Saturday, 30 January 2021

 மைனாக்கள்

ஆசி கந்தராஜா


காலையில் காவா அருந்தும் சடங்கு! அதைத் தொடர்ந்தே மாலை ஒரு மணிக்கு, மாநாட்டின் முதல் அமர்வு எனச் சொன்னார்கள். சர்வதேச மாநாடொன்றில் இந்த ஒழுங்கு முறை, என் மனதுக்கு நெருடலாக இருந்தது. பிஜியின் தலைநகர் சூவாவில், தென் பசிபிக் நாடுகளுக்கான பல்கலைக் கழகமொன்றுண்டு. அங்கு நடந்த விவசாய மாநாடான்றில், ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றபோதே இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் தாவரம் காவா. இது மிளகு மற்றும் வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை காயவைத்து இடித்து மாவாக்கி, தண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டி, காவா என்ற பானத்தைத் தயாரிப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில், திருமணம், பிறப்பு, மரணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களில் காவா முக்கிய பங்கு வகிக்கிறது.

காவா என்ற பானத்தை, முன்பு நான் சிட்னியில் வசிக்கும் பிஜி நண்பரின் வீட்டிலும் அருந்தியிருக்கிறேன். களிமண்ணை தண்ணீரில் லேசாக கலந்து விட்டது போன்ற கலங்கல் திரவம் அது. மரத்தால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமொன்றில் வைத்திருந்தார்கள். பாயை விரித்து பாத்திரத்தைச் சுற்றி நிலத்தில் இருந்தவாறு, தும்பு செதுக்கிய தேங்காய்ச் சிரட்டையில் காவாவை அள்ளி அள்ளி மாலை வரை குடித்தார்கள். சிரிப்பும் அரட்டையும் பின்னர் தூக்கமும் காவாவுடன் சேர்ந்த சமாச்சாரங்கள் என, அன்று நான் தெரிந்து கொண்டேன். காவா எனக்கு ருசிக்கவில்லை. தொண்டை கட்டியது. நெடுநேரம் தலை கனத்து அம்மலாகவும் இருந்தது.

பிஜிக்கு வந்தபோது, மீண்டும் காவா அருந்த வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டேன். மாலை அமர்வில், நான் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்து கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அப்போது தலை அம்மலாக இருக்குமே என்ற பதகளிப்பில் காவா குடிப்பதை தவிர்க்க முயன்றேன். அவர்கள் விடவில்லை. காவா நிரம்பிய பெரியதொரு சிரட்டையை கையில் திணித்து விட்டார்கள். குடிப்பதுபோல பாசாங்கு செய்தவாறு அருகிலிருந்த பிஜி பேராசிரியரிடம் காவா சடங்கு பற்றிக் கேட்டேன்.

காவா சடங்கு பற்றி நீங்கள் என்ன அறிந்து வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, எனது கேள்வியை என்னிடமே திருப்பிவிட்டார் அவர்.

காவா மிதமான போதை கொண்ட பானம் என்பது எனக்குத் தெரியும். அது மூளைக்கும் உடலுக்குமான தகவல் பரிமாற்றத்தை மந்தமாக்கி, உடம்பைச் சோர்வடையச் செய்யும் என்று வாசித்திருக்கிறேன். இப்படியான ஒரு பானத்தை மாநாட்டுக்கு முன்போ அல்லது அரசமட்டத்திலான பேச்சு வார்த்தைகளின்போதோ, நீங்கள் சடங்கு சம்பிரதாயமாக அருந்துவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்றேன்.

பிஜித் தீவில் இரண்டாயிரமாம் ஆண்டு மே மாதம், ஜனநாயக முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜி-இந்தியர் மகேந்திர சௌத்ரி, புரட்சிக்காரர்களால் சிறை வைக்கப்பட்ட பின்பு, புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் அட்மிரல் பைனமராமா இருவரும், காவா என்ற மிதமான போதைகொண்ட பானத்தை சேர்ந்து அருந்தி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களாம். இது பற்றிய பல விமர்சனக் கட்டுரைகள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. இருப்பினும், இந்தியர்களுக்கு எதிரான துவேச உணர்வுகள், இன்னமும் அங்கு பல்கலைக் கழக மட்டத்திலும் ஊடுருவியுள்ள நிலையில், இதுபற்றி அவருடன் பேச நான் விரும்பவில்லை. இருப்பினும் காவா பற்றிய பூர்வீக தகவல்களை தெட்டம் தெட்டமாக அங்குள்ள பிஜி நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அவர்களின் மூதாதையர்கள் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றபோது, ஒருவகைத் தாவரங்களின் வேர்களைக் கடித்த ‘அகளான்கள்’ (ஒரு வகை எலிகள்) போதையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்களாம். அவர்களும் அந்த வேர்களை உண்டபோது போதையேறவே, அதையே தங்களின் வழக்கமாக்கிக் கொண்டார்களாம்.

