விலாங்கு மீன்கள்
ஆசி கந்தராஜா
அந்த முடிவில் அவருக்கு
உடன்பாடில்லை…! அதற்கும் மேலால், அந்த முடிவைத் தீர்மானித்தவர்களில், அவரும் ஒருவர் என்பது அவரது மனதைச் சுட்டெரித்தது. மற்றவர்களுடன் ஒத்துப் போவதென்றால், போலிகளுக்குத் துணை போவதுதானோ…?
‘அபொர்ஜினி’ என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச்சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான ‘சட்டப் புழைவாய்’களைப் புரிந்து கொள்ள, பரமலிங்கத்துக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் பரமலிங்கம். அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.
ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் நாடோடிகளாக
வாழ்ந்தவர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பது பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. சுமார்
நாற்பத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்றும்
சொல்லப்படுகிறது. கடுமையான வறட்சியினால் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, பிழைப்புக்காக புதிய பூமி
தேடி, இந்தோனேசியத் தீவுகளின்
வழியாக இவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்கள் என்ற கருத்தும் உண்டு. 1974ம் ஆண்டு, நியூசவுத் வேல்ஸ்
மாநிலத்தின் ‘முங்கு குளத்தருகில்’ (Mungo Lake) கண்டெடுக்கப்பட்ட மனிதச் சுவடுகளின் மரபணுக்கள், இந்திய பழங்குடியினரின்
சாயலை ஒத்திருந்ததாக அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலே பல பேச்சு
மொழிகள் உண்டு. இவர்கள் ஆதிகாலத்தில் தனித்தனி குழுக்களாக, தொடர்பின்றி வாழ்ந்ததினால்
இது ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் தோற்றத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் சாயல், மற்றும் சடங்கு
சம்பிரதாயம் என்பன பெரிதும் ஒத்திருப்பதுடன், பேச்சு மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களும் கலந்திருக்கின்றன. இதனால், அகண்டு பரந்த
ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரு மூலையிலே, திராவிட தேசமொன்றை பரமலிங்கம் கற்பனை பண்ணி, மகிழ்ந்த காலங்களும் உண்டு.
முதல் முறையாக பரமலிங்கம் பணிபுரியும் கல்விச்
சாலைக்கு ஒரு ஆதிவாசி இளைஞன் படிக்க வந்தான். சப்பை மூக்கும் இருண்ட உருவமுமாக
அவன், தம்பித்துரை அண்ணரின்
மகன் இராசதுரையை ‘அச்சுஅசலாக’ ஒத்திருந்தான். அடுத்த ஆண்டு அதே சாயலில் இன்னும்
சிலர் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும், கல்வி வசதிகளற்ற சூழலில், புதர்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் என, அழைத்து வந்த செஞ்சிலுவைச் சங்கத்தினர் சொன்னார்கள். இதனால் விரிவுரைகளுக்கு
அப்பால், அறிவியல் பாடங்களில்
அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. இந்தப் பணிக்கு கல்விச்சாலை பரமலிங்கத்தை
நியமித்தது. ‘நியமித்தது’ என்பதிலும் பார்க்க, கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதே சரியாக இருக்கும். இதற்கும் காரணம் உண்டு.
கல்விச்சாலையில் அந்த வருடம் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில்
ஆதிவாசிகளின் நடனம் இடம் பெற்றது. கன்னத்திலும் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றால்
குறிவைப்பது போன்று, வெள்ளை நிற மண்ணைக்
குழைத்துப் பூசிக்கொண்டு,
கையிலே
யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளைகளுடன் ஆதிவாசிகள் அரங்கிற்கு வந்தார்கள். Didgeri-doo எனப்படும் நீண்ட, நாதஸ்வரம் போன்ற, குழாய் வடிவில் அமைந்த
கருவி, இசை எழுப்பியது. Clapping Sticks தாளம்போட்டது. வாத்திய
இசையும் தாளமும் இணைந்த ஒரு உச்ச நிலையில், ஆட்டக்காரர்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆடத் துவங்கினார்கள். பரமலிங்கம்
சிறு வயதில் பாட்டுக் காவடியும் கரகமும் பழகி, ஊர்க் கோவில்களில் ஆடி அசத்தியவர். ஆதிவாசிகளின் தாளத்துக்கு கால்கள்
துருதுருக்க, தன்னை மறந்து அவரும்
ஆடத்துவங்கினார். இதைக் கண்ட வெள்ளையர்கள் அதையும் இதையும் முடிச்சுப் போட்டு
‘கொமன்ற்’ அடித்தார்கள். வேறு சிலர் பரமலிங்கத்தின் ஆட்டத்தை ரசித்தார்கள்.
