வெடுக்குப் பத்தன்
ஆசி கந்தராஜா
பத்தன் என்கிற பத்மநாதனை சமீபத்தில் சந்தித்தேன். அவன், ஆயிரத்து தொழாயிரத்து அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவன். எங்கள் வகுப்பில் அப்பொழுது இரண்டு பத்மநாதன் இருந்தார்கள். ஒருவன் நெடுவல். அதனால் அவன் நெடுவல் பத்தன். மற்றவன் வெடுக்குப் பத்தன். அவனில் வேர்வை நாத்தம் அடிப்பதால் இந்தப் பெயர் அவனுடன் ஒட்டிக் கொண்டது. நாங்கள் இருவரும் கல்லூரி விடுதியில் ஒன்றாக இருந்து படித்தோம். அதுவும் ஒரே Dormitory, பக்கத்து, பக்கத்துக் கட்டில்!
வெடுக்குப் பத்தன் ஊத்தையன் அல்ல. அவனுடைய
உடம்பிலிருந்து ஒருவகை நாத்தம் வீசுவது அவனுக்கும் தெரியும். சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், ஹோமியோபதி, அலோபதி (ஆங்கில
வைத்தியம்) என அவன் செய்யாத வைத்தியங்கள் இல்லை. எல்லா வைத்தியர்களும் முடிவாகச்
சொன்னது இதுதான்! அவனது உடம்பில் அதிக ரோமங்கள் இருப்பதாகவும் அதனால் சருமத்
துளைகள் வழியாக அதிக வியர்வை வெளியேறுவதாகவும், அடிக்கடி குளித்துச் சுத்தமாக இருப்பதே இதற்கான பரிகாரம் என்றார்கள். இதனால்
விடுதியில் அவன் மூன்று நேரமும் குளித்தான். வாரம் முழுவதும் நாங்கள் ஒரு ஷேட்
போடுவோம். சில வேளைகளில் நண்பர்களிடம் கடன் வாங்கியும் அணிந்து கொள்வோம். ஆனால்
பத்தன் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஷேட், தோய்த்து அயன்பண்ணிப் போடுவான். இருந்தாலும் அந்த மணம் அவனைவிட்டுப் போகவே
இல்லை.
கால ஓட்டத்தில் பல்கலைக்கழக புகுமுக வகுப்புச் சோதனை முடிந்ததும் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திக்காக சிதறிப் போனோம்.
சுவாமி வெளிவீதி வலம் வந்து, வசந்த மண்டபத்துக்கு
போகமுன்னர் மேளச்சமா நடந்து கொண்டிருந்தது. சாவகச்சேரி பஞ்சாபிகேசனின் மகன்
வித்வான் நாகேந்திரம் நாதஸ்வரத்தில் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார்.
திருவிழா பத்து நாளும் நடக்கும் கச்சேரி இது. அதனால் நானும் பத்தனும் மேற்கு
வீதியில் உள்ள வாங்கொன்றில் அமர்ந்து பாடசாலை நாட்களை நனவிடை தோய்ந்து
கொண்டிருந்தோம். எதேச்சையாக மேற்கு வீதிக்கு வந்த டாக்டர் நமசிவாயகமும் எங்களுடன்
இணைந்து கொண்டார். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர், சுற்றி வளைத்துப் பார்த்தால் உறவும்கூட.
பத்தனிடம் முன்னர் இருந்த உடல் வாடை இப்பொழுது
வீசவில்லை. இதை ஊர்ஜிதப் படுத்த, முடிந்த வரை மூக்கை அருகில் கொண்டுபோய் முகர்ந்தும் பார்த்தேன். ஊஹும்.
எந்தவித அசுமாத்தமும் இல்லை. விலை உயர்ந்த சென்ற் வாசனைதான் அடித்தது.
