Saturday 30 January 2021

 ஓட்டுக்கன்றுகள்

ஆசி கந்தராஜா

-1-

ங்கள் ஊரில் அப்போது முடிவெட்டும் நிலையங்கள் இல்லை. இதனால் ஐயாவுக்கு முகச்சவரம் செய்ய, நாவிதர் சின்னப்பொடி வீட்டுக்கு வருவார். நாவிதர் வந்தவுடன் ‘பரியாரி வந்திட்டார்…!’ என ஐயாவுக்கு தகவல் சொல்வார், அம்மா.

நாவிதர்களை ஏன் ‘பரியாரி’ என்கிறார்கள்…? என்ற கேள்வி, நெடுங்காலமாக என் மனதைக் குடைந்தது. காரணம் வேறு ‘பரியாரி’மார்களும் அப்போது ஊரிலிருந்ததே. அவர்கள் மருந்துக் குளிசைகள் கொடுக்கும் தமிழ் வைத்தியர்கள்.

அலோபதி, ஹோமியோபதி, யுனானி, சித்தவைத்தியம், ஆயுர்வேதம் என வைத்தியத்தில் பல வகைகள் உண்டு. ஆனால் இந்த ஊர்ப் பரியாரிமார்கள், மேலே சொன்ன எந்தவகை மருத்துவத்திலும் அடங்காத ‘பரம்பரை’ வைத்தியர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுகளுக்கு முன்பு, இலங்கையில் நடந்த இந்த விஷயம் சற்று விசித்திரமானது. தகப்பன் பரியாரியாக இருந்தால், மகனுக்கு வைத்திய அறிவு இருக்கோ இல்லையோ, தகப்பனிடம் வைத்தியம் படித்ததாகச் சொல்லி, மகனும் பரியாரியாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு ஊரிலுள்ள பெரியவர்கள் சிலர் சிபார்சு செய்ய வேண்டும். எழுபதாம் ஆண்டுகளுக்குப் பின்பு, இந்த பதிவு முறை நீக்கப்பட்டது சற்று ஆறுதலான விஷயம்.

கொழும்பில் அப்போது ‘கிளறிக்ல்’ உத்தியோகம் பார்த்த நம்மவர்கள், யாழ்ப்பாணத்துக்கு லீவில் வந்தால், தங்களின் லீவை நீடிக்க, ஊர்ப் பரியாரிமார்களிடம்தான் ‘மெடிக்கல் சேட்டிபிக்கற்’ வாங்குவார்கள். வாதம், பித்தம், அஜீரணக் கோளாறு என, ஏதோ ஒன்றை அவர்களின் ‘லெட்டர் பாட்டில்’ எழுதிக் கொடுப்பார்கள். மறுபேச்சின்றி இவை ‘கந்தோர்’களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதேவேளை, சொந்தமாக மருந்துகளையும் எண்ணை வகைகளையும் தயாரிக்கும் பயிற்றப்பட்ட சிறந்த சித்த வைத்தியர்களும் சில ஊர்களில் இருந்தார்கள். இவர்களிடம்தான், பதிவுசெய்த போலி பரியாரிமார்களில் பலர், காச்சலுக்கு தலையிடிக்கு வயித்துப்போக்குக்கு என குளிசைகளையும், நோவுக்கு, சுழுக்குக்கு என எண்ணைகளையும் வாங்கி வைத்தியம் செய்வார்கள். வெட்டிப் புருடா விட்டு, கிராமத்து மக்களை பயமுறுத்தி வைத்திருப்பது, பரம்பரை பரியாரிமார்களின் தொழில் மூலதனம். இவர்களுள் சிலர் செய்வினை சூனியத்தையும் கையில் எடுத்துக் கொண்டதால், இவர்களின் பிழைப்பு பிரச்சனையின்றி ஓடியது.