இதிலிருந்து ஆசிவாசிகளுடன் நல்ல நட்பு, பரமலிங்கத்துக்கு ஆரம்பமாகியது.
அபொர்ஜினி மக்கள், இயற்கையுடன் இணைந்து
வாழ்பவர்கள். ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்கள். இவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா
கண்டம் முழுவதும் சொந்தமானது. இருப்பினும், சுவாத்தியம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வெப்ப வலயங்ளான வட பிராந்தியம் (NT), குவீன்ஸ்லாந்து (QLD), நியுசவுத்வேல்ஸ் (NSW) மாநிலங்களில் மட்டும்; செறிந்து வாழ்கிறார்கள்.
இயற்கையே தம்மைக் காக்கும் தெய்வம் என்றும், அங்கிருந்தே தமது மூதாதையர்கள் தம்மை ஆசீர்வதிப்பதாகவும் எண்ணுகிறார்கள்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எங்கும்; தங்களை மீறிய ஒரு சக்தி
நிறைந்திருப்பதாகவும் நம்புகிறார்கள்.
அபொர்ஜினி ஆதிவாசிகளைத் தவிர, இன்னுமொரு ஆதிவாசிகள்
கூட்டமும் ஆஸ்திரேலிய, ‘ரொரஸ்ரேட் தீவில்’ (Torresstrait Island) வாழ்கிறார்கள். மீன்
பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்துக்குச்
சொந்தமான, பொலினீசிய, ரொரஸ்ரேட் தீவுகளைச்
சேர்ந்தவர்கள். இவர்கள் அபொர்ஜினி மக்களுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கையில் மிகவும்
குறைந்தவர்கள். கால ஓட்டத்தில், ரொரஸ்ரேட் தீவகத்தினரும் வெள்ளையர்களின் அரசால், தனி அடையாளம் உள்ளவர்களாகக் கணிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய பூர்வ
குடிமக்களுக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே ஆஸ்திரேலிய பூர்வ குடிமக்கள்
என்பது, சட்ட ரீதியாக அபொர்ஜினி, மற்றும் ரொரஸ்ரேட்
தீவகத்தினர் (Torresstrait
Islanders) என்று கொள்ளப்படுதல் வேண்டும்.
அபொர்ஜினி ஆதிவாசிகள், ‘பூமரங்’ (Boomerang) எனப்படும் ஒரு கருவியை, வேட்டைக்குப்
பயன்படுத்துவார்கள். குத்துமதிப்பாக இது, 120 பாகை கோணத்திலமைந்த,
ஒரு வளைந்த தடி.
இது அபொர்ஜினிகளுக்கே உரித்தான தனித்துவமான வேட்டையாடும் கருவி. இதை எறிந்தால் இலக்கைத்
தாக்கிய பின்னர் எறிந்தவனிடம் தானாகவே வந்துவிடும். ‘பூமரங்’கை ஒத்த ஒரு வளைந்த
தடி பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பெயர் ‘வளரி’. ஓடித்
தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால் நடைகளை திருடிச் செல்லும் திருடர்களைப் பிடிக்கவும், பண்டைய தமிழரால் இது
பயன்படுத்தப்பட்டதாம். உசாத்துணை நூல் தகவல்களின்படி, வளரிக்கு ஒத்த ஆயுதங்களை
வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்று
அழைத்தனராம். வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்திருக்கும். வளரிகளை இரும்பிலும்
செய்வார்கள். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். கால்களுக்குக்
குறிவைத்து சுழற்றி, விசிறி, வளரியை வீசிவிட வேண்டும்.
பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக் கூடிய
இலக்காக இருந்தால் அவற்றைச் சீவித்தள்ளி விடும். ஆனால் ஓடுபவர்களை உயிருடன்
பிடிக்க, மரத்தால் ஆன வளரியை
மாத்திரம் பயன்படுத்துவார்கள். இதில் கவனிக்க வேண்டியவ விஷயம் என்னவென்றால், பூமராங்போல, வளரி எறிந்தவனிடம்
மீண்டும் வருவதில்லை.
