பூக்களே, காதல் செய்யுங்கள்...!
செல்லத்துரை அண்ணைக்கு 'ஹெளஸிங் கொமிஷன்' வீடு கிடைத்து
விட்டது...! அதுதான் அன்றைய மூத்தோர் ஒன்றுகூடலில், முக்கிய 'பேசு'பொருள்.
செல்லத்துரை அண்ணை சிட்னிக்கு புலம் பெயர்ந்து வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் எப்படி ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடு கிடைத்தது? என மூத்தவர்கள் மூக்கில் விரலை வைத்தார்கள். சிலருக்கு இது ஆச்சரியம், பலருக்கோ பெரும் ஆதங்கம். மொத்தத்தில் எல்லோருடைய வயிறும் இதனால் புகைந்தது.
பெற்றோர் பிள்ளைகள் இணைப்பு விசாவில் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு 104 கிழமைகளின் பின்னர், 'சென்றலிங்' பென்ஷன் கிடைக்கும். இது தானாகவே நடக்கும் சங்கதி. ஆனால் பென்ஷனுடன் செல்லத்துரை அண்ணைக்கு ‘ஹெளஸிங் கொமிஷன்’ வீடும் கிடைத்ததைத்தான், பலராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
செல்லத்துரை அண்ணை, ஊரிலேயே வலு சுழியன்.
கமத்தொழில் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிவையம் என, அவர் வன்னியில் ஆதிக்கம்
செலுத்தாத அமைப்புக்கள் இல்லை. அந்த அநுபவம் ஆஸ்திரேலியாவிலும் கைகொடுத்ததால்
பிடிக்கிறவனை பிடித்து சட்டத்திலுள்ள ஓட்டைகளில் புகுந்து விழையாடி, அரசாங்கத்துக்கு சொந்தமான
‘ஹெளஸிங் கொமிஷன்’ வீட்டைப் பெற்றுவிட்டார். அதுவும் விசாலமான காணியுடன் ஒரு தனி
வீடு!
இரு வாரங்களுக்கு ஒருமுறை, செல்லத்துரை அண்ணைக்கும், மனைவி தங்கம்மா
அக்காவுக்கும் 1322 டொலர்கள் பென்சன்
கிடைக்கிறது. அதில் மிகச் சொற்ப தொகையையே வீட்டு வாடகை. குறைந்த கட்டணத்தில் நாள்
முழுவதும் றெயினிலும், பஸ்ஸிலும் சுற்றித் திரிய
மேலதிக வசதி. பிறகென்ன? ராஜ வாழ்க்கைதான்!
செல்லத்துரை அண்ணையின் பூர்வீகம் யாழ்ப்பாணம்
என்றாலும் ஸ்ரீமாவோ அரசாங்க காலத்தில் கமம் செய்யவென, முத்தையன்கட்டில்
குடியேறியதால் அவர் எப்பொழுதும் தன்னை 'வன்னியான்' என்றே சொல்லிக் கொள்வார்.
ஈழப் போராட்டத்துக்கு முன்னர் வன்னியில் இயங்கிய யாழ் எதிர்ப்புச் சங்கத்தின்
நிரந்தர தலைவரும் இவரே. அரசாங்கம் கொடுத்த காணிக்கு மேலதிகமாக, அடாத்தாக காட்டை வெட்டி
கமம் செய்து தனது ஒரே மகளையும் டாக்குத்தருக்கு படிப்பிச்சுப் போட்டார். மருமகனும்
டாக்குத்தர்தான், ஆனால் யாழ்ப்பாணம்!
ஆடின காலும் பேசிய வாயும் ஓயாது என்பார்கள்.
செல்லத்துரை அண்ணை இங்கும் தனக்கு கிடைத்த வீட்டின் பின் வளவில், ஊரில் தனக்கு பரீட்சயமான
மரம் செடி கொடிகளை நட்டு வளர்க்கத் துவங்கினார். ஆஸ்திரேலிய சீதோஸ்ண நிலைக்கு சில
மரங்கள் குறண்டிப்போகும். உடனே என்னைத் தொடர்பு கொள்வார்.
ஜனவரி 26ம் திகதி, ஆஸ்திரேலியா தினம்.
சிட்னியில் அன்று அரச விடுமுறை.
என்னுடைய மனைவி மெல்பனில் வசிக்கும் மகள் வீட்டுக்குப்போக, நான் சோம்பலை அடைகாத்து
வீட்டில் பொழுதைப் போக்கினேன். காலை பத்து மணி இருக்கும். கைத்தொலைபேசி
சிணுங்கியது. மறு முனையில் செல்லத்துரை அண்ணை.