நாகமுத்து பரியாரியும் இப்படிப்பட்ட ஒரு தமாஷாவகைப் பரியாரியே. அவரிடம் மருந்துக்குப் போனால் நாடி பிடித்துப் பார்த்து, கண்களை சுருக்கி யோசித்து, நோய் அறிவதுபோல பாவனை செய்வார். தன் வைத்தியம் பற்றி நீண்ட நேரம் ‘பீலா’ விடுவார். பின்னர் சில மருந்துக் குளிசைகளை சரையில் மடித்து, முலைப் பால் அல்லது வெற்றிலைச் சாறில் உரைத்து குடிக்குமாறு கொடுப்பார். முலைப்பால் வாங்க சிரட்டையும் கையுமாக அப்போது சின்னக்கடை வரை அலைந்து திரிந்தவர்களும் உண்டு. சின்னக்கடைக்குப் போன தம்பித்துரை அண்ணை, முலைப்பால் வாங்கும் சாட்டில் மீன்காறியிடம் சேட்டைவிட்டு, திருக்கை வாலால் அடிவாங்கிய சங்கதி இப்போதும் சாயம் போகாமல் நினைவில் இருக்கிறது. ஊரில் ஆராவது தன்னை மதிக்காமல், அயல் கிராமங்களிலுள்ள வைத்தியர்களிடம் சென்றால் பரியாரிக்கு கெட்ட கோவம் வரும். சென்றவர்களின் படலைக்கு முன்னால் எலுமிசம் பழங்களை வெட்டி, குங்குமம் தடவி நள்ளிரவில் எறிந்துவிடுவது, அவரின் ஆரம்ப கட்ட வெருட்டல் ‘ரெக்னிக்’. இதற்கும் மசியாவிட்டால் அடுத்த ‘ஸ்டெப்’ எலுமிச்சம் பழங்களுடன் குங்குமம் பூசி வெட்டிய, நீத்துப்பூசணிக் காய்! பெரும்பாலானவர்கள் இதோடு மடங்கி விடுவார்கள்.

ஊரிலே, தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுடன், பின் கொய்யகம் வைத்த சேலை உடுத்து, மிடுக்காக வலம் வந்தால், அது அன்னம்மா. நாகமுத்து பரியாரிக்கு அடுத்த வீட்டில் அவர் குடியிருந்தார். சுத்தி வளைத்துப் பார்த்தால் சொந்தக்காரியும் கூட. புருஷன் சிங்கப்பூர் ‘பென்சனியர்’. சிங்கப்பூர்க் காசில் கட்டின பெரிய நாற்சார வீட்டில் வசதியான வாழ்க்கை. அவரை சிங்கப்பூர் வீட்டுக்காரி என்றால்தான் ஊரில் தெரியும். அன்னம்மா நாகமுத்துப் பரியாரை எப்பனும் சட்டை செய்வதில்லை. காணிப் பிரச்சனையால் வந்த விரோதம். ‘வெட்டிறன், குத்துறன், எறிமாடன் பேயை ஏவுறன்’ என்று பரியாரி அவ்வப்போது எகிறி விழுவார். பரியாரியின் இந்த புருடா அன்னம்மாவுக்குத் தெரியுமாதலால் நாகமுத்துவை அவர் ஒரு பரியாரியாகவே ஏற்றுக் கொள்வதில்லை. எனவே அன்னம்மா மருந்துக்குச் செல்வது கள்ளியங்காட்டு முருகேசு பரியாரியிடம். தமிழ் மருந்து சரிவரவிடில் ‘இங்கிலீஸ்’ வைத்தியம்தான். எங்கள் ஊர் நாகமுத்து பரியாரியின் பிழைப்பே, கள்ளியங்காட்டு முருகேசு பரியாரியின் மருந்தை வைத்துத்தான். இது அன்னம்மாவுக்கும் தெரியுமென்பதால் வேலிச் சண்டை வரும்போதெல்லாம் இந்த விஷயத்தை ஊர் முழுக்கச் சொல்லித்திரிவார். அயல் வீட்டு அன்னம்மா, தன்னிடம் மருந்துக்கு வராததைக்கூட சகித்துக் கொண்ட நாகமுத்துவால், அவர் கள்ளியங்காட்டுக்கு மருந்துக்குச் செல்வதைத்தான் பொறுக்க முடியவில்லை. தருணம் வரட்டுமென காத்திருந்தார்.