கோடுகளாலான ஓவியங்கள், அபொர்ஜினிஸ் சமூகத்தின்
கலாசார அடையாளங்கள். ஆதிகாலங்களில் ஓவியங்களை கற்பாறையில் வரைந்தார்கள். இப்பொழுது
இவர்களின் ஓவியங்கள் துணியிலும் மரப் பலகையிலும் கிடைக்கின்றன. பல்லாயிரம்
ஆண்டுகள் பழமையான Rock
Art எனப்படும் ஓவியங்களும்,
மரப் பட்டையில்
வரைந்த Bark Art எனப்படும் ஓவியங்களும், ஆதிவாசிகளின் தேசியப்
பூங்காக்களில் UNESCO உதவியுடன் இன்றும்
பாதுகாக்கப்படுகின்றன.
இத்தகைய ஓவியக்காட்சி ஒன்றுக்கு அபொர்ஜினி
மாணவர்கள் பரமலிங்கத்தை அழைத்திருந்தார்கள். ஓவியக் காட்சி முடிந்த பின்னர்
அபொர்ஜினி சமூகத்துடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் பரமலிங்கத்துக்கு வாய்த்தது.
அன்று முழு நிலவு. அதுவும் சித்திரைப் பூரணை!
அன்றைய தினத்தை தங்களின் மூதாதையர்களின் தினமாக
ஆட்டம் பாட்டத்துடன் அநுஷ்டித்தார்கள். பகல் முழுவதும் ஒருவித போதை மயக்கத்திலும்
உறக்கத்திலும் இருந்தவர்கள், மாலையானதும் ‘யுக்கலிப்ரஸ்’ மரத்தின் கீழ் ஒன்று கூடினார்கள். கருக்கல்
நேரத்தில், பைன்மர ஊசி இலைகளையும், யுக்கலிப்ரஸ் இலைகளையும்
எரித்துப் புகைபோட்டு, பாட்டுப் பாடினார்கள்.
வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் கொழுத்த ‘கங்காரு’க்களை தோளில் சுமந்து வந்தார்கள்.
அவற்றை தோலுடன் நெருப்பில் கருக்கி, யுக்கலிப்ரஸ் இலைகளை எரித்த புகையில் பதப்படுத்தி, மூதாதையர்களுக்கு
படைத்தார்கள். அதன் பின்னர் விருந்தும் ஆட்டமும் துவங்கியது. இப்படியான ஒரு
சூழலில், அபொர்ஜினி குழுத் தலைவரை, மாணவர்கள்
பரமலிங்கத்துக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது இயல்பாகவே அபொர்ஜினி மக்களின்
வரலாறு பற்றிப் பேச்சு வந்தது.
‘தன்னுடைய பெயர் அக்காமா (Akama), திமிங்கிலத்தின் பலம் கொண்டவன் என்பது அதன் பொருள்’ என்று, தன்னை அறிமுகப்
படுத்தினார். அவர் ஒரு பழுத்த அநுபவசாலி என்பது பேச்சில் தெரிந்தது. ‘பாம்’ மர இலை
ஒன்றால் காத்து விசிறியபடி,
தங்களது
வரலாற்றில் நடந்த சோக அத்தியாயங்களை, தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் சொல்லத் துவங்கினார்.
‘1770ம் ஆண்டு கப்டன் குக் (Captain Cook) ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர்களின் வருகை
(1788), ஆதிவாசிகளின் வாழக்கையை
முற்றிலும் புரட்டிப் போட்டது. முதலில் குற்றவாளிகளும் அவர்களின் காவலர்களும்
பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்டார்கள். பின்னர் பிரித்தானியாவில் வாழ
லாயக்கற்ற காவாலிகளும், ‘கடைப்புலி’களும்
வந்தார்கள். வரும்போது அவர்கள் ‘சும்மா’ வரவில்லை! விஷக் காச்சல், அம்மை போன்ற நோய்களையும்
கொண்டு வந்தார்கள். அதுவரை ஆதிவாசிகளிடம் இல்லாத பால் வினை நோய்களை, பரப்பியவர்களும்
வெள்ளையர்களே. காலப் போக்கில் நாடு விருத்தியடைய, ஐரோப்பிய வெள்ளையர்களின் குடியேற்றம் படிப்படியாக
ஆரம்பமாகியது’.
