Saturday, 30 January 2021

 தல விருட்சம்

ஆசி கந்தராஜா

ரபு நாடொன்றிற்கான எனது முதல் பயணம் அது!

தொழில் நிமிர்த்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தைச் (United Arab state) சேர்ந்த புஃஜேராவுக்கு (Fujairah) என்னை அழைத்திருந்தார்கள். ஐக்கிய அரபு இராச்சியம் என்பது, அபுதாபி (Abu Dhabi), அஜ்மான் (Ajman), துபாய் (Dubai), புஃஜேரா (Fujairah), றஸ்-அல்-ஹய்மா (Ras al-Khaimah), சாஜா (Sharjah), உம்-அல்-குவேய்ன் (Umm al-Quwain) ஆகிய ஏழு இராச்சியங்கள் அடங்கிய கூட்டமைப்பாகும். இந்த இராச்சியங்கள், பல தலைமுறைகளாக மரபு வழி வந்த அரேபிய இளவரசர்களால் ஆளப்படுகிறன. இளவரசர்கள் என்றால் எல்லோரும் இளவயதினர்கள் எனக் கற்பனை செய்தல் அபத்தம். அரச பரம்பரையில், மன்னரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆண்களும் இளவரசர்கள் (Prince) என்றே குஞ்சம் சூட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரம் அபுதாபி. இருப்பினும், வணிக நகரமாகவும், சுற்றுலா மையமாகவும் துபாய் வளம் பெற்றிருப்பதினால் அது பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. அரபு இராச்சியத்தின் சர்வதேச விமான நிலையம், துபாயிலும் அபுதாபியிலும் மட்டுமே உண்டு. இதனால் நான் துபாயில் இறங்கி, புஃஜேராவுக்கான நூற்று ஆறு கிலோமீற்றர் தூரத்தை பாலைவன நெடுஞ்சாலை வழியாக காரிலே பயணிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆண்டுதோறும் கிடைக்கும் எண்ணை வருமானத்திலே 0.1 சதவீதம் விவசாய முயற்சிகளுக்கும் தோட்டக் கலைக்கும் (Horticulture) செலவு செய்தல் வேண்டுமென்பது, அரச உத்தரவு எனச் சொன்னார்கள். கணிதத்திலே 0.1 சதவீதம் என்பது அற்ப எண்ணைக் குறிக்கும் என்பதை நாமெல்லோரும் அறிவோம். ஆனால் எண்ணை வருவாயிலே கணக்கிடும் பொழுது, பெரிய தொகையொன்று நம் கண் முன்னால் தோன்றி மிரட்டும். இதனால் இந்தச் சதவீதக் கணக்கு விவகாரத்திற்குள் நான் மூளையைக் கசக்குவதில்லை. எது எப்படி இருந்தபோதிலும், அவர்களிடம் விவசாய முயற்சிகளுக்குச் செலவு செய்ய நிறையப் பணமிருப்பதை, அநுபவ வாயிலாகப் புரிந்து கொண்டேன்.

ஒப்பீட்டளவில், மற்றைய அங்கத்துவ இராச்சியங்களைவிட புஃஜராவில் மழை வீழ்ச்சி அதிகம். புஃஜேராவை சுற்றியுள்ள ஹாஜர் (Hajar) மலைத்தொடரும், அதனால் அங்கு சுழன்றடிக்கும் காற்றும் அதிக மழை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். புஃஜேராவின் நீர் வளம் காரணமாகவே அங்கு பல விவசாய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாலை வனத்திலே விவசாய முன்னெடுப்புக்கள் என்றால் என்ன…? பெரும்பாலும் பேரீச்சை மர வளர்ப்புத்தான்! அத்துடன் பெரும் பொருட்செலவில் கடல் நீரிலுள்ள உப்பை அகற்றி, நன்னீராக்கி பசுமைக் கூடத்தில் கெக்கரிக்காய், தக்காளி போன்ற மரக்கறிகளை பயிரிடுகிறார்கள். நம்மூரில் ‘ஆனையைக்கட்டி தீனிபோட்டது போல’ என்பார்களே, அது போலத்தான் இவர்களின் பயிர் வளர்ப்பு முயற்சிகள். ஆனால் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் அரபு நாடுகளில் ஒட்டகங்கள் வளர்ப்பது, ஆதாயம் தரும் விலங்கு விவசாயமாகும் (Animal husbundry). இந்த இடத்தில் நான் இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும். களஞ்சியப் பொறுப்பாளர்கள் (Store keepers) என்ற பெயரில் அரபு நாடுகளில் வேலை பெற்று வந்தவர்களுள் பலர், அங்கு ஏமாற்றப்பட்டு ஒட்டகங்களைக் கணக்கெடுப்பதிலும் ஒட்டகங்கள் மேய்ப்பதிலும் ஈடுபடுவதுண்டு. அராபிய ஏஜென்சியைப் பொறுத்தவரை ஒட்டகப் பண்ணையில் மேச்சல் முடிந்து வரும் ஒட்டகங்களைக் கணக்கெடுப்பதும், பராமரிப்பதும் களஞ்சியப் பொறுப்பாளர் வேலைதான்!

யாழ்ப்பாணத்து மக்களாலே கற்பகதரு எனப் போற்றப்படும் பனை மரங்களைப் போலவே, பேரீச்ச மரங்களிலும் ஆண் மரம், பெண் மரம் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் தென்னை, கமுகு மரங்களில் அப்படியல்ல. இவற்றில் ஆண்பூவும் பெண்பூவும் ஒரே மரத்தில், ஒரே பாளையில் இருக்கும். இவற்றின் பாளைக் காம்பில், பெண்பூவொன்று அடிப்பக்கத்திலும், அதைத் தொடர்ந்து பல ஆண் பூக்கள் காம்பின் நுனிவரையும் இருக்கும். மகரந்தச் சேர்க்கையின் பின் ஆண்பூக்கள் உதிர்ந்துவிட, பெண்பூ கருக்கட்டி குரும்பட்டியாகும். ஆனால் பனை மரங்களைப் பொறுத்தவரையில், மகரந்த மணிகளை மாத்திரம் கொண்ட ஆண் பூக்கள் ஆண் பனைகளிலும், சூலகத்தைக் கொண்ட பெண் பூக்கள் பெண் பனைகளிலும் இருக்கும். பல பெண்பனைகள் கொண்ட பனங் கூடலிலே ஒரு சில ஆண்பனைகள் மட்டும் தனிக்காட்டு ராஜாக்களாக நின்று ராஜாங்கம் நடாத்துவதை, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் கொழும்புத் தமிழ் மூத்த பிசைகளும் அறிந்திருப்பார்கள்.

ஆண் பனையிலிருந்து இறக்கப்படும் உடன் கள்ளு, முடக்கு வாதத்துக்கு நல்லதென அதையே நம்மூர் பெரிய கமக்காரரான துரையர், தினமும் தன் பின்வளவு ஆண் பனையிலிருந்து இறக்குவித்துக் குடிப்பார். இருப்பினும், அவரைப் பொறுத்தவரை அது பொய்யாகி, அறுபது வயதில் பாரிசவாதத்தால் இறந்தது தனிக்கதை.

தங்க மூளைக்காரன்’ என்று இலங்கையில் கொண்டாடப்பட்டவர் சமசமாஜக் கட்சித் தலைவர் என். எம். பெரேரா. இவர் ஆயிரத்து தொழாயிரத்து அறுபதாம் ஆண்டுகளில் நிதியமைச்சராக வந்து செய்த நிதிச் சீர்திருத்தங்களின் ஒன்றாக எழுந்ததுதான் கள்ளுக் கோப்பரேஷன். அதற்கு முன்னர் இருந்த மரவரி முறையை அந்தக் காலத்தில் அமுலுக்கு கொண்டுவருவதற்கு யாழ்ப்பாணத்தில் பெரிய கிளர்ச்சி ஒன்று நடத்தப்பட்டதாகச் சொல்லுகிறார்கள். கள்ளு மது மட்டுமல்ல, அது உணவுமாகும் என்பதை அரசு ஏற்றுக் கொண்டதால் மரவரி முறை யாழ்ப்பாணத்தில் வந்ததாக முதுபெரும் எழுத்தாளர் எஸ்போ தகவல் சொன்னார்.

