்டது என்பதை சடுதியாக உணர்ந்தேன். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எதியோப்பியாவுக்கு வந்த நாள்முதல், மேற்கத்திய உணவுவகைகளையும், மேல்நாட்டுப் பாணியில் தயாரிக்கப்பட்ட ஒரு சில எதியோப்பிய உணவுகளையும் மாத்திரம் சுவைத்திருந்தேன். சம்பிரதாயமான அசல் எதியோப்பிய உணவு உண்பதற்கும், அவர்களுடன் ஒருவனாய் பழகுவதற்கும் நான் மிகவும் விரும்பினேன். பல்கலைக்கழகத்தினர் தனியோர் உலகில் வாழப் பழகிக் கொண்டவர்கள். அது புத்திஜீவித உலகம் என அவர்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உலகம். அவர்கள் எதியோப்பியாவின் மறுபக்க வாழ்க்கை ஒன்று இல்லாததுபோல நடித்தார்கள். எட்வேட் பேசிய பல விஷயங்கள் உண்மையானவை என்பதை அவன் உடல்மொழியும் கண்களும் சொல்லின. எனவே, அந்த மறுபக்கத்தைத் தரிசிப்பதற்கு எட்வேட்டின் துணையை நாடலாம் எனத் தோன்றியது.

இன்று இரவு என்னை எதியோப்பிய உணவு வகைகள் தரும் ஒரு விடுதிக்குக் கூட்டிச் செல்வாயா?’ எனக் கேட்டேன். அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘நாலுமணிக்கு உங்கள் ஹோட்டல் வாசலில் காத்திருப்பேன்’ என உறுதி தந்து விடை பெற்றான்.

 

4: உணர்வுகளே உறவாக…

தொலைபேசி மணி அடித்தது! சிட்னியிலிருந்து வரும் அழைப்பென வரவேற்பு பெண்மணி தொலைபேசியில் சிணுங்கினாள். நலம் விசாரிக்க, மனைவி அடிசபாபாவுக்கு அழைத்திருந்தாள். வீட்டுப் புதினங்களைச் சொல்லியபின், கொழும்பு பண்டங்களைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி, ‘தொந்தி குறைந்திருக்கிறதா?’ என மறக்காது கேட்டாள்.

கால் சட்டை இப்போது லூசாக இருக்கிறது. வரும்போது தொந்தி குறைத்து அழகனாக வருவேன்’ என ‘ஐஸ்’ வைத்து பேசினேன்.

எங்களுக்கு அழகு வேண்டாம். உடம்பு குறைத்து சுகதேசியாய் இருந்தால் போதும்’ எனச் சொல்லி தொலைபேசியைத் துண்டித்தாள்.

எட்வேட் நாலு மணிக்கு முன்னரே ஆஜராகி, வரவேற்பறையில் காத்திருந்தான். எது எப்படி இருந்தாலும், எதியோப்பியாவில் சில மணித்தியாலங்கள் மாத்திரம் பழகிய ஒருவனுடன், இரவு உணவு விடுதிக்கு செல்வது உகந்ததல்ல. இதனால் பல்கலைக்கழக வாகனத்தை மாலை நாலு மணிக்கு, ஹோட்டலுக்கு கொண்டு வரும்படி சாரதிக்குச் சொல்லியிருந்தேன். சாரதி அதிகம் ஆங்கிலம் பேசமாட்டான். இருப்பினும் அவன் வருவது பாதுகாப்பானது என்றெண்ணி சகல விடயங்களையும் மாணவ மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அவனுக்கு விளக்கமாகச் சொல்லியிருந்தேன். கேளிக்கை விடுதிகள் இரவு ஒன்பது மணிக்கு மேல்த்தான் களைகட்டும். நாம் புறப்பட ஆயத்தமானதோ மாலை நான்கு மணிக்கு. இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்யலாம் என்பதையிட்டு சாரதியும் எட்வேட்டும் கலந்தாலோசித்து, மலைப்பிரதேசத்துக்கு போகலாமென்றார்கள். சாரதி வரும் தைரியத்தில் நானும் அவர்களுடைய பிரேரிப்புக்குச் சம்மதித்தேன்.