பிஜி இந்திய வம்சாவழி இளைஞன் ஒருவனே அங்கு காவா தயாரிப்புக்கும், அதைத் தொடர்ந்த காவா சடங்குக்கும் பொறுப்பாக இருந்தான். அந்தப் பல்கலைக் கழகத்தில் அவன், மரபணுமாற்றம் பற்றிய துறையில் பட்டப் பின்படிப்பு (Post graduate) படிப்பவன் என்று பின்னர் அறிந்து கொண்டேன். காவாவின் போதையில் அங்குள்ள அனைவரும் கதிரையில் சாய்ந்தபடி அரை மயக்கத்தில் இருந்தார்கள். இதனால் வேலை சற்றுக் குறையவே, ‘ஹலோ சார்…’ என உரிமை கொண்டாடி, என்னருகே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்து, சேகர்-பிள்ளை எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பூர்வீக மக்கள் இங்கு பலர் இருக்க, காவா பானம் தயாரிப்பில் நீ எப்படி…?’ என என் கேள்வியை முடிக்கமுன் ஒரு வெடிச்சிரிப்புச் சிரித்தான். பின்னர், ‘அவர்களுள் ஒருவனை விட்டிருந்தால், அவனும் சடங்கின் நடுவில் இவர்களைப்போல படுத்துத் தூங்கியிருப்பான்’ என்றான்.

பின்பு எதற்காக தூக்கத்தை ஏற்படுத்தும் இந்த பானத்தை ஒரு சடங்காக, நிகழ்ச்சிக்கு முன்பு அருந்துகிறார்கள்’? எனக்கேட்டேன்.

வெள்ளையர்கள் வைன் அருந்துவதைப் போலத்தான் இதுவும் என எடுத்துக் கொள்ளுங்களேன்’ என அதற்கு நியாயம் கற்பிக்க முனைந்தான் சேகர்.

வைன் என்பது அல்கஹோல். அளவுடன் குடித்தால் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் காவாவில் இருப்பது போதைப் பொருள். அது தசைகளை சோர்வடையச் செய்து நாக்கை மரத்துப் போகச் செய்யும். சோர்வையும் நித்திரையையும் ஏற்படுத்தும் இந்தப் பானம், ஆராய்ச்சி மாடொன்றுக்கு முன்பு தேவையா…?’

நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் காவாவுக்கென ஒரு பாரம்பரியமான கலாசாரப் பின்னணி இருக்கிறது. பிஜியின் உண்மையான பூர்வீக குடிமக்கள் எகிப்திலிருந்து தன்சானியா என இன்று அழைக்கப்படும் ரங்கனிக்கா வழியாக, பிஜித்தீவில் வந்து குடியேறியவர்களென்று சொல்லப்படுகிறது. ஆனால் அது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை…’

இது உண்மையாக இருக்கலாம். இங்குள்ள பலரிடம், குறிப்பாக இராணுவத்தில் இருப்பவர்களிடம், எகிப்தியர்களின் முகவெட்டும் உயரமான, உறுதியான உடல் அமைப்பும் இருக்கிறது’ என எனது அவதானிப்பை அவிழ்த்து விட்டேன்.

அப்பொழுது காவா அருந்த நியூகினியா நாட்டின் பிரதிநிதிகள் அங்கு வந்து சேரவே, அவர்கள் கையிலும் காவா நிரம்பிய சிரட்டைகளை கொடுத்துவிட்டு, காவா நனைந்த தன் கைகளைத் துடைத்தவாறு மீண்டும் என் அருகில் வந்தமர்ந்தான்.

காவாவின் வரலாற்றுப் பின்னணியை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு’ என விட்ட இடத்தை நினைவு படுத்தி அவனை மீண்டும் சம்பாஷனைக்குள் இழுத்தேன்.