கதையோடு கதையாக இன்னொன்றையும் சேர்த்துச் சொன்னார். யாழ் மண்ணில் முதலிலே தோன்றியது சுருட்டுத் தொழிலாளர் சங்கம். அது சமஜமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்தது. அதன்பின்னர் தோற்றுவிக்கப் பட்டது கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம். இச்சங்கங்களின் செயலூக்கத்தினால் பொன் கந்தையா என்ற கம்யூனிஸ்ட், யாழ் மண்ணிலிருந்து முதலாவது மார்க்ஸியவாதியாக பாராழுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டாராம். இதன் பின்புலத்திலேதான் கள்ளுக் கோப்பரேஷன் உருவாகியதாக எஸ்போ சொன்னார்.

மரவரி முறையின் கீழ் கள்ளிறக்குவதற்கு, பெண்பனைக்கும் தென்னைக்கும் ஆண்டு ஒன்றுக்கு ‘லைசென்ஸ்’ பெற அப்போது பத்து ரூபாய் வீதம் கட்டவேண்டும். தென்னையிலும் பெண்பனையிலும் கள்ளுச் சீவுவதனால் தேங்காய், பனங்காய் ஆகியவற்றினால் கிடைக்கும் பயன்கள் இல்லாமற் போவதை ஈடுசெய்வதற்காக மரத்துக்கு பத்து ரூபாய் வீதம் அப்போது பணம் வசூலிக்கப் பட்டதாம். ஆண் பனைகளிலே அத்தகைய பயன்கள் கிடைக்காத காரணத்தினால்தான் அதற்கான ‘லைசென்ஸ்’ பணமாக ரூபா இரண்டு வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டது.

லைசென்ஸ்’ கட்டிச் சீவப்படும் மரங்களுக்கு வெள்ளை மையால் நம்பர் எழுதப்படும். நாலு மரங்களுக்கு பணம் கட்டி, கொசுறாக மேலும் சில மரங்களிலேயும் கள்ளுச்சீவுதல் கிராமங்களிலே சகஜமாக நடைபெறும். அப்பொழுது ‘கலால்’ இலாகா விழித்துக் கொள்ளும். நம்பரில்லாத மரங்களிலுள்ள கள்ளு முட்டிகளை அடித்துடைத்து, பாளைகளையும் ‘கலால்’ இலாகாவினர் வெட்டி எறிவது கிராமங்களில் அவ்வப்போது நடக்கும் சங்கதி. இவர்களின் தொல்லை தாங்காமல் கள்ளிறக்கும் சின்னவியின் மனைவி வள்ளி, ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டுவாள். ஒருமுறை இவர்களின் ஆய்க்கினை அத்து மீறவே, வள்ளி தன் மாராப்பை அவிட்டு மார்பைக் காட்டிக் கத்தவே, பாளை வெட்ட வந்தவர்கள் தலை தெறிக்க ஓடியது அந்த நாளைய ஈஸ்மன் கலர் வசுக்கோப்பு. இந்த வசுக்கோப்புக் கதையை யார் சொன்னது என்று இப்பொழுது எனக்கு ஞாபகம் இல்லை.

பனை, தென்னை, கமுகு, பேரீச்சமரங்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள் (Monocot). இவற்றின் விதைகளை முளைக்க வைத்தே நாற்றுக்களை உருவாக்கமுடியும். மா, தோடை, எலுமிச்சை, கொய்யா போன்ற இருவித்தலைத் தாவரங்களைப் (Dicot) போன்று, ஒரு வித்திலைத் தாவரங்களை, பதிவைத்தோ ஒட்டியோ இனப்பெருக்கம் செய்யமுடியாது.

இன்னுமொன்றையும் இங்கு சொல்லியாகவேண்டும். பனை, பேரீச்சம் விதைக் கன்றுகளுள் ஆண் எது? பெண் எது? என்று கண்டுபிடிப்பது கடினம். இவை காய்க்கும் போதுதான் இவற்றின் பாலின வேறுபாட்டை அறியமுடியும். பப்பாசி இனங்களிலும் அப்படித்தான். இன்னுமொரு சிக்கலும் விதைக் கன்றுகளில் உண்டு. இங்கு தாய் மரத்தின் இயல்புகள், எந்தவித மாற்றமுமின்றி அப்படியே விதைக் கன்றுகளுக்கும் கடத்தப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. இதில் தாய் மரத்தின் அல்லது தந்தை மரத்தின் இயல்புகளில், ஆட்சியுடைய இயல்பொன்றே வெளிக் கொணரப்படும்.

புஃஜேரா இராச்சியத்தின் விவசாய, பூங்கனி இயல் அமைச்சரே என்னை அங்கு வருமாறு அழைத்திருந்தார். அரேபிய ராஜ வம்சத்தில் பல இளவரசர்கள் இருப்பார்கள். முடிக்குரிய அரசர் வழியில், பரம்பரை பரம்பரையாக வரும் மூத்த ஆண்வாரிசுகள் மாத்திரமே ‘ராஜ’ இளவரசர்களாக (Royal Prince) கணிக்கப்படுவார்கள். என்னை அழைத்த இளவரசரும் இராஜ பரம்பரையைச் சேர்ந்தவர் எனச் சொன்னார்கள். அரேபிய நாடுகளில் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களே இராச்சியத்திலுள்ள செல்வங்களின் பெரும் பகுதியை அநுபவிப்பவர்கள். இவர்கள் மிகவும் புத்திசாலிகள். இல்லாவிடின் சாதாரண அராபியர்களை அடக்கி ஆண்டு, மன்னராட்சியை இன்றும் தங்கள் நாடுகளில் தக்க வைத்துக்கொள்ள முடியாது. இவர்களின் புத்திக்கூர்மையை எனது இந்தப் பயணத்தின்போதே அறிந்து கொண்டேன். அது வரை அவர்களிடம் எண்ணைக் காசு மட்டும் இருப்பதாகவே மோட்டுத்தனமாக எண்ணியிருந்தேன்.

விவசாய அமைச்சர் தனது பெயரில், நவீன தொழில் நுட்பங்களுடன் பேரீச்சமரப் பெருந்தோட்டங்களை உருவாக்கியிருந்தார். இந்த மரங்களெல்லாம் விதைகளை முளைக்க வைத்து வளர்க்கப் பட்டவை. ஏழு எட்டு வருடங்களின் பின், இவை குலை தள்ளவே, நட்ட மரங்களுள் ஐம்பது சதவீத பேரீச்ச மரங்கள் ஆண்மரங்கள் என தெரிந்துகொண்டார். இத்தகைய பாலின வேறுபாடு முன்னர் ஏற்பட்டதில்லை என்றும் அரேபிய பிரதேசங்களில் இந்த மாற்றம் தற்போது பரவலாக இருப்பதாகவும் தோட்டத்தைப் பராமரிப்பவர் சொன்னார். இந்தச் சிக்கல் நமது ஊர்ப் பனை மர வளர்ப்பில் வந்ததாகத் தெரியவில்லை. நூறு பனைகள் கொண்ட ஒரு பனைங்கூடலில் இரண்டு அல்லது மூன்று ஆண் பனைகளையே எனது அநுபவத்தில் கண்டிருக்கிறேன். நம்மூர்ப் பனைக்கூடலிலும் ஐம்பது சதவீத பனைகள் ஆண்பனைகளாக இருப்பின் நிலமை எப்படி இருக்கும்? ஆண் பனைகளிலோ, மகரந்த மணிகளைத் தவிர, ஓலை, கள்ளு, மரம் என வேறு பல பயன்களும் உண்டு. ஆனால் ஆண் பேரீச்ச மரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுகின்றன. அவற்றிலிருந்து பெருமளவில் வெளிவரும் மகரந்த மணிகளால் Hay fever எனப்படும் தும்மல் மற்றும் ஒவ்வாமை நோய் அதிகரித்திருப்பதாகவும் சொன்னார்கள். இதனால், அவர்களின் தற்போதைய பிரச்சனை ஆண் பேரீச்ச மரங்களின் இனப் பெருக்கத்தைக் குறைத்துப் பெண் பேரீச்ச மரங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதே.