அன்னம்மா வீட்டில் எப்போதும் பேடு கூவித்தான் பொழுது விடியும். புருஷன் உரத்துப் பேசமாட்டர். கோவில் மாடுமாதிரி தலையாட்டுவதுடன் சரி. இவர்கள் ஒரு உயர்சாதி அல்ஸேஸியன் நாயும் ஒஸ்ரின் காரும் வைத்திருந்தார்கள். இது ஊரில் அவர்களது அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. நாயை தினமும் குளிப்பாட்டி, காரைக் கழுவிப் பராமரிப்பது மட்டுமே புருஷனின் பொறுப்பு. மற்றதெல்லாம் அன்னம்மாவின் கட்டுப்பாட்டில். நாய்க்கான கூண்டு நாகமுத்துவின் காணியை பிரிக்கும் வேலிக்கும் எலுமிச்சை மரத்துக்கும் இடையில் இருந்தது. அந்த எலுமிச்சை ஒரு ‘ஒட்டுக்கன்று’ (Grafted Lime). நிறையக் காய்க்கும், கொட்டை இல்லை, நல்ல புளி. இதனால் ஆடு வெட்டி, ஊரில் பங்கு போடும்போது, அன்னம்மா வீட்டு எலுமிச்சங்காய்க்கு நல்ல கிராக்கி ஏற்படும்.

அன்னம்மா வீட்டு உயர்சாதி நாய் சும்மா இருக்குமா? உரத்த சத்தத்தில் எந்த நேரமும் குரைத்தது. இரவு நேரங்களில் வேலிபாய்ந்து அட்டகாசம் பண்ணியது. பரியாரி வைத்தியம் பார்க்கும் தலை வாசலுக்குள் மலம் கழித்தது. மொத்தத்தில் ஊர்ச் சனங்களைக் கட்டியாண்ட பரியாரிக்கு அன்னம்மாவையும் அவரின் நாயையும் அடக்க முடியவில்லை. எலுமிச்சங்காய்களை வெட்டி குங்குமம் தடவி நாய் படுக்கும் கொட்டிலருகே போட்டுப்பார்த்தார். நாயிலும் மாற்றமில்லை, அன்னம்மாவும் மசியவில்லை. கடைசி ஆயுதமாக அன்னம்மா ஊரில் இல்லாத வேளை, நாய்களுக்கு நலமடித்து குறிசுடும் சின்னக்கண்டுவைக் கொண்டு, நாய்க்கு நஞ்சு வைப்பித்தார். நாயின் கதை அதோடு முடிந்தது.

கிடாரி மாடு செத்துக் கிடப்பது போல, உடல் குளிர்ந்து, நுரைதள்ளி, எறும்புகள் மொய்த்துக் கிடந்த நாயைக் கண்ட அன்னம்மா ஆடிப்போனார். தாமதிக்க நேரமில்லை. சகல மரியாதைகளுடனும் புதுத் துணி விரித்து அன்னம்மாவின் அல்ஸேஸியன் நாய், எலுமிச்சை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டது. பரியாரி ஏவிவிட்ட எறிமாடன் பேயின் வேலைதான் இதுவென, சின்னக்கண்டு கை கால் மூக்கு வைத்து ஊரில் கதை பரப்பிவிட்டார். ஊரிலே சின்னக்கண்டுதான் அப்போதைய மிருக வைத்தியர். இதனால் அவர் சென்னதை மறுப்பில்லாமல் ஊர்ச்சனம் ஏற்றுக்கொண்டது. இதற்காக சின்னக்கண்டு, பரியாரி நாகமுத்துவிடம் பெருந்தொகையான பணம் வாங்கியது கொசுறுச் செய்தி. அன்னம்மா சும்மா இருப்பாரா? மலையாள மாந்திரீகரைக் கூப்பிட்டு எறிமாடன் பேய்க்கு ‘மறுத்தான்’ போட்டார். காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக, பாரிய இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பரியாரியும் கைகால் இழுத்து பாரிச வாதத்தில் படுக்கையில் விழுந்தார்.

