Saturday, 30 January 2021

 என்.பி.கே…!

ஆசி கந்தராஜா

ந்த சுற்று வட்டாரத்தில் உடையார் வளவைத் தெரியாதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு வன்னி நிலப்பரப்பில் பிரபல்யமான குடும்பம் அது. மாங்குளத்தில் அவர்களுக்கு ஏராளமான நெல் வயல்கள் சொந்தமாக இருந்தன. இதற்கான நதி மூலத்தை பொன்னையா வாத்தியார் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் முடிக்குரிய காணிகளை முறைப்படி பதிவு செய்ய, உடையார் என்னும் பதவியை உருவாக்கினார்களாம். இவர்கள் ஊரிலுள்ள அரச காணிகளை ஆவணப்படுத்தும் போது, பத்தோடு பதினொன்றாக சில காணிகளை தங்களுடைய பெயர்களிலும் பதிவு செய்தார்களாம். இதனால் இவர்கள் பெருந் தொகையான காணி பூமிகளுக்குச் சொந்தக் காரர்களாகி நிலச் சுவாந்தர்களானார்கள்.

உடையாரின் பேரன் ஐயாத்துரை என்னுடன் யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றில் ஒன்றாகப் படித்தவன். நல்ல நண்பன். உடையார் குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசு. இதனால் குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவென, பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டான். பின்னர் ஊர்ப் பாடசாலை ஒன்றில் மாணவ ஆசிரியராகி கால ஓட்டத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகிவிட்டான். ஐயாத்துரையின் வீட்டில் எந்த நேரமும் உலை கொதிக்கும், அடுப்பில் ஏதோ ஒருவகை இறைச்சி அவியும். வந்தவர்கள் அங்கு கை நனைக்காமல் போவதில்லை. அவ்வப்போது நானும் குடும்பத்துடன் அவனுடைய வீட்டுக்குப் போய் விடுமுறையைக் கழிப்பதுண்டு. அவை மிகவும் மகிழ்ச்சியான நாள்கள்.

ஈழப் போராட்டம் துவங்கி, வன்னியில் போர் உக்கிரமான காலமது!

ஐயாத்துரை உடமைகளை இழந்து இடம் பெயர்ந்த பின்னர், அவனுடன் இருந்த தொடர்பு அறுந்து விட்டது. போர் முடிந்து வன்னி வழமைக்குத் திரும்பிய பின், திடீரென ஒருநாள் அம்மாவின் வீட்டு விலாசத்துக்கு ஐயாத்துரை கடிதம் எழுதியிருந்தான். ‘விவசாயம் உட்பட அனைத்தையும், தான் ஆரம்பத்திலிருந்து துவங்கவேண்டி இருப்பதாகவும் அதற்கு சில உதவிகள் தேவை, எனவும் எழுதியிருந்தான்.

அடுத்த நத்தார் விடுமுறைக்கு, மாங்குளத்தில் வசித்த ஐயாத்துரை வீட்டுக்குப் போனேன். போரினால் சிதிலமடைந்த வீட்டின் ஒருபகுதியை திருத்தி அதில் குடியிருந்தான். உடைமைகள் அனைத்தையும் இழந்ததால் சற்று நொடித்துப் போயிருந்தான். பல்கலைக் கழகத்தில் விவசாயம் படிக்கும் ஐயாத்துரையின் மகன், மீண்டும் துவங்க இருக்கும் பயிர் செய்கையை காலத்துக்கு ஏற்ற வகையில், நவீன முறையில் ஆரம்பிக்க வேண்டுமென தகப்பனைக் கேட்டிருக்கிறான். இதற்காகவே ஐயாத்துரை என்னை அங்கு அழைத்திருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

தலை வாழை இலையில் சாப்பாடு. குத்தரிசி சோறுடன், பலவகையான மரக்கறிகள், ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாம் பொரியலாகவும் பிரட்டலாகவும் குழம்பாகவும் இலைக்கு வந்தன. இடமின்மையால் சாப்பாட்டு அறையின் ஒரு மூலையிலே அமோனியா மற்றும் யூறியா உரச்சாக்குகளை அடுக்கியிருந்தான். சாப்பாடு முடிந்தபின் நெற்பயிர் செய்கையில் அவர்களது உர பாவனை பற்றிக் கேட்டேன்.