இந்தப் பிரச்சனை, கோழிப் பண்ணை வைத்திருப்பவர்களுக்கும் உண்டு!

நாட்டுப் புறங்களில் சேவல் கோழிகளையும், முட்டையிட்டு ஓய்ந்த பெட்டைக் கோழிகளையும் அடித்துக் குழம்பு வைப்பார்கள். கறிக்கோழிகள் எனப்படும் புரொயிலர் கோழிகள் (Broiler Chicken) இனவிருத்தி செய்யப்பட்ட பின்பு எல்லாம் தலை கீழாக மாறிவிட்டன. புரொயிலர் கோழி இனங்கள் 42 நாள்களில் இரண்டு கிலோவரை வளரக்கூடியன. நாம் சாப்பிடும் புரொயிலர் கோழிகள் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாள்கள் உயிர் வாழ்ந்தவையே! அதற்கு மேல் அவற்றை வளர்த்தால் பண்ணைக்காரனுக்கு நட்டம் வரும். 32 நாட்களிலேயே இரண்டு கிலோ இறைச்சியை கொடுக்கக் கூடிய கறிக்கோழியை இப்பொழுது இனவிருத்தி செய்துள்ளார்கள். இந்த இனத்துக்கு Cobb என்று பெயர்.

நீ சொல்லுற கணக்குப்படி, பண்ணைகளில் வளர்க்கிற கறிக் கோழிகள், உயிருடன் இருந்த நாள்களை விட உறைகுளிர்ப் பெட்டிகளில் அதிக காலம் இருப்பவை…’ என்று ‘கொமன்ற்’ அடித்தபடியே நண்பன் பாலன் தினமும் கென்ரக்கி சிக்கின் கடைக்கு சென்று வருவான். இது மனைவிக்குத் தெரியாது அவன் வெளியில் சாப்பிடும் கள்ளத்தீன். இதனால்தான் அவன் உடல் கொழுத்து கறிக்கோழிகள் போல் இருப்பதாக நண்பர்கள் அடிக்கும் நக்கலை அவன் என்றுமே பொருட்படுத்தாது, ‘அறிஞ்சவன் அறிவான் அரியாலைப் பினாட்டை’ என்ற பழமொழியைச் சொல்லித் திரிந்தான்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் அங்கிங்கு திரும்ப முடியாத சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுவன. அவற்றைக் கூண்டுக்கு வெளியே விட்டால் அவற்றால் ஓட முடியாது. 32 நாள்களில் இரண்டு கிலோவரை வளரும் Cobb இன கறிக்கோழிகளின் கால்களால் அதன் உடல் பாரத்தை தாங்கமுடியாது துவண்டு விழுவதை பார்த்திருக்கிறேன். கூண்டுக்குள் எப்போதும் இருந்தபடியே தீன் தின்னும் கோழியின் உடல் வளரும் வீதத்துக்கேற்றப இருதயம் வளர்வதில்லை என்றும், சிறிய இருதயத்தால் பெரிய உடலுக்கு இரத்தத்தைப் பாச்ச முடிவதில்லை என்ற அவலத்தை, விலங்கு விவசாயப் பேராசிரியர் விளக்கினார்.

‘கறிக்கோழிகள் (Broiler Chicken) சுவையற்று ‘சளசள’வென்று இருப்பதற்கு இதுதான் மச்சான் காரணம்’ எனச் சொன்ன பாலன், ‘இது, யாழ்ப்பாண ஊர்க் கத்தரிக்காய்க்கும் மலை நாட்டுக் கத்தரிக்காய்க்கும் உள்ள வித்தியாசம் போலத்தான்…’ என உதாரணத்தையும் அவிட்டு விட்டான்.

முப்பத்து இரண்டு நாள்களில், Cobb இன கறிக்கோழிகளை வெட்டாது, தொடர்ந்து வளர்த்தால் அவை நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுமென, சிட்னியில் கோழிப் பண்ணை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மேலதிக தகவல் சொன்னார்.

பிள்ளைப்பெத்த வீட்டிலை, சூப்பு வைக்கப் பாவிக்கிற மூண்டு மாத விடலைக் குஞ்சுகள், கால் கிலோவும் தேறாது…, ஒரு மாதத்திலை இரண்டு கிலோ வளர, இவங்கள் என்ன தீன் போடுறவங்கள்?’ என பாலனின் மனைவி என்னிடம் கேட்டார்.

ஆண் வாரிசு வேணும் என்ற முயற்சியில் தோற்றுப்போனதால் பாலனுக்கு வரிசையாக ஐந்து பெண் பிள்ளைகள். அவன் கோழி தின்னும் ‘றேற்றுக்கு’ மாரடைப்பு வந்துவிடும் என்ற அவதி பாலனின் மனைவிக்கு.

விவசாய இனவிருத்தியில், தொழில் முறையிலே செயற்படுபவன் என்பதை மறவாது, தொழில் தர்மம் கருதி பாலனின் மனைவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை சாதுர்யமாகத் தவிர்த்தேன். இருப்பினும் பிள்ளைகளுக்கு அதிக கறிக்கோழி கொடுப்பது நல்லதல்லதென்றும், குறிப்பாக பெண் பிள்ளைகள், பத்துக்கு குறைந்த வயதிலேயே பூப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமென நம்பப்படுவதாகவும் சொன்னேன். இந்த சம்பவத்தின் பின்னர் பாலனின்; கோழிச் சாப்பாட்டில் துண்டு விழுந்திருக்க வேணும். சில நாள்கள் என்னுடன் அவன் முறாய்பிலிருந்தான்!

உந்தக் கோழியளைத் திண்டு கண்டகண்ட வியாதியளை விலைக்கு வாங்காமல் எல்லாரும் சைவமாய் இருங்கோ…’ என்றார் என்னுடைய அம்மா. அவர் மச்சமாமிசம் தொடுவதில்லை. வயது தொண்ணூறுக்கு மேலாகியும் அம்மா எந்தவித மருந்துக் குளிசைகளும் எடுப்பதில்லை. இதற்கு சைவச் சாப்பாடே காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்துடன் பசித்தால் மட்டும் சாப்பிடும் பழக்கத்தையும் அவர் கடைப்பிடித்ததும் மேலதிக காரணமாக இருக்கலாம்.

முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள், கறிக்கோழி இனங்களல்ல. கறிக்கோழி வளர்ப்பில் சேவலாக இருந்தாலென்ன பேடுகளாக இருந்தாலென்ன அவற்றின் சதைதான் முக்கியம். ஆனால் முட்டைக்காக வளர்க்கப்படுக் கோழிக்குஞ்சுகள் எல்லாமே பேடுகளாக வளரவேண்டும்;. முட்டையிடும் கோழி இனங்களில் சதைவளர்ச்சி இருக்காது. இவற்றை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்தால் பண்ணைக்காரன் வங்குறோத்தாகி விடுவான்.

ஒரு சந்தர்ப்பத்திலே ‘கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை…’ என்ற உண்மையை நான் சொல்ல நேர்ந்தது.

இதன்ன புதுக்கதை சொல்லிக் குழப்பிறாய். சேவல் மிதிக்காமல் எப்பிடி முட்டை வரும்…?’ எனக் கேட்டான் கோழிப் பிரியனான நண்பன் பாலன்.

ஊரிலே கோழிக் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடை வைக்கிறோம். அப்போது, சில முட்டைகள் குஞ்சு பொரிக்காது கூழாகின்றனவே, ஏன் அது?’

எனக்கெப்பிடித் தெரியும்? நீதான் சொல்லவேணும்.’

தாயின் பாலைக் குடித்து வளரும் பாலூட்டிகளைப் (mammals) போன்று, கோழிகளிலும் கருக்கட்டாத முட்டைகள் சூலகத்திலிருந்து (Overy) தொடர்ச்சியாக வெளிப்படும். இந்த முட்டைகள் சேவல் மிதிக்கும்போது வெளிவரும் விந்துகளுடன் சேர்ந்து, கருக்கட்டிய முட்டைகளாக வெளிப்படும். மற்றையவை கருக்கட்டாத முட்டைகளாக உருக்கொள்ளும். இங்கு கூழாகும் முட்டைகள் கருக்கட்டாத முட்டைகளே.’