இது நடந்து சில மாதங்களின் பின்பு மழைக்காலம் வந்தது! ‘கிளைமாக்ஸ்’ காட்சியாக, நாய் புதைத்த எலுமிச்சை மரம் பூத்துக் காய்த்தபோது ஒரு அதிசயம் நடந்தது. மரத்தின் சில கிளைகளில், எலுமிச்சங் காய்களுக்குப் பதிலாக பெரிது பெரிதாக ‘கைச்சல்’ நாரத்தங்காய் (Lemon) தொங்கியது. ஊர் வாயை மூடமுடியுமா? அதையும் இதையும் முடிச்சுப் போட்டு ஊரில் கதை பரவியது. அன்னம்மா மனசார பயந்து போனார். இதன் தொடர்ச்சியாக வெள்ளிக் கிழமைகளில், அன்னம்மா வீட்டு எலுமிச்சையின் கீழ் ‘செய்வினை’ எடுக்க ‘கழிப்பு’ நடந்தது.

எங்கள் ஊரில் ‘முற்போக்கு இளைஞர்கள் சங்கம்’ என்ற ஒரு அமைப்பு இருந்தது. இதைத் துவக்கி வைத்தவர் ஆறுமுகம் வாத்தியார். அவரை வாத்தியார் என்பதிலும் பார்க்க ‘கம்யூனிஸ்ட்’ ஆறுமுகம் என்றால்தான் ஊரில் தெரியும். அந்த அளவுக்கு அவர் பொதுவுடமை வாதி. வாத்தியார் தலைமையில் அடிக்கடி நாம் ஊர் வாசிகசாலையில் ஒன்று கூடுவோம். நாம் என்பது நாவிதர் சின்னப்பொடியின் மகன் பத்மநாதன் என்கிற பற்பன், துரையன், பாலன், சொர்ணன், லிங்கன், நான் மற்றும் பலர். அங்கு அறிவியல் சம்பந்தமான பல விஷயங்களைப் பேசுவோம். பற்பன் அப்போது பேராதனை பல்கலைக் கழகத்தில் விவசாயம் படித்துக் கொண்டிருந்தான். அந்த வகையில் ஒரு நாள் அன்னம்மா வீட்டு எலுமிச்சை பற்றிப் பேச்சு வந்தது. பற்பனிடம் இதுபற்றிக் கேட்டோம். இதற்காகவே காத்திருந்தவன்போல அவன் ஆரம்பித்தான்.

தண்டு ஒட்டல் (Grafting), அல்லது அரும்பு ஒட்டல் (Budding) போன்ற கலவியற்ற (Non-Sexual) இனப்பெருக்கம் மூலம், பல விரும்பப்படும் இயல்புகள் கொண்ட தாவரங்கள் பெறப்படுகின்றன’.

எடுத்த எடுப்பிலை, விஞ்ஞான கலைச் சொற்களைப் பாவிக்காமல், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லப்பா’ என்றார் ஆறுமுகம் வாத்தியார்.

தாவரங்கள் இயற்கையிலே இனவிருத்தி செய்வது கலவி முறையிலான (Sexual) அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே. இதே வேளை, செயற்கையாகவும் தற்போது மரபணு மாற்ரம் செய்யப்படுவது தனிக் கதை. இது ஆய்வு கூடங்களில் செய்யப்படுவது’.