வாகனம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. வன இலாகாவின் முகாமையில் ஒழுங்குமுறைப்படி வளர்க்கப்பட்ட பைன் மரங்களும், இயற்கைக் காடுகளுகமாக மலை முழுவதுமாக பச்சை பசேலென்ற கண்கொள்ளாக் காட்சி! இடையிடையே கொப்பிச் செடிகளும் வாழைத் தோட்டங்களும் வன விவசாயத்துக்குச் (Agro Forestry) சாட்சிகளாக அமைந்திருந்தன. மலைப்பாதையோரம் எதியோப்பிய இளைஞர்கள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் வலுவான நீண்ட கால்களும், வளைந்து கொடுக்கும் மெல்லிய உடல்வாகும். மலைப்பிரதேச ஓட்டப் பயிற்சிகளும் மரதன் ஓட்டத்தில் அவர்கள் உலகளவிலே சாதனை புரியக் காரணமாய் அமைந்திருக்கலாம். உண்மைதான்! இவர்கள் அந்நாட்டுக்குப் பெருமை தேடித் தருபவர்கள். இதனால் இவர்கள் அங்கு மண்ணின் மைந்தர்களாக நாட்டுக்கு பெருமை தேடித்தரும் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.

‘Bikila Abebe ஒரு காலத்தில் இப்படித்தான் ஓட்டப் பயிற்சி பெற்றிருப்பார்’ என்றேன். சாரதியும் எட்வேட்டும் பெருமை பொங்க என்னைப் பார்த்தார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது ஆபிரிக்கர், எதியோப்பியாவைச் சோர்ந்த Bikila Abebe 1960, 1964ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டுமுறை தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தார். அத்துடன், 1960ம் ஆண்டு மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனை நிலைநாட்டியவர். அவரையிட்டு நீங்கள் உண்மையாகவே பெருமைப்படலாம்’ என எனது பொது அறிவை இடமறிந்து அவிழ்த்துவிட்டேன்.

ஒரு நாட்டுக்கு போகமுன் அந்நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தளம் மூலம் அறிந்து கொள்வது என் வழக்கம். அது அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறது. அது இன்றும் கைகொடுத்தது. Bikila Abebe 1975ம் ஆண்டு தனது 41வது வயதில் காலமான போதும், அவரைத் தொடர்ந்து Gezahegnena Abera மரதன் ஓட்டப்போட்டியில் சாதனை பரிந்தார். இப்போது சகோதரர்களான Kenenisa Bekela மற்றும் Tarku Bekela ஆகிய இருவரும் எதியோப்பியாவுக்கு பெருமை தேடித் தருகிறார்கள் என்ற விபரத்தை சாரதி சொன்னவிதம், நம் நாட்டில் கிரிக்கட் வீரர்கள் பற்றி நாம் சுவாரஸ்யமாகப் பேசும் பாங்கில் இருந்தது.

மலையும் பள்ளத்தாக்கும் மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்தோடும் நீர்வீழ்ச்சியும் அமைந்த, ரம்மியமான அந்த இடத்தை உள்ளடக்கிய எதியோப்பியா, வறுமையால் வாடும் நாடென்பது நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அழகிய சூழலிலே அமைந்திருந்தது அந்த உணவு விடுதி, களிமண்ணாலும் புற்களாலும் எதியோப்பிய கைவண்ணத்தில் உருவான கெட்டகை. உள்ளே மெருகு செய்யப்பட்ட மரக்குற்றிகளால் இருக்கைகள் செய்திருந்தார்கள். வாடிக்கையாளர்களின் வசதி குறையாதவாறு, இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உட்பகுதியை அழகுபடுத்தியிருந்தார்கள். இவ்வாறு எதியோப்பிய கலாசாரம் நெய்யப் பட்டிருந்த அந்த விடுதியிலே, பாரம்பரியமான உணவு பரிமாறப்படுகிறது.