அப்ப நீ சொன்ன பாலூட்டிகளிலை என்ன நடக்கும்…?’

பாலூட்டிகளில் விந்துடன் இணைந்து கருக்கட்டாத முட்டைகள் அழிந்து, மாதவிடாய் காலத்தில் வெளிவரும். முட்டையிடும் கோழிகளை வெட்டும்போது உள்ளே இருக்கும் வட்டவடிவ சின்னச் சின்ன மஞ்சள் நிற முட்டைகள் கருக்கட்டாத முட்டைகளே’.

பண்ணைகளிலை சின்னட்டி கூடுகளில் வளரும் ஆயிரக்கணக்கான பேடுகளை, கிரமமாய் ‘விசிற்’பண்ண சேவலால் முடியாது. அப்ப, பண்ணைகளிலிருந்து வரும் முட்டைகள் கருக்கட்டாத முட்டைகள் எண்டு சொல்லுறாய்.’

அதுதான் உண்மை. முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளில் சேவலே கிடையாது. இதனால் பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகளில் கருஉயிர் (Embryo) இருக்காது. ஆனால் மற்ற எல்லாச் சத்துக்களும் கருக்கட்டிய முட்டைகள் போன்று இருக்கும்.’

நீ சொல்லுறதைப் பாத்தால், பசுவிலிருந்து வரும் பாலுக்கும், பண்ணைகளிலிருந்து வரும் கருக்கட்டாத, கருஉயிர் அற்ற முட்டைகளுக்கும் வித்தியாசமில்லை. இவை பாலைப் போல புரதம், கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய சைவ (Vegitarian) முட்டைகள் எண்டு சொன்னால் பிழையோ…?’

நீ சொல்லிறதிலை உண்மை இருக்கு… ஊரிலை சேவல் இல்லாமல் வளரும் பேடுகள் இடும் முட்டையும் சைவ முட்டைகளே…’ என விளக்கம் சொல்ல முனைந்த என்னை மறித்து, ‘ஒரு நாள் கோழிக் குஞ்சுகளில் சேவலையும் பேடுகளையும் இனம் பிரிப்பது பற்றிச் சொன்னியே, அதைக் கொஞ்சம் சொல்லு’ எனப் பிறிதொரு சங்கதியை அறிய அவசரப் பட்டான் பாலன். அவனுக்கு எதிலும் பொறுமையில்லை. வெள்ளாடு மேய்வது போல அதிலொரு கடி இதிலொரு கடி என அவசரப்பட்டுக் கொண்டே இருப்பான்.

ஆடுகள், மாடுகள், மனிதர்கள் உள்ளடங்கிய பாலூட்டிகளில் ஆண்குறி, பெண்குறி ஆகியன வெகு துலக்கமாக இருக்கும். பிறந்தவுடன் இனம் பிரித்துவிடலாம். ஆனால் பறவை இனங்களில் அப்படியல்ல…’.

பாலன் எப்பொழுதும் ஒரு சபை குழப்பி. நான் விளக்கம் சொல்ல முன்னரே வேறொரு கேள்வியைச் செருகினான். ‘பேடுகளின் மல வாசலூடாகத்தானே முட்டைகள் வெளிவருகின்றன. சில முட்டைகளில் கோழிப்பீயும் பிரண்டிருக்கும். பிறகென்ன பறவைகளில் பாலினக் குறிகள்…?’

உன்னுடைய கேள்வியில் நியாம் இருக்கிறது. பறவைகளில் நீ சொல்லும் மலவாசலை விஞ்ஞானத்தில் ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்' (Cloaca) என்பார்கள். இதனூடாகத்தான் புணர்ச்சியும் கழிவு வெளியேற்றலும் இடம்பெறும். புணர்ச்சி கழிவு பொதுவாயின் உட்பகுதியில் மிகச் சிறிய ஆண், பெண் பால் உறுப்புக்கள் இருக்கும். இவற்றை குஞ்சுகளில் இனம் காண்பது கஷ்டம்… ஆனால் வாத்துக்களில் அப்படியல்ல. வாத்தில் ஆண்குறி புணர்ச்சிக் கழிவு பொதுவாய்க்கு வெளியே சற்று நீண்டு துலக்கமாக இருக்கும்.’

இப்பதான் மச்சான் விளங்குது, சேவல் மிதிக்கேக்கை ஏன் வாலைப் பதிக்குதெண்டு…’ என்ற பாலனின் சிரிப்பு வெடியை, அவனுடைய மனைவியின் பார்வை அடக்கியது.

இவற்றை விசர் கதையளை விட்டிட்டு, குஞ்சுகளிலேயே பேடுகளை இனம் கண்டுபிடிக்கிற ரெக்னிக்கைச் சொல்லுங்கோ அண்ணை’ என விஷயத்துக்கு வந்தார் பாலனின் மனைவி. அவர்தான் பாலனின் முருங்கைக்காயாய் விவசாயம் உட்பட எல்லா தொழில் முயற்சிகளுக்கும் மிகப் பலமான அடித்தளம். அவர் சிட்னியில் கோழிப் பண்ணை துவங்குவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதான செய்தி கசிந்து கொண்டிருப்பதை நானறிவேன்.

கருக்கட்டாத முட்டையிலும், விந்திலும் குறியீட்டு அடையாளத்தை (Marker) செலுத்தி பொரிக்கும் குஞ்சுகளின் நிறத்திலிருந்து பால்வேறுபாட்டை அறிவது நவீன விஞ்ஞான முறை.

இலகுவான முறை குஞ்சுகளின் சிறகிலிருந்து (Wing) இனங்காண்பது. பறவைகளில் ‘கைபோன்று’ காணப்படும் சிறகு, இறகுளாலும் (Primaries), மெல்லிறகுகளாலும் (Coverts) ஆனவை. இரு இறகுகளுக்கு இடையே ஒரு மெல்லிறகு இருக்கும். குஞ்சுகளின் மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க கட்டையாக இருந்தால் அது பேடு. மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க நீளமாக அல்லது ஒரே அளவாக இருந்தால், அவை சேவலாக வளரும். இந்த முறைமூலம் முட்டைக்கான கோழிப் பண்ணைகளில் சேவல்களை இனங்கண்டு இரண்டு மூன்று நாள் குஞ்சுப் பருவத்திலேயே அவற்றை அழித்து விடுவார்கள்.’

பிறகென்ன…? மனிசிக்கு ரெக்னிக் சொல்லிக் குடுத்திட்டாய். அடுத்த வருஷத்திலிருந்து முருங்கைக் காயோடை முட்டையும் சப்ளைதான்….’ எனச் சொல்லிச் சிரித்தான் பாலன்.

இப்படியாக முட்டைக் கதைகள் பேசி என்னுடைய நேரங்கள் அனைத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோனோ என்ற பயம் வந்துவிட்டது. பள்ளிக்கூடத்திலே, வகுப்பில் ஊர்ப் புதினங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக கிண்டியெடுக்கும் சைவ சமய பாடம் படிப்பிக்கும் பொன்னுத்துரை வாத்தியார் ‘அப்பனே முருகா’ என்றால், நாங்கள் சுறுக்காக சமயபாடப் புத்தகத்தை திறந்து வைத்துக் கொள்வோம். இன்று என்னவோ தெரியாது, ‘முட்டைக் கதை’ பேசிக்கொண்டிருந்த என் மனம், என்னை அறியாமலே வாத்தியார் சொல்லித்தந்த திருஞான சம்பந்தரின் தேவாரத்துக்கு மாறியது.