ஓஹோ!

விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக, இரு தாவரங்களின் தண்டுப் பகுதிகளை இணைத்து, ஒரு புதிய தாவரத்தை உருவாக்குவதே ‘ஒட்டுதல்’ (Grafting) எனப்படும். குறைவான விளைச்சலை உண்டாக்கும் தாவரத்தின் தண்டு வெட்டப்பட்டு, அதனுடன் அதிக விளைச்சலைத் தரும் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட கிளை (ஒட்டுத்தண்டு, Scion) அல்லது அரும்பு (ஒட்டரும்பு, Bud) ஒட்டப்படும். சிறந்த வேர்த் தொகுதியைக் கொண்ட தாவரமே ஒட்டுக்கட்டையாகப் (Root stock) பயன்படும். மேலே ஒட்டப்படும் தாவரம், ஒட்டுக் கட்டையை விட அதிக விளைச்சலைத் தரக் கூடிய தாவரமாக இருந்தால் மாத்திரமே, இம்முறை பயனுள்ளதாக அமையும்’.

அப்படியென்றால், ஒட்டுக் கட்டையும் ஒட்டுத்தண்டும் ஒரே இனம் அல்லது ஒரே சாதியைச் சேர்ந்திருத்தல் வேண்டுமா?’

ஆம்! செம்பாட்டான் ரக மாமரத்தில் கறுத்தக் கொழும்பான் மாங்கிளையை ஒட்டலாம். ஆனால் தோடையில் மாமரத்தை ஒட்டமுடியாது’.

ஓ. கே! உருளைக் கிழங்கில் தக்காளியை ஒட்டி, கீழே உருளைக் கிழங்கும் மேலே தக்காளியும் பெறலாமாமே..?’ என விஞ்ஞான சஞ்சிகையில் நான் வாசித்த தகவலை, எனக்கும் விஷயம் தெரியுமென்று காட்ட, சமயம் பார்த்து அவிட்டு விட்டேன்.

உண்மைதான். தக்காளியும் உருளைக் கிழங்கும் ஒரே குடும்ப தாவரங்கள். இவற்றை ஒட்டலாம். ஆனால், இது அதிக விளைச்சலைக் கொடுக்காது. கீழே உருளைக் கிழங்கையும் மேலே தக்காளியையும் ஒரே நேரத்தில் விளைவிக்கக் கூடிய ‘சக்தி’ அந்த ஒட்டிய தாவரத்துக்கு இருக்காது. ஆனால், ஒரே குடும்ப தாவரமான நாரத்தையையும் தோடையையும் அல்லது நாரத்தையையும் எலுமிச்சையையும் ஒட்டி நல்ல விளைச்சலைப் பெறலாம். இதுதான் சிங்கப்பூர் வீட்டு, அன்னம்மாவின் எலுமிச்சைக்கு நடந்தது’ என ‘சஸ்பென்ஸ்’ வைத்து நிறுத்தினான் பற்பன்.

பற்பன் சொன்னதைக்கேட்டு நாங்களெல்லாம் உஷாரானோம். ‘இதைக் கொஞ்சம் புரியும்படி விளக்கமாகச் சொல்லு’ என சுதி சேர்த்தார் ஆறுமுகம் வாத்தியார்.

அன்னம்மா வீட்டு எலுமிச்சை, நாரத்தை மர ஒட்டுக்கட்டையில் (Root stock) ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் முக்கியம் என்னவென்றால் எந்தவொரு ஒட்டுக் கன்றிலும், ஒட்டு சந்திப்புக்கு (Graft-union) கீழேயுள்ள ஒட்டுக்கட்டையிலிந்து கிளைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’.

வந்தால்..?