பிஜிய நகரங்களில் காணப்படும் மட்பாண்ட ஓவியங்களில் இருந்து பிஜியில் கிமு 3500 ஆண்டுகள் வாக்கில் குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பிஜித் தீவுகளில் குள்ளமாக இருப்பவர்களில் அனேகர் பொலினேசியர்கள். பொலினேசியர்களின் மூதாதையரே இங்கு முதன் முதலில் குடியேறியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், மெலனேசியர்களின் வருகைக்குப் பின்னர் இவர்களில் பலர் தொங்கா, சமோவா, மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சென்றிருக்கலாமெனத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போதைய மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் மெலனேசியர்களே…’

வந்தவர்கள் குழுக்களாக, தங்களுக்கான எல்லையை தாங்களே வகுத்துக் கொண்டு, கற்களாலும் கம்புகளாலும் மற்றைய குழுக்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு வாழந்திருப்பார்களே…’ என உரையாடலைத் தொடர அடி எடுத்துக் கொடுத்தேன்.

உண்மைதான். காவா சடங்கு பற்றிய உங்களின் கேள்விக்கான பதிலும் இதற்குள் தான் அடங்கியிருக்கிறது. இயல்பு நிலையில், இவர்கள் மூர்க்க குணம் கொண்டவர்கள். கையைக் காலை ஆட்டி, உரத்த குரலில் ‘அடிக்கிறேன் பிடிக்கிறேன்’ எனப் பேசிக் கொள்வார்கள். பொலினேசியர்ளுக்கும் மெலனேசியர்களுக்கும் அடிக்கடி எல்லைத் தகராறு ஏற்படும். அப்போது வார்த்தைகள் தடித்து ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்வார்களாம். இறுதியில் குழுத் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளின் போது, முதலில் காவா பானம் அருந்தி தங்களை சாந்தப்படுத்திக் கொள்வார்களாம். அதுவே இன்றுவரை அரச மட்டத்திலும் சம்பிரதாயமாகி விட்டது’.

இந்த இடத்தில் சேகர் ஒரு முத்தாய்ப்பு வைத்தான். அரைத் தூக்கத்தில் எமக்கு அருகிலிருந்த பிஜி பேராசிரியர் ஒருவர், எமது சம்பாஷனைகளைக் கேட்டிருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். மெதுவாக அங்கிருந்து எழுந்து சென்ற சேகர், மண்டபத்துக்கு வெளியே நின்ற மாமரத்தின் கீழ் நின்று, என்னை அங்கு வருமாறு சைகை காட்டினான்.

இந்தியர்களுடன் சம்மந்தப்பட்ட சங்கதி ஒன்று தெரியுமா சார்…,’ என விட்ட இடத்திலிருந்து அவன் கதையைத் தொடர்ந்தான்.

ஆண் பெண் என்ற பேதமில்லாமல் காவாவை குடித்து, வேலைவெட்டி எதுவுமில்லாமல் தென்னை மரங்களின் கீழ் இவர்கள் மயங்கிக் கிடந்த காரணத்தால்தான், கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்ய இந்தியர்களை பிரித்தானியர்கள் பிஜித் தீவுகளுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது வந்தவர்களில் பெரும்பாலானோர் தென் இந்தியர்களே. அதன்பின்னரே குஜராத்திலிருந்து பலர் வியாபார நோக்குடன் இங்கு குடியேறினார்கள்…’

கரும்புத் தோட்டத்துக்கு கூலியாக வந்த இந்தியர்களின் சொல்லொணாத துன்பங்களைப் பாரதி பாடலில் படித்திருக்கிறேன். தன்னுடைய மூதாதையர்கள் தற்போதைய தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என சேகர் சொன்னான். கரும்புத் தோட்டக் கூலியாக கொண்டுவரப்பட்ட ஒரு இந்திய வம்சாவளியின் வாரிசான அவன், பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புவரை முன்னேறியுள்ளது பெருமையே. இதனால் அவனுடைய குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது. எனவே ‘உன் மூதாதையர்கள் பற்றி சற்று விபரமாகச் சொல்லு’ எனக் கேட்டேன்.