இண்டைக்கு வீட்டிலை நண்டுக்கறி தம்பி, மத்தியானச்
சாப்பாட்டுக்கு வந்திட்டுப் போவன், என படு கரிசனையாக அழைத்தார்.
சோழியன் குடுமி சும்மா ஆடாதென்பது எனக்குத்
தெரியும். இருந்தாலும் தங்கம்மா அக்காவின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் காரமான
நண்டுக்கறியை நினைத்ததும் நாக்கில் ஜலம் ஊறியது. அடுத்த அரை மணி நேரத்தில்
செல்லத்துரை அண்ணை வீட்டில் ஆஜரானேன்.
நண்டுக்கறி மூக்கைத் துளைத்தது. தங்கம்மா அக்கா
நண்டுக்கறிக்கு தோதாக குசினியில் முருங்கை இலைச் சொதி வைத்துக்கொண்டு நின்றார்.
பின் வளவில், புடலங்கொடிக்கு தண்ணிர் விட்டபடி, இஞ்சாலை வாதம்பி, எனக் குரல் கொடுத்தார்
செல்லத்துரை அண்ணை.
நல்ல விசாலமான காணி. குடிபுகுந்த சில மாதங்களுக்குள்
வளவைச் சோலையாக்கியிருந்தார்.
கனகாம்பரம், மல்லிகை, நித்திய கல்யாணி என
வன்னியில் அவர் நாட்டி வளர்த்த பூமரங்கள் முன்வளவிலும்,
பின்வளவில் மரக்கறி செடிகள் ஒருபுறமும் வேலியோரமாக கறி மொந்தன் வாழையும்
செளித்து வளர்ந்து நின்றன. தோதான இடத்தில் கொடிகளை நட்டுவளர்த்து, புடலை படர அழகான பந்தலும்
அமைத்திருந்தார். பின்வளவில் நட்ட கத்தரி வெண்டி மிளகாய் செடிகள் அனைத்தும்
காய்த்துக் குலுங்கி மதமதப்பாக நின்றன. வாழைகளும் வஞ்சகம் செய்யவில்லை.
வணக்கம் அண்ணை! வன்னியை அப்பிடியே வேரோடை
கிளப்பி வந்து, பின் வளவிலை வைச்சிருக்கிறியள், என பேச்சை ஆரம்பித்தேன்.
அது சரிதானடா தம்பி, பாவலும் புடலையும்
பூசனியும்தான் எனக்கு 'டிமிக்கி' விடுகினம். நிறையப்
பூக்குது, ஆனால் பிஞ்சு
பிடிக்குதில்லை, என நேரடியாகவே
விஷயத்துக்கு வந்தார் செல்லத்துரை அண்ணை.
நிறையக் காய்க்க, செடிகொடிகளுக்கு கலியாணம் கட்டி வைக்க வேணும், என்றேன் நான், சிரிக்காமல்.
என்னுடைய பகிடிக்கு(!) எந்தவித ரியாக்ஷனையும்
காட்டாது, விஷயத்துக்கு வா என்றார், படு சீரியஸ்ஸாக.
எப்பொழுதும் தன்னுடைய விஷயத்தில் அவர் கண்ணாயிருப்பார். அதுதான் அவரது பலம்!
நண்டுக்கறி வாசனை பின் வளவுக்கும் பரவ, எனக்கு வயிற்றைக்
கிள்ளியது. நேரத்தை மினக்கடுத்தாமல், அவருக்கு விளங்கக்கூடிய மொழியில் நான் சொல்லத் துவங்கினேன்.
பூக்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ‘ஒரு-லிங்கப்பூக்கள்' மற்றது 'இரு-லிங்கப்பூக்கள்'.
லிங்கம்...?
ஆண் மகரந்தமும் பெண் சூலகமும் ஒரே பூவில்
இருந்தால் அவை இரு லிங்கப்பூக்கள்.
ஆண் மகரந்தம் தனியாக ஒரு பூவிலும், பெண் சூலகம் தனியாக
வேறொரு பூவிலுமிருந்தால்,
அவை ஒருலிங்கப்
பூக்கள். விவசாயிகள் வேறு விதமாக இவற்றை ஆண்பூக்கள், பெண் பூக்கள் எனவும் சொல்வார்கள்.
ஓ!