ஒட்டுக்கட்டையில் தோன்றிய கிளைகள், உரமாக வளர்ந்து ஒட்டுத் தண்டிலுள்ள கிளைகளை ஆக்கிரமிக்கும். அன்னம்மா வீட்டில் செத்த நாயை எலுமிச்சையின் அடியில் புதைத்தது மட்டுமல்லாமல் நாய்மேலுள்ள பாசத்தால் அது விரைவில் உக்கிவிட வேண்டுமென்று தினமும் அவர்கள் நீர் பாச்சியிருக்க வேண்டும். நாய் உக்கியதால் உண்டான பசளையாலும், தினமும் கிடைத்த நீரினாலும் ஒட்டுக் கட்டையிலுள்ள (நாரத்தை) அரும்புகள் உக்கிரமாக வளர்ந்து எலுமிச்சையின் (ஒட்டுத் தண்டு) கிளைகளை ஆக்கிரமித்திருக்க வேண்டும்’.

எனக்கிப்ப விஷயம் விளங்குது. ஒட்டுக் கட்டையிலிருந்து வளர்ந்த கிளைகளிலைதான் நாரத்தங்காய் காச்சிருக்கு’ என பற்பன் சொன்ன அறிவியல் விஷயத்துக்கு உரிமை கொண்டாடினான் துரையன்.

ஆறுமுகம் வாத்தியார் பேச்சோடு நிற்பவரல்ல. அன்னம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி எலுமிச்சை மரத்தை பார்க்க அனுமதியும் வாங்கிவிட்டார்.

 

-2-

ந்த நாளும் வந்தது.

மரக் கிளைகளை வெட்டும் கத்திரிக்கோல் (Secateurs), மெழுகு (Pruning wax) மற்றும் பிறஷ் சகிதம், தொழிலுக்கு ஆயத்தமாகவே வந்திருந்தான் பற்பன். செய்தி அறிந்த ஊர்ச்சனம் விடுப்புப் பார்க்க கூடிவிட்டது. வாசிகசாலையில் பற்பன் சொன்னது உண்மைதான். ஒட்டு சந்திப்புக்கு கீழேயுள்ள நாரத்தையிலிருந்து பாரிய கிளைகள் வளர்ந்து, அதிலே கரடுமுரடான தோலுடன் நிறைய நாரத்தங்காய்கள் பல்லிளித்தன.

ஒட்டுக் கட்டையிலிருந்து கிளைகள் வளர்ந்தமாதிரி, ஒட்டு சந்திப்புக்கு மேலேயுள்ள எலுமிச்சையும் வீரியமாக வளர்ந்து காய்த்திருக்கலாம் அல்லவா? ஏன் ‘குறண்டி’ப்போய் இருக்கு?’ என நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டான் பாலன்.

ஒட்டுக் கன்றுகளை உருவாக்கும்போது ஆணிவேருடன் கூடிய நல்ல வேர்த்தொகுதி கொண்ட தாவரங்களே ஒட்டுக் கட்டைகளாகப் பாவிக்கப்படும். அதன் மேல் ஒட்டப்படும் ஒட்டுத் தண்டு, நல்ல பழம் பூக்களைக் கொடுக்கக்கூடிய பயனுள்ள இயல்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இத்தகைய ஒட்டுத் தண்டுகள் இயற்கையாவே ஒட்டுக் கட்டையிலும் பார்க்க வளர்ச்சி வேகம் குறைந்தனவாக இருக்கும்’.

நல்லன எல்லாம் நலிந்தனவே, என்னைப்போல...!’ என ‘கைக்கூ’ கவிதை சொன்னான் சொர்ணன். அவனது வழமையான ‘விழல்’ கவிதையை சட்டை செய்யாத பற்பன், ஒட்டுக் கட்டையிலுள்ள கிளைகளையும் அரும்புளையும் வெட்டி, அவை மேலும் வளராதிருக்க, தான் கொண்டுவந்த சாம்பல் நிற மெழுகைப் பூசி நிமிர்ந்த போது, ஊர்ச்சனம் குசுகுசுத்தது. இதற்கான காரணத்தை வாத்தியார் அறிவார்.