எங்கள் வம்சாவளியில் நான் நாலாவது தலைமுறை. மூதாதையர்கள் தஞ்சாவூர் பக்கமிருந்து வந்ததாக என்னுடைய தாத்தா சொன்னார். எங்களுடன் இன்றும் வாழும் அவர், நன்கு தமிழ் கதைப்பார். அப்பாவுக்கு தமிழ் புரியும், ஆனால் சரளமாக பேசவராது. எனக்கோ தமிழ் சுத்தமாகத் தெரியாது. அதற்குரிய சந்தர்ப்பங்கள் இங்கு இல்லை. ஒரு மொழி தொழிற்பாட்டு மொழியாக (Functional Language) இல்லாது, அதன் தேவை சமூகத்தில் வலுவிழந்து போகும் போது, அது முற்றாக அழிந்துவிடும் என்ற சொல்லடைக்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் ‘இந்தியர்கள்’ என்ற கொடியின் கீழ் இணைந்து கொண்டார்கள். அவர்களுக்கென ஒரு பொதுவான மொழி தேவைப்பட்டபோது, அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட மொழிதான் ‘பிஜி ஹிந்தி’. இது இந்தியாவில் பேசப்படும் ஹிந்தியிலும் சற்று வித்தியாசமானது. இதில் எல்லா இந்திய மொழிகளின் சொற்களும் கலந்திருக்கும். இந்தியா எங்களுக்கு ஒரு கனவு நாடு. கொள்ளுப்பாட்டன் காலத்திலிருந்து எங்கள் பரம்பரையில் யாரும் இந்தியாவுக்கு சென்றதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதுதான் யதார்த்தம். நான் எனது பூர்வீக மண்ணை ஒருமுறை தரிசிக்க விரும்புகிறேன். அதற்கு பணம் சேர்க்கவே காவா பானம் தயாரிப்பு வேலையில் இப்பொழுது ஈடுபட்டுள்ளேன். இது சர்வதேச மாநாடென்றபடியால் எனது வேலைக்கு நல்ல பணம் தருவார்கள் அல்லவா…?’ என்றபடி என் பதிலுக்காக காத்திருந்தான்.

தன்னுடைய வேர்களைத் தேடும் அவனது ஆர்வம் என் மனதைத் தொட்டது. டொலர்களில் சம்பாதிக்கும் எனக்கு பிஜியிலிருந்து இந்தியாவுக்கான விமானச் சீட்டு பெரிய தொகையல்ல. பிஜித் தீவில் வாழும் இந்தியர்களின் வரலாறு பற்றிய பூரண அறிவு அவனுக்கு இருப்பதை அவனிடம் பேசிய குறுகிய நேரத்தில் தெரிந்து கொண்டேன். பிஜியின் இந்திய வம்சாவழி புத்திசாலி இளைஞன் ஒருவன், தங்களின் வரலாற்றை எப்படிப் பார்க்கிறான் என்பதையும், அவன் வாழும் சூழலையும் தெரிந்துகொள்ள நான் விரும்பினேன். ‘உன்னுடைய வீட்டுக்கு என்னை அழைப்பாயா? உன்னுடைய தாத்தாவுடன் பேச விரும்புகிறேன். வரும்பொழுது எனது அன்பளிப்பாக இந்திய பயணச் சீட்டுக்கான பணத்தையும் கொண்டு வருகிறேன்’ என்றேன் நான்.

உண்மையாகவா சார்…’ என மகிழ்ச்சியுடன் ராகம் இழுத்தான் அவன்.

உண்மைதான். தனது தாய் மண்ணைத் தரிசிக்க விரும்பும் ஒரு புத்திசாலி இளைஞனுக்கு, என் அன்பளிப்பு அது’ என்றேன் நான்.

அவனுக்கு மிகுந்த மகிழச்சி. ‘மாநாடு முடிந்த மறு நாள், எமது வீட்டுக்கு மதிய உணவுக்கு வாருங்கள். நானே உங்கள் ஹோட்டலுக்கு வந்து அழைத்துப்போகிறேன்’ என்று கைகுலுக்கி விடைபெற்றான்.

வார்த்தை தவறாது, மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை பத்து மணிக்கே என்னைக் கூட்டிப்போக வந்திருந்தான் சேகர். தென் இந்தியாவில் இருந்து கரும்புத் தோட்ட வேலைக்கு வந்த குடும்பத்தின் வாரிசான சேகரிடம் சொந்தமாக காரை எதிர்பார்க்க முடியாது. பிஜித் தீவுகளில் றெயில் வண்டிகளும் கிடையாது. எனவே வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக் கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றோம்.

சேகரின் பெற்றோர்கள் தலைநகர் சூவாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நௌசோறி (Nausori) என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அங்குதான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. போகும் வழியில் மிகப்பெரிய சர்க்கரை ஆலை ஓன்று இயங்காமல் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அது பற்றி அவனிடம் கேட்டேன்.