பத்தனைச் சந்தித்த நேரம் முதல் அந்த விஷயம் என்
மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்தும் அடக்கி வைக்க என்னால்
முடியவில்லை. நெஞ்சு வெடித்து விடும்போலிருந்தது. இதனால், நீ இப்பவும் ஒரு உடுப்பை, ஒருநாள் மட்டும் போடுறதோ? என வலு கவனமாக
வார்த்தைகளைத் தெரிந்தெடுத்து கொக்கி போட்டேன்.
என்னை ஏற இறங்கப் பார்த்த பத்தன், நீ என்ன சொல்லவாறாய்
எண்டு எனக்கு விளங்குது. கேக்கிறதை நேரடியாய்கேளன், என ஒரு நமட்டுச்
சிரிப்பை உதிர்த்தபின், இடைப்பட்ட காலத்தில்
நடந்தவற்றைச் சொல்லத் துவங்கினான்.
வியர்வை நாத்தத்தால் நான் பட்ட அவமானங்கள்
கொஞ்ச நஞ்சமில்லை. இலங்கையில், இங்கிலீஸ் வைத்தியம் எண்டு சொல்லி பீலாவிட்ட டாக்குத்தர்மாருக்கும் என்ரை
பிரச்சனை விளங்கேல்லை - என்றான் பத்தன், பக்கத்தில் இருந்த நமசிவாயகம் இலங்கையில் படித்த டாக்குத்தர் என்பதை அறியாமல்.
ஊர் டாக்குத்தர் பற்றிப் பேச்சு வந்ததும், என்ன விஷயம்? எனக்கேட்டு உரையாடலுள்
புகுந்தார் நமசிவாயகம். பொது மருத்துவராக சிட்னியில் பணிபுரியும் அவர் யாழ்
பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர்.
எங்கள் குடும்ப வைத்தியரும் அவரே. அவரை பத்தனுக்கு அறிமுகம் செய்தேன்.
மன்னிச்சுக் கொள்ளுங்கோ டொக்டர். எனக்கிருந்த
வெப்பிசாரத்திலை கடும் வார்த்தைகளைப் பாவிச்சுப் போட்டன். நான்பட்ட கஷ்டம்
எனக்குத்தான் தெரியும். எனக்கு யூரிக் அசிட் பிரச்சனை. லண்டனில்தான் அதை கண்டு
பிடித்தார்கள். வேர்வை மணத்ததுக்கு இதுதான் காரணமாம். ஊரில் இதற்கு நான் செய்யாத
வைத்தியம் இல்லை. லண்டனில் படிக்கிற காலம், ஒருமுறை கால் பெரு விரல் மொளி வீங்கி, வலி தாங்கேலாமல் டாக்குத்தரிட்டை போக, இரத்தம் சோதித்தார். அப்பதான் பிரச்சனைக்கான காரணம் தெரிந்தது.
இந்த நோயை ஹெளவுட் (Gout) என ஆங்கிலத்தில்
சொல்வார்கள். அதிகளவு புரதம் சாப்பிடுவதால் ஏற்படும் இந்த நோயை பணக்கார வியாதி
எனவும் சொல்வதுண்டு, என இதற்கு சுருக்கமான
மருத்துவ விளக்கம் தந்தார்,
டொக்டர்
நமசிவாயகம்.
பணக்கார வியாதியா? அப்படி ஒரு வியாதியை
இப்பதான் கேள்விப்படுகிறன்,
என குறுக்கே
புகுந்தேன் நான்.
தேவைக்கு அதிகமாக புரதம் சாப்பிடுவதால் வரும் வியாதி இது. இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகை போன்ற புரதச் சத்து அதிகமுள்ள பொருட்களை பணக்கார நாடுகளில் உள்ளவர்களே அதிகம் உட்கொள்ளுவார்கள். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மக்கள் இவற்றை தினமும் சாப்பிடமாட்டார்கள். அதற்கான வசதியும் அவர்களுக்கு இல்லை. இதனால் ஏழ்மையான நாடுகளில் இந்த வியாதி இருப்பதில்லை.
வியாதி இருந்தாலும் வெளியில் தெரிவதில்லை, என்று சொல்லுங்கோ
டொக்டர்.