உணவு விடுதி நிரம்பி வழிந்தது. எதியோப்பிய மேல்தட்டு வர்க்கத்தினரும், வெளிநாட்டு உல்லாசிகளும் பெருமளவிலே காணப்பட்டனர். மார்பின் பெரும்பகுதி வெளியே துருத்திக் கொண்டிருக்கும்படி உடையணிந்த அழகிய இளம்பெண்கள் பரிசாரிகர்களாக வலம் வருவது அழகுக்கு அழகு சேர்த்தது.

எதியோப்பிய Amharic மொழியில் வணக்கம் கூறியவாறு அழகான பெண் ஒருத்தி எம்முன்னே, சமைக்காத பச்சை வெள்ளாட்டு இறைச்சித் துண்டுகளை தட்டில் வைத்தாள். நாம் இருந்த மேசையில் சிறியதும் பெரியதுமான கூரிய கத்திகள் குடுவையொன்றில் இருந்தன. உப்பு, மிளகாய், மஞ்சள் பொடி கொண்ட சிறு கிண்ணங்களைப் பிறிதொரு பணிப்பெண் மேசையில் அடுக்கினாள். இந்திய பெண்ணின் சாயலை ஒத்த அழகிய எதியோப்பிய இளம்பெண் ஒருத்தி மஞ்சள் நிற திரவமொன்றை பெரியதொரு குடுவையில் கொண்டுவந்து எம்முடன் அமர்ந்து கொண்டாள். அவளது கூந்தல் இந்தியப் பெண்களினது போல் நீண்டு வளர்ந்திருந்தது. ஆபிரிக்க அராபிய கலவையில் உருவானது அவளது உருவச்சாயல், இப்படியான பல பெண்கள் எதியோப்பியாவில் வாழ்கிறார்கள். உண்மையிலேயே எதியோப்பிய பெண்களைப்போல அழகானவர்களை நான் வேறெந்த ஆபிரிக்க நாடுகளிலும் பார்த்ததில்லை. இரத்தக் கலப்புகளின் ஒத்திசைவில் உருவானதே அந்த அபூர்வ அழகு. தனது வெண்பற்கள் வெளியே தெரிய புன்சிரிப்பை உதிர்த்தவாறு மஞ்சள் நிற திரவத்தை கிளாசில் ஊற்றி, எமக்கு பரிமாறினாள்.

இது என்ன திரவம்?’ எனக கேட்டேன்.

இது ஒரு வகை மது. இதை இங்கு Tej என அழைப்பார்கள். காட்டில் இருந்து கிடைக்கும் ஒருவை தேனைப் புளிக்க வைத்து இக்கள்ளைத் தயாரிப்பாளர்கள். இதுதான் எமது பாரம்பரிய பியர், உடம்புக்கு நல்லது,’ என அர்த்தம் தொனினக்கக் கண்சிமிட்டிக் கூறினான் சாரதி. எட்வேட் அதிகம் பேசவில்லை. கூரிய கத்தியால் பச்சை இறைச்சியை வெட்டி மிளகாய்த்தூள் உப்பு கலவையில் ஒத்தி எடுத்து சாப்பிடுவதிலே குறியாக இருந்தான். இதேபோல ஒரு துண்டை வெட்டி ‘சுவைத்துப்பார்’ என சாரதி என்னிடம் தந்தாள். பச்சை இறைச்சி ‘சளசள’ வென இருந்ததேயன்றி அருவருப்பாக இருக்கவில்லை. இதேபோல யப்பானில் பச்சை மீன் துண்டுகளை மகி (Magi) சோஸில் தொட்டு, கடற் சாதாளையுடன் சாப்பிட்டிருக்கிறேன். இப்படியான நேரங்களில் ஜேர்மனியில் எனக்கு இராசாயனம் கற்பித்த ஜேர்மன் பேராசிரியர், தனது விரிவுரைகளில் சொல்வது ஞாபகம் வரும். ‘All organic matters are edible’ என்பதுதான் அவர் சித்தாந்தம்!

உண்மைதான்! இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது உணவு பற்றாக்குறையினால் ஜேர்மனியில் பூனைகளை கொன்று தின்றதாக பேராசிரியர் கூறுவார். முயல் சாப்பிடும் நாம் பூனை சாப்பிடக்கூடாதா? பூனையும் முயலும் ஒரே குடும்ப விலங்குகள் அல்லவா? வன்னியிலே உடும்பு இறைச்சியின் ருசியை எவ்வளவு சிலாகிக்கின்றோம். அவுஸ்திரேலியாவின் வடமாநில பிரதேசத்தில், இன்றும் முதலை இறைச்சி உணவு விடுதிகளில் கிடைக்கும். உடும்புக்கும் முதலைக்கும் என்ன வித்தியாசம்?