இது மெழுகுதான், பயப்படாதேங்கோ! ஒட்டுக் கட்டையிலை முளைக்கிற கிளைகளை கத்தியாலையும் நறுக்கி விடலாம்’ என்ற வாத்தியார், எப்பொழுதோ தான் ‘கமத்தொழில் விளக்க’ சஞ்சிகையில் வாசித்த தகவலையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எப்படி ஒட்டுக் கட்டையிலிருந்து கிளைகளை வளர விடக்கூடாதோ அதேபோல ஒட்டு சந்திப்புக்கு மேலேயுள்ள ஒட்டுத் தண்டிலிருந்தும் வேர்களை வளர விடக்கூடாதாம்’.

உண்மைதான். ஒட்டுக் கன்றுகளை நடும்போது, ஒட்டுச்சந்திப்பு (Graft Union) மண் மட்டத்திலிருந்து ஒரு அடியாகுதல் மேலே இருக்கவேண்டும். ஒட்டுச்சந்திப்பை மூடி மண் இருந்தால் ஒட்டுத்தண்டிலிருந்து (இங்கு எலுமிச்சை) வேர்கள் முளைத்து ஒட்டுக் கட்டையை பலவீனப் படுத்திவிடும்’ என மேலும் விளக்கம் சொன்னான் பற்பன்.

எலுமிச்சை மரத்துக்கு ‘சுபம்’ போட்டுவிட்டு வெளியே வந்த பற்பனுக்கு, அன்னம்மா பதியமிட்டிருந்த ரோஜாத் தடிகள் கண்ணில் பட்டன. பதியமிட்ட தடிகளிலிருந்து இலைகளுடன் பாரிய அரும்புகள் துளிர்த்து அவை வாடிச் சோர்ந்து கருகியிருந்தன.

இதுவும் பக்கத்து வீட்டு பரியாரி ஏவிவிட்ட ‘எறிமாடன்’ விழையாட்டோ...?’ என பாலன் கமெண்ட் அடிக்க, அதைக் கண்டுகொள்ளாத பற்பன், ஒரு பதியனை வெளியே இழுத்து எங்களிடம் காண்பித்தான். பதியத் தண்டின் அடியில் வேர்கள் அரும்பவில்லை. விழிகளை விழித்து, அவன் சொல்வதைக் கேட்க நாம் ஆர்வமானோம்.

பிரச்சனை இதுதான்! வேர்கள் வளர முன்பு, மேலே அரும்புகள் வளர்ந்தால் பதியத்தின் சத்து முழுவதையும் அரும்புகள் இழுத்துவிடும். இதனால் பதியன்கள் செத்துவிடும்’.

புரியும்படி சற்று விளக்கமாய் சொல்லு பற்பன்’ எனக் கேட்டேன் நான்.

தாவரங்களின் வெட்டுத் துண்டங்களை (Cutting) பதியனிடும் போது மேலே கிளைகள் வளர முன்பு, கீழே வேர்கள் வளரவேண்டும்.

அதற்கு?

துண்டங்களைப் பதிவைத்த மண்ணின் வெப்பநிலை, மேலேயுள்ள காற்றின் வெப்பநிலையிலும் அதிகமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் முதலில் வேர்கள் தோன்றும். அதற்காகத்தான் விவசாய பண்ணைகளில் பதியன்களை இளம்சூடுள்ள மேசையில் (Heated bench) வைப்பது’.

இதையே வேறுமாதிரி சொன்னால், காற்றின் வெப்பநிலை, மண்ணின் வெப்ப நிலையிலும் கூடுதலாக இருந்தால், வேர்கள் வரமுன்பு கிளைகள் வளர்ந்து பதியன்கள் செத்துவிடும், அப்படித்தானே?