புடலை, பாவல், பூசனிவகை, பீர்க்கு, கெக்கரி அனைத்தும் ஒரே
குடும்ப தாவரங்கள் (குக்குபிற்ராஷி குடும்பம்). இத்தாவரங்களில் ஆண்பூக்களும் பெண்
பூக்களும் ஒரே கொடியில், ஆனால் பிறம்பு பிறம்பாக
இருக்கும். இப்படி இரண்டு வகைப் பூக்களும் ஒரே தாவரத்தில் இருந்தால் அவற்றை ஓரில்ல
தாவரம் என்பார்கள்.
ஓஹோ...!
பனையிலும் பேரீச்சையிலும் ஆண்பூக்களும் பெண்
பூக்களும், வேறு வேறு மரங்களில்
காணப்படும். இவை ஆண்மரம்,
பெண் மரம் எனவும்
ஈரில்லத் தாவரம் எனவும் அழைப்பார்கள்.
எட அப்பு, நானென்ன, தாவரவியல் சோதனை எடுக்கவே
விரிவுரை நடத்துறாய்? உன்ரை அறிவியல் விளக்கங்களை
ஒருபக்கம் விட்டிட்டு, புடலை, பாவல், பூசனி விஷயத்துக்கு வா என, கருமத்தில் கண்ணாய்
இருந்தார் செல்லத்துரை அண்ணை.
இது பழக்க தோஷம் அண்ணை. காலாதிகாலமாய் இதையே
திரும்ப திரும்ப படிப்பக்கிறதாலை, வாயைத் திறந்தால் 'ஓட்டமற்ரிக்காக' எல்லாம் வந்திடுது. புடலை, பாவல், பூசனி வகைத் தாவரங்களில்
முதலில் பூப்பது ஆண்பூக்கள். சற்று தாமதமாகவே பெண்பூக்கள் தோன்றும்.
இதை கொஞ்சம் விரிவாய் சொல்லு தம்பி.
குத்துமதிப்பாகச் கொன்னால் பத்து ஆண் பூக்களுக்கு ஒரு பெண்பூ (10:1) என்ற விகிதத்திலேயே புடலை, பாவல், பூசனி வகைக் கொடிகளில், பூக்கள் தோன்றும்.
அது சரி, என்ரை புடலங் கொடியிலை வெள்ளை வெள்ளையாய் ஊரிப்பட்ட பூக்கள் விரிஞ்சிருக்கு.
இதிலை ஆண்பூ எது? பெண் பூ எது?
பூவின் அடிப்பகுதி (பூக்காம்புக்கு மேலே) சின்ன
புடலங்காய் போல தடித்திருந்தால் அவை பெண் பூக்கள். (பாவல் பெண்பூவில் சின்ன பாவல்
காய் போல தடித்திருக்கும்) இது குக்குபிற்ராஷி குடும்ப தாவரங்கள் அனைத்துக்கும்
பொதுவானது.
நீ சொல்லுற விளக்கமெல்லாம் விளங்குது. இனி, பிஞ்சு பிடிக்கிறதுக்கு
என்ன வழி எனச் சொல்லு.
மகரந்த மணிகள், பெண் குறிக்கு கடத்தப்பட்டு சூலகத்தை அடைந்தால் மாத்திரமே
சூலகம் கருக்கட்டி, காயாக மாறும்.
ஓ.கே
மகரந்தச் சேர்க்கை, பெரும்பாலும் காற்றாலும்
பூச்சிகளாலும் நடைபெறும். பூச்சிகளால் நடக்கும் தாவரங்களின் பூக்கள் கவர்ச்சிகரமான
நிறம் கொண்ட இதழ்களையும் அதிக தேனையும் கொண்டிருக்கும்.
புடலங் கொடியின் பூக்கள் பெரும்பாலும் இரவில் மலரும். அதனால்தான் அவை பூச்சிகளுக்கு இரவில் தெரியும் வண்ணம் பால் வெள்ளை நிறமாக இருக்கிறது.
தம்பி, நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் மறுமொழி சொல்வேயில்லை, சுத்தி வளைக்காமல்
விஷயத்துக்கு வா, என மீண்டும் அவசரப்
படுத்தினார் செல்லத்துரை அண்ணை.
புடலை, பாவல், பூசனி வகைத் தாவரங்களில்
பத்துவீதமான பூக்களே காயாகும். அதுவும், பெண் பூக்களில் பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடந்து, சூலகம் கருக்கட்டினால்
மாத்திரம் பிஞ்சு பிடிக்கும். அதற்காகத்தான் விவசாயிகள் பண்ணைகள், தோட்டங்களில் தேனீக்கள்
வளர்ப்பது.