பச்சை இறைச்சி எனக்கு தோதுப்படவில்லை என்பதை உணர்ந்த டேவிட் Ingera என அழைக்கப்படும் ஒருவகை உணவை கொண்டுவரும்படி பரிசாராகப் பெண்ணிடம் சொன்னான். சுளகு போன்றதொரு பெரிய தட்டில் தோசை கொண்டு வந்தாள் பணிப்பெண். நாம் வீட்டில் தயாரிக்கும், தோசையை விட ஐந்து மடங்கு பெரியது. நம்மூர் தோசையைச்சுற்றி சட்னி, சாம்பார், சம்பல் போன்றன வைப்போமே, அதுபோலப் பல கறிகள் வைத்திருந்தார்கள். அதில் ஒன்று நம்மூர் பருப்புக்கறி, மற்றய கறிகளுக்கும் மசாலா போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்த்திருந்தார்கள். எனக்குப் பரிமாறப்பட்ட உணவு பற்றி அதனைக் கொண்டு வந்த பணிப்பெண்ணிடம் கேட்டேன். ‘Taff’ எனப்படும் எதியோப்பிய பூர்வீக (Native) தானியத்தின் மாவைப் புளிக்க வைத்ததுÉ தோசை போல் வார்த்தது ஆவியில் அவிப்பார்கள்’ என விளக்கினான். நம்மவர்கள் போல தோசைக்கல்லிலே வார்த்துச் சுடுவதில்லை. தோற்றத்தில் நம்மூர் தோசை, சுவையில் இட்லி. இத்தகைய உணவு புதுமையாகப்பட்டது. நான் எட்வேட்டைப் பார்த்தேன்.

இத்தயாரிப்பு முறை இந்தியத் தொடர்புகளினால் நம் முன்னோர்கள் அறிந்திருத்தலும் சாத்தியம். இதுதான் நமது பாரம்பரிய உணவு. உங்களுக்குச் சோறுபோல.’

எட்வேட் தன் அனுமானங்களையும் சேர்த்துக் கூறினான்.

எதியோப்பிய சுதேசிய வாத்தியம் முழங்க, ஆட்டம் துவங்கியது. பெண்கள் தமது தோள்களையும் மார்பையும் குலுக்கி ஆடுவது அவர்களது ஆட்டங்களில் ஒருவகை. இதைப் பார்க்கவென உல்லாசிகள் கூடுவதாக சாரதி சொன்னான். ஒவ்வொரு விடுதியிலும் வெள்ளை நிற பருத்தி நூலாடை அணிந்த, நடன மாதர்கள் இருப்பார்கள். மார்பகங்கள் குலுங்குவது துல்லியமாகத் தெரியும்படி அவர்களது உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. நடனப்பெண்கள் உல்லாசிகள் முன் மார்பைக் குலுக்கி ஆடினார்கள். ஓர் உல்லாசி பணத்தாளை அவனது ரவிக்கைக்குள் செருகியதும், அடுத்தவரின் முன்சென்றாள். இவ்வாறு பணம் சேர்ப்பது பிச்சை எடுப்பது போன்றதல்ல எனத் தோன்றியது. அவர்களின் அழகுக்கான அஞ்சலி என்று விளங்கிக் கொண்டேன்.

நமது கோடம்பாக்கத்துச் சினிமாக்காரர்கள் சிலர் இந்த நடனத்தைப் பார்த்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு இயல்பாகவே எழுந்தது.

நேரம் நள்ளிரவை நெருங்க, பெண்களால் உணவு விடுதி நிரம்பிவழிந்தது. தொடர்ந்தும் இருப்பது உசிதமல்ல என உணர்ந்து ஹோட்டலுக்கு திரும்பினோம்.