இந்த வருஷம் இரண்டு தரம் உரம் போட்டன். பயிர் உரமாய், உயரமாய் வளர்ந்தாலும் பொத்தி தள்ளி கதிர் இன்னும் வரேல்லை’ என்றான் ஐயாத்துரை கவலையுடன்.

ஐயாத்துரையையும் மகனையும் அழைத்துக்கொண்டு வயல் பக்கம் போனேன். ஒரு கரையில் குளத்து நீர்ப் பாசனத்தின் கீழான நெல் வயல்களும் குளத்தின் மறுகரையில் மேட்டுப் பக்கமாக வானம் பார்த்த காணிகளும் இருந்தன. அப்போது மழைக் காலமாகையில் வயல்களில் நீர் நிரம்பி வழிந்தன. பயிர்கள் நீண்டு வளர்ந்து பாரம் தாங்காமல் சாய்ந்திருந்தன. பொத்தி மிகக் குறைவாகவே தள்ளியிருந்தன. இதற்கான காரணத்தை ஐயாத்துரை வீட்டில் அடுக்கியிருந்த உரச் சாக்குகளுடன் தொடர்பு படுத்தி நான் விளங்கிக்கொண்டேன்.

ஐயாத்துரை, நீ என்ன உரம் விதைச்சனீ?’

விதை நெல்லு முளைச்சு, பயிர் ஒரு சாண் வளர்ந்தவுடன் அமோனியா உரம் விதைச்சன். பயிர் அந்தமாதிரி, பல்சையாய் கிசுகிசுவெண்டு நல்ல வளர்த்தி. அந்த சந்தோஷத்திலை போனமாதம் பொத்தி தள்ளட்டுமெண்டு யூரியா போட்டன். இப்ப, பொத்தியும் தள்ளாமல் கதிரும் வராமல் பயிர் நெடுத்துச் சரிஞ்சுபோய் கிடக்குது…’

இங்கைதான் ஐயாத்துரை நீ பிழை விட்டிருக்கிறாய்.’

என்ன பிழை?’

அமோனியா, யூரியா ஆகிய இரண்டு உரங்களிலும் இருப்பது நைட்ரஜன் என்னும் இரசாயனப் பொருள். இந்த வேதிப்பொருள் அமோனியாவிலும் பார்க்க யூரியாவில் அதிகளவு உள்ளது. நைட்ரஜன், தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற மட்டும் உதவுவன. இதனால்தான் உன்னுடைய நெற்பயிர்கள் வளர்ந்திருக்கு, ஆனால் பொத்தி தள்ளி கதிர் வரேல்லை.’

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோ அங்கிள்’ என உரையாடலுள் புகுந்தான் விவசாயம் படிக்கும் ஐயாத்துரையின் மகன்.

உரம் என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச் சத்துகளைப் பெருக்குவதற்கு இடப்படும் வேதிப் பொருளாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்ய செயற்கையான இரசாயன சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவதை உரம் போடுவது என்போம்’.

அப்போ, மாட்டுச்சாணம் போடுவதும் பட்டி அடைப்பதும்’?

இவை பசளைகள். பொதுவாக மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோளி எச்சம், இலை, தழை, கடல் சாதாளை போன்ற இயற்கையான பொருட்களை நிலத்திற்கு இடுவதை பசளை போடுதல் என்பார்கள்’.

அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பை கூளங்களை குழியிலிட்டு நீரைப் பாய்ச்சி கம்போஸ்ட் என அழைக்கப்படும் பசளைகளை தயாரித்தும் விவசாயிகள் மண்ணை வளமாக்குவார்கள்’.

இது நாங்கள் காலம் காலமாய் பாட்டன் பூட்டன் காலத்திலையிருந்து செய்யிறதுதானே. அதை விட்டிட்டு உர விஷயத்துக்கு வா. என அமோனியா, யூரியா விஷயத்தை ஞாபகமூட்டினான் ஐயாத்துரை.

தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற, நைட்ரஜன் கொண்டுள்ள அமோனியா, யூரியா உரங்கள் பெருந்துணை புரிகின்றன. கீரை மற்றும் இலை மரக்கறி வகைகளுக்கு இவற்றைக் குறிப்பிட்ட அளவு எந்த நேரத்திலும் போடலாம். ஆனால் பூத்துக் காய்த்துப் பழங்களைத் தரும் தாவரங்களுக்கும் நெல்லு வகைகளுக்கும் பயிர் வளரும் ஆரம்ப நிலையில் மட்டும் நைட்ரஜனைக் கொண்டுள்ள அமோனியா மற்றும் யூரியா உரங்கள் போடவேண்டும்.

எனக்கு இப்ப விளங்குது அங்கிள். கதிர் வாற நேரத்திலை அப்பா யூரியா விதைச்சதாலை, அதிலை இருக்கிற நைட்ரஜன், தண்டும் இலையும் உரமாய் வளர உதவிசெய்திருக்கு. அதனாலை பொத்தி தள்ளி கதிர் வாறது குறைஞ்சிருக்கு’, என்ற மகனை இடைமறித்த ஐயாத்துரை, ‘காரண காரியங்களை விட்டிட்டு, கதிர் வாறதுக்கு என்ன போடவேணுமெண்டு சொல்லு. இங்கை கடையிலை உரம் எண்ட பெயரிலை அமோனியாவும் யூரியாவும்தான் விக்கிறாங்கள். நாங்களும் விவரம் தெரியாமல் இதுகளை வாங்கி வயலுக்கை கொட்டுறது. இதனாலை எல்லா வயல்களும் சவர்பத்தினது மட்டுமில்லை நிலத்தடி நீர், குளத்துத்தண்ணி எண்டு எல்லா இடமும் இரசாயனக் கலவைதான்’ என ஆதங்கப்பட்டான் ஐயாத்துரை. பின்னர் வயல் வரப்பில் வரிசையாக நின்ற வடலிப் பனைகளின் மறைப்பில் சிறு நீர் கழிக்கவென மெதுவாக ஒதுங்கினான்.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாத ஐயாத்துரையின் மகன், ‘நாங்கள் ஆடு கடிச்சமாதிரி அங்கொண்டும் இங்கொண்டுமாய் கதைக்கிறம் அங்கிள், தாவரங்களுக்குத் தேவையான இரசாயன மூலகங்கள் பற்றி கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ’ என்றபடி, தனது ஐபாட்டை எடுத்து குறிப்பெடுக்கத் தயாரானான்.

தாவர வளர்ச்சிக்கு 16 மூலகங்கள் தேவை. இதில் அவசியம் தேவையான மூலகங்கள், கார்பன் (C), ஐதரசன் (H), ஓட்சிசன் (O) ஆகியன. இவற்றை தாவரங்கள் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் இயற்கையாகவே பெற்றுக் கொள்ளும்.

ஓ…!

இதேவேளை, நைட்ரஜன் (N), பொட்டாசியம் (K), பொஸ்பரஸ் (P), மக்னீசியம் (Mg), கல்சியம் (Ca), கந்தகம் (S) ஆகிய ஆறு மூலகங்களும் ஒப்பீட்டளவில் அதிகளவு தேவையான மூலகங்கள்.

ஓ.கே.

இரும்பு (Fe), செப்பு (Cu), போரான் (B), மாலிப்டினம் (Mo), துத்தநாகம் (Zink – Zn), மாங்கனீசு (Mn), குளோறீன் (Cl) ஆகிய ஏழு மூலகங்களும் ஒப்பீட்டளவில் குறைந்தளவு தேவையான மூலகங்கள்.

இவை எல்லாம் உள்ளடக்கிய முழுமையான இரசாயன உரக் கலவை சந்தையில் இருக்கிறதா அங்கிள்?

இல்லை. காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் பெறப்படும் கார்பன், ஐதரசன், ஓட்சிசன் ஆகிய மூலகங்களைத் தவிர்ந்த 13 மூலகங்களுள் நைட்ரஜன், பொட்டாசியம், பொஸ்பரஸ் ஆகிய மூன்று மூலகங்களே தாவர வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இவைகள்தான் தனித்தோ அல்லது கூட்டாகவோ கடைகளில் கிடைக்கின்றன.