‘ஆதிவாசிகளின் விஷயத்தில், குடியேறியவர்களின் மன ஓட்டம் எப்படி இருந்தது?’
‘இங்குள்ள விலங்குகளையும் எங்களையும் அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. அதுவரை
நாங்கள் மீன் பிடித்த, வேட்டையாடிய
இடங்களிலிருந்து எங்களைத் துரத்தி அடித்தார்கள். எங்களின் பூர்வீக நிலங்களை
புடுங்கி, அங்கு பாரிய விவசாய, மற்றும் விலங்குப்
பண்ணைகளை அமைத்தார்கள்’.
‘இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் என்ற வகையில், இதை நீங்கள் எதிர்க்கவில்லையா?’
‘வில் அம்பு வைத்துக் கொண்டு எமது மூதாதையர்கள் போராடினார்கள். ஆனல்
வெள்ளையர்கள், குருவி சுடுவது போன்று
அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள்’.
ஐயோ, கடவுளே…!
சிறிது நேரம் கண்களை மூடி மௌனமானார் பெரியவர்.
தமது மூதாதையர்கள் அநுபவித்த கொடுமைகள் அவர் நினைவில் வந்திருக்க வேண்டும்.
திடீரென அருகிலிருந்த பியர் கானை உடைத்து ஒரே மடக்கில் குடித்தவர், மீண்டும் தொடர்ந்தார்.
‘குடியேற வந்தவர்களுக்கு கேளிக்கை வேண்டுமல்லவா? ஆங்காங்கே பாரிய மதுசாலைகளை நிறுவினார்கள். இறைச்சிக்காக
வேட்டை நாய்களுடன் குதிரையிலே மிருகங்களைத் தேடி காட்டுக்குச் சென்றவர்கள், வேட்டையாடிய குஷியில்
மிருகங்களுடன் மிருகங்களாக ஆதிவாசிகளையும் சுட்டுத் தள்ளினார்கள். அபொர்ஜினிகளைச்
சுட்டுக் கொல்வது வெள்ளையர்கள் மத்தியில், அப்போது ஒரு வீர விழையாட்டாக கணிக்கப்பட்டது. மாலை வேளைகளில் வேட்டையாடிய
மிருகங்களை நெருப்பில் வாட்ட, அவர்கள் திறந்த வெளியில் கூடுவார்கள். அங்கு அதிக எண்ணிக்கையில் ஆதிவாசிகளைச்
சுட்டவர், ஹீரோவாகக்
கணிக்கப்பட்டுவார்.
இதைச் சொல்லும் போது உணர்ச்சி வசப்பட்ட
பெரியவர், சங்கடத்துடன் எழுந்து, சிறுநீர் கழித்து
வருவதாகச் சொல்லி பற்றைக்குள் போய் வந்தார்.
மது, மற்றும் போதைப் பொருள்கள், அபொர்ஜினிஸ் சமுதாயத்தை அழித்தொழித்த சமாச்சாரங்கள். இவை மோசமான உடல் ஊனத்தை
ஏற்படுத்தி அவர்களின் சராசரி வாழ்க்கைக் காலத்தை அரைவாசியாகக் குறைத்தது என புள்ளி
விபரம் சொல்கிறது. பெரியவர் அக்காமாவுடன் பேசிய ஒரு மயணித்தியால நேரத்துக்குள், அவர் ஆறு பியர் கான்களை
அசால்டாக காலி பண்ணியதை பரமலிங்கம் அவதானித்தார். எனவே மது பாவனைப் பழக்கம் பற்றி
அக்காமாவிடம் கேட்டார்.
‘ஒரு சமூகத்தை ஏமாத்திப் பிழைக்க வேண்டுமென்றால், அவர்களை போதைக்கு அடிமையாக்க வேணுமென்பார்கள். எங்கள்
விஷயத்திலும் அவர்கள் இதைத்தான் செய்தார்கள். வெள்ளையர்கள் பெரும்பாலும் குடியை, கொண்டாட்டத்துடன்
நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களால்; அதிலிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் எமக்கு பழக்கிய குடி, எங்கள் வாழ்வின்
மரணத்தின் குடி…’ என வெள்ளையர்கள் மேலே முழுக் குற்றத்தையும் சுமத்திய பெரியவரை, சைகையால் நிறுத்தி, ‘வெள்ளையர்கள் வருவதற்கு
முன்பு ஆதிவாசிகள் மத்தியில் போதைப் பழக்கம் இருந்ததில்லையா?’ எனக் கேட்டார்
பரமலிங்கம்.