உண்மைதான். இலங்கையில் இப்பொழுதுள்ள
வைத்தியர்களுக்கு ஹெளவுட் பற்றிய விபரம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும், என இலங்கை
வைத்தியர்களுக்கு ஆதரவாகப் பேசினார் டொக்டர் நமசிவாயகம்.
அதிக புரதம் சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும்
விளைவுகளை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் டொக்டர், என விபரம் அறிவதில் ஆர்வமானேன் நான்.
மாப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியன நாம்
உண்ணும் உணவில் பெருமளவு இருக்கும். இவற்றுள், ஒரு மனிதனுக்கு, நாளாந்தம் குத்து
மதிப்பாக 56 கிராம் புரதமும் 85 கிராம் கொழுப்பும் 325 கிராம் மாப் பொருளும்
மட்டும் தேவை.
அதிகமாகச் சாப்பிட்டால்?
மிதமிஞ்சிய கொழுப்பும் மாப்பொருளும் ஒருவகையான
கொழுப்பு உருவத்தில் உடலில் சேமிக்கப்படும்.
புரதம்...?
அது உடம்பில் சேமிக்கப்படுவதில்லை. அவை
செரிமானத்தின்போது சில நொதியங்களால் பகுப்படைந்து, பிரிக்கப்பட்டு அமினோ அமிலமாக மாற்ற்றப்பட்டு பினனர் யூரிக்
அமிலமாக சிறிநீருடன் வெளியேறப்படும். பாமர மொழியில் சொன்னால் அதிகளவு புரதம்
உடலுக்கு நஞ்சு. உதாரணமாக பாம்பின் விஷம் சிக்கலான ஒருவகை 'கொம்பிளெக்ஸ்' புரதம்.
கேக்கவே திகிலடிக்கிறதே. புரதத்துக்கும் வேர்வை
மணக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் டொக்டர்?
ஒரு கிலோகிராம் உடல் நிறைக்கு நாளாந்தம் 0.8 கிராம் புரதம் மாத்திரம்
தேவை. அந்த வகையில் 70 கிலோ கிராம் நிறையுள்ள
ஒருவருக்கு 56 கிராம் புரதம் தேவை.
ஆனால் பணக்கார நாடுகளில் வாழ்பவர்கள் இதில் பல மடங்கு புரதம் உட்கொள்ளுகிறார்கள்.
உண்மைதான்!
புரதம் செரிமானமடைய, கணயம் என தமிழில்
அழைக்கப்படும் 'பங்கிறியஸ்' சுரப்பி, புரொட்டியேஸ் வகை
நொதியங்களைச் சுரக்கவேண்டும். நாம் உட்கொண்ட பெருமளவு புரதத்தைப் பகுத்துப்
பிரிக்க, சுரக்கப்பட்ட
புரொட்டியேஸ் நொதியங்கள் போதாவிட்டால், உடனே உடற்தொழில் சிக்கல் ஏற்படும். இதன் நீட்ச்சியாக புரதம், யூரிக் அமிலமாக உருமாறி
இரத்தத்தில் கலந்துவிடும். இவை வியர்வையுடன் வெளியேறும்போது உடம்பு மணக்கும்.
ஓஹோ...!
அதுமட்டுமல்ல, மிதமிஞ்சிய யூரிக் அமிலம், பளிங்குகளாக மாறி, மொளிகளில் படிவதால் மொளி வீங்கி பயங்கர வலி ஏற்படும். இழுத்து இழுத்துக்
குத்தும்!
பணக்கார நாடுகளில் அதிக புரதம்
சாப்பிடுகிறார்கள் என்பது சரி டொக்டர். நான் ஊரில் இருந்தபோது மாதத்துக்கு ஒருமுறை
இறைச்சி சாப்பிடுவதே பெரிய காரியம். ஒரு கோழி அடித்து குழம்பு வைத்தால் வீட்டில்
பத்துப்பேர் பங்கிடவேணும். வேள்வி நடந்தால் மட்டும் ஆட்டு இறைச்சி கண்ணில் படும்.