ஆம், அதுதான் இங்கு நடந்திருக்கிறது’ என்ற பற்பனை இடைமறித்து, வீடுகளில் Heated Bench இருக்காது, இதுக்கென்ன மாற்று வழி.? எனக் கேட்டேன்.

வைக்கல் சூட்டுக்குள் கையை வைத்தால், சூடாய் இருக்குமெல்லே...?

பதியன் வைத்த நிலத்தை வைக்கோலால் மூடி, ஒழுங்காக தண்ணியை ஊற்றிவிடு’ என்றான் பற்பன்.

அட, இதற்குள்ளும் இவ்வளவு விஷயங்கள் இருக்கோ? என நாங்கள் வியந்தோம்.

பற்பன், எங்கள் ஊர் நாவிதரின் மகன். அவனை நண்பனாகப் பெற்றதில் எங்கள் எல்லோருக்கும் பெருமை. ஆனால் ஊர்ச் சனங்களுக்கு?

ஒரே நேரத்தில் எப்படி அவர்களால் ஹிட்லராகவும் சார்ளி சப்பிளினாகவும் மாறமுடிகிறது? ஊரின் நன்மை கருதி விஷயத்தை விளங்கப்படுத்தினார் வாத்தியார்.

சில மாதங்களுக்குப் பின்னர், அன்னம்மா வீட்டு எலுமிச்சையில் மீண்டும் எலுமிச்சங்காய் காய்த்துக் குலுங்கியது.

என்னதான் இருந்தாலும் பற்பன் படித்தவனெல்லோ’ என்றார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ‘பேராதனையிலை படிக்கேக்கை சிங்கள மாந்திரீகமும் பழகினதாம்’ என காதைக் கடித்தன சில ‘ஊர்ப்பெரிசுகள்’.

மொத்தத்தில் ஊர்ச்சனங்கள் இதற்குப் பிறகு பற்பனுக்கு பயம் கலந்த மரியாதை காட்டியது. அதுவரை சாதிப் பெயர் சொன்னவர்களும், பற்பனின் தகப்பனை பின்னர் ‘பரியாரி’ என்றார்கள்.

ஊரிலே, நாவிதர்களை ஏன் பரியாரி என்கிறார்கள் என்ற கேள்வி நீண்ட காலமாக என் மனதை குடைந்து கொண்டிருந்தது. அதுபற்றி ஆறுமுகம் வாத்தியாரிடம் கேட்டேன்.

ஆதிகால ஆங்கில மருத்துவத்தில், சிறுசிறு Surgery செய்தவர்கள் பாபர்களே (Barber). அவர்கள் தங்களிடமுள்ள கூரிய சவரக் கத்தியால் பருக்கள் மற்றும் சீழ் பிடித்த கட்டிகளைக் (Abscess) கீறி குணப் படுத்தினார்களாம். இதேபோல ஊரிலும் முள்ளுக் குத்தி சீழ்பிடித்தால், அல்லது ஆணிக்கட்டி வளர்ந்தால், நாவிதர்களே சவரக் கத்தியால் கீறி குணப் படுத்தினார்கள். இதை ‘கத்தி வைத்தல்’ என்போம். எனவேதான் அவர்களைச் சாதிப்பெயர் சொல்லிக் கூப்பிடாமல், மரியாதையாக ‘பரியாரி’ என்கிறோம்’ என விளக்கம் தந்தார் வாத்தியார்.

உண்மைதான்! பிரிவினைகளும் வன்மங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் ஊர் வாழ்க்கை சற்று விசித்திரமானது. மழைக் காலத்தில் யார்யாரோ நட்டுவளர்த்த மரங்கள் இன்றும் இயல்புமாறி காய்க்கக்கூடும்.

நாங்கள் நினைப்பதுபோல மரங்கள் என்பது மரங்கள் மட்டுமேயல்ல!

 

ஆசி கந்தராஜா (2016)

 

No comments:

Post a Comment