அடுத்த நாள் காலை நான் பல்கலைக்கழகம் சென்றதும், பாரம்பரிய உணவுவிடுதிக்கு சென்றதும், பச்சை இறைச்சி உண்டதும் பல்கலைக்கழகத்தினருக்குத் தெரிந்திருந்தது என்பதை அறிந்து கொண்டேன். வாகனச் சாரதி ஓட்டைவாயன் என்பது அப்பொழுதுதான் உறைத்தது. எதியோப்பிய பேராசிரியர் கடிந்து கொண்டார்! அங்குள்ள பச்சை இறைச்சியில் நாடாப்புழுக்களின் முட்டைகள் இருக்கக்கூடும் எனச் சொல்லி தயாராக வாங்கி வைத்திருந்த மாத்திரைகளைத் தந்தார். வயிற்றுவலி ஏற்படக்கூடும். எனவே தவறாமல் மருந்து எடுக்கும்படியும், எதியோப்பியர்கள் இதற்கு பழக்கப்பட்டவர்கள் என்றும் இப்படிப்பட்ட இடங்களை இனி தவிக்கும்படியும் அவர் நீண்டதோர் அறிவுரை வழங்கினார்.

பாம்பு தின்னும் ஊருக்கு போனால் நடுமுறி நமக்கு என எங்கள் ஊர் தம்பித்துரை அண்ணர் சொல்லுவார். பூனகரி பக்கம் போய் உடும்பு இறைச்சியும் முயல் இறைச்சியும் சுவைத்த வரலாற்றை சுவைபட அவர் சொல்லும்போது அவருக்கு வீணீரும் விழும். வன்னிப்பகுதியின் இறைச்சிச் சுவை அலாதியானது. மான் – மரை இறைச்சி வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது வேறு விஷயம். ஆனால் போகுமிடங்களில் பச்சையாக சாப்பிடுவதில் வில்லங்கத்திலே மாட்டிக்கொள்ளும் அபாயம் உண்டு. அபாயங்களை எதிர்கொள்வதுதான் வாழ்க்கை என்கிற தத்துவம் இதற்குப் பொருந்துமோ என நான் சித்தித்ததும் உண்டு.

 

5: வரலாறே பாடமாக…

நான் பயணித்த விமானம் சிட்னியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. நான் உடல் மெலிந்து திரும்பிக் கொண்டிருக்கிறேனா?

இந்தக் கவலையை நான் என் மனைவியிடம் விட்டுவிட்டேன். என் மனமோ நான் பிறந்த நாடாகிய இலங்கைக்கும் எதியோப்பியாவுக்கும் இடையே தறிபடும் பாடனைத்தும் பட்டுக்கொண்டிருந்தது. என் பால்ய நண்பன் பரமன் எனக்கொரு கடிதமெழுதியிருந்தான். என் கிராமத்தில் நான் அரிவரி படித்த பாடசாலையில், கிராம மக்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு ஸ்ரீலங்கா இராணுவம் பணித்ததாகவும், விசாரணையின் பின் தன் இரு பிள்ளைகளும் காரணமின்றி கைது செய்யப்பட்டு, கூட்டிச் செல்லப்பட்டதாகவும் எழுதியிருந்தான்.

பரமன் தன் கடின உழைப்பினால் யாழ்ப்பாண மண்ணை வளப்படுத்தும் கமக்காரன். அவனது பிள்ளைகளும் அவனுடன் விவசாயத்திலேயே ஈடுபட்டிருந்தனர். எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் மண்ணுக்கு வியர்வை சிந்தும் பாட்டாளிகள். நாட்டுக்கு இரத்தம் சிந்தும் எந்த இயக்கத்துடனும் ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ளாத அப்பாவிகள்.

ஏன் இந்த அவலம்…?