‘ஆதிகாலம் தொட்டு, சில தாவரங்களின்
வேர்களையும், விதைகளையும், இலைகளையும் உடலில்
கிளர்ச்சி ஊட்டுவதற்காக நாங்கள் உண்பதுண்டு. ஆனால் அவை போதைப் பொருள்கள் அல்ல…’
இந்த சந்தர்ப்பத்தில், பெரியவரின் உரையாடலில்
பக்குவமாக நுழைந்த மாணவன் மேலே தொடர்ந்தான். ‘நமது மூதாதையர்கள் பாவித்த இலைகளும்
விதைகளும், இந்தியர்களின் வெற்றிலை
பாக்கைப் போன்றவை. ஆனால் வெள்ளையர்கள், எமது மூதாதையர்களை படிப்பறிவு இல்லாத சோம்பேறிகளாக்க, மதுவையும் போதைப்
பொருள்களையும் தாராளமாக அறிமுகம் செய்தார்கள். அதற்கும் அப்பால், மதுவை தொடர்ந்து
வாங்குவதற்கு, பல கொடுப்பனவுகளையும் பண
உதவிகளையும் தாராளமாக கொடுத்தார்கள்’.
‘ஓ...! நல்ல அரசியல்தான்’.
‘நில உரிமைகளுக்குப் போராடாதவாறு ஆதிவாசி இளைஞர்களை தங்கள் கட்டுக்குள்
வைத்திருப்பது அப்போது வெள்ளையர்களுக்கு அவசியமாயிற்று. இதற்காக எங்கள் பதின்ம
வயது இளவல்களுக்கு, மதுவை மட்டுமல்ல, மேலதிக போதைக்காக Gasoline, Paint Thinner போன்ற வேதிப் பொருள்களை
நுகரப் பழக்கியவர்களும் அவர்களே’ என அவன் ஆத்திரப்பட்டான்.
அவன் இதைச் சொல்லும்போது ஈழத் தமிழர் மத்தியில்
மதுவும், போதைப் பொருள்களும், திட்டமிட்ட வகையில்
அறிமுகம் செய்யப்படுவதை நினைத்து, பரமலிங்கம் உணர்ச்சி வசப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் வாழும் பல்லின சமூகங்களுடன்
ஒப்பிடும் பொழுது அபொர்ஜினி சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், என்பன இன்றும் மிகவும்
கீழ் நிலையிலேயே உள்ளன. இதனால் இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகமாவதால், பொலீசாரால்
கைதுசெய்யப்படும் வீதமும்,
ஒப்பீட்டளவில்
அதிகமாக உள்ளது. விகிதாசார எண்ணிக்கையின்படி சிறையிலிருப்போரில் அதிகமானோர்
அபொர்ஜினிஸ் மக்களே என புள்ளி விபரம் சொல்கிறது. சிறையில் இவர்கள் காவலர்களால்
பாரபட்சமாக நடத்தப்படுவதும், சிறை மரணங்களும் இன்றும் நடக்கின்றன.
காலம் எப்பொழுதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக
இருப்பதில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக குரலெழுப்ப
துவங்கினார்கள். வெள்ளையர்களின் அரசுக்கு எதிராக இவர்களின் எதிர்ப்புக்கள்
படிப்படியாக வலுவடைய, பூர்வ குடிமக்களுக்கு
தாங்கள் செய்த அநீதிகளை, மெல்ல மெல்ல
ஒத்துக்கொள்ளத் துவங்கினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில், மண்ணின் மைந்தர்களான
பூர்வகுடிமக்களுக்கு, இன்றுவரை முறையான
அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. பல்வேறு இழுபறிகளுக்கு
மத்தியில் 1990ம் ஆண்டு ‘பூர்வீக காணி
உரிமைச் சட்டம்’ (Native
title rights) வெள்ளையர்களின் அரசால் இயற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2008ம் ஆண்டு, அப்போதைய பிரதமர்
கெவின்-ரட், அபொர்ஜினி
ஆதிவாசிகளிடமிருந்து, பலவந்தமாக பிரிக்கப்பட்ட
குழந்தைகளுக்காக, பாராளுமன்றத்தில் மன்னிப்புக்
கோரினார். காலம் கடந்து கேட்கப்பட்ட இந்த மன்னிப்பை, அபொர்ஜினிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய சமயம்
பார்த்து கொக்கி போட்டார்,
பரமலிங்கம்.