ஓஹோ, மிகுதி 10 மூலகங்களும்?

இவை ஒப்பீட்டளவில் குறைந்தளவு தேவைப்படுவதால் இவற்றைத் தாவரங்கள் மண்ணில் உள்ள இயற்கைப் பசளைகளிலிருந்து பெற்றுக் கொள்ளும்.

பனைக்குப் பின்னால் நின்று எங்களது உரையாடலை அரையும் குறையுமாகக் கேட்ட ஐயாத்துரை, ‘உங்கடை அறிவியல் உரையாடல் இனிக் காணும். உர பாவனை பற்றி பாமர விவசாயிக்கும் விளங்கக் கூடியதாய்க் கொஞ்சம் இலகுவாய் சொல்லு. அப்பதான் நான் கமம் செய்ய முடியும் என்றான்.

தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பெருந்துணை புரிகிறது என, நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறன். இதனால் தாவர வளர்ச்சியின் ஆரம்பத்தில் நைட்ரஜன் கொண்டுள்ள அமோனியா, யூரியா உரங்கள் போடவேண்டும்.

சரி…,

பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பொஸ்பேட்டுகள் (P) அவசியம் தேவை. அதேபோன்று வேரும் வித்தும் விருத்தி பெற, பொட்டாஸ் அல்லது பொட்டாசியம் (K) என்னும் சாம்பல் சத்து தேவையாகும்.

கடையிலை இவையெல்லாம் இருக்கெண்டு சொல்லுறியோ?

உரம் விற்க்கும் பெரிய கடைகளில் இவற்றைத் தனித்தனியே வாங்கலாம். ஆனால் நைட்ரஜன், பொட்டாசியம், பொஸ்பரஸ் ஆகிய மூன்றும், தேவைக்கேற்ற வீதத்தில் கலந்த, உரக்கலவை இப்பொழுது சந்தையில் உண்டு. இதை “என்.பி.கே.” (NPK) உரக் கலவை என்பார்கள். இதையே நெல் வயல்களில் பொத்தி தள்ளி கதிர் வர முன்பும், தாவரங்கள் பூக்கும் பருவத்திலும் போடவேண்டும்.

இப்ப விளங்குது நாங்கள் விடுகிற பிழை. அமோனியாவும் யூறியாவும் கடையிலை லேசாய் கிடைக்குதெண்ட உடனை அதையே அள்ளிக் கொட்டினால் என்னண்டு நெல்லு விளையும்? இதைச் சொல்லித்தாறதுக்கும் ஆமான ஆக்ககள் இங்கை இல்லை, எனச் சொல்லி ஆதங்கப்பட்டான் நண்பன் ஐயாத்துரை.

எங்கள் உரையாடலைக் கேட்டவண்ணம் களை பிடுங்கிக் கொண்டிருந்த மூத்த விவசாயி ஒருவர் தலையில் கட்டியிருந்த துவாயை அவிழ்த்து முகத்தை துடைத்தபடி தனக்கிருக்கும் பிரச்சனை ஒன்றைச் சொன்னார்.

நெற்பயிர்களுக்குள் வளர்ந்திருந்த களைகளைக் கொல்ல, களை நாசினி தெளித்தவராம். கிடைச்சியும் அதையொத்த தாவரங்களும் மாத்திரம் வாடிச் செத்தனவாம். கோரைப்புல்லும் மற்றைய புல்லு வகைகளும் சாகாமல் அப்படியே நிற்கின்றனவாம். இதற்கான காரணம் என்னவென அறிய விரும்பினார் அந்த விவசாயி.

களை கொல்லியில் இரண்டு வகை. ஒன்று அகன்ற இலைத் (இரு வித்திலை) தாவரங்களை மாத்திரம் கொல்வன. ஆங்கிலத்தில் இதை Selective herbicide என்பார்கள்.

மற்றது…?

ஒடுங்கிய இலைத் (ஒரு வித்திலை) தாவரங்களான புல்லு வகைகளையும், அகன்ற இலை தாவரங்களான பூண்டு வகைகளையும் ஒருமித்து அழிப்பன. ஆங்கிலத்தில் இதை Complete herbicide அல்லது Round up என்பார்கள்.