எதியோப்பிய அநுபவங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த இலக்கிய வேளையிலே, அதன் வரலாறு குறித்து அழுத்தம் கொடுத்தமைக்கு ஒரு காரணம் உண்டு. ஆபிரிக்க, ஆசிய, அமெரிக்கக் கண்டங்களிலே குடியேற்ற நாடுகளை நிறுவி, தமது நாட்டின் பொருள் வசதிகளைப் பெருக்கிக் கொண்ட, ஐரோப்பிய நாடுகள் செய்த அடாவடித்தனங்களினாலும்… குளறுபடிகளினாலும் முன்னைய குடியேற்ற நாடுகளிலே நிலவும் சோகங்களுக்கு எதியோப்பியா ஓர் ஆய்வுகூட எடுத்துக்காட்டு! இந்த சோகங்களுக்கும் இலங்கையில் தீர்க்கப்படாத இனப்பிரச்சனை என்கிற நீடிக்கும் சோகத்திற்கும் ஓர் ஒருமைப்பாடு இருப்பதை நீங்கள் உணருவீர்கள். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என சுயாதீனமான மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஒரு தீவாகவே இலங்கை விளங்கியது. போத்துக்கேயர், முதலிலே இலங்கையின் கோட்டை இராச்சியத்தையும், பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தையும் தமது ஆளுகையின் கீழ்க்கொண்டு வந்தனர். இரண்டு வேறு நாடுகளை ஆட்சி செய்வதான நினைவுடனேயே அவர்கள் அவற்றை ஆண்டார்கள். அவர்களைத் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏறிய ஒல்லாந்தரும் சிங்கள நாடு வேறு தமிழ்நாடு வேறு என்கிற நிலைப்பாட்டினைப் பேணியே ஆட்சி செய்தனர். நாடுகளை இணைத்தும் பிரித்தும் தீராத உபத்திரவங்களை உருவாக்கிச் சென்றதிலே பிரித்தானியர்கள் சூரர்கள். ஐரோப்பாவிலே நடைபெற்ற நெப்போலியன் போர்களின் காரணமாக, 1798இல் பிரித்தானியர், இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி நிலவிய பகுதிகளைத் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தனர். நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டத்தும், பிரித்தானியர் உலக வரைபடத்தை மாற்றியமைத்தனர். இதனால் இலங்கையில் ஒல்லாந்தருடைய ஆட்சி நிலவிய பகுதிகள் பிரித்தானியர் குடியேற்ற நாடாக மாறியது. மூன்று நூற்றாண்டுகளாக தீவுக்குள் தீவாக சுதந்தரம் அநுபவித்த கண்டி இராச்சியத்தையும் 1815இல் கைப்பற்றினர். இதனால் முழுத்தீவிலும் பிரித்தானியர் ஆட்சி வியாபிக்கலாயிற்று. 1832ஆம ஆண்டில் பிரித்தானியர், தமது சுரண்டலையும் ஆதாயத்தையும் விஸ்தரிப்பதற்காக நிர்வாகச் சீர்திருத்தத் தினைப் புகுத்தினர். மத்திய மலைநாட்டிலே பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையின் பாரம்பரிய எல்லைகளைப் புறக்கணித்து, புதிய மாகாணங்களை உருவாக்கினர். பாரம்பரியத் தமிழர் பிரதேசம் என்கிற கோட்பாடு பற்றி அவர்கள் அக்கறைப்படவில்லை. தமது ஆட்சியின் நீட்சியும், ஆதாயமான சுரண்டலும் என்பன வற்றுக்கு அப்பாற்பட ஆங்கிலேயர் எதைப் பற்றியும் அக்கறைப் படவில்லை. இதன் விளைவாகத்தான் இன்று ‘Territorial integrity and Sovereignty’ என்று கிளிப்பிள்ளைப் பாடஞ்சொல்லி, அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஸ்ரீலங்காவின் சிங்கள அரசுகள் ‘தமிழர் தாயகம்’ என்கிற கோட்பாட்டினை மறுதலிக்கின்றன. ஆனால் சுதந்திரத்திற்காக நாட்டினை இருகூறாக்க அனுமதித்த இந்திய ஆட்சியாளர், பின்னர் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம் என்கிற தனிநாடு தோன்றுவதற்கு துணைநின்ற ஆட்சியாளர், முதலாவது அதியுத்தம ஜனாதிபதியாகத் தமிழர் சங்காரத்தில் ஈடுபட்ட ஜெயவர்த்தனாவின் சர்வாதிகாரத் திற்கு எதிராக தமிழ்ப் போராட்டக் குழுக்களுக்குக் கொழும்பு சீவி வளர்த்த ஆட்சியாளர், இன்று ‘பிரிக்க இயலாத இறைமையுள்ள ஸ்ரீலங்கா’ என்று புதிய கீதை போதிக்க முனைவது அறியாமை. இந்தக் கிளிப்பிள்ளை மந்திரத்தை உச்சரிக்கும் இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கை வகுப்போர், எதியோப்பியாவின் வரலாற்றினை அசைபோட்டுப் பார்த்தல் நன்றென எனக்குத் தோன்றுகின்றது.