‘வெள்ளையர்களுக்கு காமம் தலைக்கேறும் போது, அதற்கு வடிகால் அமைக்க முடியாதவர்கள், ஆதிவாசி பெண்களுடன் வல்லுறவு கொண்டார்கள். இதனால்தான் வெள்ளைத் தோலும், சப்பை மூக்கும் கொண்ட
‘கலப்பினம்’ உருவாகியது. வெள்ளைத் தோல் குழந்தைகள், கறுப்பு நிற ஆதிவாசித் தாயுடன் வாழ்வதை, வெள்ளையர்கள்
விரும்பவில்லை. இதனால், பெரும்பாலான கலப்பின
குழந்தைகள், ஆதிவாசி
பெற்றோரிடமிருந்து களவாடப்பட்டார்கள். சிலர் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டார்கள்.
‘கொடுமைதான், வெள்ளையர்கள்
பாராழுமன்றத்தில் மன்னிப்புக் கோரியது, இந்தக் குழந்தைகளுக்காகவா’?
‘ஆம், இவர்களுக்காகத்தான்.
ஆனால் இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘களவாடப்பட்ட குழந்தைகள்’ என அழைக்கப்பட்ட இவர்களின் சந்ததியினரே, பின்னர் வெள்ளையர்களின்
அரசுக்கு தலையிடியாய் இருப்பார்கள் என, வெள்ளையர்கள் அப்போது நினைக்கவில்லை’.
‘அதெப்படி…? கொஞ்சம் விளக்கமாகச்
சொல்லுங்கள்’
பரமலிங்கத்தின் கேள்வியை பெரியவர் காதில்
வாங்கவில்லை. மீண்டும் ஒரு பெரிய பியர் கானை உடைத்து ஒரே மூச்சில் குடித்தவர், வெறுப்புடன் கானை நசுக்கி
எறிந்தார். பின்னர் சிறுநீர் கழிக்கவென எழுந்து, தள்ளாடியபடி பைன் மரத்தின் பின்னே ஒதுங்கினார். இதனால், பெரியவர் வரும்வரை
காத்திராமல், இன்னொரு மாணவன் அவர்
விட்ட இடத்திலிருந்து சொல்லத் துவங்கினான்.
‘கலப்பின குழந்தைகள் தூர இடங்களிலுள்ள விடுதிகள், மற்றும் தேவாலயங்களில், பெற்ற தாயுடன் தொடர்பற்ற வகையில் வளர்க்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு
ஆங்கிலக் கல்வி புகட்டப்பட்டு, ஆங்கில கலாசாரத்தில் வாழப் பழக்கப்பட்டது.’
‘குழந்தைகளின் தாய் அபொர்ஜினியாகவும், தந்தை முன்பின் தெரியாத வெள்ளையனாகவும் இருந்தது போல, தாய் வெள்ளைக்காரியாகவும்
தந்தை அபொர்ஜினியாகவும் இருந்ததுண்டா?’
பரமலிங்கத்தின் இந்தக் கேள்விக்கு அதிரச்
சிரித்தான் மாணவன்.
‘குடியேறிய வெள்ளைக்காரிகள், தங்களை எஜமானிகளாகவும் புனிதமானவர்களாகவும் கருதினார்கள். கறுப்பு நிறம், அவர்களுக்கு அழுக்கின்
அடையாளம். அவர்கள் எப்படி அபொர்ஜினி ஆணுடன் உடலுறவு கொண்டிருக்க முடியும்? அதுமட்டுமல்ல
குடியேறியவர்களுள் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் இருந்ததினால் வெள்ளைக்காரிகள்
உடலுறவுக்காக வெளியே போகவேண்டிய தேவை இருக்கவில்லை’ என்றவன், பரமலிங்கத்தின்
றெஸ்போன்ஸுக்கு காத்திராமல், கலப்பின குழந்தைகள் பற்றிய விஷயத்துக்கு வந்தான்.