 

-2-

திருஞான சம்பந்தர் ஆண்பனைகளைப் பெண் பனைகளாக்கியதாக, சிறுவயதில் சமய பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஒருமுறை திருஞான சம்பந்தர் திருவோத்தூர் என்னும் சிவஸ்தலத்துக்கு எழுந்தருளினாராம். இத்தலம் செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் இந்த சிவஸ்தலம் இருப்பதாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலத்துக்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்து வந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனை மரங்களை வளர்த்து வந்தார். அவை யாவும் ஆண்பனையாயின. இதனை வைத்து சமணர்கள் அவரைப் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞான சம்பந்தர் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக மாறும்படி திருப்பதிகம் பாடியதான ஐதீகம் வழக்கிலுண்டு. திருக்கடைக் காப்பில் ‘குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்’ என்று அருளியபோது அவை பெண்பனைகளாயினவாம். சம்மந்தர் பாடியருளிய இத்திருப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தர் எங்கே? நானெங்கே?

எனக்கு கடவுள் பக்தி வலு குறைவு’ என்று என்னுடைய மனைவி அடிக்கடி புராணம் வாசிப்பாள். அத்துடன், இஸ்லாமிய அரபு நாடென்றின் பேரீச்ச மரத் தோட்டத்தின் நடுவே நின்று, திருப்பதிகம் பாடினால் கையைக் காலை வெட்டி விடவும் கூடும். அரபு நாடுகளிலே மத அனுட்டானங்கள் பற்றிக் கடுமையான சட்டங்கள் அமுலில் உண்டு.

பனை, தென்னை, கமுக மரங்கள் குட்டி போடாது என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். ஆனால் வாழை மரம் போல பேரீச்ச மரமும் குட்டிபோடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கு ஆண் மரத்தின் குட்டிகள் ஆண் மரமாக வளரும். பெண் மரத்தின் குட்டிகள் அதன் மரபணு அமைப்பின் படி பெண்மரங்களாக வளரும். இதிலும் சிக்கலுண்டு. பெருந்தோட்டங்களை ஸ்தாபிப்பதற்கு தேவையான பெரும் எண்ணிக்கையிலான பெண் பேரீச்சமரக் குட்டிகளைப் இந்த முறையில் பெறுவது கஷ்டம். அத்துடன் குட்டிகள் பெரிதும் சிறிதுமாக இருக்குமாதலால் ஒரே சீரான மரங்களை பெருந்தோட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. இங்கேதான் எனது சேவை அவர்களுக்குத் தேவையாயிற்று. ஒரே சீரான ஒத்த இயல்புடைய பெருமளவு பெண் பேரீச்சமரக் கன்றுகளை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யும் ஏற்பாட்டினைச் செய்வதற்கு ஒரேயொரு வழி முறை தான் உண்டு. அது இழைய வளர்ப்பு (Tissue Culture) முறை. இந்த முறையில் பெண் மரத்தின் இழையத்திலிருந்து (Tissue) பல ஆயிரம் கன்றுகளை, ஹோர்மோன்களின் உதவியுடன் வளர்த்தெடுக்கலாம். இதற்கான ஆய்வு கூடத்தை நிறுவுவதற்கும் தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்குமே, நான் சார்ந்த பல்கலை கழகத்தின் சார்பில் அங்கு சென்றிருந்தேன்.

பேரீச்ச மரப் பெருந்தோட்டத்துக்கு நான் சென்ற பொழுது மதியமாகி விட்டது. இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் உச்சி வெய்யிலின் கீழே வேர்க்க விறுவிறுக்க அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஐம்பது பாகை சதமளவு வெப்பமிருக்கும். ஒரு சிலர் சுடுமணலில் மூன்று குச்சிகளை நட்டு சிறிய காட்போட் மட்டையைக் கூடாரமாக்கி தாங்கள் கொண்டுவந்த சோற்றைப் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தோட்டத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக வாகனம் ஒன்றில் என்னை அழைத்துச் சென்றார்கள். தங்களுள் ஓருவன் அரேபிய எஜமானர்களுக்கு சமமாக அவர்கள் புடைசூழ வலம் வருவதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்குள்ள இந்திய உபகண்டத்தின் தொழிலாளர்கள். எங்கள் வாகனத்தை ஓட்டியவன் என் நாட்டவன். அவன் என்னுடன் பேசத் தயக்கம் காட்டிய போதும் வலிந்து நான் பேசிக் கொண்டு வந்தேன். அவனுடைய சொந்த ஊர் அனலை தீவு. யாழ் மத்திய கல்லூரியில் படித்ததாகச் சொன்னான். அவனுடன் நான் பேசியது மடைத்தனம் என்பதை அடுத்த பத்து நிமிடத்தில் உணர்ந்து கொண்டேன்.

விதைகள் முளைக்க வைக்கும் கூடாரத்துக்கு நான் சென்று திரும்புவதற்குள், வாகனம் ஓட்டிவந்த தமிழ்ப் பெடியன் மாற்றப் பட்டு ஏமன் (Yeman) நாட்டைச் சேர்ந்தவன், சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையும், ஏமன் நாட்டைச் சேர்ந்த சாரதியின் மிரட்சிப் பார்வையும் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை எனக்கு தெளிவாகச் சொல்லியது.

அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. தொழிலாளர்களாக அரபு நாடுகளுக்கு வந்து விட்டால் அவர்கள் அடிமைகளா…? என்ற கேள்வி என் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. எம்மவனைப்பற்றி விசாரித்து நிலமையை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. அவர்களுடன் பேசுவதை தவிர்த்துக் கொண்டேன். இருப்பினும் அவர்கள் எதிர்ப்படும் பொழுதெல்லாம் அவர்களது கண்கள் என்னுடன் ஆயிரம் கதைகள் பேசின.

எங்கள் ஊர் சிவராசனை இந்தப் பிரயாணத்தின் போதுதான் சந்தித்தேன். என்னுடைய வயதுதான் அவனுக்கும். அவனும் நானும் கைதடியில் சுத்தாத ஒழுங்கையில்லை. அரச திணைக் கழகம் ஒன்றில் களஞ்சிய உதவியாளனாக பணிபுரிந்தான். நான் படிக்கவென வெளிநாடு சென்றதும் அவனுடனான தொடர்பு படிப்படியாக அறுந்துவிட்டது. குடும்பத்தில் மூத்தவன். நாலு சகோதரிகளை இவன் பொறுப்பில் விட்டுவிட்டு தகப்பன் போய்ச் சேர்ந்துவிட்டார். தங்கைகளைக் கரைசேர்க்கவென அரபு இராச்சியத்துக்கு வந்திருக்கிறான். பாலைவனத்திலுள்ள ஒட்டகப் பண்ணையில் அவனுக்கு வேலை. இரவெல்லாம் கடும் குளிர். பகலெல்லாம் அனலடிக்கும் வெய்யில் என, கொடூரமான காலநிலையின் கீழ் தங்கைகளுக்காக இருபது வருடங்கள் வெந்திருக்கிறான். கறுத்து முற்றாக முடி கொட்டி ஆளே உருமாறிப் போயிருந்தான். வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் கிடைக்கும் லீவின்போதுதான் நம் ஊரவர்களைப் பார்க்கவும் கறிசோறு தின்னவும் நகரத்துக்கு வருவதாகச் சொன்னான். இந்த வெள்ளிக் கிழமைக்காகவே மிகுதி ஆறுநாளும் பாலைவனத்தின் கொடூரமான தட்ப வெப்பத்தில் காத்திருப்பான். கடைசி தங்கையை கரைசேர்த்து அவன் நிமிந்தபோது மிஞ்சியிருந்த முடியும் நரைத்து வயது ஐம்பத்தைந்தாகி விட்டது.

வேண்டாமென்று சொன்னாலும் தங்கைமார் எனக்கு பெண் பார்க்கிறார்கள். இந்தவயதில் இனியென்ன மச்சான் எனக்கு குடும்ப வாழ்க்கை’ என அலுத்துக்கொண்ட சிவராசன், ‘இண்டைக்கு சிம்ரான் நடிச்ச படம் போடுறாங்கள், வா போய்ப் பாப்பம்’ என படம் பார்க்க அழைத்தான். போகும் வழியில், வயதில் இப்போது அரை நூற்றாண்டை தாண்டிவிட்ட அப்போதைய நம்மூர் கனவுக் கன்னிகளைப் பற்றிப் பேச்சு வந்தபோது, அவனது முகத்தில் பாலைவன மின்னல்போல் சந்தோஷம் நெளிந்து மறைந்தது. இப்படி எத்தனை எத்தனை நம்மவர்கள், பாலைவனத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வாழ்கிறார்கள் என்பது, அவர்கள் அனுப்பும் காசைக் கிலுக்கிக் கொண்டு, ஊரில் சுகம் காணும் எத்தனை பேருக்குத் தெரியும்?