என்னுடைய மூதாதையர்களின் பிழைப்பு இந்த ஆலையை நம்பியே இருந்தது. 1882ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலை 1959இல் மூடுவிழா கண்டது. எல்லாம் தெரிந்தவர்களாக, தங்களைத் தாங்களே எண்ணிக் கொண்ட பிரித்தானியர்கள், பிஜித்தீவில் செய்த தப்புத்தாளங்களில் இதுவும் ஒன்று…’

அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்’.

பிஜியின் பாவு தீவைச் சேர்ந்த, சேரு எபெனிசா சாக்கோபாவு என்பவன் பிஜியில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை தன்னுடைய கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, பிஜியின் அரசனாக தன்னை அறிவித்தான். 1874 ஆம் ஆண்டு பிஜி பிரித்தானியரின் கட்டுப்ப்பாட்டில் வரும் வரை இவனே பிஜியை ஆண்டு வந்தான். பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர், பிஜியின் சர்க்கரைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களைத் தருவித்தனர். அப்போது இளைஞனாக வந்தவர்தான் என்னுடைய முப்பாட்டன். அவரும் என்னுடைய தாத்தாவும் 1959ம் ஆண்டு, இந்த ஆலை மூடப்படும்வரை ஆலையைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டத்திலேயே அடிமைகளாக உழைத்தார்கள்’. இதைச் சொல்லும்போது சேகர் சற்று உணர்ச்சிவசப் பட்டான்.

பிரித்தானியர்கள் பிஜித்தீவில் செய்த தப்புத்தாளங்கள்…, என்று சொன்னாயே, அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு’ எனக் கொக்கிபோட்டு மீண்டும் அவனை சம்பாஷனைக்குள் இழுத்தேன். இது அவனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமையட்டும் என்ற காரணத்தாலும் கேட்டேன்.

சூவா கடற்கரையில் வந்து இறங்கிய ஆங்கிலேய துரைமார்களுக்கு கரும்பு விவசாயம் பற்றிய ஞானம் இருந்திருக்க நியாயமில்லை. சூவாவை சூழ்ந்த பிரதேசம் மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு பன்னிரண்டு மாதங்களும் மழை பெய்யும். கரும்பு வளர, முதலில் மாரி மழையும் பின்னர் முற்றுவதற்கும் அறுவடைக்கும் கோடை வெய்யிலும் தேவை என்பதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்து கொண்டார்கள். இதனால் மலை சூழ்ந்த மத்திய பிரதேசங்களிலுள்ள சர்க்கரை ஆலைகள் படிப்படியாக மூடப்பட்டன. அதன்பின்னரே மேற்குப் பிரதேசங்களில் கரும்புத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன…’

எமது உரையாடல் நிறைவு பெற முன்னரே வீடு வந்து சேர்ந்தோம். எல்லோரும் வாசல்வரை வந்து வரவேற்றார்கள். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து தனது பெயர் சிங்காரம் பிள்ளை என அறிமுகப் படுத்திக் கொண்டார் தாத்தா. சேகரின் தாய் நீத்துப் பூசனிக்காயில் கற்பூர ஆராத்தி காட்டி என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மொழி அழிந்தாலும் மூன்று தலை முறைகளுக்குப் பின்பும் அவர்கள் வீட்டில் தென் இந்திய கலாசாரம் வாழ்வதைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் வளவில் இலந்தை, நாவல் முதல் இலங்கை இந்தியாவில் காணப்படும் எல்லா மரங்களும் நின்றன. மாவும் பலாவும் முருங்கையும் காய்த்து குலை குலையாகத் தொங்கின. கூட்டம் கூட்டமாக மைனாக்கள் அங்கு இரை தேடிக் கொண்டிருந்தன. மைனாக்கள் பிஜித் தீவுகளெங்கும் பெருகிப் பரவி இருப்பதை எனது பிரயாணத்தின் போது பார்த்திருக்கிறேன். அது பற்றி சேகரிடம் கேட்டேன்.