‘கலப்பினக் குழந்தைகள்;
மேற்கத்திய
சூழலில் வளர்ந்து கிறீஸ்தவர்கள் ஆனார்கள். இவர்களுள் எவருமே பின்னர் கறுப்பு நிற, அபொர்ஜினி சமூகத்தில்
கலந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களை மணந்து ஆங்கிலேயர்களாகவே வாழத்
துவங்கினார்கள். இவர்களுக்கு இருந்த அபொர்ஜினி அடையாளம், சப்பை மூக்கு மட்டுமே.
நிறம், பேச்சுமொழி உட்பட
மற்றயனவெல்லாம் பெரும்பாலும் வெள்ளையர்களதே.’
‘இவர்களுள் சிலர் எமது கல்விச் சாலையிலும் படிக்கிறார்களே? நான் அறிந்தவகையில்
இவர்கள் படுபயங்கர பச்சோந்திகள்’ என வெறுப்பை உமிழ்ந்தார் பரமலிங்கம்.
‘உண்மைதான். கால ஓட்டத்தில் அழுத்தங்களைத் தாக்குப் பிடிக்க முடியாத
வெள்ளையர்களின் அரசு, ஆதிவாசிகளுக்கு பல
சலுகைகளை அள்ளித் தெளித்தார்கள். ஆனால் இன்றுவரை இந்தச் சலுகைகளை அநுபவிப்பது
பெரும்பாலும் கலப்பின அபொர்ஜினி சந்ததியினரே’.
‘இது எப்படிச் சாத்தியமாகிறது? புரியும்படி விளக்கமாகச்
சொல்லு’ என தூபம் போட்டார் பரமலிங்கம். இது சம்பந்தமாக கல்விச்சாலை மட்டத்திலே
நடப்பனவற்றை, பரமலிங்கம் அறிவார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட அபொர்ஜினி
இளைஞன், இதுபற்றி என்ன
நினைக்கிறான் என்பதை அறிய,
இவ்வாறு
கேட்டார்.
‘பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் விலாங்கு மீன் ரகத்தைச்
சேர்ந்தவர்கள் இவர்கள். கலப்பின, அபொர்ஜினி சந்ததியிலுள்ள பலருக்கு, முப்பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டி மாத்திரம் கறுப்பு நிற, தூய அபொர்ஜினி பெண்ணாக
இருப்பார். இதே வேளை, பாட்டியின் சந்ததியினர்
வெள்ளையர்களை மணம் முடித்திருப்பார்கள்…!’
‘ஓ…!’ என ஆச்சரியப்பட்டார் பரமலிங்கம்.
‘இதிலுள்ள இன்னொரு சுவராசியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் தங்கள்
இரத்தத்தில் இன்னமும் அபொர்ஜினி மரபணு இருப்பதாக உரிமை கோரி, அங்கீகாரம் பெற்றுள்ளதே!’
‘இதனால் இவர்களுக்கு என்ன லாபம்?’
‘மேற்கத்திய கலாசாரத்தில் கல்வி கற்று, முற்றுமுழுதாக ஆங்கிலேயர்களாக வாழும் இவர்களுக்கு, மேலதிகமாக அபொர்ஜினி
சலுகைகளும், கொடுப்பனவுகளும்
கிடைக்குமல்லவா?’
‘உஷாரான ஆக்கள்தான்! ஆஸ்திரேலிய அரசு இதை அங்கீகரித்ததா?’
‘ஆம், போராடிப் பெற்றுக்
கொண்டார்கள். அவர்களுள் சிறந்த சட்ட வல்லுனர்கள் இருந்தார்கள். இவர்களே அபொர்ஜினி
மக்களை பல சபைகளில் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். அதனால் அங்கீகாரம் பெறுவது
இலகுவாயிற்று. அது மட்டுமல்ல, இவர்களே அபொர்ஜினிகளின் உரிமைகளுக்காக உரத்துப் பேசி அரசியல் செய்தார்கள்.
இதில் பெரும்பாலும் இவர்களின் நன்மைகளே மேலேங்கி உள்ளன. ஆனால்…?’
‘ஆனால் என்ன? இது மனித சுபாவம்தானே?’