எனது விளக்கம் அந்த முதிய விவசாயிக்குப் புரியவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது. எனவே விஷயத்தை இலகுவாக்கச் சொல்ல முயன்றேன்.

பெரியவரே, வயலுக்குள் களைகளாக கிடைச்சி, குப்பைமேனி, மூக்கறைச்சி போன்ற அகன்ற இலைத் தாவரங்களும் கோரை முதலான ஒடுங்கிய இலை கொண்ட புல்லு வகைகளும் நெல்லுடன் சேர்ந்து வளரும். நீங்கள் தெளிக்கும் மருந்து கிடைச்சி குப்பைமேனி மூக்கறைச்சி போன்ற அகன்ற இலைத் தாவரங்களை மாத்திரம் கொல்லுகின்ற களை கொல்லி.

புல்லைக் கொல்ல…?

புல்லைக் கொல்ல, அதற்குரிய மருந்தடித்தால் புல்லோடு நெல்லும் சாகும்.

எனக்கு விளங்குது அங்கிள். புல்லும் நெல்லும், ஒடுங்கிய இலை கொண்ட ஒரு வித்திலைத் தாவரங்கள், என மீண்டும் அறிவியலுக்குள் நுழைந்த ஐயாத்துரையின் மகன், நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டான்.

அகன்ற இலைத் (இரு வித்திலை) தாவரங்களை மாத்திரம் கொல்லும் Selective herbicide எனப்படும் தெரிந்து கொல்லும் களை நாசினியை, நெல் வயலுக்குத் தெளிப்பதால் முழுமையான பயன் கிடைக்கப் போவதில்லை. பின் எதற்காக இதை தயாரித்து சந்தைக்கு விடுகிறார்கள்?

பல நாடுகளில், வளவிலும், பூங்காவிலும், மைதானங்களிலும் அழகுக்காக அமைக்கப்பட்ட புற்தரைகள் உண்டு. இவற்றுள் வளரும் பெரும்பாலான குளோவர் முதலிய களைகள் அகன்ற இலைத் தாவரங்களே. இவற்றைக் கொல்ல Selective herbicide என்னும் தெரிந்து கொல்லும் களை நாசினி தேவை.

என்னுடைய விளக்கங்கள் பெரியவருக்குப் புரியவில்லை. இதனால் எரிச்சலடைந்த அவர், புல்லை கையாலைதான் புடுங்கவேணும் எண்ணுறியள்…! புல்லுப் புடுங்கேக்கை அதோடை சேர்த்து பூண்டுகளையும் என்னாலை இழுக்கேலாதோ? அதுக்கேன் மருந்தடிப்பான்? என்ன விண்ணான விஞ்ஞானமோ, எனப் புறுபுறுத்தபடி மீண்டும் புல்லுப் புடுங்க வயலுக்குள் இறங்கினார்.

நாங்கள், ஐயாத்துரையின் வயல் நிலங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள், விதைக்க வேண்டிய நெல் இனங்கள் என பலதும் பத்தும் பேசினோம். இதைக் கேட்டுக் கொண்டு நின்ற பெரியவர் ‘மண் வேறு மனிதர்கள் வேறு அல்ல’ என்றார் பூடகமாக. நீண்ட நாட்களுக்குப் பின் அன்று நான் வயலுக்கு போய் வந்தது உடலுக்கு இதமாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

வீட்டுக்கு வந்தபோது ஐயாத்துரையின் மனைவி நெற்றி நிறைய வீபூதி பூசி, குங்குமப் பொட்டு வைத்து ஆட்டுப்பால் கலந்த தேத்தண்ணி, பொரி அரிசிமா உருண்டை சகிதம் எங்களுக்காக காத்திருந்தார்.

உண்மைதான், மரம் செடி கொடிகளை மனிதர்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டால் இழப்புக்கள், அழிவுகள், துன்பங்கள் எல்லாம் சர்வசாதாரணம் என்ற உண்மையை, அன்று நான் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

-ஆசி கந்தராஜா- (2017)

No comments:

Post a Comment