குடியிருப்பு பகுதிகளில், தேனீக்களின்
வரத்துக் குறைவு. இதற்கு மாற்று வழி
ஏதேனும்?
அதற்காகத்தான் 'பூக்களுக்கு கலியாணம் கட்டி வைக்கவேணும்'.
இதே நகைச்சுவைக்கு முன்னர் சிரிக்காத
செல்லத்துரை அண்ணை இப்பொழுது தன்னை மறந்து, வாய்விட்டு சிரித்தார்.
நான் தொடர்ந்தேன்.
அன்று விரிந்த ஆண்பூவை பறித்து, அதன் இதழ்களை அகற்றினால்
மகரந்தப்பை துலக்கமாகத் தெரியும். அதை பெண்பூவில் ஒத்திவிடலாம்.
பூரணமான விளைவைப் பெற, ஒரு சிறிய தூரிகையால்
மகரந்தப் பையை வருடினால் மகரந்த மணிகள் தூரிகையின் முடியில் ஒட்டிக்கொள்ளும். அதை
பெண்பூவின் குறியில் தடவிவிடலாம்.
புடலையின் பூக்கள் இரவில் விரிவதால்
மகரந்தமணிகள் வெய்யில் வெப்பத்துக்கு காய முன்னர் அதிகாலையிலேயே இதைச்
செய்யவேண்டும்.
நிஜமாகவா? வயதுபோன நேரத்திலை, அதுவும் விடியக்காலமை
எழும்பி இதைச் செய்யச் சொல்லுறாய், எனக் கண் சிமிட்டிய செல்லத்துரை அண்ணை, கத்தரி, மிளகாய், வெண்டிப் பாத்திக்கு
என்னைக் கூட்டிச் சென்றார். அவர் அங்கு என்ன கேட்கப் போகிறார் என்று எனக்குத்
தெரியும். எனவே நான் சொல்லத் துவங்கினேன்.
கத்தரி, வெண்டி, தக்காளி, மிளகாய் மற்றும் பயத்தை, அவரை எல்லாம் இருலிங்கப்
பூக்களைக் கொண்டிருக்கும். இவற்றில் பெண்குறியும் அதைச்சுற்றி மகரந்தப்பைகளும் ஒரே
பூவில் இருக்கும். இதனால் சுலபமாக மகரந்தச் சேர்க்கை நடந்து பிஞ்சு பிடிக்கும்.
'வீட்டோடை மாப்பிளை' எண்டு சொல்லன், என என்னுடைய பகிடியைத்
திரித்து, எனக்கே மடைமாற்றினார்
செல்லத்துரை அண்ணை.
இப்படியாக பலதும்பத்தும் பேசி செடிகொடிகளுடன்
உறவாடிக் கொண்டிருந்த எங்களை தங்கம்மா அக்கா சாப்பிட அழைத்தார்.
சும்மா சொல்லப்படாது. நண்டுக் கறியுடன் இறால்
பொரியல், அதற்குத் தோதாக வறட்டல்
பருவத்தில் நல்லெண்ணை விட்டு இறக்கிய பயத்தங்காய், உள்ளி மிளகு சீரகம் குத்திப் போட்டு வைத்த பருப்பு, முருங்கையிலை போட்ட
தேங்காய் பால் சொதி என தங்கம்மா அக்கா அமர்க்களப்படுத்தி இருந்தார். வயிறு முட்ட
சாப்பிட்டு, மிஞ்சிய நண்டுக்
கறியையும் வாங்கிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
இதன் பின்னர் செல்லத்துரை அண்ணையிடமிருந்து
எந்தவித அலை பேசி அழைப்பும் வரவில்லை.
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி
அபிஷேகத்தின்போது செல்லத்துரை அண்ணையை கோவிலில் சந்தித்தேன்.
விடியக் காலமை எழும்பின கையோடை நீ சொன்னதுதான்
எனக்கு வேலை. பூக்களுக்கு கலியாணம்! நிறைய பிஞ்சு பிடிக்குது, என்றார் வாயெல்லாம்
பல்லாக.
இதில் பெரிய சூக்குமம் எதுவுமில்லை. மரம் செடி
கொடிகள் எல்லாம் மனிதனின் நண்பர்களே. அவற்றை எப்படி வழிப்படுத்துகிறோம்
என்பதில்தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது, என்றேன் நான்!
ஆசி கந்தராஜா
(2018)
No comments:
Post a Comment