மீன் முட்டையும் அப்படி இப்படித்தான். ஸ்ரீமாவோ அரசாங்க காலத்தில் பருப்பு
வகைக்கும் இலங்கையில் பெருத்த தட்டுப்பாடு. இந்த நிலமையிலை, ஊரில் இருந்தபோதே எனக்கு
இந்த வியாதி இருந்ததே, அதெப்படி? என நியாயமான கேள்வியொன்றைக்
கேட்டான் பத்தன்.
ஹெளவுட் எனப்படும் வியாதி பரம்பரை பரம்பரையாக தொடர்வது என
அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓ...!
உங்கள் பரம்பரையிலும் இந்த வியாதி இருந்திருக்க
வேணும். இப்படியானவர்களுக்கு இயல்பாகவே, கணயம் புரதத்தை செரிமானம் செய்யும் நொதியத்தை, போதிய அளவு சுரக்காது. இதன் காரணமாக இவர்கள் குறைந்தளவு
புரதம் சாப்பிட்டாலும், புரதம் முழுமையாகப்
பகுப்படையாமல், யூரிக் அமிலம்
இரத்தத்தில் சேர்ந்துவிடும்.
இது சலரோகம் மாதிரி இருக்கு!
அதேதான். சர்க்கரையை பகுக்கச் செய்யும்
இன்சுலினையும் கணையமே சுரக்கிறது. உடலில் இன்சுலின் போதாமையால் சர்க்கரை செரிமானம்
அடையாது சலரோகம் வருவதுபோல,
புரொட்டியேஸ்
நொதியத்தால் புரதம் பகுக்கப்படாவிட்டால் ஹெளவுட் வந்து, உடம்பு மணக்கும்.
மொளிகளில், மூட்டுக்களில்
தாங்கமுடியாத வலி ஏற்படும்.
இதற்கு பரிகாரம் என்ன என்ன?
எனது கேள்விக்குரிய பதிலை பத்தனை சொல்லுமாறு
சொன்னார் டொக்டர் நமசிவாயம்.
பத்மநாதன் தொடர்ந்தான். சலரோகம் போன்று
ஹெளவுட்டையும் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்த முடியாது. நான்
லண்டனுக்கு போன நாள் முதல் இன்றுவரை 35 ஆண்டுகளாக சைலபிறீம் என்ற குளிசை எடுக்கிறேன். இந்த மருந்தை அலுப்பொறினோல்
என்றும் அழைப்பார்கள். இரத்தம் சோதித்து வைத்தியரின் வழிகாட்டலிலேயே மருந்து
எடுக்க வேண்டும்.
சைலபிறீம் குளிசை எடுத்தால் எல்லாம்
சாப்பிடலாமோ?
அதுதான் இல்லை. சலரோகம் உள்ளவர்கள் உணவுக்
கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது போல ஹெளவுட் உள்ளவர்களும் புரத உணவுகளை குறைக்க
வேண்டும். இறைச்சி பருப்பு வகைகளை நான் அளவோடுதான் சாப்பிடுகிறேன். ஈரல், இருதயம், கோளியின் மாங்காய் போன்ற
உள் உறுப்புகளும் காளான்,
நண்டு, இறால், கணவாய் போன்றவைகளும் அறவே
கூடாது என ஒரு பட்டியலே வாசித்தான்
பத்தன்.
பத்மநாதன் சொன்ன தகவல்கள் அனைத்தையும்
ஆமேதாதித்த டொக்டர் நமசிவாயகம், எமது உடம்பினுள்ளே நடைபெறும் உடல் தொழில்பாடுகளை சரியாகப் புரிந்து, அதற்கேற்ற வகையில்
கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் வியாதிகள், வலிகள், வீக்கங்கள் எல்லாம் ஒரு
பொருட்டேயல்ல என்றார்.
டொக்டர் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
ஆசி கந்தராஜா
(2018)
No comments:
Post a Comment