செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்…!
ஆசி கந்தராஜா
-1-
செல்லப்பாக்கியம் மாமி
என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, மட்டுவில் முட்டிக்
கத்தரிக்காய்! இது பால் வெள்ளை நிறத்தில் உருண்டுதிரண்டு முட்டிவடிவில்
மினுமினுப்பாக இருக்கும்.
செல்லப்பாக்கியம் மாமி மட்டுவில் என்னும்
கிராமத்தில் பிறந்து, அங்கேயே பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியருக்கு வாழ்க்கைப்
பட்டவர்.
அவர் பிறந்ததும் வாழ்க்கைப் பட்டதும் மேட்டுக் குடி. இதனால், சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பும் அந்த ‘மிடுக்கு’ சற்றும் குறையாமல் மகள் குடும்பத்துடன் வாழ்ந்தார். சுற்றி வளைத்து எப்படியோ என்னுடைய மனைவியின் பாட்டன், சிங்கப்பூர் பென்சனியர், தனக்குச் சொந்தமெனச் சொல்லிக்கொண்டு எமது வீட்டுக்கும் அடிக்கடி வந்துபோவார். சரிகைக்கரை வைத்த நூல்சேலை கட்டி, தங்கச்சங்கிலி கோத்த மூக்குக் கண்ணாடியுடன் மிடுக்காக வலம் வரும் அவரை, எல்லோரும் மாமி என்றே அழைத்தார்கள். அதனால் எனக்கும் அவர் மாமியானார். அடிமட்டத்திலிருந்து நான் மேலே வந்தவன் என்பதும், அவரது பருப்பு என்னில் வேகாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இதனால் மாமியின் வடிகால் பெரும்பாலும் என்னுடைய மனைவியே!