இதை நான் எழுதும் போது என்னுடைய மகள் பேரீச்சம் பழக் கேக் செய்வதற்காக பேரீச்சம் பழங்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தாள். அழகான பெட்டிகளில் அலுங்காது நலுங்காது பொதி செய்யப்பட்ட பழங்கள் அவை. இருப்பினும் வாங்கிய பழங்களில் அரைவாசியை கேக் செய்ய உதவாது எனக் கழித்து விட்டாள். நான் சிறுவனாக இருந்தபோது, காய்கட்டி ஐயாவின் பெட்டிக் கடையில் பேரீச்சம் பழங்களை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். பழம் நசுங்கி கொட்டை பிதுங்கிய நிலையில், அவை அரேபிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும். பேரீச்சமர ஓலைக் கூடைகளில் இறக்குமதியாகும் பேரீச்சம் பழங்களை, ஈ மொய்க்க காய்கட்டிஐயா விற்பனைக்கு வைத்திருப்பார். அந்தக் கடையில் எங்களுக்கு கொப்பிக் கணக்கு. மாதம் முடிவில் ஐயா கணக்குப்பார்த்துக் காசு கொடுப்பார். அப்போதுதான் தெரிய வரும் நான் தாராளமாக பேரீச்சம் பழங்கள் வாங்கித் தின்ற கதை.

புஃஜேராவில் குட்டையான பேரீச்ச மரங்களில், தரையில் நின்றே பழங்களைப் பறித்துச் சாப்பிட்டிருக்கிறேன். அதன் சுவையே தனியானது. தேனில் சிலநாட்கள் அவற்றை ஊறவைத்துச் சாப்பிட்டால் அது தேவாமிர்தம்!

என்னுடைய ஆச்சிக்கு, அம்மாவின் அம்மாவுக்கு, நிறைய பனங்காணிகள் இருந்தன. பனங்காணிகளில் எதேச்சையாக ஈச்ச மரங்களும் வளர்ந்தன. இவை பேரீச்ச மரங்களின் இனமாயினும் வளர்ச்சியில் குட்டையானவை. இவற்றிலே அளவில் சிறிய, கறுப்பு நிற ஈச்சம் பழங்களை பறித்துச் சாப்பிடுவதில் எனக்கும் சிவராசனுக்கும் சண்டைவரும். நமது ஈச்ச மரங்களில், பாளை வெளிவரும்போது அதை வெளியில் இழுப்பதும், அதன் அடிப்பகுதியிலுள்ள மென்மையான பகுதியைச் சப்புவதும் மிக இனிமையான அநுபவம். பாளை இழுப்பதற்கு சிவராசன் ஒரு பாட்டு வைத்திருந்தான். அந்தப் பாட்டில் எல்லா தெய்வங்களையும் துணைக்கழைத்து இறுதியில் ‘பாளையே…, பாளையே…, கெதியாய் வா…, கெதியாய் வா…!’ என்று சொல்லி தம் பிடித்து இழுப்பான். இழுத்த இழுப்பில் பல தடவை அருகேயுள்ள ஈச்சம் பத்தைக்குள் விழுந்தெழும்பியதும் உண்டு.

ஆச்சி வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அவர் ஒரு கைம்பெண். இரு பெண் பிள்ளைகளுடன் பனை ஓலையால் வேயப்பட்ட மண் வீட்டில், தங்களுக்குச் சொந்தமான பனைகளை நம்பி மிகவும் கண்ணியமாக வாழ்ந்துவந்தார். சின்ன வயதில் அவர் வீட்டிலேயே, பனை மரத்தின் விளை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டிருக்கிறேன். அவரது கைப் பக்குவத்தில் தயாராகும் பாணிப்பினாட்டும், புழுக்கொடியல் மாவுறுண்டைகளும் மிகவும் சுவையானவை. பனம் பழக் காலங்களிலே பனங்காய்ப் பணியாரம் சுடப்படுவதுமுண்டு. இவரைப்போல இன்னும் சில பெத்தாச்சிகளும் அயலட்டையில் வாழ்ந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்பொழுதும் நான் செல்லப் பிள்ளை. அவர்கள் அனைவரும் தோட்டத்தை நம்பியே வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணவசதி இல்லாவிட்டாலும் வந்தவர்களையும் உறவினர்களையும் மனதார வரவேற்று உபசரிக்கும் பண்பு இருந்தது. போலித்தனமோ எந்தவித எதிர்பார்ப்போ அவர்களிடம் இருந்ததில்லை. மாறாக அவர்கள் மனதில் மனிதம் நிறைந்திருந்தது. ஆனால் போராட்டத்துக்குப் பின்னான இன்றைய காலகட்டத்தின் புதிய தலைமுறையில், இது முற்றாக மறைந்து போனதை, இலங்கைக்கான என் சமீபத்திய பயணம் உணர்த்தியது. அடிப்படைத் தேவைகளுக்கப்பால் மேலதிக தேவைகளும் பற்றாக் குறைகளும்தான் இதற்கு காரணமா? அல்லது இன்றைய வாழ்க்கை முறையில் முகிழ்ந்து வரும் புதுக் கோலமா என, என்னுள் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் தாவரவியல் பேராசிரியராக டாக்டர் கந்தையா பணிபுரிந்தார். அதற்கு முன்பு அவர் தேயிலை ஆராய்ச்சி நிலயத்தில் விஞ்ஞானியாக சேவையாற்றியவர். இவர் ஜேர்மன் அரசின் புலமைப் பரிசில் பெற்று, பேர்ளின் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்துக்கு எண்பதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் வந்திருந்தார். அங்கு நான் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்த காலமது. ஓய்வு நேரங்களில், யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய விவசாய அபிவிருத்தி பற்றிப் பேசுவோம். குட்டைப் பனைமரங்களை இலங்கையில் இனவிருத்தி செய்ய வேண்டுமென்பது அவரது கனவுகளில் ஒன்று. பனைவள ஆராச்சியில் அவர் கணிசமான பங்களிப்பை செய்திருந்தபோதும் அவை பனை அபிவிருத்திச் சபையினரால் இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. போராட்ட காலங்களில் பஸ் போக்குவரத்து இல்லாத நிலையிலும், கிளிநொச்சியில் இயங்கிய யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மிதிவண்டியிலேயே சென்று பணியாற்றியவர். இத்தகைய பிரயாணத்தின் போது வரும்வழியில் மூச்சுத்தணறி மிதிவண்டியுடன் கண்டி வீதியில் விழுந்து அவர் மரணித்தது சோகமானது. இலங்கையின் விவசாய முன்னேற்றத்துக்கும் பனை வளத்தை பெருக்கவும் டாக்டர் கந்தையா மௌனமாகச் செய்த பாரிய பங்களிப்பை பதிவு செய்யவே இதை இங்கு குறிப்பிடுகின்றேன்!

சூரிய வெளிச்சம் நிலத்தில் விழாத அளவுக்கு அடர்ததியாக வளர்ந்த யாழ் மற்றும் வன்னிப் பனங்காடுகள் இனப்போரின் பெயரினால் ‘மொட்டையடிக்கப் பட்டுவிட்டன. நான் பிறந்து, மண் அளைந்த கைதடி வடக்கில் ‘கொத்தாக் கூடல்’ என்னும் பெயரில் ஒரு பனங்கூடல் இருந்தது. அங்கு ஆயிரம் பனைகளுக்கு மேல் நின்றிருக்கும். அப்போது எனது மூதாதையரின் வீட்டுக்கு வழி சொல்ல, அது ஒரு அடையாளமாகப் பயன்பட்டது. அதிகாலைகளில் அங்கு சிரம பரிகாரம் செய்ய பனைகளின் மறைவில் குந்துபவர்கள் அநேகர். கைதடிச் சந்தியை தொட்டுச் செல்லும் யாழ்-கண்டி வீதிக்குச் செல்ல, வடக்குக் கைதடியிலிருந்து பனங்கூடலூடாக குறுக்கு வழியில், மிதிவண்டியிலும் நடந்தும் செல்வார்கள். அப்படி மிதிவண்டியில் செல்லும்போது பனங்காய் முதுகில் விழுந்து நோஎண்ணை போட்டுத் திரிந்த பலர் இப்பொழுது என் ஞாபகத்துக்கு வருகிறார்கள். இவ்வாறு என் இளமைக்கால வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த கொத்தாக் கூடலில் ஒரு பனை மரம்கூட இல்லாமல் இப்பொழுது அழிந்து போனது பெரும் சோகம். இந்த வகையில் பனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கும் தற்போதைய அடையாளங்கள். ஈழத்தில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை 5,500,000 என்று தற்போது (2009) மதிப்பிடப் படுகிறது.