ஆஸ்திரேலியாவில், நியூசீலந்திலிருந்து வந்தவர்களை ‘கீவி’ என்றும் பிரித்தானியர்களை ‘பொமி’ என்றும் இந்தியர்களை ‘கறி’ என்றும் அழைப்பார்கள். இவை எல்லாம் காரணப் பெயர்கள். கறி சாப்பிடுவதனால் நாங்கள் அங்கு கறிகளானோம். இங்குள்ளவர்கள் இந்தியர்களை மைனாக்கள் என்று அழைக்கிறார்களே, காரணம் என்ன?

மைனாக்களை இங்கு இந்தியர்களே கொண்டு வந்ததாக நம்புகிறார்கள். மைனாக்கள் மிகவும் சுறு சுறுப்பான பறவை. விரைவில் இனப் பெருக்கம் செய்யும். மைனாக்கள் இங்கு பல்கிப் பெருகி, தங்களின் பூர்வீகப் பறவைகளை காடுகளுக்குள் துரத்திவிட்டதாக சொல்லுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், பிஜி பழங்குடியினரைவிட இந்தியர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதனால்தான் இரண்டாயிரமாம் ஆண்டு, ஜனநாயக முறைப்படி பிஜி-இந்தியரான மகேந்திர சௌத்ரி பிரதமராக வரமுடிந்தது. இராணுவப் புரட்சியின் பின் அவர் சிறை வைக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து பெருமளவு இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் தனிக்கதை. அதன் பின்பு பணமில்லாத எங்களைப் போன்ற இந்தியர்களே பிஜியில் தங்கினார்கள். இந்தியர்களின் எண்ணிக்கை கூடியதை பொறுக்க முடியாமல், நாங்களும் மைனாக்கள் போலப் பெருகிவிட்டோம் எனச் சொல்லத் துவங்கினார்கள்.

காவா போதையில் எந்த நேரமும் இவர்கள் மரநிழலில் படுத்திருந்தால் எப்படி வம்ச விருத்தி செய்வது…? இந்த வீடும் வளவும் என்னுடைய பாட்டனும் தாத்தாவும் வெள்ளையர்களின் கீழ் அடிமைகளாக உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்த சம்பாத்தியத்தில் வாங்கியது. இதன் பின்னணியில் பல கண்ணீர் கதைகளும் உண்டு’ என்றான் சேகர் சற்று சூடாக.

நாங்கள் ஆங்கிலத்திலேயே கதைத்தோம். தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது. இருப்பினும் இவை எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாக அவர் எங்களருகே அமைதியாக நின்றார். தாத்தா தனக்கு 87 வயதென்றும் ஐந்து வருடங்களுக்கு முன்பு பாட்டி இறந்து விட்டதாகவும் சொன்னார். இப்பொழுது அவருக்குத் தமிழ்பேச அங்கு ஆள் இல்லை. மகனுடனும் பேரனுடனும் பிஜி ஹிந்தியிலே பேசிக் கொள்கிறார். என்னைக் கண்டது தாத்தாவுக்கு மகா சந்தோஷம். பிஜியில் தாங்கள் கடைப் பிடிக்கும் இந்திய சடங்கு முறை பற்றி வாய் ஓயாது என்னுடன் தமிழில் பேசினார்.

மதிய உணவு முடிந்து விடைபெறும் நேரம் வந்தது.

தாத்தா, இந்தியாவுக்கு ஒருமுறை போக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இல்லையா? என ஏதோ ஒரு உந்துதலில் கேட்டேன்.

நிலத்தைப் பார்த்தவாறு எதுவும் பேசாது மொனமாக நின்றார் தாத்தா. அவருடைய உணர்ச்சிகளைத் தீண்டிவிட்டேனோ என்ற குற்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

இந்த வயதிலை நான் அங்கை போய் என்னத்தைக் காணப்போறன் தம்பி. என்னுடைய பேரன் அங்கு போய் வருவதற்கு நீ பணம் கொடுத்தியே, அதுவே பெரிய காரியம்’ என்றார் தாத்தா என் கைகளைப் பிடித்தபடி. அப்பொழுது தாத்தாவின் கண்களிலே சுரந்து நின்ற கண்ணீரை நான் அவதானிக்கத் தவற வில்லை.

நாட்டை நினைப்பாரோ – எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ – அவர்

விம்மிவிம்மி விம்மி விம்மி யழுங்குரல்

கேட்டிருப் பாய்காற்றே’

என்ற பாரதியார் பாடலின் வரிகள்தான் அவர்களிடமிருந்து விடைபெறும் போது என் ஞாபகத்துக்கு வந்தன.

 

(2016)

 

No comments:

Post a Comment