‘இது எங்களை, இன்று வரை பாதிக்கின்ற
விஷயம். பூர்வகுடி மக்களுக்காக, அரசாங்கத்தால் வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்களையும், வேலை வாய்ப்பு
முன்னுரிமைகளையும் பெரும்பாலும் தட்டிச் செல்வது இவர்களே. இது உங்களுக்குத்
தெரியாத விஷயமா?’ என ஆத்திரப்பட்டான்
மாணவன்.
அவனது கோவம் நியாயமானதே. இம்முறை கல்விச்
சாலையில் கோரப்பட்ட பூர்வ குடிமக்களுக்கான கல்வி புலமைப் பரிசில்களுக்கு (Schlorship) ஏராளமான விண்ணப்பங்கள்
வந்திருந்தன. இவற்றுள் பெரும்பாலானவை, அபொர்ஜினி ‘கலப்பினத்தவர்’களதே. கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும், அவர்கள் அபொர்ஜினி என்று
நம்ப முடியாதவர்கள். ஆனாலும் தாங்கள் ஒரு தூய அபொர்ஜினித் தாயின் சந்ததி என்று
சான்றிதழ் சமர்ப்பித்தார்கள். ஆங்கிலச் சூழலில், வசதியாக வாழ்ந்த கலப்பின அபொர்ஜினிகளின் கல்விச்
சான்றிதழ்களுக்கு முன்னால்,
புதர்களுக்கு
மத்தியிலிருந்து வந்த ‘கறுப்பு’ அபொர்ஜினி மாணாக்கர்களின் விண்ணப்பங்கள்
அடிபட்டுப்போயின.
‘வேலை வாய்ப்பு விஷயங்களிலும் நிலமை இதுதான்…’ என ஆரம்பித்த இளைஞன், திடீரென நீண்டு வளர்ந்து, கிளை பரப்பி நின்ற, பைன் மரத்தை நோக்கி
ஓடினான். அங்கு பெரியவர் அக்காமா உட்பட ஆண்களும் பெண்களும் போதை தலைக்கேறிய
நிலையில், குப்புறப்
படுத்திருந்தனர். சிலர் வாந்தி எடுத்தனர்.
அபொர்ஜினிகளின் இந்தக் குடி, வெள்ளையர்கள் பழக்கிய
குடி! இதுவே இவர்களுள் பலர் அல்பாயுசில் போவதற்கான காரணம். கட்டுப்பாடற்ற
இவர்களின் குடி உடலையும்,
கல்வியையும், பொருளாதாரத்தையும்
தின்றுவிடுகிறது. பெரியவர் அக்காமாவையும் கோமாளியாக்கி விடுகிறது.
பரமலிங்கத்துக்கு முன்னால், பெரியவர்கள் போதையில்
விழுந்ததை, மாணவர்கள் விரும்பவில்லை.
இதனை அவர்களின் உடல் மொழி மூலம் பரமலிங்கம் புரிந்து கொண்டார். எனவே மெல்ல எழுந்து
தனது தங்குமிடம் நோக்கி நடந்தார்.
கல்விச் சாலையில் பூர்வ குடிமக்களின் புலமைப்
பரிசில்களைத் தீதுமானிக்கும் நிர்வாக சபையில், இம்முறை பரமலிங்கமும் ஒருவர். நிர்வாக சபை தீர்மானித்த முடிவில், அவருக்கு சிறிதும்
உடன்பாடில்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் படி
மற்றவர்களுடன் அவர் ஒத்துப்போக வேண்டியதாயிற்று. இதனால் புலமைப் பரிசில்
கொடுப்பனவுகள், மற்றும் சலுகைகள்
அனைத்தும், விதிகளின் பிரகாரம்
கலப்பின அபொர்ஜினிகளுக்கு கொடுக்கத் தீர்மானித்தார்கள். இதுவே பரமலிங்கத்தின்
மனவேதனைக்கும் தூக்கமின்மைக்கும் காரணமாயிற்று.
‘தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அதனால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளோம் எனக்
கூப்பாடு போடுபவர்கள் அனைவரும், அதைவைத்து ஆதாயம் அடைந்தவர்களே’ என்பார் முதுபெரும் எழுத்தாளர் எஸ்போ. இது
தமிழருக்கு மட்டுமல்ல, கலப்பின ஆதிவாசிகளுக்கும்
எப்படி பொருந்துகிறது என பரமலிங்கம் நினைத்துப் பார்த்தார்.
(2016)
No comments:
Post a Comment