பனை ஏறுவது மிகவும் கஷ்டமான தொழில். ஏறுபட்டி, தளநார், நெஞ்சுத்தோல், பாளைக் கத்திகளுடன் பனைமரம் ஏறும் எங்கள் ஊர் வட்டர்(ன்) இன்றும் என் மனதில் வாழும் அன்புக்குரியவர். விவசாயியான எங்கள் பெரியையாவுக்காகத் தினமும் மாலையில் மாட்டுகளுக்கு தீனியாக பனையோலை வெட்டிவருவார். நுங்கு காய்க்கும் காலங்களில் பதமான நுங்குகள் எனக்காக வெட்டிவருவார். இரவில் நாமெல்லோரும் முற்றத்தில் அமர்ந்து ஈக்குகளை நீக்கிப் பனையோலை கிழிப்போம். அது தினந்தோறும் இரவில் நடக்கும் குடும்ப மாநாடு. அப்போது குடும்ப விஷயங்கள் தொடக்கம் ஊர்ப்புதினங்கள் வரை அங்கு அலசி ஆராயப்படும். இது எத்தகைய சுகமான அநுபவங்களும் காலங்களும்!

இந்த வகையில், புலம் பெயர்ந்த மண்ணில், தம் வேர்களை மறந்து, மணிக்கு நூற்றுப்பத்து மைல் வேகத்திலே ஓடும் கார்ப்பயணங்கள் செய்து பழக்கப்பட்ட எங்களுடைய இன்றைய தலைமுறைப் பிள்ளைகளுக்கு பனங்கூடலுக்கு ஊடாக எறித்த நிலவொளியின் அழகுகளை எப்படிப் புரிய வைக்க முடியும்?

சாதாரண பனைகள் 98 அடிகள் (30 மீட்டர்கள்) வரை வளரும். தமிழ்நாட்டின் காயல்குடி காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் குட்டைப் பனைகள் செழிப்பாக வளர்வதைக் கண்டிருக்கிறேன். இவை 15 அடி உயரத்துக்கு வளர்ந்து 8 வருடத்தில் 70-80 பனங்காய்கள் காய்க்கும் எனவும் கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழக பேராசிரியர் சொன்னார். சிறிய எண்ணிக்கையில் இந்த ரகம் இலங்கை புத்தளம் கற்பிட்டிப்ப பகுதியில் அறிமுகம் செய்யப் பட்டிருப்பதாக என் பால்ய நண்பன் பாலன் சொன்னான். இதை உறிதிப்படுத்த இலங்கை பனை ஆராச்சி நிலயத்தை தொடர்பு கொண்டும் சரியான தகவல்களை அறிய முடியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் பிராக்குகள் தான் பிரதானம் என்பதே இதற்கான சமாதானம்!

வைரவர் வழிபாடு அனேகமாக யாழ்குடா நாட்டின் சமய வழிபாட்டு முறையென்பது எனது அபிப்பிராயம். இந்தியாவில் வைரவருக்கு தனியான கோவில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கள் குடும்பத்துக்கென அம்மாவுக்கு சீதனமாக வந்த பனங்கூடலில், கொண்டல் மரத்தின் கீழ் ஒரு வைரவர் இருந்தார். வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் அவர் நாங்கள் ஏற்றும் வெளிச்சத்தில் இருப்பார். மற்றும்படி இருட்டில்தான் அவரது சீவியம்.

வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் பொங்கி முக்கனிகள் சகிதம் படையல் வைப்போம். இப்படி மூன்று நான்கு குடும்பங்களுக்கு ஒரு வைரவர் வீதம், பல வைரவர்கள் பனைகளுக்கு நடுவே இருந்து யாழ் குடாநாட்டில் அருள் பாலிப்பர்கள். வைரவர் வழிபாடு பற்றி என்னுடைய ஐயா சொன்ன சங்கதி ஒன்று இங்கு பதிவுக்குரியது.

‘போத்துக்கேயர் இலங்கைக்குப் படையெடுத்து இலங்கையை ஆண்டபோது மக்களை வலோற்காரமாக மதம் மாற்றியதுடன் வழிபாட்டு தலங்களையும் அழித்தார்களாம். அப்போது யாழ்ப்பாண மக்கள், பயத்தில் தங்கள் பின் வளவுகளுக்குள் அல்லது பனங்கூடலுக்குள் வைரவர் சூலங்களை நாட்டி மறைவாக வழிபட்டார்களாம். அதுவே காலப்போக்கில் வைரவர் கோயில்களாக வந்திருக்கலாம்’ என்ற கருத்தைச் சொன்னார்.

வைரவர் மாதிரி, ஏன் மற்ற சுவாமிகளை பின் வளவுகளுக்குள் வைக்கவில்லை…?’ என்று வழமைபோல நான் எதிர்க் கேள்வி கேட்டேன். கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்து தமிழ் வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்ட அம்மாவால், தகப்பனை எதிர்த்து மகன் கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.

பெரியவர்களுடன் குதர்க்கம் பேசிப் பழகாதை…! மற்ற சுவாமியளுக்கு கோவில் வைக்க, விக்கிரகம் வேணும். வைரவ சுவாமிக்கு ஒரு சூலத்தை நட்டு, கற்பூரம் கொழுத்த முன்னுக்கு ஒரு கல்லை வைச்சுவிட்டால், அது கோயில்…’ என்றார் அம்மா, தன் கணவனின் கௌரவத்தைக் காப்பாற்றும் பதிவிரதையாக.

சித்திரை வருஷப் பிறப்பன்று வைரவருக்கு பொங்கல் பொங்கி, அத்துடன் முக்கனிகளாகச் சொல்லப்படும் மா, வாழை, பலாப் பழங்களுடன் ‘மடை’வைக்கும் போது, ஐயா வேறு சில தகவல்களையும் சொன்னார். ‘முக்கனிகளைப் பற்றிய புனிதம் சைவசமய பூசை அநுட்டானங்களிலே வலியுறுத்தப் படுவது பிற்காலத்திலே தோன்றியதாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விருட்சம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆதிகாலத்தில் யாழ்ப்பாணக் கோவில்களுக்கு தல விருட்சமாக அமைந்தது, யாழ் கலாசாரத்துடன் கைகோத்துச் செழித்து வளர்ந்த பனை மரமே’ என்றார் புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த என்னுடைய ஐயா.

பனையும் அதன் பானமும் அவற்றை உண்டு தமிழிலே களிப்புற்ற பாணருமே நமது தமிழ்க் கலை இலக்கிய வடிவங்களுக்கு முதன் முதலாக வடிவமும், வகையும், சுவையும் அளித்தனர். பொருநர், மதங்கர், கூத்தர், பாணர், பாடினி, விறலி என்கிற சொற்கள் அனைத்தும், பாணர் சேரியிலே வாழ்ந்து, ஐந்திணை நிலங்களையும் அடியளந்து அலைந்து திரிந்து, இயல் இசை நாடகமென முத்தமிழையும் வளர்த்த தமிழ்க் கலைஞர்களையே குறித்தன. அவர்கள் கலைஞர்களாகவும் மகிழ்வூட்டுவோர்களாகவும் படைப்பாளிகளாகவும் விளங்கினார்கள். பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவைஞர்களுடன் பங்கிடுவதற்கு, ‘உற்சாகபான’மாகக் கள்ளே பயன்பட்டது. எனவே சங்க காலத்திலே தமிழின் படைப்புக்கும் சுவைக்கும் ஊடக பானமாக விளங்கிய கள் மதுவகையிலே சேர்க்கப்படாது உணவு வகைகளிலே சேர்க்கப் பட்டதாகச் சொன்ன மூத்த எழுத்தாளர் எஸ்போ, ஒருமுறை சங்கத் தமிழிலே கள்ளின் புகழ்பாடும் அனேக வரிகளை தொகுத்துச் சொன்னார். அவற்றுள் என் ஞாபத்தில் நின்ற பாடல்தான் ‘சீறியாழ் பணையம்’ என்ற தலைப்பில், மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் என்பவர் இயற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்.