சிட்னி நோக்கிய பறப்பிலே வேறு தோதான பொழுதுபோக்கு எனக்கு வாய்க்கவும் இல்லை. எதியோப்பியாவுக்கு வரலாற்று ரீதியாகப் பல சிறப்புகள் உண்டு. உலகின் மிகத் தொன்மையான தேசிய இனங்களுள் எதியோப்பியரும் இடம்பெறுவர். ஜனத் தொகையில் ஆபிரிக்கா வின் இரண்டாவது நாடாகும். நான்காம் நூற்றாண்டிலேயே அங்கு கிறிஸ்தவ மதம் பரவிற்று. உலகின் இரண்டாவ கிறிஸ்தவ நாடு என்கிற பெருமையும் அதற்கு உண்டு. எதியோப்பியாவின் வடக்கு அயல்நாடான எரிற்றியாவை இத்தாலி தன்னுடைய குடியேற்ற நாடாக மாற்றிக்கொண்டது. அங்கிருந்தவாறு முஸோலினியின் காலத்தில், இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, ஐந்து ஆண்டுகள், எதியோப்பியா இத்தாலியின் குடியேற்ற நாடாக மாற்றப்பட்டிருந்தது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பிரித்தானியர் நடத்திய சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளினால், எரிற்றிய மக்களுடைய வரலாறும் சுதந்திரமும் காவு கொடுக்கப்பட்டது. இத்தாலியைத் தண்டிப்பதான எண்ணத்தில் எரிற்றியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு, அந்த இணைக்கப்பட்ட நாட்டுக்கு Haile Selassie மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். ஏகாதிபத்திய நாடுகளின் கால்பந்தாகச் சிறிய நாடுகளின் சுதந்திரம் உதைக்கப்பட்டது என்பதற்கு இதைப் பார்க்கிலும் சிறந்த உதாரணம் வேண்டுமா?

1974ம் ஆண்டு Marxist Leninist கொள்கை கொண்ட இராணுவ புரட்சி மூலம், மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கொம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிறுவப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியைக் குலைக்க வேண்டும் என்கிற ஏகாதிபத்தியங்கள் புது வியூகங்கள் வகுத்தன. இதன் சங்கிலித்தொடர்பான நிகழ்ச்சிகளினால் 1993ஆம் ஆண்டு மே மாதம் எரிற்றியா சுதந்திர நாடாகப் பிரகடனமாயிற்று. இதன் மூலம் பிரித்தானிய ராஜதந்திரம் செய்த பிழைகள் நேர்செய்யப்பட்டது. பிரித்தானியருடைய இராஜதந்திரக் குளறுபடிகளினாலே தான் இலங்கையின் தமிழர் தாயகம் சிங்களரின் இனத்துவ ஏகாதிபத்தியத்திற்குத் தாரை வார்க்கப்பட்டது. பரமனைப் போன்ற கமக்காரன், தன் மகனை வளப்படுத்துவதையே தன் உழைப்பாகவும் வாழ்க்கையாகவும் கருதும் விவசாயி, தன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழும் காலம் மீண்டும் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளுக்கு வருமா?

அவனது பிள்ளைகள் இராணுவக் கெடுபிடிகளிலும், தடுப்புக் காவல்களிலிருந்தும் விடுபட்டு எப்பொழுது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள்?

இந்த எண்ணங்களினால் என் மனம் கனத்தது. சிட்னி நோக்கிய விமானத்தின் பறப்புத் தொடர்ந்தது.

(2012)

 

No comments:

Post a Comment