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!

அவன்எம் இறைவன் யாம்அவன் பாணர்

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்

இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு

ஈவது இலாளன் என்னாது நீயும்

வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்

கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்

சென்றுவாய் சிவந்துமேல் வருக

சிறுகண் யானை வேந்து விழுமுறவே.

ஓரூரில் ஒரு அரசன் மற்றொரு அரசனுடன் போரிட்டான். போரில் பகையரசன் இறந்தான். வெற்றிபெற்ற அரசன் விடியற்காலைவரை கள்ளுண்டு மகிழ்ந்தான். அவனிடம் பரிசில் பெற்றுவரும் பாணர்களின் தலைவன், வரும்வழியில் வேறு சில பாணர்களைக் கண்டான். பாணர் தலைவன் வழியில் வந்த பாணர்களைக் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கும் அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பனைகளின் முக்கிய பொருளாதார பயன்கள், கள்ளு சாராயம் பனங்கட்டி பனங்கற்கண்டு ஆகியனவே. ‘கல்லாக்காரம்’ என்னும் பெயரில் விற்பனையாகும் பனங்கற்கண்டு இருமலுக்கும் தொண்டை அரிப்புக்கும் நல்ல மருந்தென விஞ்ஞான ரீதியாக இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலாதிகாலமாக கல்லாக்காரமே யாழ்ப்பாணத்தில் இருமலுக்கான இயற்கை மருந்தாக பாவனையியிலிருந்த தகவல் முறைப்படி நம்மால் பதியப்படாதது துர்ரதிஸ்டமே! இவைதவிர பனாட்டு, பாணிப்பனாட்டு, பனங்காயப் பணியாரம், பூரான், பனங்கிழங்கு, ஒடியல். புழுக்கொடியல், ஊமல், மற்றும் பனை ஓலையிலிருந்தும, மட்டையிலிருந்தும், மரத்திலிருந்தும் பெறப்படும் பயன்களை நீண்ட பட்டியலிடலாம். இந்தவகையிலே இலங்கையில் ‘கற்பகம்’ என்ற நிறுவனம் பனம் பொருள் உற்பத்தியிலே பாரிய பங்களிப்பைச் செய்வதை இங்கு குறைத்து மதிப்பிடலாகாது.

இடையில் அவசரமாக இன்னொரு சங்கதி மூளையைக் குடைகிறது. யாழ்ப்பாணத்துக் ‘கிளாக்கர் ஐயாக்களின்’ அதிகாரங்கள் கொழும்பிலே கொடிகட்டிப் பறந்த காலத்தில், கந்தோர்களில் கோப்புக்களைக் கட்டிப்பிடித்து நாட்டின் நலன்களை அடைகாத்துப் பெருக்கியதாகப் பெருமைப் பட்ட காலங்களில், அவர்களுக்குத் தேவையான ‘relaxation’ பனங்கள்ளே அளித்தது என்பதை அறுபதைத் தாண்டிய எந்த யாழ்ப்ப்பாணியாலும் மறுக்க முடியாது. பரம உண்மைகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உருவானவைதான் குறியீடுகளும் மரபுத் தொடர்களும் என்பார் எஸ்போ!

அண்ணை, யாழ்ப்பாணத்திலை கொடியேறிற்றிது, நீங்கள் கந்தோரிலை மாரடிச்சுக் கொண்டிருக்கிறியள்…’ என்ற தொடரில் ‘பனங்கள்ளு யாழ்ப்பாணத்திலை மலிஞ்சுபோய்க் கிடக்குது…’ என்கிற செய்தியைத்தான் ‘கொடியேறிற்று’ என்ற அப்பாவியான சொல் சொல்லியது. இந்த வகையில் ‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’ என நகைச் சுவையையும் நாடகக் கலையையும் கால் நூற்றாண்டு காலம் இலங்கையில் முன்னெடுத்து வாழ்ந்த ‘சானா’ என்ற மாபெரும் கலைஞரும் என் நெஞ்சிலே முகங்காட்டி மறைகின்றார்.

Palmyra என்றவுடன் நம்மூர் பனை மரங்கள் மாத்திரம் நினைவுக்கு வரும். ஆனால் இதில் பல இனங்கள் உண்டு. Borassus aethiopum உஷ்ணவலய ஆபிரிக்க நாடுகளிலும், Borassus akeassii மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் வளர்வன. ஆசிய நாடுகளில் வளரும் நம்மூர் பனைமரங்களை Borassus flabellifer என அழைப்பார்கள். Borassus madagascariensis, Borassus sambiranensis ஆகிய இரண்டு பனை இனங்களும் மடகாஸ்கரில் வளர்வன. நியூகினியில் வளரும் பனையை Borassus heinenus என அழைப்பார்கள். இதில் Borassus flabellifer என்ற லத்தீன் விஞ்ஞானப் பெயர் கொண்ட நம்மூர்ப் பனை மரங்கள் நெடிதுயர்ந்து வளர்வன. இதிலேறி கள் இறக்காவிட்டால் பனை வருமானத்தின் பெரும் பங்கை நாம் இழந்து விடுவோம். ஆபிரிக்க குட்டைப் பனைமரங்களுடன் நம்மூர் பனைமரங்கள் சிலவற்றை கலந்தோ அல்லது நம்மூர் பனை மரங்களின் மரபணுக்களை மாற்றியோ இனவிருத்தி செய்ய விஞ்ஞானத்தில் வழிமுறைகள் உண்டு. நிலத்தில் நின்று கொண்டே தேங்காய் பறிக்கக் கூடிய குள்ளமான தென்னைமரங்கள் தற்போது இனவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது கள்ளிறக்கும் கடினமான தொழிலைச்செய்ய இளைஞர்கள் முன்வருவதில்லை. எனவே, நின்றுகொண்டோ அல்லது சிறிய ஏணிவைத்தோ கள் இறக்கககூடிய குள்ளமான பனைகளை இனவிருத்தி செய்வது அவசியமாகிறது.

தென்னை பனை கமுகு ஆகியன ஒருவித்திலைத் தாவரங்கள். இதில் இனவிருத்தி செய்வதும் மரபணுக்களை மாற்றுவதும் கடினமானது. அது மட்டுமல்லாது நமக்கு வேண்டிய இயல்புடைய இறுதி தெரிவுக்கு காலமெடுக்குமல்லவா?’ என பேராசிரியர் கந்தையாவிடம் ஒருமுறை கேட்டேன்.

காலமெடுத்தாலும், அதை அப்படி விட்டுவிட முடியுமா…? குள்ளமான தென்னை மரங்கள் இனவிருத்தி செய்யப்படவில்லையா…? நெல்லு, கோதுமை. சோளம், பார்ளி, ஆகியனவும் ஒருவித்திலைத் தாவரங்கள்தான். அவற்றில் மரபணுக்கள் மாற்றப்படவில்லையா…? இதற்கு பணமும் அரச ஆதரவும்தான் தேவை. இலங்கை இந்தியாவிலுள்ள பனம்பொருள் ஆராய்ச்சி மையங்கள் தமக்கிடையேயுள்ள உள்ளுர் அரசியலை விடுத்து பனை அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும்…’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பேராசிரியர். அவரது தொனியில் ஆவேசமும், முகத்தில் இயலாமையும், விரக்தியும் மாறிமாறி மின்னலடித்தன!

ஆசி கந்தராஜா (2011)

No comments:

Post a Comment